Friday, January 7, 2011

உடலில் உள்ள ஏழு சக்கரங்கள்

ஏழு சக்கரங்கள்


மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் ஆகிய சக்கரங்களே அவை.
மனிதனின் சக்தி நிலை பற்றிப் பேசும்போது ஏழு சக்கரங்கள் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவை மனிதனின் உடலில் உள்ளவை. இந்த சக்கரங்கள் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வது அவசியம்.
எல்லா இயந்திரங்களும் சக்கரங்கள் வழியாகவே நகர்கின்றன. சக்கரங்கள் இல்லாமல் ஒரு மாட்டு வண்டியோ காரோ நகர முடியாது. எனவே, சக்கரங்கள் இயக்கத்துக்கானவை. மனிதனை ஒரு பரிணாமத்திலிருந்து மற்றொரு பரிணாமத்திற்கு நகர்த்திச் செல்பவைதான் சக்கரங்கள்.

மனித உடலில நூற்றுக்கணக்கான சக்கரங்கள் உள்ளன. ஆனால் நாடிகள் சந்திக்கும் மையங்களாக ஏழு சக்கரங்களுக்கென்று தனித்தனி இடங்கள் குறிக்கப்பட்டிருந்தாலும் அவை ஒரே இடத்தில் இருக்குமென்று சொல்ல முடியாது.

சக்தி நிலையில் ஏற்படும் வளர்ச்சிகளுக்கேற்ப அவை நகரக்கூடும். இந்த ஏழும் சக்கரங்கள் என்று அழைக்கப்பட்டாலும் அவை வட்ட வடிவத்தில் இராது. முக்கோணங்களாகவே இருக்கும். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் ஆகிய சக்கரங்களே அவை.

மூலாதாரம்: உடலின் அடிப்படையான சக்கரம், இந்த சக்கரம் தூண்டப்படிருந்தால் உணவு, உறக்கும் ஆகியவற்றிலேயே அதிக நாட்டம் இருக்கும்.

சுவாதிஷ்டானம் : உலகின் பொருள் தன்மை சார்ந்து நுகர்ச்சிகளில் இருகி ஈடுபடாட்டிற்குக் காரணமானது.

மணிப்பூரகம்: உடலின் உறுதி மற்றும் நல மேம்பாட்டுக்கானது. இந்த சக்கரம் தூண்டப்பட்டவர்கள் கடும் உழைப்பாளிகளாக எறும்பைப் போல் சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள்.

அநாகதம்: இந்த சக்கரத்துகென்று சில முக்கியத்துவங்கள் உண்டு. படைப்பாற்றல், அன்பு போன்றவற்றின் ஆதார சக்கரம் இது. முந்தைய மூன்று சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் ஆகியவை உலகியல் இன்பங்களுக்கும், வாழ்க்கைக்கும் உரியவை. அநாகத்த்தை அடுத்து வருகிற விசுக்தி, ஆக்ஞை, சகஸ்ரஹாரம் ஆகியவை அருள் நிலை, ஆன்மீக வளர்ச்சி போன்றவற்றிற்கு உரியவை.

இந்த இருவேறு நிலைகளுக்கும் மத்தியில் ஒரு சம நிலையான தன்மை அநாகதத்திற்கு உண்டு. இரண்டு இயல்புகளும் கலந்ததாக இது அமைந்துள்ளது. அதனால் தான், மேல் நோக்கிய ஒரு முக்கோணமும், கீழ் நோக்கிய ஒரு முக்கோணமும் பின்னிப் பிணைந்து ஒரு நட்சத்திரத்தை உருவாக்கும் தோற்றமே அநாகத வடிவம்.

மேல் நோக்கியமுக்கோணம் அருளியல் வாவுக்கும் கீழ்நோக்கிய முக்கோணம் உலகியல் வாழ்வுக்கும் அடையாளம். ஸ்ரீ சக்கரம் போன்ற எந்திரங்கள் முக்கோணங்கள் நிரம்பியதாய் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவை அநாகதத்தில் இருந்து உருவானவைதான்.

விசுக்தி: என்பது தீயவற்றை வடிகட்டும் ஆற்றல் சிவபெருமானுக்கு ‘விசுவகண்டன்” “நீலகண்டன்” என்று பெயர்கள் உண்டு. இதன் பொருள், விஷத்தை வெளியே நிறுத்தியவர் என்பது. விசுக்தி சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் விஷத்தன்மை உடலுக்குள் நுழையாமல் தடுக்க முடியும். விஷம் என்றால் உணவு மட்டுமல்ல, தீய உணர்வுகள், எண்ணங்கள், சக்திகள் என்று விஷத்தன்மை கொண்டவற்றிலிருந்து விடுபட முடியும்.

ஆக்ஞை: இது ஞானம், தெளிவு, போன்றவற்றுக்கான சக்கரம். விசுக்தியைப் பொறுத்தவரை, அந்தச் சக்கரம் தூண்டப்பட்டால் ஆற்றலோடு நிகழமுடியுமே தவிர சமூகத்தில் நிறைய எதிர்ப்புகள் இருக்கும். சமூக வாழ்க்கையோடு உடன்பட இயலாது. மக்களிடமிருந்து விலகி வாழ்கிற நிலையிலேயே இருப்பார்கள். ஆனால் ஆக்ஞா முழுவதுமாகத் தூண்டப்பட்டவர்கள் சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற ஞானவான்களாகத் திகழ்கிறார்கள்.

