Tuesday, January 11, 2011

விநாயக சஷ்டி

விநாயக சஷ்டி என்றும் மார்கழி சஷ்டி, குமார சஷ்டி, பெருங்கதை விதரம் என்றும் கூறப்பெறுகிறது. கார்த்திகைத் திங்கள் கிருஷ்ண பட்சப் பிரதமை முதலாக மார்கழித் திங்கள் (வளர்பிறை) சஷ்டி இறுதியாகவுள்ள இருபத்தொரு நாளும் இந்த விரதம் கடைப்பிடிக்கப்பெறுகிறது. சைவர்களுக்கு இக்காலம் மிகவும் புனிதமான காலமாகும்.

21 நாட்களும் ஒரு பொழுது உண்டு இறுதி நாளில் உபவாசம் இருந்து இளநீர் கரும்பு மோதகம் அவல் எள்ளுண்டை முதலானவற்றை நிவேதித்து சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் 21 நாட்களும் பெருங்கதை எனப்பெறும் விநாயக புராணம் (பார்க்கவ புராணம் ) படிக்க வேண்டும் கேட்க வேண்டும் ( இந்த 21 நாட்களிலும் விநாயக கவசத்தை நாள் ஒன்றுக்கு 21முறை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்).அடுத்த சஷநாள் ஏழை எளியவரோடு இருந்து உணவு உண்டு விதரத்தை நிறைவேற்ற வேண்டும்.
பிள்ளையாரின் திருமணம்:
பிரம்மதேவனுக்கு புத்தி, சித்தி என்ற இரண்டு புத்திரிகள் இருந்தனர். பிரம்மதேவர் அவர்களை விநாயகருக்கு மணம் முடித்து வைக்க விரும்பினார். அதனால் அவர் நாரதரைஅழைத்து தன் விருப்பத்தை கூறி, விநாயகரிடம் தூது அனுப்பினார்.
நாரதரும் விநாயகரிடம் சென்று தன் இயல்பான கலகமூட்டும் வேலையைச் செய்யாமல் ஒழுங்காக வந்த விஷயத்தைக் கூறினார். புத்தியையும், சித்தியையும் அங்கம் அங்கமாக வர்ணித்து இப்படிப்பட்டவர்களை மணக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறி விநாயகரின் மனத்தில் ஆசையை ஏற்படுத்தினார். பிள்ளையாரும் சம்மதித்தார். நாரதர் நேராகச் சென்று விஷயத்தை பிரம்மனிடம் கூறி விட்டார். பிரமனும் முறைப்படி சிவபெருமானையும் பார்வதியையும் பார்த்து விஷயத்தைக் கூறவே சிவபெருமானும் பார்வதியும் தங்களின் சம்மதத்தைத் தெரிவித்து விட்டனர். திருமணத்திற்கு நாளும் குறிக்கப்பட்டு விட்டது. விஸ்வகர்மா (தேவதச்சன்) திருமணத்துக்கு என்று சொர்க்கலோகத்தை விட சிறப்பான ஒரு நகரத்தை நிர்மாணித்தான். திருமணத்தைக் காண அனைத்து லோகங்களிலிருந்தும் கூட்டம் கூடிவிட்டது. அவர்களின் பசியைத் தணிக்க காமதேனு அவர்களுக்கு உணவு அளித்துக் கொண்டே இருந்தது. திருமண நாளும் வந்தது.
சித்தியை லட்சுமி தேவியும், புத்தியை இந்திராணியும் அலங்கரித்து மணமேடைக்கு அழைத்து வந்தனர். நூறாயிரம் கோடி தேவர்கள் மந்திரம் முழங்க, சித்தி, புத்தி இருவரின் கழுத்திலும் விநாயகர் மங்கள நாண் பூட்டினார். பிறகு திருக்கயிலாயம் சென்று பெற்றோரிடம் ஆசி வாங்கி அமைதியாக இல்லறம் நடத்தலானார்.

அது எப்படியோ அண்ணனாகிய பிள்ளையாருக்கும், தம்பியாகிய முருகனுக்கும் இருதுணைவிகள் அமைந்துவிட்டனர். முருகனுக்கு வள்ளியும், தெய்வானையும் இரு மனைவியர் என்பது எப்படி இச்சா சக்தி, கிரியா சக்தியாகிய தத்துவம் என்று கூறப்படுகிறதோ, அதைப் போல விநாயகப் பெருமானின் சித்தி, புத்தி என்பதும் அவரது சக்திகளே என்றும் கூறப்படுவதுண்டு.
விநாயகர் மகிமை
பிரணவ வடிவமே விநாயகர், தமக்கு மேலான நாயகர் இல்லாத பெருமான் என்பதே சொற்பொருள். தேவர், மனிதர் முதலிய, யாவராலும் முதலில் வழிபடப்படுபவர் மூத்த பிள்ளையாரே. “விக்கின விநாயக பாத நமஸ்தே” என்பர் வட நூலார். தம்மை நினைவாரது இடையூறுகளைப் போக்கியும், நினையாதார்பால் துன்பங்களை உளவாக் கியும் விளங்குதலால் விநாயகருக்கு விக்கினேசுவரர் என்ற திருநாமமுளதாயிற்று.
சிவபிரான், திரிபுர தகனஞ் செய்யச் செல்லுங்கால் நினையாமையால் அவர் சென்ற தேரின் "அச்சது பொடி" செய்தார் என்பர்.
திருபாற்கடல் கடையும்போது திருமால் முதலினோர் விநாயரை வணங்காமையால், கணேசமூர்த்தி மந்தர மலையைச் சாய்த்தனர் என்றும் கூறுவர்.
ஒளவையார் பூசையை ஏற்று அவரை கயிலையில் சேர்த்த அனுக்கிரக மூர்த்தி விநாயகரே! சேரமான் குதிரை கயிலை சேரமுன் ஒளவையாரை விநாயகப் பெருமான் துதிக் கையாலெடுத்துக் கயிலையில் இட்டனர். இதனால், கிழவியுங் காதம், குதிரையுங் காதம்” என்றனர் முன்னோர்.
நன்மை நாடொறும் நம்மை நணுக விநாயகப் பெருமானைப் போற்றி நலம் பெறுவோமாக

No comments:

Post a Comment