Saturday, February 6, 2016

தை அமாவாசை ஏன் புனிதமானது


தை அமாவாசை : தலைமுறைகள் செழிக்க முன்னோர்களை வழிபடுங்களேன்
தை அமாவாசை ஏன் புனிதமானது
பாகம் 2
முன்னோர் வழிபாட்டில் காகத்தின் பங்கு:
காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்குச் சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பர் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்துபோன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாகக் கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்தப் பாறையில் தான் பிண்டம் வைத்து வணங்குவர். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று தன்னிடம் உள்ள பொருளை பிறருக்குப் பகுத்துண்டு வாழவேண்டும் என்று வள்ளுவர் நமக்கு போதித்திருக்கிறார். அப்பாடத்தை தவறாமல் பின்பற்றும் குணம் காகத்திற்கு இருக்கிறது. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்தபின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப் பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும் என்று சாஸ்திரம் கூறுவது சரிதானே!
முன்னோர்களுக்கு மூன்று கை தண்ணீர்:
முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம்இருந்து பெற்று பிதுர்தேவதைகளிடம் வழங்குபவர்சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களைச் சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும். சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்றுகொண்டு, சூரியனைநோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் இவர் அருளைப் பூரணமாக பெறமுடியும்.
பிள்ளைக்குரிய முழு தகுதி எது?
கிருதயுகம், திரேதாயுகங்களில் வருஷதிதி நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டனர். அந்த யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்தால் இந்நிலை இருந்தது. ராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதர் நேரில் தோன்றி தன் பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது. துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டனர். ஆனால், சூட்சும வடிவில் அவர்கள் நம்மை நேரில் பார்ப்பதாகவும், ஆசியளிப்பதாகவும் சாஸ்திரநூல்கள் குறிப்பிடுகின்றன. ஒருவரின் வயிற்றில் பிறந்தால் மட்டும் பிள்ளையாகிவிட முடியாது. பிள்ளைக்குரிய முழு தகுதியை ஒருவன் பெற வேண்டுமானால், வாழும் காலத்தில் பெற்றோரைக் கவனிப்பதோடு, இறப்புக்குப் பிறகும் பிதுர்கடனை முறையாகச் செய்யவேண்டும். தனது பித்ருக்களுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று எவன் நினைக்கிறானோ அவன் புத்தியில்லாத மூடனாவான் என்று கடோபநிஷதத்தில் எமதர்மன் நசிகேதனிடம் கூறுகிறார்.
இறந்த பின்னும் தொடரும் மனித வாழ்வு
சிரத்தையுடன் அதாவது அக்கறையுடன் செய்வதற்கு சிரார்த்தம் என்று பெயர். இறந்த பின்னும் நம் வாழ்வு தொடர்கிறது என்ற உண்மையை நமக்கு இக்கடமை நினைவூட்டுகிறது. இறந்த முன்னோர்களின் நற்கதிக்காகவும், அவர்களின் பூரண ஆசிவேண்டியும் சந்ததியினர் இக்கடமையைச் செய்கின்றனர். இச்சடங்கினைத் தீர்த்தக்கரையில் செய்வது வழக்கம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்து முடிப்பர். சிரார்த்தம் கொடுக்கும்போது சொல்லும் மந்திரத்தின் பொருளைத் தெரிந்து கொண்டு சொல்லும்போது தானே நிச்சயம் சிரத்தை (அக்கறை) உண்டாகும். கலியுகத்தில் ஜம்புத்தீவில் பரதகண்டத்தில், ....ஆண்டில்..... அயனத்தில்... ருதுவில்.... மாதத்தில்... பட்சத்தில்... திதியில்.... வாரத்தில்.... நட்சத்திரத்தில் எனது பெற்றோரான ... பெயர் கொண்டவருக்கு சிவயோக பிராப்தம் சித்திப்பதன் பொருட்டு, அவரது பிள்ளையாகிய நான் இந்த சிராத்தத்தை செய்கின்றேன். இதனை ஏற்றுக் கொண்டு ஆசியளிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன் என்பதே சிரார்த்தமந்திரம். மனிதவாழ்வு இறப்புக்கு பின்னும் தொடர்கிறது என்ற உண்மையை உணர்ந்து செய்யும் போது இச்சடங்கு பொருளுடையதாகும்.
தாயை பழித்தாலும், தண்ணீரை பழிக்காதே
தை அமாவாசைக்கு ராமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை, கன்னியாகுமரி ஆகிய கடல் ÷க்ஷத்ரங்களுக்கும், காவிரி, தாமிரபரணி நதிக்கும் பிற புண்ணிய தீர்த்தங்களுக்கும் மக்கள் தர்ப்பணம் செய்வதற்காக செல்கின்றனர். அங்கு சென்றவுடனேயே தண்ணீரில் இறங்கி விடக்கூடாது. கரையில் நின்று தண்ணீரை முதலில் தெளித்துக் கொள்ள வேண்டும். புனித நீர்நிலைகளும் கடவுளும் ஒன்றே. தாயை பழித்தாலும், தண்ணீரை பழிக்காதே என்று சொல்வர். புனித தீர்த்தங் களை நம் தாய்க்கும் மேலாக கருதும் வழக்கத்தை நம் குழந்தைகளுக்கும் கற்றுத் தர வேண்டும். நதிகளை அசுத்தமாக்கக்கூடாது.
தர்ப்பணம் செய்ய அமாவாசை சிறந்தது ஏன்?

பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் உள்ளது. அமாவாசை என்பது பகல் ஆரம்பிப்பதற்கு முன்புள்ள விடியற்காலம் போன்றது. காலைப்பொழுது பூஜைக்குச் சிறந்தது என்பதால், முன்னோர் வழிபாட்டுக்கு அமாவாசையைத் தேர்ந்தெடுத்தனர். இந்நாளில் புரோகிதர் மூலமாக தர்ப்பணம் செய்வது சிறப்பு. (தர்ப்பணம் என்பதற்கு திருப்தியுடன் செய்வது என்று பொருள். சிரார்த்தம் என்றால் சிரத்தையுடன் (கவனம்) செய்வது என்று அர்த்தம்) அவ்வாறு இயலாத பட்சத்தில், மந்திரம் ஏதும் சொல்லாமல் பக்தியுடன் மனதார பித்ருக்களை வழிபட்டு அவருக்கு கொடுக்க வேண்டிய அரிசி, காய்கறி, பழம், தட்சிணை, வஸ்திரம் முதலானவற்றை வேறு யாருக்கேனும் தானம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் நல்ல பலன் தரும். பித்ரு பூஜையைச் சரியாகச் செய்யாவிட்டால் முன்னோர்களின் சாபம் ஏற்படும். அவ்வாறு சாபம் பெற்ற குடும்பங்களில் தான் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதாக சாஸ்திரம் சொல்கிறது.

No comments:

Post a Comment