Thursday, June 9, 2011

மனம் ஒன்றிகேட்டால் தூக்கம் வராது

ராமாயணக் கதைகேட்கச் செல்பவர்கள் தூங்காமல் கதைகேட்க வேண்டும். ஆனால், சிலர் தன்னையும் மீறி தூங்கிவிடுவதுண்டு. ராமாயண கதாகாலட்சேபம் நடக்கும்போது யாருக்குத் தூக்கம் வரும் என்பதை அறிந்து கொண்டால் இனிமேல் தூக்கமே வராது. அசோகவனத்தில் இருந்த சீதை ஒரு கட்டத்தில் தன் உயிரையே விடத் தீர்மானித்து விட்டாள் . அனுமன் ஒரு நாள் கழித்து வந்திருந்தாலும் இந்த அசம்பாவிதம் நடந்திருக்கும். ஆனால், அனுமன் அசோகமரத்தின் மீது அமர்ந்து ராமனின் பெருமையை தன் இனிமையான குரலில் பாடத் தொடங்கினான். அந்த ராகத்திற்கு ""ஹனுமதோடி'' என்று பெயர்.
ராமனின் புகழ்பாடும் இந்த ராகத்தைக் கேட்க ஆரம்பித்ததும் அரக்கிகள் உறங்கத் தொடங்கினார்கள். சீதையோ ரசித்துக் கேட்டு உயிர் பிழைத்தாள். இதனால் ராமாயணக்கதை கேட்கும் போது உறங்குபவர்கள் ராட்சஷகுணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ராமாயணம் மட்டுமல்ல! எந்த பக்திநூலைப் படித்தாலும், சொற்பொழிவைக் கேட்டாலும், மனம் ஒன்றிகேட்டால் தூக்கம் வராது.

பெண்கள் வரையறை வகுத்துக்கொண்டு வாழ்வது நல்லது

சீதை கேட்ட மாயமானை ராமன் பிடிக்கச் சென்ற போது, மானாக வந்த மாரீசன்""ஹா சீதா! ஹா லட்சுமணா! '' என்று ராமனைப் போலவே கூக்குரல் கொடுத்தான். இதைக் கேட்ட சீதை, மாரீசனால் அவருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று துடித்தாள். ராமனைக் காப்பாற்றச் செல்லும்படி லட்சுமணனை வேண்டினாள். லட்சுமணன் சீதையிடம், ""ராமனைக் காப்பாற்ற யாரும் தேவையில்லை. அரக்கர்கள் உலவும் காட்டில் உங்களுக்குத் தான் பாதுகாப்பு வேண்டும்'' என்று சமாதானம் செய்தான். ஆனால், சீதை ஒத்துக்கொள்வதாய் இல்லை. வலுக்கட்டாயமாக லட்சுமணனை அனுப்பிவைத்தாள். அப்போது லட்சுமணன் பாதுகாப்புகருதி, தன் அம்பினால் அவள் தங்கியிருந்த குடிலைச் சுற்றி கோடுபோட்டார். அந்த கோட்டிற்கு ""லட்சுமண்ரேகா'' என்றுபெயர். "ரேகா' என்றால் "கோடு'. தன் அண்ணியிடம் லட்சுமணன்,""தேவி! நான் பாதுகாப்புக்காக இடும் இந்தக்கோட்டை எக்காரணம் கொண்டும் தாண்டாதீர்கள்'' என்று சொல்லிவிட்டு புறப்பட்டான்.
பிச்சைக்காரன் வேடமிட்டு வந்த ராவணனால் லட்சுமணன் போட்டகோட்டைத் தாண்டமுடியவில்லை. கோட்டில் காலை வைத்த ராவணனை நெருப்பு சுட்டெரித்தது. ""அம்மா! பிச்சையிடுங்கள்!'' என்று குரல் எழுப்பினான் ராவணன். சீதையும் பிச்சையிடுவதற்காக லட்சுமணன் இட்டகோட்டைத் தாண்டினாள். ராவணன் தன் சுயரூபத்தைக் காட்டி சீதையை இலங்கைக்கு சிறையெடுத்தான். பெண்கள் வரையறை வகுத்துக்கொண்டு வாழ்வது கணவருக்கும், குடும்பத்துக்கும் நல்லது என்ற கருத்தில் இந்தச்சம்பவம் விவரிக்கப்படுகிறது.

Wednesday, June 8, 2011

கொடிசுற்றிப் பிறக்கும் குழந்தைக்கு தோஷ பரிகாரம்

கொடிசுற்றிப் பிறக்கும் குழந்தைக்கு தோஷ பரிகாரம்


  சில நேரங்களில் பிரசவத்தின் போது குழந்தைகள் கொடி சுற்றிப் பிறப்பார்கள்.
* ஒரு கொடி சுற்றினால் தாய்மாமனுக்கு ஆகாது என்றும்
* இரண்டு கொடி சுற்றினால் தாய்க்கு தோஷம் என்றும்
* மூன்று கொடி சுற்றினால் பிறந்த குழந்தைக்கு தோஷம் என்றும்
* பக்கவாட்டில் சுற்றினால் தந்தைக்கு தோஷம் என்றும்
* இடது பூரம் சுற்றினால் சகோதரிக்கு தோஷம் என்றும்
* வலது பூரம் சுற்றினால் சகோதரனுக்கு தோஷம் என்றும் கூறுவார்கள்.
எப்படிப்பட்ட தோஷம் என்றாலும் அதற்கு பரிகாரம் உள்ளது.
1) கொடி சுற்றிப் பிறந்த குழந்தை எந்த ராசியாய் இருந்தாலும் பவளம் அணிந்து கொள்வது நல்லது.
2) கொடி சுற்றிப் பிறந்த குழந்தைக்கு அதன் மேல் உள்ள கோடியில் ஒரு பாகத்தை எடுத்து தாய்மாமன் மூலம் கத்தியால் அதை வெட்டச் செய்யலாம்..
3) தாய் தன் குழந்தையைக் கைகளில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு இரும்புப் பாத்திரத்தில் நிறைய நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். பின் தாயும் பிள்ளையும் நல்லெண்ணையில் முகம் பார்க்க வேண்டும். இவர்கள் முகம் பார்க்கும் பொழுது வேறு யாரும் அவர்களைப் பார்க்காமல் திரையிட வேண்டும். அவர்கள் முகம் பார்த்ததும் அப்படியே இரும்புப் பாத்திரத்துடன் உள்ள எண்ணெய்யை யாருக்காவது தானம் அளித்து விட வேண்டும்.
மேலே குறிப்பிட்ட முறைகளில் ஏதாவது ஒரு முறையைப் பின்பற்றி தோஷத்தை கழிக்கலாம்

மந்திரம், தந்திரம், யந்திரம்

        ந்திரம், தந்திரம், யந்திரம் என்னும் மூன்றும் வேறுபட்ட கோணங்களில் செயல்படுபவை. அவற்றின் தன்மைகளைப் பற்றி சுருக்கமாக இங்கு காண்போம்.

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்பது ஆன்றோர் வாக்கு. எண்களையும் எழுத்துகளையும் முறையோடு இணைத்துச் செயல்பட்டால் இயற்கை தரும் இன்ப- துன்பம், ஏற்ற- இறக்கம் போன்றவற்றை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முடியும். ஞானிகளும் சித்தர்களும் முன்னோர்களும் கூறிய இக்கருத்தை, "வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என உணர்ந்து செயல்பட்டால், ஓரளவு வரும்முன் காக்கலாம்.

மந்திரம், தந்திரம், யந்திரம் என்பவை இறை சக்தியை மறைமுகமாகத் தந்து அருளைப் பெற வழிவகை செய்யும். நெடுங்காலமாக இதனைக் கடைப்பிடித்து பலர் உயரிய பலனைப் பெற்றுள்ளனர்.

பௌர்ணமியில்தான் முயல் குட்டிகளை ஈன்றெடுக்கும். இதனை விஞ்ஞானரீதியாக மாற்ற முடியாது. அதுபோல் நம் பிறப்பும் காலனின் கணக்கிற்கு ஏற்பவே நடைபெறுகிறது. அதையொட்டியே ஜாதகம் கணிக்கப்படுகிறது. அதில் காணப்படும் நல்லவை- கெட்டவை, பிறந்த தேதியில் காணப்படும் ஏற்ற- தாழ்வுகள் போன்றவற்றை யந்திரங்கள் மூலமாக சமன் செய்து, தீமைகளிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்.

ப் மந்திரங்கள் என்பவை முறையான உச்சரிப்புகளை கண்டிப்புடன் வைத்து செயல்படுபவை.


* தந்திரம் என்பது அயராது இறைவனை வேண்டி, சில அற்புத சக்திகளைத் தன்னகத்தே வைத்து, அதில் உயர்வான மனோபலம், ஆத்ம சக்தி பெற்று, பிறருக்காக அதனைப் பிரயோகிப்பது.


* யந்திரம் என்பது எண்கள், எழுத்துகள், வண்ணங்கள், பஞ்சபூத வடிவங்கள், அதற்குரிய உலோகங்கள், பீஜ மந்திரங்கள் ஆகியவற்றின் மூலமாக உருவாக்கப்படுவது. நம் ஜாதக நிலை, பிறந்த தேதி, உள்ளங்கை அமைப்பு போன்றவற்றை ஆராய்ந்து, அதில் உள்ள கெடுதலான அமைப்புகளைக் கண்டறிந்து, அதற்கேற்ப யந்திரங்களை உருவாக்கிப் பயன்படுத்தினால் நன்மைகள் பெறலாம்

கங்கை நதியின் கதை

        புண்ணியம் தழைக்கச் செய்வது கங்கை நதி. தேவலோகத்தில் மந்தாகினியாகவும்; பாதாள உலகில் பாகீரதியாகவும்; பூமியில் கங்கா நதியாகவும் ஓடும் இந்த நதியை திரிபாதக என்று போற்றுவார்கள். மகிமை வாய்ந்த கங்கை நல்லாளைக் கொண்டாடும் திருவிழாவை கங்கா தசரா என்பர்.

மிகவும் கடினமான வேலையை முயற்சியுடன் செய்து சாதிக்கும் செயலுக்கு பகீரதப் பிரயத்தனம் என்பார்கள். கங்கை பூமிக்கு வரக் காரணமே பகீரதன்தான். முன்னோர் செய்த பாவங்கள் விலகி அவர்களுக்கு நற்கதி கிடைக்க வேண்டும் என்று பகீரதன் விரும்பினான். அவன் பாட்டன் முயன்று, அதன்பின் தந்தையும் முயற்சி செய்து, முடிவில் பகீரதன் அதை முடித்தான்.

தேவலோகத்தில் இருக்கும் கங்கையை பூமிக்குக் கொண்டுவர பகீரதன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தான். அவன் தவம் கண்டு மகிழ்ந்த கங்கை, ""நான் பூமிக்கு வரும் அளப்பரிய வேகத்தை சிவனால் மட்டுமே தணிக்க முடியும். எனவே சிவனை வேண்டித் தவமிருந்து, என்னைத் தாங்கி பூமியில் விழச் செய்ய அவர் சம்மதம் பெற்று வா'' என உபாயம் கூறினாள். மீண்டும் சிவனை நோக்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் செய்தான். சிவன் காட்சி கொடுத்து, ""என்ன வரம் வேண்டும்?'' எனக் கேட்க, ""கங்கையிடம் பூமிக்கு வர சம்மதம் வாங்கிவிட்டேன். அவள் வேகத்தை நீங்கள் கட்டுப்படுத்தி பூமியில் பாயவிட வேண்டும்'' என்று கேட்டான்.

சிவனும் சம்மதித்தார். கங்கை வெகு வேகமாக பூமிக்கு வந்தாள். சிவன் தன் தலைமுடியால் தடுத்து அமைதியாகப் பாயச் செய்தார். கங்கையை பகீரதன் பாதாளத்திற்கு அழைத்துச் சென்று தன் முன்னோர் அஸ்தியைக் கரையைச் செய்து, அவர்களைப் புனிதப்படுத்திய பின் கங்கையை பூமியில் பாயும்படி கேட்டுக் கொண்டான்.

இப்படி கங்கையை பகீரதன் வரவழைத்த நாள்- வைகாசி மாத வளர்பிறை 10-ஆம் நாளில்தான். அவன் தன் முன்னோரின் பாவங்களை நீக்கிய இந்நாள் பாஹர தசமியாகும்.

இதையொட்டி, கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள திருத்தலங்களில் எல்லாம் கங்கையின் அவதாரத் திருவிழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். காசி, அஹமதாபாத்தில் மேலும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நாளில் புனித கங்கையில் நீராடிவிட்டு இறைவனை வணங்கினால் செய்த பாவங்கள் தொலையும்; பித்ருக்களின் ஆசியும் கிட்டும் என்பது ஐதீகம்.

பக்தர்கள் கங்கை நதிக்கரைக்குச் சென்று, "கங்கைத் தாயே' என குரலெழுப்பி மனமார வணங்குகின்றனர். பிரவகிக்கும் கங்கை நீரை கண்ணார தரிசிக்கின்றனர். தொட்டு வணங்கி தலையில் தெளித்துக்கொண்டு கங்கையை போற்றிப் புகழ்ந்தபடி மூழ்கிக் குளிக்கின்றனர். நதியிலேயே நின்று பூஜிக்கின்றனர். நீரில் அர்க்கியம் விடுகின்றனர். அதன்பின் நீரின் அடியில் உள்ள மண்ணை எடுத்து வணங்குகின்றனர். மாலையில் நதி ஓரம் முழுதும் ஆலய அர்ச்சகர்கள் அடுக்கு தீபத்தை கங்கைக்கு காட்டி பூஜிப்பார்கள். நதி ஓர கடைகளில் இலையால் செய்த சிறு படகில் விளக்கு வைத்து பூ வைத்து விற்கிறார்கள். அதை வாங்கி பக்தர்கள் ஆற்றில் மிதக்க விடுகிறார்கள்.

கங்காதேவி திருவுருவம்


நதிநீரில் முதலை- முதலை முதுகில் வெண் தாமரை- அம்மலர்மீது வெண்ணிற ஆடையுடுத்திய கங்காதேவி கையில் தாமரை, நீர்க்குடம் ஏந்தி, இரு கைகள் அபயவரத ஹஸ்தமாக புன்னகையுடன் அமர்ந்து காட்சி தருகின்றாள். தலை கிரீடத்தில் பிறைச் சந்திரனைக் காணலாம். கங்கை நதிக்கரைக்குச் செல்ல இயலாதவர்கள் மேற்சொன்ன கங்கையின் திருவுருவை மனதில் உருவகப்படுத்தி, கங்கையின் திருநாமம் கூறிக்கொண்டு, ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அதை "கங்கா ஜமாக' என்று பூஜித்து வணங்கினாலும் கங்கை நதிக்கரையில் பூஜித்த பலன் கிடைக்கும்.

கங்கை வழிபட்ட தலங்கள் தமிழகத்தில் பல உள்ளன. அவற்றுள் ஒன்று திருச்சி காசி விஸ்வநாதர் ஆலயம் ஆகும். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில்- காவிரி நதிக்கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.


மூலவர் காசி விஸ்வநாதர் சந்நிதி வாசலில் வலப்பக்கம் விநாயகரும், இடப்பக்கம் கங்காதேவியின் விக்ரகமும் உள்ளன. தினமும் இந்த கங்கா தேவி காவிரித் தீர்த்தத்தால் அபிஷேகிக்கப்படுகிறாள். இப்படி கங்கைக்கு காவிரி நீரில் அபிஷேகம் செய்வதை இங்கு மட்டும்தான் காணலாம். இது ஒரு அபூர்வ காட்சியாகும்.


இவ்வாலயத்தில் காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சியையும், ஏகாம்பரேஸ்வரர் சமேத காமாட்சியையும், தையல்நாயகி சமேவைத்தீஸ்வரரையும், அகிலாண்டேஸ்வரி சமேத ஐம்புகேஸ்வரரையும், மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரரையும் என ஐந்து ஈசனாரையும் தரிசிக்கலாம்.


பாவங்கள், நோய் உள்ளிட்ட தீவினைகள் அகன்று நன்மைகள் பல பெற்று வாழ இவ்வாலயம் சென்று வழிபடலாம்.

நந்தியின் கதை

சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார். அழிவே இல்லாதது தருமம். அது விடை (ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார். தருமம் இறைவனைத் தாங்குகிறது. அதுவிடும் மூச்சுக்காற்றுதான் இவருக்கு உயிர்நிலை தருகிறது. இதனால்தான் மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது. இம்மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான் நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து கும்பிடுவதும் கூடாது என்பது வழக்கத்தில் இருக்கிறது.

ருத்ரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன்- இப்படி பல்வேறு சிறப்புப் பெயர்களோடு புராணங்களும் ஆகமங்களும் போற்றும் மூர்த்தி நந்தியெம் பெருமானே.


திவ்ய வடிவமும், நெற்றிக் கண்ணும், நான்கு புயங்களும், கையில் பிரம்பு உடைவாளும், சடைமுடியும், சந்திரகலையும், நீலகண்டமும், யானை புரியும், இருபுயங்களில் மானும் மழுவும் கொண்டு இன்னுமொரு சிவரூபனாகவே திகழும் நந்தியின் கதைதான் என்ன?


சிலாதர் கண்டெடுத்த சிவக்குழந்தை

வீதஹவ்யர் என்ற பெயர் கொண்ட முனிவர், தம் சிறு வயதில் சிவனடியார் ஒருவரின் அன்னப் பாத்திரத்தில் விளையாட்டாக கல்லைப் போட்ட தீவினையால், இறந்த பிறகு பெரும் பாறை ஒன்றைத் தின்று தீர்க்க வேண்டும் என்ற தண்டனை இருப்பதை யமதூதர்கள் மூலம் முன்னரே அறிந்து, இறப்பதற்கு முன்னரே பாறையைத் தின்று தன் பாவம் போக்கிக்கொண்டவர். ஆதலால்தான் இவருக்கு "சிலாத முனிவர்' என்ற பெயர் வந்தது.

திருமணம் முடிந்து பிள்ளை பெற்று பிதுர்க்கடனை நிறைவேற்ற சிலாத முனிவர் தவறியதால், அவரின் முன்னோர் நரகத்தில் உழன்று கொண்டிருந்தனர். இதனால் வருந்திய சிலாத முனிவர் சித்திரவதி என்ற பெண்ணை மணம் செய்து கொண்டும் பிள்ளைப் பேறு கிடைக்கவில்லை. கலக்கமுற்ற சிலாத முனிவர் இந்திரனின் ஆலோசனைப்படி ஸ்ரீ சைலமலை சென்று புத்திர காமேஷ்டி யாகம் செய்ய முற்பட்டபோது, தங்கப் பெட்டியில் சிவரூப சுந்தரனாக குழந்தையொன்றைக் கண்டெடுத்தார். அந்தக் குழந்தையே நந்தியெம் பெருமானாவார். நந்தி என்றால் மகிழ்ச்சி என்று பொருள். சிலாதரின் கவலையைப் போக்கி மகிழ்ச்சி உண்டாக்கும் விதம் கிடைத்தவர் ஆதலால் நந்தி என்று அவருக்குப் பெயரிட்டார் சிலாதர்.

நந்தியின் தவமும் ஈசன் தந்த பட்டமும்


சிறு வயதிலேயே அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார் நந்தி. இந்நிலையில் சிலாதரின் இல்லத்துக்கு வருகை தந்த மித்ரன், வருணன் போன்றோர் நந்தியின் ஆயுள் இன்னும் ஒரு வருடமே என்று சிலாதரிடம் எடுத்துச் சொல்ல, மிக வருத்தம் கொண்டார் சிலாத முனிவர். நந்தி தன் தந்தைக்கு ஆறுதல் கூறிவிட்டு, சிவதவம் செய்யக் கிளம்பினார். முந்நூறு வருடங்கள் கடும் தவம் செய்தார் நந்தி. இறுதியாக அவரின் தவத்தினால் மகிழ்ந்த ஈசன், நந்தியைத் தன் அம்சமாகவே மாற்றி, தன் சிரசிலிருந்து மாலை எடுத்து நந்திக்கு அணிவித்து, அதிகார நந்தி என்ற பட்டத்தையும் அளித்து கயிலாயத்தில் அமர்த்தினார்.

நந்திதேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புதக் காட்சி ஒன்று நாகை மாவட்டம், ஆத்தூர் மந்தாரவனேசுவரர் ஆலய கோஷ்டத்தில்- கருங்கல்லில் வடிக்கப்பட்ட சிற்ப வடிவில் உள்ளது.


தவம் செய்ததனால் நந்தியெம் பெருமான் சிவாலயங்கள்தோறும் வீற்றிருக்கும் பேறும், பிரதோஷ காலங்களில் வழிபடுவோருக்கு அருள் வரம் தரும் பேறும் கிடைக்கப் பெற்றார்.


சிவபெருமான் இருக்குமிடம் கயிலாயம். சிவபெருமானை நேரடியாகச் சென்று தரிசித்துவிட முடியாது. நந்தி உத்தரவு பெற்றுத்தான் கயிலைக்குள் நுழைய முடியும். எதையாவது செய்ய முடியாமல் யாராவது தடுத்தால், "இவன் என்ன நந்தி மாதிரி தடுக்கிறான்' என்பார்கள். நந்தியின் வேலை தடுப்பதுதான்.


முப்புரம் எரிப்பதற்காக சிவன் புறப்பட்டார். அப்போது அச்சு முறிந்தது. விஷ்ணு நந்தியாகி, தேரினைத் தாங்கினார். தர்மதேவதை சிவனுக்கு நந்தியானார். அந்த நந்திதான் சிவாலயத்தின் கர்ப்பக் கிரகத்துக்கு மிக அருகில் இருக்கும் நந்தியாகும். அந்த நந்திக்கும் மூலவருக்கு இடையில் குறுக்கே போகக் கூடாது என்பார்கள். தர்ம நந்தியின் மூச்சுக்காற்று மூலவர்மீது பட்டுக்கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.

Tuesday, June 7, 2011

வைகாசி மாதசிறப்பு

வதாரம் என்ற வடமொழி சொல்லுக்கு "கீழே இறங்கி வருதல்' என்று பொருள். உலகில் அதர்மச் செயல்கள் தலைதூக்கி தர்மம் நிலை தடுமாறும் போது, மக்கள் துயர் துடைக்க இறைவன் ஏதோ ஓர் உருவில் கீழே இறங்கி உலகில் அவதரிப்பதையே அவதாரம் என்பர். சூரபத்மன் என்ற அசுரனிடமிருந்து மக்களைக் காக்கவே வைகாசி மாத பௌர்ணமி நாளன்று முருகன் அவதரித்தான்.

வைகாசி விசாகம் வேனிற்கால விழா நாள்; முருகனின் அவதார நாள். சிவனின் நெற்றிக் கண்ணில் அவதரித்தவன் முருகன். சிவபெருமானின் ஆறு தலைகளிலும் 18 கண்கள் உண்டு. ஆனால் முருகன் தோன்றியதோ ஆறு தலைகளிலும் உள்ள ஆறு நெற்றிக் கண்களால் மட்டுமே. நெற்றிக் கண்ணால் அரூபத்தைக் காண இயலும். சிவனின் நடுக்கண்ணில் இருந்து முருகன் தோன்றியமையால் அவன் ஆண் பிள்ளை.


உலகிலுள்ள ஜீவன்களின் தோற்றம் நான்கு வகைப்படும். அவை பைகளில், முட்டையில், நிலத்தினில், வியர்வையில் என புராணம் கூறுகிறது. இதைக் குறிக்கவே படைக்கும் கடவுளுக்கு நான்கு தலைகள். நாம் எல்லாரும் பெண் வழித் தோன்றியவர்கள். அதனால் பெண் பிள்ளைகள். முருகன் ஒருவன் மட்டும் ஆண் மூலம்- ஆறு அதாவது சிவனின் ஆறு நெற்றிக் கண்களின் சுடரால் பிறந்தவன். எனவே இவன் மட்டும்தான் ஆண் பிள்ளை.

முருகனின் ஆறு தலைகளும் நான்கு திசைகளுடன் மேல், கீழ் என ஆறு திசைகளையும் நோக்கும் வடிவில் அமைந்துள்ளது. முருகனின் 12 கரங்களும் உயிர் எழுத்துகள் 12 ஆகும். முருகனுக்கு தமிழ்க் கடவுள் எனப் பெயர் உண்டு. 12 கரங்களும் 12 மாதங்களையும் குறிக்கும். அத்துடன் வலப்புற ஆறு கரங்கள் உத்தராயணம்; இடப்புற ஆறு கரங்கள் தட்சிணாயனம் எனும் காலத்தைக் குறிக்கும். அவன் வைத்திருக்கும் ஆயுதங்கள் யாவும் நம்மைக் காக்கத்தான்.

பழனியில் கீழே இருப்பது திருஆவினன்குடி. இங்கு குழந்தை வடிவில் முருகன் உள்ளார். மலைமீது பழனி ஆண்டவராக வீற்றுள்ளார். திருவாவினன்குடி என்பது திரு- லட்சுமி, ஆ- காமதேனு, இனன்- சூரியன். இவர்கள் தவம் செய்த இடம். இங்கு வேலாயுதபாணியும், மேலே தண்டாயுதபாணியும் அருள்கிறான்.

போகர் என்ற சித்தர் தன் தவ வலிமையால் எல்லா கலைகளிலும் சிறந்து விளங்கியவர். "கனக குளிகை' என்ற மூலிகையால் நினைத்த மாத்திரத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லும் வல்லமை உடையவர். இவர் மனித குலம் பயனுற வேண்டும் என்று முருகன் சிலையை நவ பாஷாணத்தால் நிறுவி, தண்டம் கொடுத்து பழனி மலைமீது தண்டாயுதபாணியாக பிரதிஷ்டை செய்தார்.

வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டு நடைப்பயணமாக பழனி வந்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அவற்றுள் வைகாசி மாதத்தில் ஆன்மிகச் சிறப்புகள் நிறைய உண்டு.

வைகாசி மாதத்தில்தான் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இதில் முருகனின் அவதார தினமான வைகாசி விசாகம் உள்ளதால், முருகன் உறையும் ஆறுபடை வீடுகளும் மற்றுமுள்ள அத்தனை முருகத் தலங்களிலும் விசாகத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

அத்துடன் அம்மன் ஆலயங்களில் விழாக்களும், வைணவ ஆலயங்களில் பிரம்மோற்சவமும் கருட சேவையும் நடைபெறும். சிவ திருவிழாக்களும் அதிகம் நடைபெறும். அதில் குடந்தை ஆதி கும்பேஸ்வரர் தீர்த்தவாரி வைபவமும், மயிலை கபாலீஸ்வரர் விழாவும், வெள்ளீஸ்வரர் ஆலய திருக்கல்யாணமும் வைகாசியில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள் ஆகும்.

வைகாசி மாத சுக்ல பட்ச அஷ்டமியில் ரிஷப விரதம் முக்கியமானது.

பெரும் தவமிருந்து 1008 அண்டங்களை 108 யுகங்களாக ஆட்சி புரிந்து உயிரினங்களை வதைத்த சூரபத்மனை அழிக்க, ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளாக ஆறுமுகன் அவதரித்த நாள்தான் வைகாசி விசாகம்.

சக்தியின் துணையால் சக்திவேல் பெற்று சூரனின் ஆணவத்தை அழித்து ஆட்கொண்ட ஆறுமுகனை வைகாசி விசாகத்தன்று வழிபட்டால் நம் துன்பங்களும் தீய குணங்களும் அழியும்.

அன்று அதிகாலை எழுந்து நீராடி, "முருகா' என கூறி திருநீறு அணிந்து, முருகன் படத்தின் முன் நைவேத்தியம் வைத்து, முதலில் விநாயகர் அகவல் பாடி கணபதியை வழிபட்டு, பின் முருகனுக்குரிய ஸ்லோகங்கள், கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்பிரமணிய சோடஷ நாமாக்கள் கூறி அர்ச்சித்து, தூபதீபம் காட்டி நைவேத்தியம் செய்து பூஜித்தால் நல்ல பலன் பெறலாம்.

சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன், கார்த்திகைப் பெண்டிரால் பாலூட்டப் பெற்றதால் கார்த்திகேயன், மன்மதன் போன்று அழகாக இருப்பதால் குமரன் என்று இன்னும் பல பெயர்களும் முருகனுக்கு உண்டு. விசாக நட்சத்திரத்தின் அதிபதி பிரகஸ்பதி என்ற குரு; தேவதை முருகன். முருகு என்ற சொல்லே அழகு. முருகன் கைவேல் ஆயுத எழுத்தாகும். முருகு என்ற சொல் தமிழில் உள்ள வல்லின, மெல்லின, இடையின எழுத்துகள் ஒன்றாக இணைந்து உருவானதுதான்.

முத்து பிறவியிலேயே ஒளியுடையது. தீப்பொறியில் தோன்றிய முருகன் ஒளிமயமானவனானால் முத்தையன் என்ற பெயரும் உண்டு. முருகன் மும்மூர்த்திகளின் சொரூபம்.மு- முகுந்தன்; த்ரு- ருத்ரன்; க- கமலாசனன் (பிரம்மா). எனவே முருகனை வணங்கி மும்மூர்த்திகளை வணங்கியதாகும்.

வைகாசி விசாகத்தன்று திருத்தணியில் வழங்கப்படும் விபூதியும் பாதரேணு எனப்படும் சந்தனமும் தீராத வியாதிகளைத் தீர்க்கும்.

காஞ்சி குமரக் கோட்டத்தில் பிரம்மோற்சவம் என்ற பெருவிழா நடக்கும். முருகன் பிரம்மனுக்கு தண்டனை வழங்க, ஈசன் குறுக்கிட்டு சமரசம் செய்து, முருகனை பிரணவ மந்திரப் பொருள் விளக்கம் கேட்ட தலம் குமரக் கோட்டம்தான். கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தை அரங்கேற்றிய இடமும் இதுதான். அப்போது முருகனே வந்து ஆசி கூறி "திகட சக்கர'த்திற்கு விளக்கம் அளித்தார். காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலயம் ஒரு புறம், காமாட்சியம்மன் ஆலயம் ஒரு புறம் இருக்க, நடுவில் குமரக் கோட்டம் அமைந்துள்ளது. தினமும் தேனாபிஷேகம் நடக்கும் தலமிது.

உற்சவக் காலங்களில் ஏகாம்பரநாதரும், காமாட்சியும், வரதராசப் பெருமாளும் குமரக்கோட்ட ஆலயத்தை வலம் வருவார்கள். தாயும், தனயனும் ஈசனை வழிபட்ட தலம் காஞ்சிபுரம். பிரம்மனுக்கு வைகாசி விசாக விழாவில் தனி இடம் உண்டு. முருகன் தவநிலையில் உள்ளார்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்தில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்திற்கு கொடி மரம் ஏற்றும் கயிறை, வசவாத்துறை என்ற மீனவ குப்ப கிறிஸ்துவர்கள் தேங்காய் நாரில் திரித்துக் கொடுப்பார்கள். இது தொன்றுதொட்டு நடந்து வருகிறது. அன்று மட்டும் அடைக்கப்பட்டே இருக்கும் கிழக்கு வாயிலைத் திறந்து குதிரை வாகனத்தில் பகவதி அம்மன் உலா வந்ததும் பின் மூடப்படும்.

ஆறுமுகன் ஆறு சமயக் கடவுள்

இந்து மதத்தின் உட்கிளைகளாக ஆறு சமயங்கள் உள்ளன. ஒவ்வொரு சமயத்திற்கும் ஒவ்வொரு கடவுளை முன்னிலைப்படுத்தி இருக்கின்றனர். இந்த ஆறு சமயத்திற்கும் சமரசக் கடவுளாக ஆறுமுகன் இருக்கிறார். இந்த ஆறு சமயங்களுக்கும் முருகனே பொதுக் கடவுள்.

கௌமார சமய இறைவனான முருகன் சைவ சமய சிவபெருமானுக்கும், சாக்த சமய பராசக்திக்கும் மகன். வைணவ சமய தெய்வமான மகாவிஷ்ணுவுக்கு முருகன் மருமகன். காணாபத்ய கடவுள் கணபதியின் சகோதரன். சௌரத்தின் கடவுள் சூரியன். கரபாஸ்கரன் என்ற முருகனே சூரியன் என்றும் அழைப்பர். இதனால் ஆறுமுகன்தான் ஆறு சமயக் கடவுள்.

முருகனை ஞாயிறு அன்று திருப்பரங்குன்ற படைவீட்டில் வணங்கலாம். திங்கள்கிழமை திருச்செந்தூரிலும், செவ்வாய்க்கிழமை திருவாவினன்குடி என்ற பழனியிலும், புதன்கிழமை திருத்தணியிலும், வியாழக்கிழமை சுவாமிமலையிலும், வெள்ளிக்கிழமை பழமுதிர்சோலையிலும் வணங்குவது சிறப்பு. சனிக்கிழமையில் எல்லா படை வீடுகளையும் வணங்கலாம்.

ஏக தின வழிபாடு

கொங்கு மண்டலத்தில் சீனாபுரம் என்னுமிடத்திலுள்ள 60 அடி உயர குன்றில், முருகன் மேற்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். சுவாமி மலைபோல் 60 படிக்கட்டுகள் உண்டு. இங்கு திங்கள், வெள்ளியில் ஏராளமான பக்தர் வருவர்.


இங்கு அருகருகே ஆறு மலைகளில் முருகன் அருள்புரிவதால் இதை ஆறு படை வீடுகளாக ஒரே நாளில் எல்லா முருகனையும் வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஒரே நாளில் காலையில் சென்னிமலை முருகன், முற்பகலில் சிவன் மலை முருகன், உச்சி வேளையில் கைத்த மலை வேலவன், மாலையில் அருள் மலை முருகன், அஸ்தமன சந்தியில் சீனாமலை முருகன், அர்த்த சாமத்தில் திண்டல் மலை வேலாயுதன் என வழிபடுவார்கள். இப்படி வழிபட்டால் நிறைந்த செல்வம், நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு, பேரின்பம் ஆகியவற்றை முருகப் பெருமான் அருள்வார் என்பது மக்களின் நம்பிக்கை. ஈரோடு மாவட்ட பெருந்துறையில் இருந்து ஐந்து கிலோமீட்டரில் உள்ளது சீனாபுரமலை. இந்த ஆறு மலை அழகனை நாமும் வணங்கலாமே.

பிரம்மஹத்தி தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள ஒரு அம்சமாகும். இந்த தோஷம் விலகச் செய்ய வேண்டிய பரிகாரத்தை வைகாசி விசாகத்தன்று செய்வார்கள். இராமநாதபுரம்- பரமக்குடி சாலையில் ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது உத்திரகோசமங்கை என்னும் தலம். இதை ஆதிசிதம்பரம் என்பர். மரகத நடராஜர் உள்ள தலம். நளன் தோஷம் விலகிய தலமும் இது.

இங்கு வைகாசி விசாகத்தன்று அக்னி தீர்த்தத்தில் நீராடி, அங்கு எழுந்தருளியிருக்கும் மங்களநாதரை அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்று உத்தரகோசமங்கை தல புராணம் கூறுகிறது.

அன்று உச்சி வேளையில் அறுகு, அரிசியை தலையில் வைத்து பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, ஆலயத்தின் உள்ளே அக்னி தீர்த்தத்திலும் எள், அரிசி, கோமயம் வைத்து நீராடி மங்களநாதனை வழிபட்டபின் குறைந்தபட்சம் 11 சிவாச்சாரியார்களுக்கு சமாராதனை செய்து தட்சணை கொடுத்து வழிபட்டாலும் பிரம்மஹத்தி விரைவில் விலகும்.

திருவிடைமருதூரில் மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி செய்வார்கள்.

முருகனை வணங்கி "ஸுப்ரமண்யஸ்ய மஹிமா' எனத் தொடங்கும் ஸ்லோகம் ஜெபித்தாலும் பிரம்மஹத்தி தோஷம் விலகும். இவற்றை வைகாசி விசாகத்தன்றுதான் செய்ய வேண்டும்.

ஆறெழுத்து ஆறு ஆதாரங்கள்:

முருகப் பெருமான் நமக்கு வீடுபேற்றை அளிக்கவல்லவன். இந்த வீடுபேற்றை பெற தடையாக இருக்கும் காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் என்ற ஆறு பகைவர்களை அழித்து வீடுபேறு அடைய நினைப்பவர்கள் ஆறுமுகனின் ஆறெழுத்தை ஓதவேண்டும். ஆறுபடை வீடுகளை சேவிக்க வேண்டும். அதிலும் வைகாசி விசாகத்தன்று செய்வது சிறப்பு.

நம் உடம்பில் ஆறு ஆதாரங்கள் உள்ளன. இவற்றின் அடையாளமாய் விளங்குவது ஆறுபடை வீடுகள். மூலாதாரம்- திருப்பரங்குன்றம்; தெய்வானையை மணந்து உல்லாசமான தலம். சுவாதிஷ்டானம்- திருச்செந்தூர்; சிந்தனை அலைமோதி துன்பம் துடைக்கும் தலம். மணிபூரகம்- பழனி; ஞானதண்டபாணி உள்ள யோகத்தலம். அநாகதம்- திருவேரகம் என்ற சுவாமிமலை; தந்தைக்கு உபதேசித்த தலம். விசுக்தி- திருத்தணி; சல்லாபமாய் குறிஞ்சியில் விளையாடும் தலம். ஆக்ஞை- பழமுதிர்சோலை; ஞானப்பழம் உதிரும் சோலையாகிய தலம். இதை, "உல்லாச நீராகுல யோக இத சல்லாப விநோதனும் நீ மலையே' என கந்தரனுபூதியில் அருணகிரிநாதர் கூறுகிறார்.

அனைவருக்கும் நல்லது நடக்கட்டும்

ஒரு கிராமத்தில் வசித்த சுந்தரம் என்ற அனாதை சிறுவனுக்கு அவ்வூர் பண்ணையார் மாடு மேய்க்கும் தொழில் தந்தார். சம்பளம் இருநூறு. சாப்பாடு, துணிமணி கொடுத்து விடுவார். மாட்டுக்கொட்டிலில் தங்குவான். பள்ளிக்கூடத்துக்கு பல பிள்ளைகள் போவார்கள். அவர்கள் அங்கே எதற்குப் போகிறார்கள் என்பது கூட சுந்தரத்துக்கு தெரியாது. அவனிடம் யாராவது பொய் சொன்னால் கூட, "அப்படியா?' என நம்பி விடுவான். சரியான அப்பாவி.
ஒருநாள், மாடு மேய்த்தபடியே பாடிக்கொண்டிருந்தான். அப்போது, ஒரு பெரியவர் வந்தார். அங்கிருந்த குளத்தில் நீராடினார். தன் கையில்இருந்த பையில் இருந்த துணியை மாற்றிக்கொண்டார். மூக்கை பிடித்துக்கொண்டு சிறிதுநேரம் கண்மூடி இருந்தார். ஏதோ சாப்பிட்டார். கிளம்பிவிட்டார். இதைக் கவனித்த சுந்தரம் அவரருகே ஓடினான்.
""சாமி! நீங்க இதுவரை என்ன செஞ்சீங்க?''
""கடவுளை தரிசித்துக் கொண்டிருந்தேன்,''.
""சரி...சாமி, அவசரமா கிளம்பின உங்க பயணத்தை தடைபடுத்திட்டேன், மன்னிச்சிடுங்க. என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க,'' .
பெரியவர் அவனை ஆசிர்வதித்து கிளம்பிவிட்டார். அவர் சென்றதும், சுந்தரம் தன் ஆடைகளை கரையில் வைத்து விட்டு, குளத்தில் குளித்தான். மீண்டும் ஆடை அணிந்து கொண்டு, மூக்கை பிடித்து கண்மூடி உட்கார்ந்து "பகவானே வா' என்று தியானித்தான். இருட்டாக இருந்ததே தவிர கண்ணுக்குள் பகவான் தெரியவில்லை. கண்ணை சரியாக மூடவில்லையோ என்று இன்னும் அழுத்தி மூடினான். அவர் வரவில்லை. மூக்கை
சரியாக அழுத்தவில்லையோ என ஓங்கி அழுத்த மூச்சு முட்டியது. பிடிவாதக்காரனான அவன் மூக்கை விடவும் இல்லை.
இதை பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த திருமால் பார்த்து விட்டார். ""அநியாயமாக இவன் இறந்துவிடுவான் போலிருக்கிறதே'' என வேகமாக வந்துவிட்டார்.
""தம்பி, எழுந்திரு, நான் தான் பகவான்,'' என்ற குரல் கேட்டு எழுந்தான்.
""நீர் தான் பகவான் என்பதை நான் எப்படி நம்புவது? அந்த பெரியவருக்கும் நீர் தான் காட்சி கொடுத்தீரா?''
""இல்லை...அவர் உன்னிடம் பொய் சொன்னார். உனக்கு மட்டுமே காட்சி தந்தேன்,'' என்ற பகவானிடம், ""நான் நம்பமாட்டேன், அந்தப் பெரியவர் சற்றுதூரம் தான் போயிருப்பார். அழைத்து வருகிறேன். அதுவரை இந்தமரத்தில் உ<ம்மை கட்டிப்போடுகிறேன்,'' என்று கட்டிவிட்டு வேகமாக ஓடினான்.
பெரியவரை அழைத்தான். இவனுக்கு பைத்தியமோ என நினைத்தவர், வர மறுத்தார். அவரை வலுக்கட்டாயமாக இழுத்து வந்துவிட்டான். மரத்தைக் காட்டி ""இவர் தானே பகவான்<'' என்றான்.
""இங்கே யாருமே இல்லையே'' என்றார் பெரியவர்.
""என் கண்ணுக்கு தெரிகிறார். உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை என்றால் எப்படி? பார்த்துச் சொல்லுங்கள்,'' என்றான்.
பையனுக்கு முற்றிவிட்டது என்று நினைத்த பெரியவர் அவனிடமிருந்த தப்பிக்க, ""நான் தான் சரியாக பார்க்க விட்டுவிட்டேன். இவர் சாட்சாத் பகவானே தான்,'' என்றதும், ""பெரியவரே! இனி நீங்களே என் குரு. இங்கு வரும்போது என்னை அவசியம் பாருங்கள்,'' என்று காலில் விழுந்து வேண்டினான். அவரும் தலையாட்டிவிட்டு போய்விட்டார்.
திருமால் அவனிடம்,"" அவர் என்னைப் பார்க்கவே இல்லை. பொய் சொல்லி தப்பி போய்விட்டார்,'' என்றார். அவன் அதை நம்பவில்லை. அப்பாவியான அவனிடம், ""உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்,'' என்றார்.
""நான் கண்மூடி வணங்கும்போதெல்லாம் நீர் வர வேண்டும். அது மட்டுமல்ல! என் குருநாதர் பொய் சொன்னதாக நீர் சொன்னாலும், அவரது செய்கையைப் பார்த்து தான் இங்கே உம்மை வரவழைத்தேன். எனவே, அவர் கண்மூடி தியானிக்கும்போது அவருக்கும் காட்சியளிக்க வேண்டும்,'' என்றான்.
""உனக்கு கிடைத்த நற்பேறு, உனக்கு <உதவியவருக்கும் கிடைக்க வேண்டும் என நினைக்கிறாயே! உன்னை வாழ்த்த வார்த்தைகளே இல்லை. நீ சொன்னபடியே செய்வேன். பூலோக வாழ்வை முடித்து வைகுண்டத்தில் என்னோடு வாழும் வாய்ப்பை இருவரும் பெறுவீர்களாக,'' என்ற திருமால் கருடனில் ஏறி கிளம்பினார்.

