Sunday, January 16, 2011

குரு என்ற சொல்லுக்கு அறியாமையை-இருளைப்போக்கி ஞானத்தை,ஒளியை தருபவர் என்று பொருள்.இச்சொல்லால் நாம் இரண்டு தெய்வங்களை குறிப்பிடுகிறோம்.

1.தக்ஷிணாமூர்ண்தி
2.வியாழ பகவான் எனும் பிரகஸ்பதி
1.தக்ஷிணாமூர்த்தி:
தக்ஷிணம் என்றால் தெற்கு.தெற்கு நோக்கி வீற்றிருப்பதால் இவரை தக்ஷிணாமூர்த்தி என்றழைக்கிறோம்.சிவாலயத்தில் கருவறையின்
வெளிப்புறத்தில்,கோஷ்டத்தில் கோஷ்ட மூர்த்தியாக இவர் அமர்ந்துள்ளார்.(வினாயகர்,லிங்கோத்பவர்,பிரம்மா,துர்க்கை ஆகியோர் மற்ற
கோஷ்ட மூர்த்திகள்.<சில கோயில்களில் அமர்ந்த வினாயகருக்கு பதிலாக நர்த்தன வினாயகரும்.லிங்கோத்பவர் உள்ள இடத்தில் மஹாவிஷ்ணுவும் இருப்பர்)
தக்ஷிணாமூர்த்தி யார்?:
தக்ஷிணாமூர்த்தி கோஷ்ட மூர்த்தியே தவிர அவருக்கு ஆகம முறைப்படி தனிச் சன்னதி இல்லை.சிவபெருமானுக்குறிய 64 திருமேனிகளுள் 25 திருமேனிகள் "மாஹேஸ்வர மூர்த்தங்கள்"எனப்படும்.அம் மாஹேஸ்வர மூர்த்தங்களுள்தக்ஷிணாமூர்த்தியும்ஒருவர்.எனவேதக்ஷிணாமூர்த்தி,சிவபெருமானின் ஒரு சொரூபமே ஆவார்.இவர் மேலான ஞானத்தை அருளும் ஞான குரு.
நன்கு கற்று வல்லவர்களான சனகர்,சனந்தனர்,சனாதனர்,சனத்குமாரர் என்னும் நான்கு மகரிஷிகளுக்கும் கல்லால மரத்தின் கீழிருந்து மௌனமாகச் சின்முத்திரை காட்டி உபதேசம் செய்து ஞானத் தெளிவை தந்தவர்.
தக்ஷிணாமூர்த்தியின் வடிவம்:
இவர் கல்லால மரத்தின் கீழிரிந்து இடக்காலை மடித்து,வலக்காலை தொங்கவிட்டு,அக்காலின் கீழ் முயலகன் எனும் அசுரன் இருக்க,நான்கு கரங்களுடன்-மேற்கரங்கள் இரண்டில் ஜபமாலை மற்றும் மழுவும் இருக்க.கீழ்க்கரங்கள் இரண்டில் வலக்கரம் சின்முத்திரை காட்ட,இடக்கரத்தில் சுவடி ஏந்தி காட்சிதருகிறார்.ஈச்வரனுடைய மூவகை வடிவங்களுள் தக்ஷிணாமூர்த்தி வடிவம் யோகவடிவம் ஆகும்.இவரிடம் உபதேசம் பெற்ற நான்கு மகரிஷிகளும் இவருடைய திருவடிக்கீழ்,வரிசையாகவோ,பக்கத்துக்கு இருவராகவோ கைகூப்பி அமர்ந்திருப்பர்.இவர் உபதேசித்தது மௌனமாக இருந்து சின்முத்திரை காட்டி ஞானத்தெளிவை தந்ததாகும்.
தக்ஷிணாமூர்த்திக்கு 1.சின்முத்திரை,2.ஞான முத்திரை ஆகிய இரண்டும் உண்டு.
இவருக்கு ஆலமர் செல்வர்,தென்முகக் கடவுள்,தென்னவன் என்னும் பெயர்களும் உண்டு.இவர் சிவனின் சொரூபமேயாவார்.இவர் நால்வருக்கும் உபதேசம் செய்தமையால் இவரை உபதேச குரு என்கிறோம்.இவரை குரு மூர்த்தம் என்றும் அழைப்பர்.இவர் இடம்பெயர்வதில்லை.எனவே இடப்பெயற்ச்சி என்பது இவருக்கு கிடையாது.இவருக்கு மஞ்சள் துணியோ,கொண்டைகடலை மாலையோ,முல்லை மலரோ அணிவிக்கவேண்டாம்.சிவபெருமானுக்கு உரிய பூஜை பொருட்களே இவருக்கும்.
சின்முத்திரை
தக்ஷிணாமூர்த்தி சின்முத்திரையைக் காட்டிக் கொண்டிருக்கிறார். வலது கைக் கட்டைவிரலும், சுட்டு விரலும் ஒன்றையொன்று வளைத்து சார்ந்து நிற்க, ஏனைய மூன்று விரல்களும் விலகித் தனித்தனியேச் சேர்ந்து நின்று கொண்டிருக்கும் நிலை சின்முத்திரையாகும். நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரல் என்னும் மூன்றும் முறையே ஆணவம், மாயை, கண்மம், என்னும் மும்மலங்களைக் குறிப்பனவாகும்.நடுவிரல் நீண்டு முனைந்து நிற்பதால்,ஆணவ மலத்தைக் குறிப்பதாக உள்ளது. அதற்கு அடுத்த விரல், மாயாமலத்தைக் குறிப்பது என்பதனைப் புலப்படுத்தவே, மாயா, மல சம்பந்தமான பொன் முதலியவற்றால் இயன்ற மோதிரத்தினை, அதன் கண் நாம் அணிந்து கொள்கின்றோம்.

பெருவிரல் உதவியின்றி, நாம் எதனையும் எடுத்தல், பிடித்தல் முதலியன செய்தல் இயலாது. ஆதலின் அது சின்முத்திரையில் பகுதியினைக் குறிக்கின்றது. சுட்டுவிரல் தன்னியல்பில் ஏனைய மூன்று விரல்களோடு சேர்ந்து பெருவிரலை பிரிந்து நிற்கின்றது. அது பசு எனப்படும்.
கட்டைவிரலின் அடியில் சுட்டுவிரல் சென்று சேர்ந்து படிந்து நிற்பது. முத்திரையில் உயிர்கள் சிவத்தின் திருவடிகளில் சென்று ஒன்றி நிற்றலைப் புலப்படுத்துகின்றது.
உயிர்கள் பிறப்பு இறப்புத் துன்பங்களிலிருந்து விடுபடுதல் வேண்டுமாயின்,மும்மலங்களின் தொடர்பை விட்டுப் பதிப்பொருளின் திருவடிகளை அடையப் பெறுதல் வேண்டும். அதனை விளக்கவே சின்முத்திரையில் சுட்டுவிரலானது தான் சேர்ந்துள்ள ஏனைய மூன்று விரல்களைப் பிரித்து கட்டை விரலின் அடியில் சென்று வளைந்து பணிந்து தொட்டுக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment