Saturday, June 14, 2014

நோய் தீர்க்கும் தினம்

தேவேந்திரனைப் பற்றிய பின் வரும் ஒரு கதை, அட்சய திருதியையின் முக்கியத்துவத்தை நன்கு விளக்குகிறது. மகாபலிச்சக்கரவர்த்தியை வெற்றி கொண்ட தேவேந்திரன், தனது விமானத்தில் ஆகாய மார்க் கமாகச் சென்று கொண்டிருந்தான்.

அப்போது நுதத்யு என்ற முனிவரின் மனைவி எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டு வீட்டின் பின்புறம் தலையைக் கோதிவிட்டு உலர்த்திக் கொண்டிருந்தாள். அவள் மீது ஆசை கொண்ட தேவேந்திரன், ஒரு நாள் அவளிடம் தவறாக நடக்க முயன்றான். ஆனால் அவள் வயிற்றில் ஏற்கனவே வளர்ந்து வந்த குழந்தையின் செயலால், இந்திரனின் அந்தத் தீய எண்ணம் நிறைவேறவில்லை.

இந்த நேரத்தில் நுதத்யு முனிவர் ஆசிரமத்திற்குத் திரும்பிவந்தார். முனிவரின் சாபத்திற்கு அஞ்சிய தேவேந்திரன் ஆசிரமத்தை விட்டு ஓட ஆரம்பித்தான். அப்போது முனிவரின் ஆசிரமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் தேவேந்திரனைப் பார்த்துக் கேலி செய்தார்கள். இதனால் வேதனைப்பட்ட தேவேந்திரன், அவமானத்தால் மேருமலையில் சென்று ஒளிந்து கொண்டான்.

இந்திரனின் நிலையை அறிந்த அசுரர்கள் தேவலோகத்தைக் கொள்ளையடித்தார்கள். தேவலோகத்திற்கு நேர்ந்த கதியைக் கண்ட வருணன், குபேரன், அனலன், அநீலன், யமன் ஆகியோர் தேவகுருவாகிய பிரகஸ்பதியிடம் சென்று முறையிட்டனர். பிரகஸ்பதி தேவேந்திரனின் இருப்பிடத்தைத் தேவர்களுக்குத் தெரிவித்தார்.

தேவர்கள் தேவேந்திரனிடம் சென்று தேவலோகத்திற்குத் திரும்பி வரும்படி அழைத்தார்கள். ஆனால் தேவேந்திரன் புத்தி பேதலித்துக் காணப்பட்டான். அதனால் தேவலோகம் திரும்புவதற்கும் அவன் சம்மதிக்கவில்லை. பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி தேவர்கள் அட்சய திருதியையன்று தேவேந்திரனை நீராடச் செய்து, ஹரிமந்திரம் சொல்ல வைத்து தான தர்மங்கள் செய்யும்படி செய்தனர்.

இதனால் தேவேந்திரன் சுயநினைவு பெற்று அசுரர்களை வென்று தேவலோகத்தை ஆட்சி செய்ய ஆரம்பித்தான். இந்தக் கதையின் மூலம், மனநிலை சரியில்லாதவர்களுக்கும் கூட அட்சய திருதியையன்று மருத்துவ சிகிச்சையும் பரிகாரமும் செய்தால் நோய் குணமடையும் என்பது ஐதீகமாகும்

No comments:

Post a Comment