இறப்பும் ஒரு நிகழ்வு தான்


இறப்பும் ஒரு நிகழ்வு தான்
 
கார்த்திகேயன் நிறைய படித்தவன். பெரிய வேலையில் இருந்தான். கை நிறைய சம்பளம். தினமும் முருகன் கோயிலுக்கு போகும் பழக்கம் உள்ள அவன், ""முருகா! எனக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடு. '' என்று வேண்டுவான்.
முருகப்பெருமானும் அருள்பாலித்தார். நீண்டநாளாக அவனை பார்க்கக்கூட வராதிருந்த தாய்மாமனார் அவன் பெரிய பணியில் இருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டு அவனைப் பார்க்க வந்தார். ""ஏதோ! இவ்வளவு காலம் பிரிந்திருந்து விட்டோம், போனது போகட்டும்! என் மகள் மல்லிகாவை நீ திருமணம் செய்து கொள். என் சொந்த தங்கை மகனான உனக்கில்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது,'' என்று சொந்தம் கொண்டாடினார்.
இப்போதாவது மாமா வந்தாரே! சரி...மற்ற பெண்களை மணப்பதை விட மாமா பெண்ணை மணந்தால் உறவு கருதியாவது ஒற்றுமையுடன் இருப்பாள் என எண்ணி அவளையே திருமணம் செய்து கொண்டான். நீண்டநாளாகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை. அவன் முருகனையே சரணடைந்தான். மல்லிகாவும் அவனுடன் செல்வாள். ஐந்தாண்டுகளுக்கு பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்ததும் கோயிலுக்கு போவதை விட்டுவிட்டாள்.
ஒருநாள் குழந்தைக்கு ஜன்னி கண்டு இறந்துவிட்டது. மல்லிகாவும், கார்த்திகேயனும் அடைந்த துன்பத்துக்கு அளவே இல்லை. நான்கைந்து நாள் கழிந்ததும், கார்த்திகேயன் வழக்கம் போல் பணிக்கு கிளம்பினான். மல்லிகா கண்ணீர் மல்க கடும் கோபத்துடன்,""நம் குழந்தை இறந்து ஐந்துநாள் தான் ஆகிறது.
அதற்குள் உங்களுக்கு வேலை கேட்கிறதா! நான் அழுது அரற்றிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் வேலைக்கு கிளம்புகிறீர்களே!'' என்றாள்.
""மல்லிகா! அதற்கென்ன செய்வது, மாத வரவு செலவு போன்றது தான் வாழ்க்கை. இதுபோல பிறப்பும் இறப்பும் மாறி மாறி வரும். இன்று நம் குழந்தை, நாளை நாம். வருத்தம் எனக்கும் உண்டு. ஆனால், அப்படி வருந்துவதால் என்ன நடந்து விடப்போகிறது!
வாழ்க்கையை யதார்த்தமாக எடுத்துக் கொள்,'' என்றபடியே வண்டியைக் கிளப்பினான்.
மல்லிகா அவனை கல்மனதுக்காரன் என்றே எண்ணினாள். ஆனால், இறப்பு என்பது வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில் ஒன்று தானே

எல்லாருமே இறைவன் தான்!

எல்லாருமே இறைவன் தான்!
 

ஒரு மடத்தில் இருந்த துறவிகள் தினமும் யாசகம் செய்து, அதில் கிடைக்கும் உணவை இறைவனுக்கு அர்ப்பணித்த பிறகு சாப்பிடுவார்கள். ஒருநாள், ஒருதுறவி சில வீடுகளுக்கு யாசகத்துக்குச் சென்றார். செல்லும் வழியில், ஜமீன்தாரின் வீடு இருந்தது. அவர், தன் வேலைக்காரனை ஏதோ காரணத்தால் நையப் புடைத்துக் கொண்டிருந்தார். வலி தாங்காமல் அவன் அலறினான்.
கருணை உள்ளம் படைத்த துறவி இதைப் பார்த்துவிட்டார். ஓடிச்சென்று, ""ஜமீன்தாரே! தாங்கள் இப்படி செய்யலாõமா? பணியில் அவன் ஏதேனும் தவறு செய்திருந்தால் அவனைக் கண்டியுங்கள். மாட்டை அடிப்பது போல இப்படி வெளுத்துக்கட்டினால், அவன் இறந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி ஏதும் நடந்தால், நீங்களும் வழக்கில் சிக்கிக் கொள்வீர்களே! கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். அது வாழ்வுக்கு மிகவும் நல்லது,'' என்றார். அவ்வளவுதான்! ஜமீன்தாரின் கோபம் துறவியின் மீது திரும்பியது.
""யோவ் சாமியாரே! வந்தோமா! பிச்சை எடுத்தோமா! போனோமா! என இருக்க வேண்டும். அதை விட்டு எனக்கே உபதேசம் செய்கிறீரா! இங்கிருந்து போய்விடும், மரியாதை கெட்டுவிடும்,'' என்று விரட்டியவர், மீண்டும் அந்தத் தொழிலாளியை அடித்தார்.
துறவி அவரருகில் சென்று தடுத்தார். ஆத்திமடைந்த ஜமீன்தார் துறவியையும் புரட்டி எடுத்துவிட்டார். அவர் மயங்கி விட்டார். வேலைக்காரர்கள் துறவியை சாலையில் தூக்கிப் போட்டனர். இதைப் பார்த்த சிலர், அவர் தங்கியிருந்த மடத்துக்கு தகவல் அனுப்பினர். மற்ற துறவிகள் ஓடிவந்து அவரை மடத்துக்கு தூக்கிச் சென்றனர்.
அவருக்கு முதலுதவி செய்தனர். ஒருவர் அவரது வாயில் பால் ஊற்றினால் மயக்கம் தெளியும் என்றார். அதன்படி பால் ஊற்றினர். அவர் மெதுவாக கண்விழித்தார்.
""சாமி! இப்போது பரவாயில்லையா! உங்களுக்கு பால் ஊற்றியது யார் என்று தெரிகிறதா?'' என பால் செம்புடன் இருந்த துறவியை அடையாளம் காட்டி கேட்டனர்.
அந்தத்துறவி மெதுவான குரலில்,""என்னை அடித்தவர் தான் எனக்கு பாலும் புகட்டினார்,'' என்றார்.
ஆம்..பாலூற்றியவரை தெய்வமாகப் பார்த்தது போல, அடித்தவரையும் கடவுளாகவே நினைத்தார் துறவி. அடிப்பவரையும் அணைப்பவரையும் கடவுளாகக் கருதினால், உலகில் ஏது சண்டை!

மனதில் நூறில் 99 பங்கை இறைவனிடம் வைக்க வேண்டும்

ஒரு தெருவில், சில பெண்கள் அரிசி குத்தி பிழைப்பு நடத்தி வந்தனர். அவர்கள் தொழில் செய்வதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும். ஆன்மிகத்தில் "அப்பியாச யோகம்' என்ற ஒன்று உண்டு. அதாவது, ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளைச் செய்வது!
அவர்களில் ஒருத்தி உலக்கையை மேலிருந்து கீழாக உலக்கையை உரலுக்குள் போட, உலக்கை உரலுக்குள் விழுவதற்குள் அரிசியிலுள்ள உமி உதிர்ந்து விட்டதா எனகையை விட்டுப் பார்த்தாள். அந்நேரத்தில் குழந்தை அழும். அதை மடியில் வைத்து பாலூட்டியபடியே வேலையைக் கவனிப்பாள். இந்நேரம் பார்த்து வாடிக்கையாளர் வருவார். அவருக்கு அரிசியை அளந்து போடுவாள். இடையிடையே உரலுக்குள் கையை விட்டு நெல் அரிசியாகி விட்டதா என கவனிப்பாள். இந்நேரத்தில், வாடிக்கையாளர் ""என்னம்மா இது! போனவாரம் கிலோ 25 ரூபாய்க்கு கொடுத்தே! இந்த வாரம் 30 ரூபாய் வாங்கிட்டியே!'' என்பார். ஒருவழியாய் பேரம் பேசி 28 ரூபாய்க்கு முடிப்பாள். ஆக, நெல்லைத் தள்ளுதல், உரலுக்குள் கையை விட்டு நெல்லை சோதித்தல், பாலூட்டுதல், அளத்தல், பேரம் பேசுதல் என ஒரே நேரத்தில் செய்தாள்.
""இப்படி இவர்களால் எப்படி செய்ய முடிகிறது?'' என்று வாடிக்கையாளர் திகைத்தார்.
அன்று மாலை ஒரு நூலைப் படித்தார். அதில் அதற்கு விடை இருந்தது.
""அரிசி குத்தும் பெண் பல செயல்களைச் செய்தாலும், நூறில் 99 பங்கு கவனம் உரலுக்குள் இருக்கும் தன் கை மீது உலக்கை பட்டுவிடக்கூடாது என்பதில் இருக்கிறது. அதுபோல், இல்லறத்தில் இருப்பவன், தனது மனதில் நூறில் 99 பங்கை இறைவனிடம் வைக்க வேண்டும். ஒரு பங்கைக் கொண்டு வேறு வேலைகளைச் செய்ய வேண்டும் இல்லாவிட்டால், வாழ்நாள் பாழாகி விடும்'' என்றிருந்தது. உண்மை தானே!

பிதுர் தோஷம்

நம் குடும்பத்தில் மறைந்த முன்னோருக்கு தர்ப்பணம் செய்யாமல் போனால், பிதுர் தோஷம் ஏற்படும். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். நன்மைகள் தடைபடும். சிலருக்கு கனவிலும் வந்து ஏதாவது தேவைகளைக் கேட்கக்கூடும். சிலர் வயதான காலத்தில் பெற்றோரைச் சரிவர கவனிக்காமல் விட்டு, அவர்களின் இறப்புக்கு பின் பிதுர் சாபத்திற்கு ஆளாவதும் உண்டு. இந்த தோஷம் நீங்க அமாவாசை விரதம் இருந்து, பசுமாட்டிற்கு புல்,கீரை,பழம் கொடுத்து வழிபட வேண்டும். காலையில் நீராடி, பசுவை மும்முறை வலம் வந்து, வணங்கவேண்டும். வசதியிருப்பவர்கள் சமுத்திரக்கரையில் நீராடி, ஏழை அந்தணருக்கு பசுவும் கன்றும் தானம் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு பாதிப்பா? குணப்படுத்துவார் முருகப்பெருமான்

குழந்தைகளின் பால்ய வயதில் உண்டாகும் தோஷம் பாலாரிஷ்டம். ஜாதகத்தில் பாவகிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை ஏற்படும் போது இது ஏற்படும். இதனால் ஆயுள், ஆரோக்கியம் பாதிக்கும். சில வேளைகளில் தாய், தாய்மாமன், தந்தைக்கும் தோஷத்தை ஏற்படுத்தும். கிரகச்சேர்க்கை மற்றும் தன்மையைப் பொறுத்து பாதிப்பு அமையும். குருவின் பார்வை இருக்குமானால் இந்த தோஷத்தால் பாதிப்பு வராது.
இத்தோஷம் நீங்க, குழந்தையை முருகன் கோயிலில் சுவாமிக்குத் தத்து கொடுத்து வழிபடுவர். குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்து, சந்நிதியை மூன்றுமுறை வலம் வரவேண்டும். கொடிமரத்தின் முன்போ அல்லது சந்நிதி முன்போ குழந்தையை கிடத்தி, முருகனிடம் ஒப்படைப்பதாக எண்ணி வழிபடவேண்டும். பின், அர்ச்சகரை அழைத்து பிள்ளையைப் பெற வேண்டும். அக்காலத்தில் தட்சணையாக அர்ச்சகருக்கு ஒரு படி தவிட்டைக் கொடுப்பது வழக்கம். பிள்ளைக்கும் கூட "தவிடன்' என்று பெயர் வைப்பர். ஆனால், இப்பழக்கம் மறைந்து, தட்சணை கொடுக்கும் வழக்கம் வந்து விட்டது. இப்பரிகாரத்தின் மூலம் தோஷம் நீங்குவதோடு, முருகப்பெருமான் குழந்தையைக் காத்து அருள்புரிவான் என்பது ஐதீகம்

திரிவேணிசங்கமம்'

கங்கைக் கரையில் உள்ள புண்ணிய தலங்களில் சிறப்பானவை காசி, பிரயாகை, ஹரித்துவார். பிரயாகை தான் தற்போதைய "அலகாபாத்'. இங்கு யமுனைநதி கங்கையோடு கலக்கிறது. அலகாபாத் அருகில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்றும் சேரும் "திரிவேணிசங்கமம்' புண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது. திருப்பாவையில் "மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூயபெருநீர் யமுனைத் துறைவனை' என்று கண்ணபிரானின் சிறப்பை யமுனை நதியோடு இணைத்து, ஆண்டாள் குறிப்பிடுகிறாள். யமுனைக்கரையில் அமர்ந்து சொல்லும் காயத்ரி ஜபத்திற்கு விசேஷபலன் உண்டு. இங்கு சரஸ்வதி "அந்தர்வாகினி'யாக (கண்ணுக்கு தெரியாமல் மறைவாக இருக்கும் நதி) ஓடுகிறது. திரிவேணி சங்கமத்தை "தீர்த்தங்களின் ராஜா' என்று குறிப்பிடுவர். இங்கு வெண்ணிற கங்கையும், கருமை நிற யமுனையும் கலப்பதைக் காணமுடியும். பிரம்மாயாகம் செய்த தலம் என்பதால் "பிரயாகை' என்றபெயர் உண்டானது.

