Saturday, January 29, 2011

மெய்ப்பொருள் நாயனார்

மெய்ப்பொருள் நாயனார்

உங்களுக்கு மெய்ப்பொருள் நாயனார் கதை தெரிந்திருக்கும். சேது நாட்டின் மன்னராக விளங்கியவர் மெய்ப் பொருள் நாயனார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் அவர்.
அவருடைய அன்பும், அறிவும், சிவநெறியில் நடக்கும் பண்பும், அவரைப் புகழுக்கு உரியவராக்கின. குடிமக்களால் பெரிதும் விரும்பப்படும் அரசராக அவர் விளங்கினார்.
ஆனாலும், அவரை விரும்பாத ஒருவனும் இருந்தான். அவன்தான் முத்தநாதன். அவனும் ஒரு சிற்றரசன்தான்.
அவன் மெய்ப்பொருள் நாயனார் மீது படையெடுத்துப் பார்த்தான். பாவம் முத்தநாதனுக்கு தோல்விதான் மிச்சம்.
அடிபட்ட பாம்பு வஞ்சம் வைப்பதுபோல், மெய்ப்பொருள் நாயனாரைப் பழிதீர்க்க அவன் நெடுங்காலம் காத்துக் கிடந்தான். அவன் மனம் பகைத் தீயால் புகைந்து கொண்டிருந்தது.
மெய்ப்பொருள் நாயனாரைப் போரில் வெல்ல முடியாது என்பதை அறிந்த அவன், வஞ்சனையாலும் சூழ்ச்சியாலும் வெல்ல நினைத்தான். அதற்காக அவன் ஒரு திட்டம் தீட்டினான்.
மெய்ப்பொருள் நாயனார் சிவனடியாரைப் போற்றும் பண்பு உடையவர் என்பதையும், அவருடைய அரண்மனையில் சிவனடியார்கள் எந்த நேரத்தில் நுழைந்தாலும் அதற்குத் தடையிராது என்பதையும் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட முத்தநாதன் சிவனடியார் வேடம் தாங்கி சேது நாட்டின் அரண்மைக்குள் நுழைந்தான்.
அவன் அவ்வாறு நுழைந்த நேரம், மெய்ப்பொருள் நாயனார் மஞ்சத்தில் தன் மனைவியுடன் துயில் கொண்டிருந்தார்.
“மன்னன் துயிலும் நேரம் இது. ஆகவே இப்போது அவரைப் பார்ப்பதும் தக்கதல்ல” என்று தடுத்தான், மன்னரின் மெய்க் காப்பாளனான தத்தன்.
போலியாக, துறவு வேடமிட்ட முத்தநாதன் தன் வஞ்சகத் திட்டத்திலிருந்து பின்வாங்கவில்லை.
“அப்பா! நான் மன்னருக்கு மிகமுக்கியமான ஆகமம் ஒன்றைப் போதிக்கவே வந்திருக்கிறேன். இது மிகவும் கிடைத்தற்கரிய ஆகமம். ஆதலால் மன்னரிடம் நான் வந்திருக்கும் செய்தியைச் சொல். அவர் பிறகு சந்திக்கலாம் என்று சொன்னால் நான் திரும்பிவிடுகிறேன்” என்றான் அவன்.
மன்னவரின் துயில் கலைக்கப்பட்டது. துறவி ஒருவர் மிக முக்கியமான ஆகமத்தோடு சந்திக்கக் காத்திருக்கும் செய்தி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
மெய்ப்பொருள் நாயனார் தாமே வாசல்வரை வந்து துறவி வேடத்திலிருந்த முத்தநாதனை வரவேற்றார்.
சிறந்த ஆசனத்தில் துறவியை அமரவைத்து, தான் கீழே பணிவுடன் அமர்ந்து கொண்டார். “சுவாமி! அந்த ஆகமத்தை நீங்கள் உபதேசிக்கலாம்.” என்றார் மெய்ப்பொருள் நாயனார்.
“இது ரகசியமான ஆகமம். இதைப் பெண்கள் கேட்கக் கூடாது என்பது விதி. ஆதலால் அரசியார் இங்கிருக்கக்கூடாது” என்றான் முத்தநாதன்.
மெய்ப்பொருள் நாயனார் அரசியாரின் முகத்தைப் பார்க்க, அரசியோ அந்தப்புரத்திற்குச் சென்றுவிட்டார்.
முத்தநாதன் காவித்துணியில் மறைத்து வைத்திருந்த ஓலைச்சுவடியைப் பிரித்தான். உள்ளே மறைத்து வைத்திருந்த கொடுவாளை எடுத்து மெய்ப்பொருள் நாயனார் மீது பாய்ச்சினான். அவனது வஞ்சகத்திட்டம் நிறைவேறிவிட்டது.
அந்தநேரம் மெய்ப்பொருள் நாயனாரின் மெய்க்காப்பாளன் தத்தன் உள்ளே நுழைந்து ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருக்கும் மன்னரைப் பார்த்தான். அவனுக்கு விஷயம் விளங்கிவிட்டது.
தன் உடைவாளை உருவினான் அவன். போலித்துறவியாக வந்திருந்த முத்தநாதனின் தலையைத் துண்டிக்க வாளை ஓங்கினான். அந்த நேரத்தில் மன்னர் மெய்ப்பொருள் நாயனார் “தத்தா! பொறு. அவர் நம்மவர். ஆதலால் அவரைப் பத்திரமாக நம் நாட்டு எல்லைக்கு அப்பால் கொண்டு சேர்த்துவிடு. அவருக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது.” எனக் கூறியதைக் கேட்டு தத்தன் மன்னரின் மரணகாலத்துக் கட்டளையை நிறைவேற்றினான். சிவனடியார்களை நம்மவர் என்றார் மெய்ப்பொருள் நாயனார்.
“ஒறுத்தாரை ஒன்றாக வையாரே-வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து”
என்கிறது திருக்குறள்.
இத்திருக்குறளுக்கு மெய்ப்பொருள் நாயனார் நல்ல உதாரணபுருஷராகத் திகழ்கிறார்.
ஒருவரின் தவறான செயலுக்குப் பழிக்குப் பழிவாங்குவது சுலபம். ஆனால், மிகவும் பொறுமையுடன் தவறுகளை மன்னிப்பது அரிதானதாகும்.

No comments:

Post a Comment