Friday, June 14, 2013

உடல்சுத்தத்தை விட மனசுத்தம் தான் வழிபாட்டிற்குரியது

விவசாயியிடம் துறவி ஒருவர், ""ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் சாமி கும்பிடுவாய்?'' என்று கேட்டார்.
""எனக்கு அதற்கெல்லாம் நேரமேது சாமி! காலையில் எழுந்து கலப்பை பிடிக்க ஆரம்பிச்சா சாயங்காலம் ஆயிடுது. வந்ததும் களைப்பிலே தூங்கிடுவேன். இடையிலே ஆயிரத்தெட்டு விவசாய பிரச்னை, குடும்பப் பிரச்னை...'' என்று சலிப்பாக பதில் அளித்தார்.
""என்னப்பா இது அதிசயமா இருக்கு! கொஞ்சமாவது கடவுளை வணங்க நேரம் கிடைக்குமான்னு யோசிச்சு சொல்லு,'' என்றார்.
விவசாயி ஏதோ ஞாபகம் வந்தவராய், "ஆங்... காலையிலே, வெளியிலே (இயற்கை <உபாதை) போக, ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்குற இடத்துக்கு போவேன். ஒரு அரை மணி நேரம் ஆகும். அப்ப வேணா கும்பிடுறேன்,'' என்றவர் போய்விட்டார்.
மறுநாளிலிருந்து, இயற்கை உபாதை கழிக்கும் போதே, ""சாமி! எல்லாருக்கும் நல்லது செய், சாமி... எல்லாருக்கும் நல்லநேரம் பிறக்கட்டும்,'' என்று கடவுளைப் பிரார்த்தித்தார் விவசாயி.
அப்போது, ஒரு தேவதூதன் அவ்வழியே வானில் பறந்து வந்தான். ""யோவ் விவசாயி! உமக்கு சாமி பேரைச் சொல்ல இந்த நேரம் தான் கிடைச்சுதா! சுத்தமா இருக்கிற நேரத்தில் அல்லவா அவரோட திருப்பெயரை உச்சரிக்கணும்,'' என்றவன், கோபத்தில் விவசாயியின் கன்னத்தில் "பளார்' என்று அறை விட்டான்.
அங்கிருந்து நேராக கடவுள் இருக்குமிடம் சென்றான். கடவுள் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருந்தார்.
""பரம்பொருளே! கன்னம் ஏன் சிவந்திருக்கு! கைத்தடமே பதிஞ்சிருக்கே'' என்று பதைபதைப்புடன் கேட்டான்.
""அடேதூதனே! சற்று முன்பு ஒருவனை அடிக்க கையை நீட்டினாய் அல்லவா! என் பக்தர்கள் எந்த நிலையில் என்னை
வணங்கினாலும், அவர்களைக் காப்பாற்ற நான் கடமைப்பட்டிருக்கிறேன். உடல்சுத்தத்தை விட மனசுத்தம் தான் வழிபாட்டிற்குரியது என்ற சிறிய விஷயம் உனக்குத் தெரியாதா! அதனால்தான், அந்த விவசாயியை அடிக்க நீ கையை ஓங்கும்போது, நான் குறுக்கே புகுந்து, என் கன்னத்தில் அடியை வாங்கிக் கொண்டேன். இப்போ புரிஞ்சுதா கன்னம் சிவந்த காரணம்!'' என்றார்.
தேவதூதன் தலைகுனிந்தான்.

No comments:

Post a Comment