முருகப்பெருமானின் வேல்.

முருகப்பெருமானின் அடையாளமாக இருப்பது வேல். "வடிவேல் அறிய வஞ்சகமில்லை (வடிவேல் மீது ஆணையாக நான் சொல்வதெல்லாம் உண்மை)' என்று தன்பக்க நியாயங்களை எடுத்துச் செல்லும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. வேல் என்பதற்கு "வெற்றி' என்று பொருள். வேலினை ஆயுதமாக நினைக்கக்கூடாது. இறைவனின் ஞானசக்தியே முருகப்பெருமானிடம் வேலாக அமைந்துள்ளது. சூரபத்மன் தன் மாயாசக்தியால் மாமரமாக மாறினான். அப்போது முருகன் வேலை ஏவி இருகூறாகப் பிளந்து ஒருபகுதியை மயிலாகவும், மறுபகுதியை சேவலாகவும் மாற்றினார். மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியிலும் சேர்த்துக் கொண்டார். ஞானமே வடிவாகிய வேலால் அசுரனையும் ஆட்கொண்ட பெருமை முருகப்பெருமானுக்குரிய தனிச்சிறப்பு. வேலுக்குரிய மந்திரமாக "வேலும்மயிலும் துணை' என்று முருகனடியார்கள் ஜெபிப்பர். ஆனால்,"வேலு மயிலும் துணை' என்று

நீராடும் போது ஸ்லோகம்

நீராடும் போது, நாம் குளிக்கும் நீரை கங்கையாகக் கருதி குளிக்கவேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய ஏழுநதிகளையும் சப்ததீர்த்தம் என்று குறிப்பிடுவர். நீராடத் துவங்கும்போது கிழக்கு அல்லது வடக்கு முகமாக நின்று, "கங்கேச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதம் குரும்' என்னும் ஸ்லோகத்தை சொல்லிவிட்டு குளித்தால் சாதாரண குளியல் கூட புனிதநீராடலாக மாறிவிடும்.

கம்முன்னு இருங்க!

குழந்தைகள் வீட்டில் சத்தம் போட்டுக் கொண்டு விளையாடினால் கம்முன்னு இருங்க' என்று பெரியவர்கள் கண்டிப்பது வழக்கம். "கம்' என்ற சொல் அமைதியைக்குறிக்கிறது. காரியம் ஆகவேண்டுமானாலும் அருளாளர்கள் "கம்' என்று தான் இருக்கச் சொல்கிறார்கள். "கம்' என்பது விநாயகருக்குரிய பீஜ மந்திரமாகும். பீஜம் என்றால் "விதை'. விதை விதைத்தால் பயிர் வளரும். பக்தியோடு "கம்' என்னும் மந்திரத்தைச் சொல்லி, கணபதியின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டால் வாழ்வில் வெற்றி கிடைக்கும்.

வில்வத்தில் "ராம்'

காசியில் எழுந்தருளி இருக்கும் விஸ்வநாதர் பாணலிங்கமாகவும், ராமேஸ்வரத்தில் அருள்பாலிக்கும் ராமலிங்கம் மணல் லிங்கமாகவும் காட்சி தருகின்றனர். இறக்க முக்தி (பிறப்பற்ற நிலை) காசியிலும், தரிசிக்க முக்தி ராமேஸ்வரத்திலும் கிடைக்கும். ராமாயணத்திற்கும், காசிராமேஸ்வரத்திற்கும் மிகுந்த தொடர்பு உண்டு. ராமேஸ்வரத்தில் அனுமலிங்கத்திற்கே முதல் மரியாதையும், பூஜையும் நடத்துவர். இந்த லிங்கத்திற்கு "காசிலிங்கம்' என்றும் பெயருண்டு. ராமபிரான் பூஜித்ததால் அவருடைய பெயரால் மூலவரை "ராமநாதர்' என்று அழைக்கின்றனர். காசியில் ஒவ்வொருநாளும் இரவும் நடைபெறும் சப்தரிஷிபூஜையின் போது ஏழுபண்டாக்கள் பூஜை செய்வர். அப்போது "ராம்' என்று பொறிக்கப்பட்ட தங்கத்தாலான வில்வஇலைகளால் விஸ்வநாதருக்கு அர்ச்சனை செய்யப்படும். காசியில் இறக்கும் உயிர்களின் காதில், "ராமா' என்று, சிவபெருமானே ஜெபித்து மோட்சம் அளிப்பதாக ஐதீகம். காசி யாத்திரை, ராமேஸ்வரத்தில் நீராடி ராமநாதரைத் தரிசித்த பின்னரே நிறைவு பெறுகிறது. 2000 மைல் தொலைவில் அமைந்துள்ள இவ்விரு தலங்களையும் சேர்த்து "காசி ராமேஸ்வரம்' என்று சொல்லும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது

ஆன்மீக கேள்வி – பதில்கள்

சர்ப்ப தோஷ நிவர்த்திக்கான எளிய பரிகாரம் இருந்தால் கூறுங்கள்.தினமும் ராகு காலத்தில் ஒரு கிண்ணத்தில் முழு உளுந்து நிரப்பி அதன் நடுவே தீபம் ஏற்றி வைத்து, துர்க்கையையும், ராகுவையும் மனதில் வேண்டி கொண்டு ஒன்பது முறை வலம் வாருங்கள். பிறகு அந்த உளுந்தை ஏழைக்குக் கொடுங்கள். இயன்ற வரை உளுந்து தானம் செய்யலாம். தோஷம் நீங்கி மங்களம் ஏற்படும்.

* சுவாமிக்குப் படைத்த எலுமிச்ச பழத்தை சமையலுக்குப் பயன்படுத்தலாமா?
அர்ச்சனை செய்த தேங்காய் மூடிகளை சமையலுக்குப் பயன்படுத்துவதில்லையா? அது போலத்தான் எலுமிச்சம்பழமும். தாராளமாக சமையலுக்கு உபயோகிக்கலாம்.

* அபிஷேகம் செய்யும் பொருட்களுக்கு ஏற்ப தனித்தனி பலன்கள் உள்ளதாகக் கேள்விப்பட்டேன் விளக்கம் தரவும்.
பொதுவாக இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பாவங்களைப் போக்கி புண்ணியத்தைத் தரவல்லது. இப்பிறவியில் பாவமே செய்யவில்லையே என்று கேட்கலாம். போன பிறவியில் செய்த பாவ புண்ணியத்தின் பலன் தான் இப்பிறவியாகும். அப்போது செய்த பாவங்களின் பயனாய் இப்பிறவி வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்படுகின்றன. இவை நீங்கி இன்பமாய் வாழ சுவாமிக்கு அபிஷேகம் செய்வது மிக உத்தமமாகும்.
தண்ணீர் அபிஷேகம் பாவம் நீக்கும். எண்ணெய் தரித்திரம் நீக்கும், பால் ஆயுள் விருத்திக்கு உதவும். தயிர் நோய் நொடிகளைப் போக்கும், பஞ்சாமிர்தம் வம்சவிருத்தியை உண்டாக்கும். விபூதி நல்லறிவைத் தரும். பழவகைள், இளநீர் பித்ரு சாபத்தை நீக்கும். சந்தனம், பன்னீர் லட்சுமி கடாட்சம் உண்டாக்கும்.

* துளசி இலைகளை சில குறிப்பிட்ட நாட்களில் பறிக்கக் கூடாது என்பதன் காரணம் என்ன?
வில்வ மரத்தில் சிவபெருமானும், துளசியில் மகா விஷ்ணுவும் வசிக்கிறார்கள். திங்கட்கிழமை அதாவது சோமவாரம் சிவபெருமானுக்கு உகந்த நாள். எனவே, அன்றைய தினம் வில்வம் பறிப்பதில்லை. அதுபோல சனிக்கிழமை ஏகாதசி திருவோணம் போன்ற நாட்கள் மஹாவிஷ்ணுவிற்கு உகந்தவை. எனவே இந்நாட்களில் துளசி பறிப்பதில்லை.

** குங்குமத்தை எந்த விரலால் இட வேண்டும்?
வலது கை மோதிர விரலால் இட்டுக் கொள்ள வேண்டும். கட்டை விரலால் இட்டுக் கொண்டால் பணவிரயமும், ஆள்காட்டி விரல் சந்ததிக் குறைவையும், பெருவிரல் பயிர் தான்யக் குறைவையும், சுண்டு விரல் புகழ் குறைவையும் ஏற்படுத்தும். மோதிர விரல் சகல சம்பத்துக்களையும் அளிக்கும்.

* ருத்ராட்சத்தை எல்லோரும் அணிவது முறை தானா?
ஏற்கனவே இரு முறை இது சம்பந்தமாக விரிவாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஒழுக்கமாகவும், தூய்மையாகவும் இருப்பவர்கள் மட்டுமே இதை அணியலாம்.

* கடல் கடந்து பயணம் சென்று வந்தால் பரிகாரம் செய்ய வேண்டும் என்கிறார்களே? உண்மையா!
நாள் கணக்கில் கப்பலில் பயணம் செய்து கடல் கடந்து வேறு நாட்டுக்குச் சென்ற போது பரிகாரம் தேவைப்பட்டது. மூன்று வேளை சந்தியாவந்தனம் அனுஷ்டானம் செய்பவர்கள் நிறைவில் பூமியில் சிறிது தண்ணீர் விட்டு அதைத் தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். கப்பலில் பயணம் செய்யும் போது இது சாத்தியப்படாததால் பரிகாரம் செய்ய வேண்டியிருந்தது. இப்போது விமானத்தில் பயணிக்கும் காலமாதலால் அனுஷ்டானக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, பரிகாரம் தேவையில்லை. அதே நேரம் ஒரு விஷயத்தை முக்கியமாக
கவனிக்க வேண்டும். அனுஷ்டானங்களையும், இறைவழிபாட்டையும் எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தக்கூடாது என்பது தான் ஆன்றோர் வகுத்துள்ள நல்வழி.

பொறுமைசாலிகளே வாழ்வில் உச்சிக்கு செல்ல முடியும்

நமது செயல்களில் வெற்றி பெற்று, புகழேணியின் உச்சியை அடைவது எப்படி? படித்துப் பார்ப்போமா..
மேதைகளின் வரலாறை! சில இசைமேதைகள் இசையமைக்கும் பாடல்களை ரசித்துக் கேட்கிறோம். அவர்களின் கைகள் தாளவாத்தியங்களில் நர்த்தனமிடுவதைக் காணும்போது, ""ஐயோ! இதைப் போல் நமக்கு வாசிக்கத் தெரியவில்லையே என ஏங்குகிறோம். ஓவியர்களின் படங்களைப் பார்த்து, நம்மால் ஏன் இப்படி வரையமுடியவில்லை என ஆதங்கப்படுகிறோம். ஆனால், அவர்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் தான் உச்சத்துக்கு சென்றார்கள்.
* பிரபல ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ வரைந்த "நியாயத் தீர்ப்பு' என்னும் ஓவியம் உலகில் தலைசிறந்ததாகக்
கருதப்படுகிறது. அதை வரைவதற்கு முன் அவர் 2000 தடவை ஸ்கெட்ச் வரைந்து பார்த்தாராம். அதை வரைந்து முடிக்க எடுத்த ஆண்டுகள் 8.
* லியனார்டோ டாவின்சியின் "கடைசி விருந்து' ஓவியம் வரைய பத்தாண்டுகள் பிடித்ததாம். சில நுணுக்கமான பகுதிகளை வரையும் போது அவர் சாப்பாட்டையே மறந்து விடுவாராம்.
* கம்ப்யூட்டரில் "மை டாக்குமென்ட்ஸ்' பகுதியை கிளிக் செய்தால், "மை மியூசிக்' போல்டர் வரும். அதற்குள்
"பீத்தோவன் சிம்பொனி' இருக்கிறது. அதில் ஒலிக்கும் இனிய இசைக்கு சொந்தக்காரர் தான் பீத்தோவன். இவர் ஒரு பாட்டுக்கு இசையமைக்கும் முன், தனது நோட்சை 12 தடவைக்கு மேல் திருத்தி எழுதுவாராம்.
* ஜோசப் ஹெய்டன் என்ற இசையமைப்பாளர் "திகிரியேஷன்' என்ற தனது இசை ஆல்பத்தை வடிவமைக்கும் முன் 800 தடவை இசையமைத்து மாற்றினாராம்.
* பியானோவில் புகழ்பெற்ற இக்னேஸ், பிரபலமான பிறகும் தினமும் ஆறுமணி நேரம் பயிற்சி எடுப்பாராம்.
""இசையில் மிளிர எனக்கு பொறுமையை கொடு இறைவா,'' என ஆண்டவனிடம் வேண்டுவாராம்.
ஆம்...பொறுமைசாலிகளே வாழ்வில் உச்சிக்கு செல்ல முடியும்

Monday, June 6, 2011

சனீஸ்வரன்

இந்த கலியுகத்தில் வாழும் மனிதர்கள் எதற்கு அஞ்சுகிறார்களோ இல்லையோ சனீஸ்வரனுக்கு பயந்து பரிகாரங்களை செய்கின்றனர். அந்த அளவிற்கு மனிதர்களை ஆட்டிப் படைக்கிறவர் சனீஸ்வரன்.

நவகிரகங்களில் முக்கியமானவாராக கருதப்படும் சனி பகவான் "ஆயுள்காரகர்' எனப்படுகிறார். மனிதர்கள் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு நல்லதையோ, கெட்டதையோ அளிக்கிறார். இவர் ஆட்சி, உச்சம், பலம் பெற்று தசை புக்தியை நடத்தும் காலத்தில் ஜாதகருக்கு அனைத்துச் செல்வங்களையும் வள்ளல் போல் வாரி வழங்கிடுவார். அதேசமயம் கெட்ட காலம் என்றால் அனைத்தையும் துடைத்து எடுத்துக்கொண்டு போய்விடுவார். நவகிரகங்களில் இவருக்கு மட்டுமே ஈஸ்வர பட்டம் கிடைத்துள்ளது. அந்த அளவிற்கு சக்திவாய்ந்தவர்.

சனீஸ்வரரின் பிறப்பு

சூரியனின் மனைவியான உஷாதேவி கணவனின் உக்கிரத்தைப் பொறுக்க மாட்டாமல், நிழலான சாயா என்பவளைப் படைத்து, அவளை தன் கணவனிடம் விட்டுத் தான் தந்தை வீடு சென்று விட்டாள்.

இந்த சாயாதேவியிக்கும் சூரியனுக்கும் பிறந்தவரே சனி பகவான். முதல் மனைவி உஷாதேவியின் புத்திரனான எமன் தனது காலால் சனியை உதைத்ததால், அவன் கால் ஊனமாகியது. இதனால் சனிபகவானால் மெதுவாகத்தான் நடக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டதால் "சனைச்சரன்' (மெதுவாகச் சஞ்சரிப்பவன்) என்ற பெயர் ஏற்பட்டது.

சனிபகவானின் சஞ்சாரம்

சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. ஜென்ம ராசிக்கு முதல் ராசி, சுயராசி, பின் ராசி ஆகிய மூன்று ராசிகளிலும் சஞ்சரிப்பதை ஏழரை நாட்டுச் சனி என்பார்கள். எட்டாவது ராசியை அஷ்டமத்துச் சனி என்பார்கள்.

ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவியில் இல்லாதவன், புத்திசாலி, முட்டாள் என்ற வித்தியாசம் எதுவும் சனிக்குக் கிடையாது! பல காரியங்கள் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடும். இதற்கு தேவர்களின் தலைவன் இந்திரனும் விதி விலக்கல்ல.

இந்திரனையும் விட்டு வைக்காத சனீஸ்வரன்

ஒருசமயம் தேவேந்திரன் தன்னை சனி பிடிக்கப் போகிறார் என்பதை அறிந்து, சனியைக் கூப்பிட்டு, ""நான் தேவர்களுக்கெல் லாம் தலைவன்; என்னை எப்படி நீ பிடிக்க லாம்?'' என்று கேட்க, ""என் பார்வையிலிருந்து எவருமே தப்ப முடியாது'' எனப் பதிலளித்தார் சனி பகவான். "

"அப்படியானால் நீ என்னைப் பிடிக்கும் நேரத்தைச் சொல்லிவிடு'' என்று தேவேந்திரன் வேண்ட, சனி பகவான் அதைக் கூறினார்.

அந்நேரம் வந்ததும் இந்திரன் பெருச் சாளி உருக்கொண்டு சாக்கடையில் ஒளிந்து கொண்டான். சனி அந்த இடத்தில் தேட மாட்டார் என்ற நினைப்பு அவனுக்கு! அந் நேரம் கழிந்ததும் இந்திரன் வெளியே வந்து சனி பகவானைக் கூப்பிட்டு, தான் தப்பித்து விட்டதாக பெருமையாக கூறினார்.

உடனே சனீஸ்வரன் சிரித்துக் கொண்டே, ""நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் சில நாழிகை இருந்ததே என் பீடிப்பினால்தான்!'' என்றார். எங்கு சென்று ஒளிந்து கொண்டாலும் சனியின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பது தெளிவாகிறது.

சனிபகவானும் நோய் பாதிப்பும்

ஜாதகத்தில் சனிபகவான் பலம் குன்றியவர்களுக்கு நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட வியாதிகளான பாரிச வாயு, கை- கால் தொடர்​நடுக்கம் என்கிற பார்கின்ஸன் வியாதி, சிறுநீரகக் கோளாறு, அடிவயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் போன்றவை உண்டாகின்றன.

ஒருவருக்கு ஏழரைச் சனி வந்தால் அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு குறைந்த அளவிலாவது ஏற்படும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள். இது ஏழரைச் சனிக்கு மட்டுமின்றி அஷ்டமச்சனி, சனி தசைக்கும் பொருந்தும். அதுபோன்ற நிலையில் உள்ளவர்கள் சொகுசாக வாகனங்களில் செல்வதைத் தவிர்த்து அதிகளவில் நடைபழக வேண்டும். சனி எளிமைக்கு உரிய கிரகம் என்பதே அதற்கு காரணம். சனியின் ஆதிக்கத்திற்கு உட்படும் போது நடைபயணம் செய்வதன் மூலமே சர்க்கரை நோயில் இருந்து தப்ப முடியும்.

என்ன பரிகாரம் செய்யலாம்

சனிக்கிழமைகளில் காக்கைக்கு எள், நல்லெண்ணெய் கலந்த அன்னத்தை வைத்தும், மாலையில் ஆலயங்களில் எள் தீபமேற்றியும், காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு தலத்துக்குச் சென்று முறையாக வழிபட்டும், தேனிக்கு அருகில் உள்ள குச்சனூர் சென்று சுயம்பு சனீஸ்வரரையும் வழிபட்டும் வர, கெடுதல்கள் மறைந்து நன்மைகள் உண்டாகும்.

எங்கே நிம்மதி!

ஒரு பணக்காரர், துறவி ஒருவரைச் சந்தித்தார்.
""சுவாமி! பணம் நிறைய வைத்துள்ளேன். மனதில் நிம்மதியில்லை. நிம்மதிக்கு வழி சொல்லுங்கள்,'' என்றார்.
""பணம் இருக்கிறதல்லவா! நிறைய தானம் செய்யும்,'' என்றார் துறவி.
பணக்காரரும் தானம் செய்ய ஆரம்பித்தார். தினமும் துறவியைச் சந்தித்து, ""சுவாமி! இன்று ஆயிரம் ரூபாய் தானம் செய்தேன், இன்று பள்ளிக்கூடத்துக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தேன், இன்று ஒரு அந்தணருக்கு பசுமாடு வாங்கிக் கொடுத்தேன், இன்று கோயிலுக்கு நூறு லிட்டர் எண்ணெய் வாங்கிக் கொடுத்தேன், ஆனாலும், பலன் ஏதும் தெரியவில்லையே,'' என்று சொல்வார். துறவி சிரிப்பாரே தவிர பதில் சொல்லமாட்டார்.
ஒருமுறை லட்சம் ரூபாயை தானம் செய்துவிட்டு துறவியிடம் வந்தார்.
""சுவாமி! ஒருவேளை குறைந்த தானம் செய்ததால், என் மனதில் நிம்மதி வரவில்லை என நினைத்து, இன்று அதிக பணத்தை தானம் செய்தேன். ஆனால், மனம் என்னவோ சஞ்சலத்தில் தான் இருக்கிறது,'' என்றார்.
துறவி அவரிடம், ""வெயிலில் போய் சற்று நில்லும்,'' என்றார். பணக்காரரும் நின்றார். கால் சுட்டது. ""சுவாமி, கால் சுடுகிறதே,'' என்றார்.
""உமது நிழல் தரையில் விழுகிறதா?'' என்றார் துறவி.
""ஆம்'' என்ற பணக்காரரிடம், ""வெயிலில் இருந்து தப்ப உம் நிழல் மீது காலை ஊன்றும்,'' என்றார். பணக்காரரும் காலை ஊன்ற நிழல் சற்று தள்ளிப்போனது.
""செல்வந்தரே! உமது நிழல் கூட இந்த உலகத்தில் <உமக்கு உதவவில்லை. நீர் சேர்த்து வைத்துள்ள பணம் எவ்வகையில் <உதவும்! நீர் இதுவரை செய்த தானம் பிறரை சிரிக்க வைத்தது. அந்த சிரிப்பின் எதிரொலி மறுபிறவியில் நன்மையைத் தரும்.
நிம்மதி என்பது அவரவர் தானாக வருவித்துக்கொள்ள வேண்டிய விஷயம். இந்த உலக வாழ்க்கை பொய்யானது என்ற ஞானம் எப்போது வருகிறதோ, அப்போது நிம்மதி தானாகவே மனதுக்குள் வந்துவிடும்,'' என்றார்.

கொலை,- தற்கொலை

பாரதப்போரின் உச்சக்கட்டம்...கர்ணனுடன் அர்ஜுனன் விற்போர் செய்தான். ஆனால், கர்ணனின் ஆக்ரோஷத்துக்கு முன்னால், அர்ஜுனனின் காண்டீப சாகசங்கள் எடுபடவில்லை. பாசறைக்கு திரும்பிய அவனை தர்மர் அழைத்தார்.
""போர் செய்யும் லட்சணமா இது! உனது காண்டீபத்தை (வில்) உலகப்புகழ் பெற்றது என்றும், நீயே வில்வித்தையில் சிறந்தவன் என்றும், நீ வைத்த குறி தப்பாது என்றும் ஆன்றோர்கள் சொல்வதாக பெருமையடித்துக் கொண்டாய். இப்போது என்னாயிற்று உன் காண்டீபத்தின் வல்லமை,'' என இகழ்ச்சியாகப் பேசினார் தர்மர்.
அண்ணன் தர்மர் சொன்ன வார்த்தைகள் தம்பி அர்ஜுனனின் மனதை உறுத்தியது. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. தன் காண்டீபத்தை யாராவது கேலி செய்தால், அவர்களைக் கொன்று விடுவதாக சபதம் செய்திருந்தான் அர்ஜுனன். எனவே, அண்ணன் என்றும் பாராமல், அவரை நோக்கி வில்லை உயர்த்தினான். கண்ணபிரான் ஓடிவந்து தடுத்தார். அவரிடம், தனது சபதத்தை விளக்கினான் அர்ஜுனன்.
கண்ணன் ஒரு யோசனை சொன்னார்.
""அர்ஜுனா! ஒருவரைக் கொலை செய்து தான் அவரது <உயிர் போக வேண்டும் என்பதில்லை. அவர் மீது வீணான பழி போட்டாலே கொலை செய்ததற்கு சமம். எனவே, தர்மர் மீது ஏதாவது பழிபோடு,'' என்றார். அர்ஜுனனும் ஏதோ ஒரு பழியைப் போட்டு சபதத்தை நிறைவேற்றினான். பின்னர், தன் அண்ணனைக் கொன்றதற்கு சமமான பாவத்தை செய்துவிட்டோமே என மனம் வருந்தி தற்கொலைக்கு முயன்றான். அப்போதும் கண்ணன் தடுத்தார்.
""அர்ஜுனா! இதென்ன விபரீதம்! சாஸ்திரத்தில் இதற்கும் பரிகாரம் உண்டு. உன்னை நீயே புகழ்ந்து கொள்வது தற்கொலைக்கு சமம். நீ உன்னைப் பற்றி ஜம்பமாக பிறரிடம் ஏதாவது பேசு,'' என்றார்.
பிறர் மீது பழிபோடுவதும், தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதும் கொலைக்கும், தற்கொலைக்கும் ஈடானது என்பதைப் புரிந்து கொண்டீர்களா

சுமையை குறைப்போமா?

சுதாமன் என்ற சிறுவன் தன் அம்மாவிடம், ""அம்மா! இந்த பூச்சியின் முதுகில் சுருளாக ஏதோ இருக்கிறதே! இதன் பெயர் என்ன? இதை ஏன் சுமந்து கொண்டே திரிகிறது?'' என்றான்.
""மகனே! இதன் பெயர் நத்தை. கடவுள் இதற்கு கொடுத்த சாபத்தால் இப்படி சுமையுடன் திரிகிறது,'' என்ற அம்மா, கதையையும் விவரித்தார்.
ஒருமுறை எல்லா உயிரினங்களும் உலகத்தில் இருந்து புறப்பட்டு வந்து தன்னைப் பார்க்க வேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தார் கடவுள். அட! சாக்கடையில் நெளியும் சிறு கிருமிகள் கூட அவரை வந்து பார்த்து வணக்கம் போட்டு விட்டு சென்றன. கடவுள் சொன்ன நேரம் முடிந்த பிறகு, கடும் தாமதமாக வந்து நத்தை.
""ஏன் பூச்சியே இவ்வளவு தாமதம்?'' என்றார் கடவுள்.
""எனக்கு என் வீடு என்றால் உயிர். அங்கிருந்து எங்கும் கிளம்புவதென்றால் ரொம்பவே வருத்தப்படுவேன். என் வீட்டை ஒப்பிடும் போது, உங்கள் உலகம் கூட எனக்கு சாதாரணம் தான்,'' என்றது.
கடவுள் கோபித்தார்.
""வீடே சுகமென நினைக்கும் நத்தையே! உனக்கு எது பிடித்ததோ அதையே நிரந்தரமாக தருகிறேன். உன் வீட்டை முதுகில் சுமந்துகொண்டே திரி,'' என்று சொல்லிவிட்டார். அதில் இருந்து முதுகில் சுமையுடன் நத்தை திரிகிறது.
நத்தை சுமப்பது போல, நாமும் வீடு, வாசல், உறவு என பெரும் சுமையுடன் திரிகிறோம். இதில் இன்பத்தை விட துன்பத்தையே அதிகம் கண்டிருக்கிறோம். நித்திய இன்பம் என்பது இவற்றை விட்டு இறைவனுடன் ஐக்கியமாவதிலேயே இருக்கிறது. எனவே, இல்லறச்சுமையை ஆரம்பம் முதலே குறைப்போமா

திலகவதி

ஒரு பெண் யாரை மனதில் நினைக்கிறாளோ அல்லது பெற்றோர் யாரை முடிவு செய்கிறார்களோ அவரோடு கடைசிவரை குடித்தனம் செய்வது என்ற கொள்கையுடன் அக்காலத்தில் திகழ்ந்தனர். பணம், அழகு எதையுமே அவர்கள் சட்டை செய்யவில்லை.
அதிலும் திலகவதி என்ற பெண்மணி, நிச்சயிக்கப்பட்ட மணமகன் இறந்துவிட்டார் என்பதற்காக, வாழ்வின் இறுதிவரை கைம்பெண்ணாக வாழ்ந்தார் என்றால், அந்த தியாகத்திற்கு ஈடுஇணை ஏது!
திருவாமூர் என்ற தலத்தில் வசித்த வேளாளர் குடும்பத்தில் தலைசிறந்தவர்கள் புகழனார்-மாதினியார் தம்பதி. இவர்களது செல்வமகள் திலகவதி. இவரையடுத்து பிறந்த மகனுக்கு மருள்நீக்கி என்று பெயரிட்டனர்.
அக்காவுக்கும், தம்பிக்கும் வயது வித்தியாசம் அதிகம். திலகவதியை பல்லவமன்னனின் சேனாதிபதியாக இருந்த கலிப்பகையாருக்கு திருமணம் செய்து வைப்பதென முடிவு செய்தனர். மணமக்கள் எதிர்கால வாழ்வு பற்றி இன்ப வானில் மிதந்து கொண்டிருந்த வேளையில், திலகவதியின் தந்தை புகழனார் இறந்து போனார். கணவன் சென்ற வருத்தம் தாளாமல் மனைவி மாதினியாரும் பின்தொடர்ந்து விட்டார். எவ்வளவு உயர்ந்த காதல் பாருங்கள். திலகவதியும், மருள்நீக்கியும் அனாதையாக விடப்பட்டனர். இருப்பினும், கலிப்பகையாரின் குடும்பத்தார், திலகவதியாரை தங்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக்கொள்வதில் பின்வாங்கவில்லை.
விதியைப் போன்ற கொடிய ஆயுதம் உலகில் ஏது! வடநாட்டிற்கு போருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார் கலிப்பகையார்.
""வெற்றியுடன் திரும்புவேன்,என்மணநாள் பரிசாக அதை <உங்கள் திருவடியில் சமர்ப்பிப்பேன்,'' என மன்னரிடம் சூளுரைத்து கலிப்பகையார் கிளம்பினார். கொடிய சண்டை நடந்தது. கலிப்பகையாரின் வீரம் கண்டு வடநாட்டு மன்னன் அஞ்சினான். படைகள் பின்வாங்கி ஓடின. வீரத்தால் அவரை வெற்றி கொள்ள இயலாது எனக்கருதிய வடமாநில மன்னன், வஞ்சகமாக அவரைக் கொன்று விட்டான். வீரமரணம் அடைந்தார் கலிப்பகையார்.
""தந்தை போனார், தாய் போனார், கட்ட இருந்த மணமகனும் போய்விட்டார்...ஏன் பிறந்தோம் இந்த பூமியில்...இனியும் நான் யாருக்காக வாழவேண்டும்?அதிர்ஷ்டக்கட்டை, யோகமில்லாதவள், பெற்றவர்களையும், கட்ட இருந்தவனையும் விழுங்க வந்த காட்டுப்பிடாரி என்றெல்லவா உலகம் தன்னைப் பழிக்கும். இந்த சுடுசொற்களைத் தாங்கும் மனம் எனக்கில்லையே... உலகம் ஆயிரம் சொல்லட்டும், உண்மையும் அதுதானே! என்னால், யாருக்கென்ன லாபம்...திலகவதி கண்ணீர் வடித்தாள். இந்துமகாசமுத்திரத்தையும் விஞ்சுமளவு கண்ணீர்! ஆனால் பலனென்ன!
ஆண்டாண்டு காலம் அழுதாலும் மாண்டார் வருவார்களா! தன் உ<யிரை மாய்த்துக்கொள்ள துணிந்து விட்டாள்.
அவள் மரணத்தை தழுவ இருந்த வேளையில் இரண்டு பிஞ்சுக்கரங்கள் அவளது கால்களைக் கட்டிக்கொண்டன. ஆம்... திலகவதி உலகத்தில் ஏச்சு பேச்சை நினைத்தாளே தவிர, தன் தம்பியைமறந்துவிட்டாள்.
""அக்கா! அப்பா இல்லை, அம்மா இல்லை, உன்னை கட்ட இருந்தவர் இங்கு வந்திருந்தால் "மாமா' என அவர் மடியிலாவது சாய்ந்திருப்பேன். ஆறுதலைத் தேடியிருப்பேன், அவரும் போய்விட்டார். இப்போது, நீயும் போகிறாயா! அப்படி சென்றால் உன்னோடு என்னையும் அழைத்துப் போய்விடு. தாய் தந்தைக்குப் பிறகு இப்போது நீயே என் பெற்றோர், சகலமும் நீயே,'' என்று கதறினார் மருள்நீக்கி.
அக்கா தன் தம்பியை வாரி அணைத்துக் கொண்டாள்.
""அன்புச்செல்வமே! ஒரு பெண் வாழ்க்கையில் ஒருவனுக்கு மனைவியாவதற்காக பேசி முடிக்கப்பட்டு விட்டால், அவனை நினைத்தே வாழ்வாளடா! என்னை மணம் முடிக்க இருந்தவர் போய்விட்டார். இனி என் மனதில் யாருக்கும்
இடமில்லை. திக்கற்ற பெண் இவ்வுலகில் வாழ இயலாது. இருப்பினும், உனக்காக வாழ்வேனடா! ஆனால், கணவனை இழந்த பெண்கள் எப்படி இந்த பூமியில் கைம்மை நோன்பு பூண்டு வாழ்கிறார்களோ அப்படி வாழ்வேன். அதுவும் உனக்காக,'' என்றாள்.
மருள்நீக்கியை பெரும் பக்தனாக வளர்த்தாள். அந்த மருள்நீக்கியே "திருநாவுக்கரசர்' என்றும் "அப்பர்' என்றும்பெரும்புகழ் பெற்றார்.

நன்மை செய்வதே விரதம்

முருகபக்தரான கந்தசாமி முருகனுக்குரிய எல்லா விரதங்களையும் அனுஷ்டிப்பார். இப்படி விரதம் இருப்பது தேவையா இல்லையா என்று கூட அவர் யோசித்ததில்லை. நோய்வாய்ப்படும் சமயத்திலும் கூட, சிரமப்பட்டு விரதமிருப்பார். அவரது மனைவி வள்ளியும் முருகபக்தை. என்றாலும், கணவரைப் போல, தீவிரமாக விரதத்தைப் பின்பற்ற அவரால் முடியவில்லை. கணவரிடம், ""விரதம் இருந்தால் தான் பக்தி என்று நினைக்காதீர்கள் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். ஆனால், கந்தசாமி அதைக் காதில் வாங்கவில்லை.
ஒரு கார்த்திகை விரதம். முருகன் கோயிலில் பக்தி சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. சொற்பொழிவாளர்
"விரதம்' என்ற தலைப்பில் பேசினார்.
""வள்ளியப்பன் என்றொரு இளைஞன்... நல்ல உழைப்பாளி. எதையும் வீணாக்க மாட்டான். நல்ல ஒழுக்கமும், பக்தியும் மிக்கவன். மளிகைக்கடை ஒன்றை நடத்தி வந்தான். அவனுடைய நேர்மையும்<, சிக்கனமும், உழைப்பும், பக்தியும் கடைக்கு மளிகை வாங்க வரும் பணக்காரப் பெண்மணிக்குப் பிடித்துப்போனது. தன் ஒரே மகளை அவனுக்கு திருமணம் செய்து வைத்தாள்.
மாமியார் வீட்டிற்கு விருந்துக்கு வள்ளியப்பன் சென்றான். வள்ளியப்பன், உணவை வீணாக்குவதில்லை, சாப்பிடும் நேரத்தில் பேசுவதில்லை என்ற இருவிஷயங்களை கோட்பாடாக வைத்திருந்தான். அவனுக்கு லட்டு, பாயாசம், ஏராளமான கூட்டு வகைகள், சித்ரான்னங்கள் என நிறையவே பரிமாறினர். வயிறு நிரம்பி விட்டது. இவன் சாப்பிட்டு முடிப்பதற்குள், இலையில் உணவை இட்டனர். இவன் தான் சாப்பிடும்போது பேசவும் மாட்டான், உணவை வீணாக்கவும் மாட்டானே!
சிரமப்பட்டு அதையும் சாப்பிட்டு முடித்தான். மாமியாரோ மருமகனுக்கு சாப்பாடு ரொம்பவும் பிடித்து விட்டது போலும் என்று எண்ணி, இன்னும் கொஞ்சம் உணவைப் போட்டாள். அதையும் சாப்பிட்ட அவன், வயிறு உப்பி, வலியால் துடிக்கத் தொடங்கினான்.
டாக்டரை வீட்டுக்கு வரவழைத்தனர். அவர் வள்ளியப்பனிடம் மிகவும் கோபித்துக் கொண்டார்.
""தம்பி! உணவை வீணாக்கக் கூடாது என்பதில் மட்டும் கவனம் இருந்தால் போதாது. அதிகம் சாப்பிட்டால் உடம்பும் வீணாகும் என்ற அக்கறையும் வேண்டும். உன்னைப் போல் பைத்தியக்காரனை உலகிலேயே பார்த்ததில்லை,"' என்று கேலியான தொனியில் எச்சரிக்கவும் செய்தார். வாந்தி எடுக்க மருந்து கொடுத்து வயிற்றைக் காலி செய்தார். போன உயிர் மறுபடியும் வந்தது போல உணர்ந்தான் வள்ளியப்பன்.
வள்ளியப்பனுக்கு மட்டும் இந்த விஷயம் பொருந்தாது. நம் ஒவ்வொருவருக்குமே இது பொருந்தும். ஆன்மிகம் என்றால் ஏராளமான விரதங்களை, பிரதிக்ஞைகளை மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். தகுதி,மனபலம், உடல்பலம் பற்றி கவலைப்படுவதே இல்லை. படிப்படியான முன்னேற்றம் தான் நிலையான பலனைத்தரும் என்பதை <உணரவேண்டும். எந்த ஒரு விஷயத்தைக் கடைபிடிப்பதாக இருந்தாலும், நம்மைப் பற்றிய தெளிவு
வேண்டும். விரத அனுஷ்டானங்கள் எல்லாம் நம்மை மேம்படுத்தத் தானே ஒழிய, சிரமத்தை ஏற்படுத்த அல்ல. மேலும், உடலை வருத்தும் விரதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளத்தில் நல்ல எண்ணங்களை விதைத்து, பிறருக்கு நன்மை செய்வதே உண்மையான விரதம். பிறருக்கு சேவை செய்வதையே இறைவன் சிறந்த விரதமாக ஏற்றுக்கொள்வான்,'' என்று சொற்பொழிவாளர் நிறைவு செய்தார்.
இதைக் கேட்ட கந்தசாமிக்கு உள்ளத்தில் தெளிவு பிறந்தது. வயதுக்கும், உடல்நிலைக்கும் ஏற்ப விரதமுறைகளைக் கடைபிடிக்க முடிவெடுத்தான். தம்பதியர் வீட்டுக்கு புறப்படும் போது மீண்டும் ஒருமுறை கருவறையைத் திரும்பி பார்த்தனர். முருகப்பெருமான் எப்போதும் போல சிரித்துக் கொண்டு நின்றிருந்தான்

‘குரு பார்க்க கோடி நன்மை’

குரு பார்க்க கோடி நன்மை’ என்பது பழமொழி. அத்தனை சக்தி வாய்ந்தது குருவின் பார்வை. இவர் அமரும் வீட்டை விட பார்க்கும் வீட்டிற்குத்தான் யோகம் அதிகம். நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்தவர் எனப் போற்றக் கூடிய சுபக்கிரகம் குரு ஆவார். தேவர்களுக்கு ஆசானாக இருக்கும் இவர், அறிவு, ஞானம் இவற்றிற்கு மூலமாக விளங்குபவர். தனம், புத்திரபாக்கியம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி குரு பகவான். நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும்.

