Friday, January 7, 2011

தேரும் அதன் சிறப்பும்


வடமொழியில் இரதம் என்று சொல்லப்படுவதே தமிழில் தேர் என்று வழங்குகிறது. இது சிறப்பாக அரசர்களின் ஊர்தியைக் குறித்து நிற்கிறது.

தேர் பற்றி திருக்குறளிலும் பல்வேறு செய்திகள் உண்டு. உதாரணமாக “உருள்பெரும் தேர்க்கு அச்சாணி அன்னார்” (குறள் 667) என்று வள்ளுவர் உவமை கூறக்காணலாம். எனினும் இரதம் என்ற சொல்லாட்சி; பொலிவும், விரைந்த செயலும் உள்ள அனைத்தையும் குறிக்கும் சொல்லாக உள்ளது. ஆனால் தமிழ் இலக்கிய வழக்கில் கானல் நீரை, ‘பேய்த்தேர்’ என்றும் ரோகிணி நட்சத்திரத்தை ‘தேர்’ என்ற வினைச் சொல்லாலும் சூடாமணி நிகண்டு குறிப்பிடக் காணலாம்.

வானில் பறக்கும் விமானங்களை ஆகாசரதம் என்றும் மனவியல் கற்பனைத்திறனை மனோரதம் என்றும் அறிவாற்றலை ஞானரதம் என்றும் சிறந்த தர்க்கத்தை வாதரதம் என்றும் கூறுவர். எருதுகளால் இழுக்கப்படுவதை ‘கோரதம்’ என்றும் குறிப்பிடுவர். இதனை கொல்லா வண்டி என்றும் கூறுவர். ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளும் கருடத்தாழ்வாரை ‘விஷ்ணுரதம்‘ என்றும் முருகனின் மயிலை ‘ஸ்கந்தரதம்’ என்றும் அழைக்கும் வழக்கமும் உண்டு. மஹாதிரிபுர சுந்தரியாகிய அம்பாள் எழுந்தருள்வது ‘ஸ்ரீ சக்ரரதம்’ என்பர். தமிழிலுள்ள ஆண்பாற் பிள்ளைத்தமிழில் ‘சிறுதேர் உருட்டல்’ என்று ஒரு பருவம் இருப்பதும் சித்திரக்கவி மரபில் ‘இரதபந்தம்’ என்ற ஒரு வகை இலக்கியம் இருப்பதும் ஈண்டு சிந்திக்கத் தக்கது.

இலக்கியங்களில் தேர்

கடோபநிஷதத்தில் மனிதனின் உடலைத் தேராகவும் உயிரைத் தேர்த்தலைவனாகவும் புலன்களைக் குதிரைகளாகவும் புத்தியைத் தேர்ப்பாகனாகவும் புலன் சார் விடயங்களைத் தேரோடும் வீதியாகும் உவமித்திருக்கும் முற்றுருவகம் ஒன்றைக் காணலாம். ஸ்ரீ ருத்திர பூர்வ பாகமாகிய நமகத்தில்

ரதிப்யோ ரதேப்யச்ச வோநமோ நமோ ரதேப்ய:

ரதபதிப்யச்ச வோநமோ நமோ

என்று வருவதும் குறிக்கத்தக்கது.

அதாவது, “தேர்களாகவும் (ரதேப்ய:) தேர்வலவர்களாகவும் (ரதபதிப்யச்ச) உள்ள ஸ்ரீ பரமேஸ்வரனாகிய பகவானுக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம்,” என்கிறது.

சங்ககாலத்தில் மன்னர்கள் புலவர்களுக்கு தேர்களைப் பரிசாக வழங்கியதாகச் செய்திகள் உண்டு. இத்தகு செயல்கள் தேர்வண்மை எனப்படும்.

கறங்கு மணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த

புரந்தோங்கு சிறப்பிற் பாரி (புறம் 200)

“பொலந்தேர் மிசைப் பொலிவு தோன்றி” (புறம் 4)

இதைத் திருமூலர் தனது திருமந்திரத்தில்

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்

முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்

முப்புரமாவது மும்மலக் காரியம்

அப்புரம் எய்தமை ஆரறிவாரே. என்கிறார்.

இது தொடர்பில் அழித்தல் தொழிலை வெளிப்படுத்தும் தேர்த்திருவிழாவில் புதுமணத்தம்பதியர் கலந்து கொள்ளக் கூடாது என்றோர் மூடநம்பிக்கை சாதாரண மக்களிடம் புரையோடிப் போயிருக்கவும் காணலாம். ஆனால் அழித்தல் என்பது மும்மலங்களாகிய எம்மிடமுள்ள கெட்ட ஆணவாதி மலங்களையே என்பது நினைவில் கொள்ள வேண்டியது. (மலங்கள்தான் எமது ஆசைகளைத் தூண்டி எமையெல்லாம் இம்மையில் ஆட்டிப் படைக்கின்றன. அவை அற்றுப் போய்விட்டால் இல்லற வாழ்கை சிறக்காது என்பதனால் போலும்)

மஹாபாரத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனின் ரதசாரதியாக இருந்து உபதேசித்த பகவத்கீதை பிரஸ்தானத்திரயங்களுள் ஒன்றாகும் பெருமை பெற்றுள்ளது. காஞ்சி கச்சியப்ப சிவாச்சாரியார் பாடிய கந்தபுராணத்தில் தேர் பற்றிய பலஅபூர்வ செய்திகள் உண்டு. சூரபத்மனுக்கு அவனது தவத்தின் பொருட்டு சிவபெருமான் வழங்கிய தேரின் பெயர் ‘இந்திரஞாலம்’. இது “உண்ணிலா மாயை வல்ல ஒரு தனித்தேர்” என்று சிவாச்சாரியார் குறிப்பிடுவார். அதாவது தானியங்கி நிலையில் மிகுந்த சாமர்த்தியமுடையது இப்பெரும் தேர் என்று குறிக்கப்படுகிறது. பாரத்வாஜர் எழுதிய ‘யந்திர சர்வாஸ்தா’ என்ற இந்து சிற்ப இயந்திர சாஸ்திரம் இருப்பதாகக் கூறுப்படுவதும் சிந்திக்கத் தூண்டுகிறது

தேரின் பாகங்கள்
தேரின் சில்லிலிருந்து இறைவன் எழுந்தருளும் பீடம் வரையான பகுதி மூன்று பிரிவாகவோ ஐந்து பிரிவாகவோ வகுக்கப்பட்டு சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இறைவன் காட்சிதரும் பகுதிக்கு மேலுள்ள சிகரம் தமிழகத்தில் ஆண்டு தோறும் வண்ணத்துணிகளால் அலங்கரிக்கப்பட்டு மூலாலய விமானத்தின் மறுவடிவம் போல அழகுறக்காட்சி தரும். இலங்கையில் இவ்வாறு வருடாந்தம் அமைக்காமல் நிரந்தரமாகவே மரக் கூட்டுவேலைப்பாடுகளால் மேல்த்தளத்தை அமைக்கும் வழக்கமும் இருப்பது குறிக்கத்தக்கது.

தேரை ஆக்கவல்லவர் ஸ்தபதி எனப்படுவார். திராவிட உத்தரமட்டம் மற்றும் முகபத்திரம் முதலிய கலை மரபுகள் இவற்றுக்கு உண்டு. பார்விதானம், உபபீடம், அதிஷ்டானம், கமலாகார பண்டிகை நராசனமட்டம், தேவாசனமட்டம், உபசித்தூர்மட்டம் போன்ற அங்கங்கள் இறைவனின் இருக்கைப்பகுதிக்குக் கீழும் இருக்கைப்பகுதியில் தேர்ச்சாரதி தேர்க்குதிரைகள் மற்றும் பவளக்கால்களும் மணிமண்டபமும் மேல்விதானம் யாளிகளாலும் சிம்மங்களாலும் தாங்கப்பெறுவதாய் முகபத்திரமடக்கை முதலிய அம்சங்களுடனும் அமைக்கப்படுவதைக் காணலாம்.

இவற்றை தமிழ் இலக்கண இலக்கியங்களில் முறையே தேரின் அச்சிலிருந்த பீடம் வரையான பாகங்களை ஆரக்கால் உருள் (சில்லு- சக்கரம்) கிடுகு (தேர்த்தட்டைச் சுற்றி அமைக்கப்படும் மரச்சட்டகம்- நிகண்டு) என்றெல்லாம் அழைப்பர். பீடப்பகுதியிலுள்ள தாமரை மொட்டு வடிவிலுள்ள அமைப்பை ‘கூவிரம்’ என்றும் தேரின் நுகக்காலையும் சிகரத்தையும் இணைக்கும் பகுதியை ‘கொடிஞ்சி’ என்றும் தேரின் வெளிப்பாகத்து நீண்டமேல் வளைவை ‘கொடுங்கை’ என்றும் தேரை அலங்கரிக்கக் கட்டும் சீலையை ‘தேர்ச்சீலை’ என்றும் தேரின் நடுவிடம் தேர்த்தட்டு அல்லது ‘தேர்த்தளம்’ என்றும் சில நிகண்டுகளில் ‘நாப்பண்’ என்றும் அழைப்பர்.

தேரின் மேற்றட்டைச் சுற்றியுள்ள மரக்கைப்பிடிச்சுவர் ‘பாகர்’ என்றும் தேரின் நடுவிலுள்ள பீடம் ‘பார்‘ என்றும் ‘வேதிகை’ என்றும் தேரில் ஏறுவதற்காக அமைக்கப்பட்ட மேடையை ‘பிரம்பு’ அல்லது ‘தேர்முட்டி’ என்றும் அழைப்பர். இதை வடமொழியில் ‘ரதாரோஹணமண்டபம்’ என்பதும் குறிப்பிட வேண்டியது. இது போலவே தேர்ச்சில்லை ‘தேர்வட்டை’ என்றும் குறிப்பிடப்படுகின்றது. தேர் ஓட்டுபவரை ‘தேர்ப்பாகன்’ என்றும் ‘தேர்வலவன்’ என்றும் கூறும் வழக்கம் உள்ளது.

தேர் - சைவ சித்தாந்த விளக்கம்
மந்திர கேசரி மலைகள் அச்சு: சூரிய சந்திரர் சில்லுகள்: ஷட்ருதுக்கள் சந்திகள்: பதினான்கு உலகங்கள் தட்டுகள்: ஆகாச ஆசனம்: நதிகள் கொடிகள்: மோட்ச உலகம் மேல்விரிவு: யாகங்கள் சட்டம்: நாள் திதி நட்சத்திரம் போன்றன குறுக்கு மரங்கள்: அஷ்ட பர்வதங்கள் தூண்கள்: அஷ்ட திக்கஜங்கள் தாங்கும் ஆதாரங்கள்: ஏழு கடல்கள் திரைச்சீலைகள்: உபவேதங்கள் மணிகள்: வாயுக்கள் படிகள்: நால்வேதங்கள் குதிரைகள்;: உச்சிக்குடை பிரம்மரந்திரம்: கலசம் சோடஷாந்தத்தானம்: ஆக தேரானது சிவரூபம்… என்கிறது சைவ சித்தாந்திகளின் கருத்து. அகோர சிவாச்சாரியார் பத்ததியின் அடிப்படையில் ‘ரதப்பிரதிஷ்டா பத்ததி’ என்ற ஒரு கிரந்த நூலும் அபூர்வமாக வழக்கில் இருப்பதாகத் தெரிகின்றது.

அதே போலவே தேர் பிண்டஸ்வரூபமாக

சக்கரங்கள் - தசவாயுக்கள்

முதலாம் அடுக்கு - கீழண்டம்

அச்சு - மூலாதாரம்

அதன் மேலே - சுவாதிஷ்டானம்

அதன் மேலே - மணிபூரகம் - நாபித்தானம்

பீடம் - அநாகதம் - ஹிருதயஸ்தானம் - பகவான் எழுந்தருளும் இடம்

மேலே - விசுத்தி –கழுத்துப்பகுதி

32 குத்துக்கால்கள் - 32 தத்துவங்கள்

மேலே - ஆஞ்ஞா

முடிப்பகுதி - பிரம்மரந்திரம் – சஹஸ்ரகமலம்

No comments:

Post a Comment