Saturday, January 15, 2011

அன்னதானம்

அன்னதானம்.
நம்மிடம் இருக்கும் பொருளை மற்றவர்க்கு ஈந்து - கொடுப்பவரும், பெறுபவரும் மகிழ்ச்சி அடைவதால் ஏற்படும் - பெரும் புண்ணியம் பெறுவதற்கான புனிதச் செயல்.
தலைப்படுதானம், இடைப்படுதானம், கடைப்படுதானம் என்று பொதுவாக மூன்று வகைப்படுத்தப்படுகின்ற தானங்களிலும்,
தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் கொடுக்கப்படும் சுமார் 42 வகை தானங்களிலும்,
மிக மிக உயர்ந்ததாகவும், உன்னதமானதாகவும், அனைவரும் செய்தே ஆகவேண்டிய தானமாகவும் கருதப்படுவது அன்னதானம் மட்டுமே ஆகும்.
உணவின்றி உயிரில்லை. உலகில்லை.
உணவே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றது.
வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்க்கு தானமாக அளிப்பதே அன்னதானம் ஆகும். அன்னதானம் அளவற்ற புண்ணியத்தினை நல்கும்.
மற்றப் பொருட்களையெல்லாம் தானமாகக் கொடுத்தாலும், பெறுபவர், இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றச் செய்யும்.
ஆனால், அன்னதானம் செய்தால் மட்டுமே போதும் என்ற சொல்லை தானமாகப் பெறுபவரிடமிருந்து கொண்டு வரும்.
ஆகையாலே பூரணமான தானம் - அன்னதானம் மட்டுமே ஆகும்.

எந்த ஒரு பெரும் வைபவத்திலும் இறுதியாக அமைவது அன்னதானம் மட்டுமே. வைபவத்தில், எந்த ஒரு குறையிருந்தாலும் அந்தக் குறைகள் அனைத்தையும் களைவது அன்னதானம் மட்டுமே ஆகும்.
உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ஈரேழு ஜன்மங்களையும் தொடர்ந்து வரும். அன்னதானம் மட்டுமே செய்தவரை மட்டும் சென்றடையாமல், செய்தவரின் சந்ததியினரையும் காத்துத் தொடரக் கூடியது.
அன்னதாதா சுகி பவ
(அன்னத்தை வழங்குபவர் சுகமாக வாழ்வார்) - என்ற மூதுரையும்,
அற்றார் அழி பசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி
(திருக்குறள் - 226) என்ற திருக்குறளும் அன்னதானத்தின் அருமைகளை அறிவிக்கின்றன.
அன்னதானத்தின் பெருமைகளை அளவிடமுடியாது. அதைப்பற்றி அறிவிக்க அனேகம் உள்ளன.

தானம் செய்வதில் பெரும் பெயர் அடைந்தவன் - கர்ணன்.
மஹாபாரத இதிகாசத்தில் கர்ணன் - அவன் செய்த கொடையாலும், தர்மத்தாலும், தானத்தாலும் பெரும் பெயர் பெற்றான்.
கர்ணனுக்குப் பிறகு கொடையில்லை என்ற சொல்வழக்கே உண்டு. கர்ணனைப் போல் யாவரும் தானம் செய்தது கிடையாது. அவன் பெருமையை அனேக சம்பவங்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றன.
ஒரு சமயம், கடும் மழையால் அகிலமே நனைந்திருக்கின்றது. அச்சமயம் பார்த்து வேதியர் ஒருவர் தான் செய்யவேண்டிய ஒரு பெரும் யாகத்திற்காக, காய்ந்த ஸமித்துகளும், மரங்களும் பெற வேண்டி, அனைவரிடமும் வேண்டுகின்றார். சமையலுக்குக் கூட விறகு இல்லாத நிலையில் அனைவரும் தங்களிடம் இல்லை என்று கைவிரித்து விடுகின்றனர். இறுதியாக கர்ணனிடம் வந்து யாசிக்கின்றார்.
அவர் கர்ணனிடமிருந்து பெரும் அளவில் காய்ந்த மரங்களை யாகங்களுக்காக மனமகிழ்வுடன் பெற்றுச் செல்கின்றார்.
எங்கிருந்து இந்த அளவுக்குக் காய்ந்த மரங்கள் கிடைத்தன என்று அனைவரும் வியந்தனர்.
அரண்மனையின் உள்ளே சென்று பார்த்தபோது தான் தெரிந்தது, தனது மணிமண்டபத்தினை இடித்து, மண்டபத்தினைத் தாங்கிக் கொண்டிருந்த உத்தரங்களையும், தூண்களையும் (மண்டபத்தின் உள்ளே இருக்கும் தூண்களும், உத்தரங்களும் காய்ந்துதானே இருக்கும்) வெட்டிக் கொடுத்திருக்கின்றான் கர்ணன்.
அந்த அளவுக்கு கொடுப்பதிலே வள்ளல் கர்ணன். வறுமைக்கே வறுமையை வைத்தவன். இடது கை கொடுப்பதை வலது கை அறியாவண்ணம் (இடக்கையில் இருப்பதை வலக்கையில் கொண்டு வரும் நேரம் கூட, தானத்தின் தன்மையை மாற்றிவிடும். ஆகையால், இடக்கையில் எடுத்ததை அக்கையாலேயே வழங்கும் தன்மை கொண்டவன்) கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரத்தை உடையவன்.
கர்ணனின் கொடைக்கு மற்றும் ஓர் உதாரணம்.
மஹாபாரதப் போரில் கர்ணனின் மார்பை அம்புகளால் துளைத்தெடுக்கின்றான் அர்ஜுனன். ஆயினும் கர்ணனின் உயிர் பிரியவில்லை. அவன் செய்த தர்மம் அவனின் தலையைக் காக்கின்றது. பகவான் கிருஷ்ணர் ஒரு வேதியர் வடிவம் கொண்டு கர்ணனிடம், இதுவரை கர்ணன் செய்த புண்ணியத்தை அனைத்தையும் தானமாக வேண்டுகின்றார்.
இதுவரை செய்த தானத்தைக் கொடுப்பதால் அதற்கென்று ஒரு புண்ணியம் வருமே! அந்தப் புண்ணியத்தையும் தானமாக கொடுக்கின்றார் கர்ணன்.
எப்படி?
வேதியர் வடிவம் கொண்ட கிருஷ்ணருக்கு 'இப்பிறப்பில் யான் செய்புண்ணியம் அனைத்தையும் தருகின்றேன்' என்று உரைக்கின்றார்.
செய்புண்ணியம் எனும் வார்த்தை - ஒரு வினைத் தொகை. வினைத் தொகை முக்காலத்தையும் குறிக்கக் கூடியது.
உதாரணமாக ஒரு வினைத்தொகை வார்த்தை : ஊறுகாய். ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறப்போகின்ற காய் என்று அர்த்தம் அமையும்.
அது போல - செய்புண்ணியம் எனும் வார்த்தை - இதுவரை செய்த புண்ணியம், இப்பொழுது செய்கின்ற புண்ணியம், எதிர்வரப் போகின்ற புண்ணியம் என அனைத்தையும் தானமாக கண்ணனுக்கு அளிக்கின்றான் கர்ணன்.கர்ணனுக்கு அளப்பரிய வகையில் தானம் செய்த பெரும் பெயர் கிடைக்கின்றது. தானம் பெற்றவுடன் வேதியர், தன் சுய உருக்கொண்டு, கர்ணனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டுகின்றார்.கர்ணன் மடிகின்றான்.
இறந்த பிறகு சொர்க்கத்திற்கு செல்கின்றான் கர்ணன். எல்லாவிதமான சௌகரியங்களும் கிடைக்கின்றது கர்ணனுக்கு. ஆனால், கடுமையான பசி எடுக்கின்றது. சொர்க்கத்தில் பசி என்ற உணர்வே கிடையந்தாயிற்றே!
தனக்கு மட்டும் பசியெடுக்கக் காரணம் என்று எண்ணியபோது, நாரத மகரிஷி அங்கு தோன்றுகின்றார்.கர்ணனிடம் நாரதர், பசி நீங்கவேண்டுமானால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் என்கிறார். அதன்படி, ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால், பசி நீங்குகின்றது. ஆனால், மறுபடிப் பசியெடுக்கின்றது.
மறுபடியும் நாரதரை கர்ணன் நினைக்க, அவர் தோன்றுகின்றார். அவரிடம் கர்ணன் தனக்குப் பசியெடுப்பதற்கும், ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால் பசி நீங்குவதற்கும் காரணம் கேட்கின்றார்.
அதற்கு, நாரதர் உன் வாழ்வில் நீ அனைத்து தானங்களையும் செய்திருக்கின்றாய், ஆனால், ஒரே ஒரு தானத்தைத் தவிர. அது அன்னதானம். அன்னதானம் செய்யாமல் சொர்க்கத்திற்கு வந்ததால், இங்கு வந்தும் உனக்குப் பசியெடுக்கின்றது. உன் பூலோக வாழ்நாளில் ஒருநாள் உன்னிடமிருந்து தானம் பெற்றவர் அன்னசத்திரம் எங்கிருக்கிறது எனக் கேட்க அதற்கு நீ உன் ஆட்காட்டி விரலைக் காட்டி அங்கிருக்கின்றது என்றிருக்கின்றாய். நேரடியாக அன்னதானம் செய்யாவிட்டாலும், அன்னதானத்திற்கான காரணியாக விளங்கிய உன் ஆட்காட்டி விரல் மட்டும் அன்னதானப் பலன் பெற்றது. ஆகையால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைக்கும்போது, சொர்க்கத்தின் முழுப்பலனாகிய பசியின்மையும் சேர்த்து உனக்குக் கிடைக்கின்றது என்றார்.
அன்னதானம் செய்யாமலேயே,அன்னசத்திரம் இருந்த இடத்தைக் காட்டியமைக்கே இந்தப் புண்ணியம் என்றால், அன்னதானத்தின் மகிமையை எப்படி அளவிடமுடியும்.
கர்ணனுக்கு ஒரு எண்ணம் தோன்றுகின்றது. அன்னதானத்தையும் அளப்பரிய வகையில் செய்யத் தோன்றுகின்றது. பரம்பொருளிடம் தன் எண்ணத்தை முன்வைக்கின்றான் கர்ணன்.

No comments:

Post a Comment