Monday, September 3, 2012

பந்த பாசத்தைத் துறந்தவர்கள் இறையின்பத்தை அடைய தகுதியானவர்கள்

பாசம் தான் மனிதனைப் பாடாய்படுத்துகிறது. மகனென்றும், மகளென்றும், மனைவியென்றும், கணவனென்றும், பெற்றோரென்றும் எத்தனை வகையான உறவுகள்...இவர்கள் பட்டினி கிடந்து விடக்கூடாது. உலகிலுள்ள எல்லா சுகங்களையும் அனுபவித்து விட வேண்டுமென்பதற்காக ஒவ்வொரு குடும்பத்தலைவனும் படும் கஷ்டமென்ன! செய்கின்ற தகிடுதத்தமென்ன! ஆனால், "எனக்கு குடும்பம், நட்பு என்றெல்லாம் பாசமே கிடையாது, நான் பாசத்தை வென்றவன்' என்று சொல்லிக்கொண்ட இளைஞன், ஒரு துறவியைச் சந்தித்தான். ""துறவியாரே! என் பெயர் ராமன். செவ்வந்தி கிராமத்தைச் சேர்ந்தவன். நானும், என் குடும்பத்தாரும் பாசத்தை துறந்து விட்டோம். நாங்கள் மெய்ஞானமாகிய இறை இன்பத்தை அடைய விரும்புகிறோம். அதற்கு பாதை காட்டுங்கள்,' 'என்றான். ""நீ பாசத்தை துறந்து விட்டதாகச் சொல்வதை எப்படி நம்புவது! இங்கேயே ஒரு வாரம் தங்கியிரு. அதன்பிறகு யோசிக்கலாம்,' 'என்றவர், சீடர்களிடம் அவனை ஒப்படைத்து விட்டு, அவனுக்கே தெரியாமல் அவனது கிராமத்துக்குச் சென்றார். ராமனின் வீட்டைக் கண்டுபிடித்தார். வாசலில், பணிப்பெண் நின்றாள். அவளிடம் ஒரு ரத்தம் படிந்த துணியைக் காட்டி, ""அம்மா! இந்த வீட்டில் இருந்த ராமன் காட்டுக்கு வந்தார். சிறுத்தை தாக்கி இறந்து விட்டார். இதோ! அவர் அணிந்திருந்த ரத்தம் படிந்த ஆடை,''என்றார். அவள் அதைக் கண்டுகொள்ளவில்லை. ""ஐயா! உலகம் என்ற வாடகை வீட்டில் அவர் இத்தனை நாள் குடியிருந்தார். இப்போது உரிமையாளரான இறைவன் அவரைக் காலி செய்யச் சொல்லிவிட்டார். அவரும் கிளம்பிவிட்டார். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா! இதற்காக நான் என் வேலையைப் போட்டுவிட்டு வீட்டுக்குள் போய் தகவல் சொல்ல முடியாது,' 'என்றாள். துறவி ஆச்சரியமாக அவளைப் பார்த்து விட்டு, ராமனின் பெற்றோரிடம் சென்று விஷயத்தைச் சொன்னார். ராமனின் தாய் அவரிடம்""துறவியாரே! இதெல்லாம் ஒரு விஷயமென எங்களிடம் சொல்ல வந்து விட்டீர்களா! பிறப்பவர் இறப்பது உறுதி தானே! பிறந்த அன்றே அவனது இறந்ததேதியும் குறிக்கப்பட்டு விட்டது என்பதை நான் ஏற்கனவே அறிவேனே!'' என்றாள். ஏதோ சத்தம் கேட்டு, ராமனின் மனைவி உள்ளிருந்து வெளியே வந்தாள். விஷயத்தை அறிந்தாள். ""ஐயா! வாழ்க்கை வண்டிப்பயணம் போன்றது. அவரவர் இடம் வந்ததும் இறங்கிக் கொள்கிறார்கள். என் கணவர் அவரது நிறுத்தத்தில் இறங்கி விட்டார். நான் என் நிறுத்தத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறேன். இறப்பில் என்ன புதுமை இருக்கிறது! இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமய்யா!'' என்று சாதாரணமாகச் சொல்லி விட்டுப் போய்விட்டாள். உண்மையிலேயே அவர்கள் பாசத்தைத் துறந்தவர்கள் என்பதைப் புரிந்து கொண்ட துறவி, மீண்டும் தன் இடம் திரும்பினார். ராமனிடம், ""இளைஞனே! நான் உன் ஊருக்குத் தான் போயிருந்தேன். பாவம்! உன் வீட்டில் எதிர் பாராத விதமாக நெருப்பு பற்றி வீடே எரிந்து விட்டது. உன் பெற்றோரும் மனைவியும் ஏதுமில்லாமல் தெருவில் நிற்கிறார்கள். உடனே செல்,'' என்றார். ராமன் சிரித்தான். ""துறவியே! பொருட்கள் நிலையற்றவை. வீடு, வாசல், அதிலுள்ள பொருட்கள் அழியக்கூடியவை என்பது நிஜம் தானே! மேலும், என் வாழ்வில் இது ஒரு சம்பவம். மனித வாழ்வில் சம்பவங்கள் தவிர்க்க முடியாதவை,'' என்றான் மிக அமைதியாக. பந்த பாசத்தைத் துறந்த அந்தக் குடும்பத்தினர் இறையின்பத்தை அடைய தகுதியானவர்கள் என்பதைப் புரிந்து கொண்ட துறவி அவர்களுக்கு மெய்ஞானத்தைப் போதித்தார்.

No comments:

Post a Comment