Tuesday, January 7, 2014

எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் தந்த திருவள்ளுவர் ஏன் குருவின் சிறப்பைப் பற்றி சொல்லவில்லை






எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் தந்த திருவள்ளுவர் ஏன் குருவின் சிறப்பைப் பற்றி சொல்லவில்லை என்று ஒரு நண்பர் கேள்வி எழுப்பினார். உண்மையிலேயே இது வரை அந்த கோணத்தில் திருக்குறளைப் பற்றி யோசித்திருக்கவில்லை. என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று யோசித்தவன் சட்டென்று ''சிலர் பிறவியிலேயே ஞானியாகத் திகழ்வதாலும், சிலருக்குத் தனது தந்தையாரே குருவாக அமைந்து விடுவதால் அவர்கள் குரு என்ற விஷயத்தைப் பற்றி சொல்லாமல் விட்டு விடுவார்கள். மேலும், வள்ளுவர் இறைவனையே குருவாகக் கருதியதால் தனது முதல் அதிகாரத்தையே இறைவனுக்கு சமர்ப்பிக்கிறார். எனவேதான் முதல் குறளிலேயே ''அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்கே உலகு'' என்று சொல்கிறார். தொடர்ந்து மற்ற ஒன்பது குறள்களுமே குருவை போற்றுகிறவர்களுடைய பாங்கிலேயே அமைந்திருப்பதைக் காணலாம். எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்று சொல்வதை அவர் இறைவனே அனைத்திற்கும் ஆதியாக இருக்கிறார் என்று சொல்லி விடுகிறார். தனக்கு உவமை இல்லாதவன் பாதங்களைப் பணியாமல் ஒருவன் தன் மனக்கவலையை போக்க முடியாது என்கிறார். கடவுளின் திருவடிகளைப் பொருந்தாதவர்கள் பிறவிப் பெருங்கடலைக் கடக்க முடியாது என்கிறார். எனவே அவர் இறனைவனையே குருவாகக் கொண்டார் என்பது தெளிவாக விளங்குகிறது எனறு சொல்லி வைத்தேன்.

எனினும் எல்லோருக்கும் இது போன்று பிறவி ஞானம் வாய்த்து விடுவதில்லை. எனவே குருவின் தயவு அவசியமாகி விடுகிறது. எனவேதான் குரு இல்லாத வித்தை பாழ் என்கிறார்கள். இறைவனே குருவாக இருந்து ஒவ்வொரு செயலின் மூலமாகவும் நமக்கு உண்மையை உணர்த்த முயன்றாலும், அதன் சூக்குமத்தை உணரும் மனப்பாங்கு நமக்கு இயல்பாக வாய்ப்பதில்லை. அதை உணர்த்த ஸ்தூல குரு அவசியப்படுகிறார். ஏனென்றால் ஸ்தூலத்தைக் கொண்டே ஸ்தூலத்தின் சூக்குமமாக விளங்கும் இறைவனை அடைய வேண்டும். எனவேதான் குருவாகிய பெரியோர்களைச் சார்ந்து ஒழுக வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இதைப் பற்றி சொல்ல வரும் போது நாரதரின் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு முறை நாரதர் இறைவனிடம் '' பெரியோர்களின் தரிசனத்தால் என்ன பயன் என்று கேட்டார் ?'' சில நேரங்களில் காலண்டரில் நாம் தினப்பலனைப் பார்க்க நேர்ந்தால் அதில் மகான்களின் தரிசனம் என்று போடப்பட்டிருக்கும். மகான்களை தரிசித்தால் என்ன நடக்கும் ? என்று நம்மில் சிலர் யோசித்திருக்கக் கூடும். அது போல நாரதருக்கும் சந்தேகம் வரவே அவர் இறைவனிடம் கேட்கிறார்.

இறைவனும் அதோ பார் அந்த சேற்றில் நெளிந்து கொண்டிருக்கிறதே ஒரு புழு அதனிடத்தில் போய் கேள் என்கிறார். நாரதருக்கு ஒன்றும் புரியவில்லை. என்னடா இது புழுவிடம் போய் கேட்டால் அது எப்படிச் சொல்லும் என்று மனதில் யோசித்தபடியே இறைவனை மேலும் கீழும் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார். இறைவனும் நாரதனின் எண்ணத்தை புரிந்து கொண்டு மௌனமாகப் புன்னகைத்தபடி போ போய் கேள் என்கிற விதமாக தலையசைக்கவே, நாரதரும் வேறு வழியில்லாமல் புழுவினிடத்தில் போய் பெரியோர்களின் தரிசனத்தால் விளையும் பயன் என்ன ? என்று கேட்டார். அவ்வளவுதான் அது வரை நெளிந்து கொண்டிருந்த புழு அசையாமல் நின்று விட்டது. அது செத்து விட்டது. நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. ஓடிப்போய் இறைவனிடம் முறையிட்டார். இறைவனும் ''அப்படியா ? சரி அதோ பறக்கிறது பார் அந்த பட்டாம் பூச்சி அதனிடம் போய் கேள் என்கிறார். நாரதரும் பட்டாம் பூச்சியிடம் போய் பெரியோர்களின் தரிசனத்தால் என்ன பயன் என்று கேட்ட மாத்திரத்தில் பொத்தென்று செத்து விழுந்தது. நாரதருக்கு பயமாகி விட்டது. மீண்டும் இறைவனிடம் போய் நடந்ததைச் சொல்லவே, இறைவனும் ''கவலைப்படாதே நாரதா உன் சந்தேகத்தை அந்த மான் குட்டியிடம் போய் கேள்'' என்கிறார்.

