Saturday, February 6, 2016

தை அமாவாசை ஏன் புனிதமானது

தை அமாவாசை ஏன் புனிதமானது  part 1
ஜோதிட சாஸ்திரத்தில் அயனம், பருவம், பட்சம், மாதம், வாரம், நாள், ராசி, நட்சத்திரம், திதி என பல அம்சங்கள் உள்ளன. இவை ஒன்றோடு ஒன்று சேர்ந்து வரும்போது ஒவ்வொரு விரதங்கள், பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. வான சாஸ்திரம், ஜோதிட சாஸ்திர அடிப்படையில் சூரியன் - சந்திரன் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் பிரவேசிக்கிறார். இந்த மாதம் தை. இதற்கு உத்தராயன காலம் என்று பெயர். சனீஸ்வர பகவான் வீடாகிய மகர ராசியில் இருக்கும் சூரியனுடன் சந்திரன் சேரும்போது தை அமாவாசை பிறக்கிறது, இது இந்த உத்தராயன காலத்தில் வரும் முதல் அமாவாசையாகும்.
திதிகளிலே மிகவும் பிரசித்தி பெற்றது, மகத்துவம் நிறைந்தது அமாவாசை. இந்த நாளில் இறந்த முன்னோர்களையும், தாய், தந்தையரையும் நினைத்து வழிபடுவது இந்துக்களின் வழக்கம். கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் போன்ற நூல்களில் அமாவாசையின் சிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, இறந்தவர்களை நினைத்து வழிபடுவதால் அவர்கள் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்தி கிட்டும் என்றும், அவர்களின் பரிபூரண ஆசிர்வாதம் சந்ததியினருக்கு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற வழிபாடுகளால், மறைந்துவிட்ட முன்னோரை கண்ணால் காணும் பாக்யமும் கிடைக்கும். பொதுவாக அமாவாசையன்று புண்ணிய நதிகள், கடல் போன்ற நீர் நிலைகளில் நீராடி திதி கொடுப்பார்கள்.
முன்னோர்களை வழிபாடு செய்து இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வார்கள். மறைந்த தாய், தந்தையர் படங்களுக்கு வீட்டில் மாலை அணிவித்து அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை தலை வாழை இலையில் படைத்து வணங்குவார்கள். சில முக்கிய ஊர்களில் திதி கொடுத்து வழிபடுவதை விசேஷமாக கருதுகிறார்கள். தமிழகத்தில் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமக தீர்த்தகுளம், காவேரி சங்கமம்,கொடுமுடி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு, கன்னியாகுமரி இன்னும் என்னில் அடங்கா தலங்கள் முக்கியமானவை உள்ளன.
புதிய செயல்கள் தொடங்கலாமா?
அமாவாசை நிறைந்த நாள் என்று சொல்லி நல்ல காரியங்களை ஆரம்பிக்கிற வழக்கம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஆனால் சாஸ்திரத்தில் இதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அமாவாசை என்பது இருட்டு நாள், நீத்தார் நினைவு நாள் என்றே பல சாஸ்திர நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. திரயோதசி திதி முதல் பிரதமை திதி வரை எந்த புதிய விஷயங்களும் ஆரம்பிக்க கூடாது என பிரதோஷ வழிபாடு என்ற நூல் வலியுறுத்துகிறது, ஆகையால் அமாவாசையன்று புதிய தொடக்கங்கள், அக்ரிமென்ட் போடுவது, வண்டி வாங்குவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
அமாவாசையன்று சிவ ஸ்தலங்களில் அன்னதானம், வஸ்திரதானம் செய்வது விசேஷமானது.
தெய்வ வழிபாட்டை விட சிறந்த வழிபாடு
முன்னோரை வழிபடும் நாட்களில் தை அமாவாசை முக்கியமானது. ஆடி மாத அமாவாசையன்று நம்மைக் காண வரும் பித்ருக்கள் எனப்படும் முன்னோர் தை அமாவாசையன்று விடை பெற்று திரும்புவதாக ஐதீகம். முன்னோர் வழிபாடு மிக முக்கியமானது என்கிறார் தெய்வப்புலவர் வள்ளுவர். தெய்வத்தை வணங்குகிறோமோ இல்லையோ, முன்னோர்களை நிச்சயம் வழிபட வேண்டும். அதற்குரிய சிறந்த நாள் அமாவாசை. பிற அமாவாசைகளில், மறைந்த முன்னோருக்கு... குறிப்பாக பெற்றோருக்கு தர்ப்பணம் செய்யவிடுபட்டு போனாலும், தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த நாளில், நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழியும் ஒன்று உண்டு. ஒரு வீட்டில் இரண்டு சகோதரர்கள். ஒருவன் குடிகாரன், முரட்டுப்பயல். இன்னொருவன் பரமசாது, நல்லவன், பக்தன். ஒரு பெரியவர் வீட்டுக்கு வந்தார். குடிகாரனிடம், ஏனப்பா, இப்படி இருக்கிறாய்? தம்பியைப் போல் சாதுவாக இருக்கலாமே! என்றார். ஐயா! இந்த புத்திமதி சொல்ற வேலையெல்லாம் என்கிட்டே வேண்டாம். எங்க அப்பா குடித்தார், பெண் பித்தராக இருந்தார், வம்பு சண்டைக்குப் போவார். அப்பா செய்ததை நானும் செய்றேன், இதிலென்ன தப்பு, என்று சொல்லிவிட்டு நிற்காமல் போய்விட்டான். இளையவனிடம், அப்பா, அப்படிப்பட்டவராக இருந்தும், நீ அப்படி நடந்து கொள்ளவில்லையே, ஏன்? என்றார். ஐயா! அப்பா செய்த அந்தக் காரியங்களால் அம்மாவும், குழந்தைகளான நாங்களும், உறவினர்களும், அயல் வீட்டாரும் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல! ஒரு மனிதன் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக அவர் வாழ்ந்தார். எனவே, அந்தக் குணங்களையெல்லாம் விட்டு, நல்லவனாக வாழ நான் முயற்சிக்கிறேன், என்றான். நாமும் அப்படித்தான்! நம் முன்னோர் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்திருக்கலாம். அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு நம் வாழ்க்கை போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உறுதியை தை அமாவாசை நன்னாளில் எடுத்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment