Friday, January 28, 2011

முடி காணிக்கை தருவதேன்?

முடி காணிக்கை தருவதேன்?

இறைவனுக்கு முடி காணிக்கை கொடுக்கும் வழக்கம் இன்று, நேற்றல்ல… புராண காலத்திலேயே இருந்துள்ளது. அதிலும், முதன் முதலாக தன் கூந்தலை இறைவனுக்கு அர்ப்பணித்தவள், அன்று திருமணம் செய்ய இருந்த மணப்பெண் என்றால், ஆச்சரியமாக உள்ளதல்லவா!
சோழநாட்டிலுள்ள பெருமங்கலம் எனும் ஊரில், ஏயர்கோன் கலிக்காமர் என்ற வீரர் வாழ்ந்து வந்தார். இவரை, சிவபக்தர் என்பதை விட, சிவபித்தர் என்றே சொல்லலாம். சோழநாட்டின் தளபதியாக பணி செய்தார். சிவபக்தியில் சிறந்த மானக்கஞ்சாறர் அப்பகு தியில் வசித்தார். அவரது மகள் தனக்கு மனைவியானால், தன் வாழ்க்கை இனிமையாக அமையுமென எண்ணினார். பெண் பார்க்கும் படலம் முடிந்து, முகூர்த்த நாளும் குறிக்கப்பட்டு விட்டது. மணநாள் அன்று, மணமகள் வீடுநோக்கி மணமகன் பவனி வந்து கொண்டிருந்தார். மணமகனை, எதிர்நோக்கிக் காத்திருந்தாள் மணப்பெண். அப்போது, ஒரு சிவனடியார் அங்கு வந்தார். மானக்கஞ்சாறரின் மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதைத் தெரிந்து கொண்டார். அந்தப்பெண் அடியவரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றாள். அவளது நீண்ட கூந்தலை நோட்டமிட்ட அந்தப் பெரியவர், “இது எனக்கு வேண்டும்… பஞ்சவடி (முடியால் செய்யப்படும் அகலமான பூணூல்) செய்ய பயன்படும்!’ என்றார்.
சிவனடியார்கள் கேட்பதை மறுக்காமல் கொடுத்துவிடும் குணமுள்ள மானக்கஞ்சாறர், மகளின் கூந்தலை மணநாள் என்றும் பாராமல், அரிந்து கொடுத்து விட்டார். அந்நேரம் வந்து சேர்ந்தார் மணமகன். கூந்தலற்று குனிந்து நிற்கும் பெண்ணைக் கண்டார். அவர் கொஞ்சமும் தயங்கவில்லை. சிவனடியாருக்காக தன் கூந்தலையே தியாகம் செய்தவள் இவள். மேலும், பெற்றவருக்கும் இவள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்படிப்பட்ட பக்தியுடையவள் தன் மனைவியாவதில் மிகுந்த மகிழ்ச்சியே என்று எண்ணினார்; திருமணம் சிறப்பாக முடிந்தது. ஒருசமயம், சிவனின் நண்பரான சுந்தரர், சங்கிலிநாச்சியார் எனும் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்தார். முதல் மனைவி பரவை நாச்சியாருக்கு இது தெரிந்தால் சிக்கல் வருமே என அவளைச் சமாதானம் செய்வதற்காக, தன் நண்பரான சிவனை பரவையாரின் வீட்டுக்கு தூது போகச் சொன்னார். இதைக் கேள்விப்பட்ட கலிக்காமர், தன் சுயலாபத்துக்காக இறைவனை தூது போகச் சொன்ன சுந்தரர் மீது வெறுப்பில் இருந்தார். இதையறிந்த சிவபெருமான், கலிக்காமரையும், சுந்தரரையும் நண்பர்களாக்கும் பொருட்டு ஒரு நாடகமாடினார்.
கலிக்காமருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. அதை சுந்தரரால் மட்டுமே தீர்க்க முடியுமென கலிக்காமர் மனைவியின் கனவில் வந்து சொன்னார் சிவபெருமான். இதையறிந்த சுந்தரரும் கலிக்காமரை காண வந்தார். தன் எதிரியால், தான் பிழைக்கக்கூடாது எனக்கருதிய கலிக்காமர், தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த சுந்தரர் மிகவும் வருந்தி, தானும் தற்கொலைக்கு முயன்றார். சிவபெருமான் அவரைத் தடுத்து, கலிக்காமருக்கும் உயிர் கொடுத்தார். அதன்பின் இருவரும் நண்பர்களாயினர். இப்படி பக்திக்காக தன் உயிரையே கொடுக்க முன்வந்தவர் கலிக்காமர்; அவரது மனைவியோ பெண்ணுக்கே அழகு தரும் கூந்தலையே இறைவனுக்கு காணிக்கையாக அளித்தவள். இதன் அடிப்படையிலேயே, முடிகாணிக்கை கொடுக்கும் வழக் கம் பிரபலமானது. கலிக்காமரின் குருபூஜை, ஆனி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் நடத்தப்படும்

No comments:

Post a Comment