வியாழ பகவான்

பிரம்மாவின் பேரர் ஆங்கீரச மகரிஷி. அவருடை மகனாகப் பிறந்தவர் ‘குரு’ என்று போற்றப்படும் வியாழபகவான். இவர் தேவ குருவாக விளங்குபவர். குரு அருட்பார்வை ஒருவருக்கு ஞானத்தை, கல்வியை, கலைகளை அருளும். குரு எனப்படும் வியாழன் சூரியனைச் சுற்றிவர பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும்.

யோகம் தரும் பார்வை

இவர் இருக்கும் இடம்தான் சங்கடங்களுக்கு ஆளாகுமே தவிர, இவரது பார்வை மிகவும் சக்தி வாய்ந்தது. இவரது பார்வை பல தோஷங்களை அகற்றிவிடும் வல்லமை கொண்டது. குரு 5, 7, 9 பார்வையில் பார்க்கும் இடங்கள் சுபிட்சம் பெறும். ‘அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு’ என்ற ஜோதிட வாக்கு இவரை குறிப்பதுதான்.

சமூக அந்தஸ்து, ஆன்மீக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரிகள் கட்டுதல், வங்கி, அரசு கஜானா போன்ற இடங்களில் வேலை கிடைத்தல் நிதி, நீதித்துறையில் பணிபுரிவது, நீதிபதி, அரசு உயர்பதவிகள் போன்றவற்றை அளிக்கும் வல்லமை உடையவர் குரு பகவான். எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் குரு நீச்சம் பெறாமலும் 6, 8, 12&ம் இடத்திலும் 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் சேராமல் இருக்க வேண்டும்.

கொண்டல்கடலை தானம்

குருவுக்கு உரிய தேதிகள், கிழமைகள், நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு பல யோகங்கள் உண்டாகும். மேலும் ஜாதகத்தில் கேந்திர, கோணங்களில் இருப்பதும் சிறப்பானதாகும். குருபகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள், பிடித்த தானியம் கொண்டைக்கடலை, உரிய ரத்தினம் புஷ்பராகம். குருவிற்கு ஏற்ற நாள் வியாழக் கிழமையாகும்.

அந்த நாளில் விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு செல்லலாம். அங்கு தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு பிராத்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் வழங்கலாம்.

வியாழ நோக்கம்

குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம் என்பார்கள். குரு பகவான் லக்கினத்தையோ அல்லது லக்கினத்திற்கு அடுத்துள்ள இரண்டாம் வீட்டையோ அல்லது சந்திர ராசியையோ அல்லது சந்திர ராசிக்கு அடுத்துள்ள இரண்டாம் வீட்டையோ கோச்சாரத்தில் சுற்றிவரும் போது, 5, 7, 9 ஆம் பார்வையாகப் பார்க்கும் நிலையை வியாழ நோக்கம் என்பார்கள்.

குரு பரிகார தலங்கள்

தமிழ்நாட்டில் குரு பரிகாரத்தலங்களாக பல உள்ளன. இவற்றில் கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாகும்.

நாள் தோறும் முருகப் பெருமான் பூஜித்தபின்பு, வியாழபகவான் இந்தத் தலத்திலே சிவபூஜை செய்கிறார். குருவருள் பெற திருச்செந்தூருக்குச் செல்லுங்கள். இவை தவிர சிவன் கோயில்களில் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை தினத்தன்று சிறப்பு வழிபாடுகள் செய்வதன் மூலமும் குருவின் அருளைப் பெறலாம்.

Saturday, June 4, 2011

அகத்திக்கீரை தானமாகக் கொடுப்பது புண்ணியம் தரும்!

அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருள்படும். நமது அகத்தின் தீயை அகற்றுவதால் இது அகத்தி என்று பெயர் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறுநாள் துவாதசி அன்று இறைவனை வணங்கி உண்ணும் உணவில் அகத்திக் கீரை முக்கிய உணவாக இடம் பெறுகிறது. இது இந்தியா முழுவதும் பயிரிடப் படுகிறது. பெரும்பாலும் அகத்திச்செடி நீர் தாங்கிய பூமிகளில் பயிர் செய்யப்படுகிறது. குறிப்பாகத் தென்னிந்தியாவில் இச்செடியில் வெற்றிலைச் கொடிக்கால்களில் வெற்றிலைக்கு நிழல் தருவதாகவும் வெற்றிலைக் கொடிக்குக் கொழு கொம்பாக உதவவும் பயிர் செய்கிறார்கள்.

முனி விருட்சம்

அகத்திக்கு, அகத்தியம், அச்சம், நுனி, காரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. அன்றியும் "அகத்தியம்", "முனி விருட்சம்", "வக்கிரபுஷ்பம்" என்ற பெயர்களும் உண்டு. அன்றியும் "அகத்தியம்", "முனி விருட்சம்", "வக்கிரபுஷ்பம்" என்ற பெயர்களும் வடமொழியில் வழங்கப்படுகிறது. வானத்தில் அகத்திய முனிவாரின் நட்சத்திரம் தோன்றுகின்ற காலகட்டத்தில் அகத்திமரம் பூக்கத் தொடங்குகின்ற காரணத்தினால் இதற்கு அகத்தியம் என்றும் முனிவிருட்சம் என்றும் பெயர்களும் வழங்கப்படுகின்றன. இக் கீரையை அழகுக்காகவும், உணவுக்காகவும், கால்நடை தீவனத்திற்காகவும் வளர்க்கின்றனர்.

அகத்தியில் அடங்கியுள்ள சத்துக்கள்

அகத்திக் கீரையில் 73 சதவிகிதம் நீரும் 8.4 சதவிகிதம் புரதமும் 1.4சதவிகிதம் கொழுப்பும் 2.1 சதவிகிதம் தாதுப்புக்களும் இருக்கின்றன. இதில் 2.2 சதவிகிதம் நார்ச்சத்தும் இருக்கிறது. மாவுச்சத்து 11.8 சதவிகிதம் இந்தக் கீரையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இக்கீரையில் அடங்கியுள்ள புரதச்சத்து மிகச்சிறந்த புரதமாகக் கருதப்படுகிறது. சுண்ணாம்புச்சத்து இக்கீரையில் அதிக அளவில் உள்ளது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

இக்கீரை உயிர்ச்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். உயிர் சத்தான வைட்டமின் A, நூறு கிராம் கீரையில் 9, 000 உள்ளது. தயாமின் சத்து 0.21 மில்லி கிராமும், ரைபோ· ஃப்ளோவின் சத்து 0.09 மில்லிகிராமும், நிக்கோடினிக் அமிலம் 1.2 மில்லிகிராமும், வைட்டமின் C 169 மில்லி கிராம் இருக்கின்றன.

மருத்துவப் பயன்கள்

அகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது.குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உணவாக உண்பதால் குணமாகும்.

தொண்டைப் புண் மற்றும் தொண்டைவலிக்கு அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் நீங்கும். இரத்தப் பித்தம், இரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை உண்பதினால் அகலும்.

இது மருந்து முறிவு கீரையாகும். பிற நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் அகத்திக்கீரையை சாப்பிடக் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றனர்.

கர்மவினைகள் தீரும்

அகத்திக் கீரையைத் தானமாகக் கொடுப்பது மிகவும் சிறப்புடைய செய்கையாகக் கருதப்படுகிறது. அதிலும் பசுக்களுக்குக் கொடுத்தல் பூர்வ-கர்மவினைகள் யாவும் விலகும் என்பர். ஆனால் இக்கீரையைத் தின்று கொண்டிருக்கும் கறவை மாட்டின் பாலில் உடலுக்கு நன்மை தரும் அனேக நற்குணங்கள் நிரம்பி இருக்கும். இப்பாலைச் சாப்பிடுவதால் அகத்திக் கீரையை உண்பதால் உண்டாகும் பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.

Friday, June 3, 2011

குளிகை காலம் என்பது

நமது நாட்காட்டியில் குளிகை என்று ஒன்று இருக்கிறது. ராகு காலம், எமகண்டத்தில் என்ன செய்யக் கூடாது என்பது தெரியும். ஆனால் இந்தக் குளிகை என்றால் என்ன? என்னவெல்லாம் செய்யக் கூடாது? எந்த நேரத்தில் குளிகையை பார்க்க வேண்டும்?

பொதுவாக குளிகை என்பதில் ஈமச்சடங்கு செய்யக் கூடாது. இதுவும் ராகு காலம், எமகண்டம் போன்றதுதான். குளிகன் என்றால் சனியின் மைந்தன் என்று சொல்வார்கள். ராகு காலத்தை ராகுவிற்கும், எமகண்டத்தை கேதுவிற்கும் சொல்வது போல, குளிகனை சனியின் மைந்தன் என்று சொல்வார்கள்.


அதாவது சனியின் ஆதிக்க நேரம் அது. அந்த நேரத்தில் சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சனிப் பிணம் துணை தேடும் என்று சொல்வார்கள். குறிப்பாக குளிகை காலத்தில் இறந்தாலோ, குளிகை காலத்தில் ஈமச்சடங்கு செய்தாலோ அடுத்ததாக ஒரு இழப்பை சந்திக்க நேரிடும். அதனால்தான் அந்த காலகட்டத்தில் இதுபோன்றவைகளை செய்யக் கூடாது என்று சொல்வார்கள். பொதுவாகவே குளிகை காலத்தை தவிர்ப்பது நல்லது.

Wednesday, June 1, 2011

கல்வி வளம் தரும் புத பகவான்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்று பழமொழி உண்டு. சூரியக்குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோளான புதன், சுட்டெரிக்கும் சூரியனுக்கு அருகில் இருப்பதாலேயே சாதரணமாக கண்களுக்கு புலப்படுவதில்லை. காலை அல்லது இரவின் தொடக்கத்தில் மட்டுமே புதனைக் காண்பதற்கு சரியான தருணம்.

சோதிட சாஸ்திரத்தில் புதனை கல்வியின் நாயகன் என்று அழைக்கின்றனர். "மாதுல (மாமன்), கல்விக்காரகர்' என்று அழைக்கப்படும் புதன் உடலில் நரம்புக்கும், தோலுக்கும் அதிபதி. ஜாதகத்தில் இவரது பலம் கூடியவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வித்யா காரகன் புதன். கணிதம், லாஜிக், வைத்தியம், ஜோதிடம் ஆகிய அனைத்திற்கும் நாயகன் புதனே. நாடகம், நடனம், புத்தக பிரசுரம் ஆகியவற்றிற்கு புதனின் பலமே வேண்டும். வடகிழக்கு புதனுக்கு உரிய திசை. புதன் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் ஜோதிடக்கலை கை கூடும்.

திருவெண்காடு

நவக்கிரஹ ஸ்தலங்கள். புதன் கிரகத்திற்கான கோவில் சீர்காழி அருகில் உள்ள திருவெண்காட்டில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி துவக்கத்தில் வெள்ளைக்காடாக - வெண் மலர்கள் சூழ்ந்த காடாக இருந்திருக்கிறது. அதனால்தான் இத்தலத்திற்குத் திருவெண்காடு என்னும் பெயர் ஏற்பட்டுள்ளது.

இங்கு இறைவன் பிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்வேதாரண்யேஸ்வராக எழுந்தருளியிருக்கிறார். காசிக்கு இணையான சிவ ஸ்தலம் இது. அந்தக் காலத்தில், காசிக்குச் சென்று வரமுடியாதவர்கள், இங்கே சென்று வந்துள்ளனர்.

கல்வியில் சிறக்க

புத பகவான்தான், கல்வி, அறிவு, பன்மொழித்திறமை ஆகியவற்றிற்கு அதிபதி. ஜாதகத்தில், புதன் நீசமடைந்திருந்தாலும், அல்லது மறைவிடங்களில் இருந்தாலும், கல்வி மற்றும் கலைகளில் குறைபாடு ஏற்படும். அக்குறைபாடு உடைய குழந்தைகளை திருவெண்காட்டில் உள்ள புதபகவானை தரிசிக்க கூட்டிக்கொண்டு வந்து பிரார்த்தனை செய்தால், அக்குறைபாடுகள் நீங்கும் என்பது நம்பிக்கை..

படைப்புக் கடவுளான பிரம்மா இந்தத் தலத்தில்தான் அம்பிகையின் முன் தவமிருந்து ஞானம் பெற்றாராம் அதனால்தான் இங்குள்ள அம்பிகைக்கு பிரம்ம வித்தியாம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது என்கின்றன தலபுராணங்கள். கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெறத் திணறும் குழந்தைகளை இத்தலத்திற்குக் கூட்டிக்கொண்டு போய் இறைவியை வணங்கச் செய்வது நன்மையளிக்கும்! இசைக்கலைஞர்களும் எழுத்தாளர்களும் மேன்மை பெற வழிபட வேண்டிய ஸ்தலம் இது. உடலில் நரம்பு தொடர்பான நோய் உடையவர்கள் புதனை வழிபட்டால் தீர்வு நிச்சசயம்

புதன் தசை நடப்பவர்கள்

புதபகவானுக்கு புதன்கிழமை உகந்த நாள். பச்சை வண்ணம் உகந்த நிறம். பாசிப்பயறு உகந்த தாண்யம். நவரத்தினங்களில் பச்சைக்கல் உகந்தது. திருவெண்காடு வந்து செல்ல முடியாதவர்கள், வீட்டில் இருந்தவாறு, புதன்கிழமையன்று, உபவாசம் இருந்து புதபகவானை வழிபட்டால் வெற்றி நிச்சயம்.

புத பகவானுக்கு அதி தேவதை ஸ்ரீமஹாவிஷ்ணு ஆவார். அதனால் பிரதி புதன் கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் சுலபமான பரிகாரமாகும். புத பகவான் ஜனவசிய (வியாபார) பிரிவினைச் சேர்ந்தவர். அதனால் வியாபாரிகள் இவரின் அருளைப் பெற ஸ்ரீ மஹாவிஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும். ​மேலும் மதுரை சென்று மீனாட்சி, சோமசுந்தரேஸ்வரரையும் வழிபட்டு வந்தால் வாக்கு வன்மையும், கல்வியில் மேன்மையும் உண்டாகும்.