நாரதரும் மான் குட்டியிடம் போய் கேட்க அதுவும் இறந்து விட்டது. என்னடா இது வழக்கமாக நாம்தான் கலகம் இழுத்து விடுவோம் இன்று என்னடா என்றால் இறைவன் நம்மை வைத்து ஏதோ கலகம் செய்வது போலத் தோன்றுகிறதே என்று சிந்தித்தபடி இறைவனிடம் போய் நடந்ததைச் சொல்லிப் புலம்பினார். இதைக் கேட்ட இறைவனும் அர்த்தமுடன் நமட்டுச் சிரிப்பு சிரித்தபடி நாரதா கவலைப்படாதே போ அதோ ஒரு கன்றுக் குட்டி துள்ளி விளையாடிக் கொண்டிருக்கிறது பார் அதனிடம் போய் கேள் உன் கேள்விக்கு விடைகிடைக்கும் என்றார். இன்னுமா, இதுவரை எல்லோரும் என்னைக் கலகக்காரன் என்றுதான் சொன்னார்கள். நீங்களோ எனக்கு கொலைகாரன் என்ற பட்டத்தையும் வாங்கிக் கொடுத்து விடுவீர்கள் போலிருக்கிறது என்று சொல்லவும் இறைவன் கலகலவென சிரித்து விட்டார். வருந்தாதே நாரதா இந்த முறை உனக்கு பதில் கிடைக்கும் என்று தைரியம் சொல்லவே நாரதரும் கன்றுக் குட்டியிடம் போய் பெரியோர்களின் தரிசனத்தால் என்ன பயன் ? என்று கேட்டார். வழக்கம் போல அதும் இறந்து போகவே பெரும் துயரத்திற்கு ஆளான நாரதரை இறைவன் ''நாரதா கலங்காதே போ போய் காசி இராஜனுக்கு பல ஆண்டுகள் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்து இப்போது ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது போ போய் அதனிடம் கேள் '' என்றார்.

நாரதர் அதிர்ச்சியடைந்தார், இராஜாவுக்கோ பல ஆண்டுகளாகக் குழந்தேப் பேறு இல்லாமல் இப்போதுதான் குழந்தை பிறந்திருக்கிறது. அதுவும் இறந்து விடால் தீராத பலிக்கு ஆளாகி விடுவோமே என்று அஞ்சினார். என்ன செய்வது ? இறைவனின் கட்டளையை மீறக் கூடாது என்று எண்ணிக் கொண்டு தயங்கிய மனதோடு அரண்மனையைச் சென்றடைந்தார். அரசன் நாரதரை வரவேற்று, பாத பூஜை செய்து அரண்மனைக்குள் அழைத்துச் சென்றார். நாரதரும் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்றார். அரசனும் உத்தரவிடவே தங்கத் தாம்பாளத்தில் குழந்தையைக் கிடத்தி எடுத்து வந்து நாரதரின் காலடியில் வைத்தார்கள். குழந்தை அழகாக இருந்தது. நாரதரைப் பார்த்து சிரித்தது. நாரதருக்கோ மனம் குறுகுறுத்தது. நடுங்கிய குரலோடு குழந்தையைப் பார்த்து பெரியோரின் தரிசனத்தால் என்ன பயன் ? என்று கேட்டார். என்ன நடக்குமோ என்று பயந்த நாரதருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. வழக்கம் போல நடக்காமல் குழந்தை உயிரோடு இருந்தது. அதை விட அதிசயம் அந்தக் குழந்தை பேசவும் தொடங்கியது. ''மா மகரிஷியே, புழுவாய் பிறந்த நான் தங்கள் தரிசனத்தால் பட்டாம் பூச்சியாய் பிறந்தேன். மீண்டும் தங்கள் தரிசனம் வாய்க்கவே மான் குட்டியாகப் பிறந்தேன் அப்போதும் தங்கள் தரிசனம் கிட்டவே கன்று குட்டியாகவும் பிறந்தேன். இறையருளால் மீண்டும் தங்கள் தரிசனம் வாய்க்கவே அரிதாகிய மானிடப் பிறவி கிடைத்துள்ளது. அதுவும் காசி இராஜாவுக்கே மகனாகப் பிறந்திருக்கிறேன். எல்லாம் தங்கள் தரிசனத்தால் வாய்த்ததே என்று கூறியது. நாரதர் என்னே இறைவனின் லீலை என்று வியந்தபடி குழந்தையை ஆசிர்வதித்து விட்டு விடை பெற்றார்.

இந்தக் கதை மகான்கள், பெரியவர்கள், குருவானவர்கள் தரிசனத்தின் மகிமையை விளக்குவதாகவே தோன்றும். ஆனால் இன்னுமொரு சூக்குமமான விஷயத்தையும் அது உணர்த்துகிறது. நாரதர் போன்ற மகரிஷிக்கே தன் மகிமையும், தனக்குள் உள்ள தெய்வீகத் தன்மையும் தெரியவில்லை என்கிற போது நம்மைப் போன்றவர்கள் நிலைமை நான் சொல்லாமலேயே உங்களுக்குப் புரியும். நாரதருக்கு இறைவனே புரிய வைக்கிறார். நமக்கு ? அதற்குத்தான் குருவானவர் தேவைப்படுகிறார். அவர் என்ன செய்கிறார் ? நமக்குள் இருக்கும், நாம் உணராமல் இருக்கும் நம் தெய்வீகத்தை வெளிப்படுத்தி அதை நம்மை உணரச் செய்கிறார். வாழ்க குரு. இருள் நீங்கி ஒளி பெருக குரு வாழ்க. குரு நன்றாய் வாழ்க. குருவே துணை.

No comments:

Post a Comment