சஹஸ்ரஹாரம்: இந்த சக்கரம்,பரவச நிலையைத் தரத்தக்கது. எப்போதும் ஒருவிதமான பரவச நிலையிலேயே இருக்கிற தன்மை, சஹஸ்ரஹாரா முழுமையாகத் தூண்டப்பட்டவர்களுக்கு உரியது. இவர்களுக்கு உணவு ஊட்டுதல், தூய்மை செய்தல், உடை உடுத்துதல் போன்றவற்றை மற்றவர்கள்தான் செய்ய வேண்டும். இதனால் இவர்கள் “அவதூதர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்த ஏழு சக்கரங்களும், வாழ்வின் ஏழு விதமான தீவிரத்தன்மைகள், பெரும்பான்மையான மக்கள் மூலாதாரத்திற்கும் மணிபூரகத்திற்கும் நடுஇல் சக்தி நிலைதூண்டப்பட்டு வாழ்ந்து முடிக்கிறார்கள். சிலருக்கு மட்டுமே அநாகதம் வரையில் அந்த ஆற்றல் துண்டப்படுகிறது.

வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமாய் சக்தி நிலை உயரும். ஆக்ஞாவிலிருந்து சஹஸ்ரஹாரா நோக்கி சக்தி நகர்வதற்கென்று மறு மையத்திற்கு குதிக்கிற சூழ்நிலைதான் அங்கே. அதற்குத்தான் ஒரு குருவின் பூரணமான அருளும் துணையும் தேவைப்படுகிறது. அதற்கு அளப்பரிய நம்பிக்கை வேண்டும். பல்வேறு பிறவிகளுக்குப் பிறகும் நம்பிக்கை வைக்காதாலேயே இந்த வாய்ப்பை பலரும் இழக்கின்றனர்.

ஆக்ஞாவைத் தொட்டவர்கள் அந்த எல்லையிலேயே நின்று விடுகின்றனர். அடுத்த சக்கரம் நோக்கித் தூண்டிச் செல்வதற்கு மிகுந்த நம்பிக்கையும் அர்ப்பணிப்புணர்வும் தேவை. இராமகிருஷ்ணரின் வாழ்வில் அது நிகழ்ந்தது. காளியிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த அவர், அவ்வப்போதுசில சமாதி நிலைகளை அடைவார். அப்போதெல்லாம் காளியிடம் பேசுவதாக, காளிக்கு உணவு தருவதாக உணர்வார்.

சமாதி நிலை கடந்து வெளிவந்ததும், காளியைத்தேடி சிறு குழந்தை போல் அழுவார். ஆக்ஞாவை எட்டியிருந்த அவர் அதைத்தாண்டிச் செல்ல விரும்பவில்லை. அப்போதுதான் தோத்தாபுரி என்கிற ஞானி இராமகிருஷ்ணரைக் கண்டார். முழுமையான வளர்ச்சிக்குரியவர் ஒரு எல்லையிலேயே தேங்கி நிற்பது கண்டு அவரிடம் நிறையப் பேசிப் பார்த்தார்.

இராமகிருஷ்ணர் ஒப்புக் கொள்ளவில்லை. தோத்தாபுரி, அருகிலிருந்த ஒரு கண்ணாடித் துண்டை எடுத்து, இராமகிருஷ்ணரின் ஆக்ஞாவில் அழுந்தக் கிழித்தார். உடனே முற்றிலும் புதிய எல்லையைத் தொட்ட இராமகிருஷ்ணர், பரமஹம்ஸர் ஆனார்.

சக்கரங்களைத் தூண்டுவதென்பது மிகவும் நுட்பமான ஒன்று. ஞானிகளாலேயே அது சாத்தியம். அடிப்படை சக்தி நிலையோடு விளையாடுவதால் அதனை எல்லோரும் செய்து விட இயலாது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் சக்கரங்களைத் தூண்டுவது தொடர்பான ஏமாற்று வேலை ஏராளமாக நடைபெறுகிறது. குண்டலினியை எழுப்புவது பற்றியும் நிறைய புத்தகங்கள் வந்துவிட்டன.

ஆத்ம சாதனைகளை, ஆன்மீகப் பயிற்சிகளை இடையறாமல் செய்து வந்தாலே சக்தி நிலை இயல்பாக மேலெழும்பும். ஆன்மீகப் பயிற்சிகள் உரிய முதிர்ச்சி அடையும்போது சக்தி நிலை மேலெழும்புமே தவிர சக்கரங்களைத் தனித் தனியாகத் தூண்டுதும் நல்லதல்ல.

ஏழு நிலையிலும் தீவிரத்தன்மை கொண்ட நமது சக்தி நிலை தூண்டப்படும் பொது மனிதன் தன் அளப்பரிய ஆற்றலை உணர்கிறான். அதற்கு பிராணாயாமம் போன்ற முறையான பயிற்சிகளே வழி.

No comments:

Post a Comment