Saturday, May 7, 2011

அகத்தியரின் சரிதம் :

அகத்தியரின் சரிதம் :

வடக்கே இமயமலையும் தெற்கே நம் பொதிகை மலையும் இவருக்கு ஒன்றேதான். தமிழும் மருத்துவமும் ஜோதிடமும் இறைபக்தியும் இவரிடம் இருந்து மணம் பரப்பின. தமிழகத்தில் உலா வந்த மாபெரும் சித்தரின் சுவையான சரிதம் இது!

அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும்,
மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்டவீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும்,மிர்திரர் குடத்திலிருந்து
தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன.
முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன்
அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.
அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றார். கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.
மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை.
இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர்.சுவேதன் என்பவன்
பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார். தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார்.
அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி "*அகத்தியம்*" என்னும் நூலை இயற்றினார்.
அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறி சமைத்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் "வாதாபே
ஜீர்ணோ பவ" என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.
சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் 'காக உரு' கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.
இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.
தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில்
இந்திர விழாவை எடுப்பித்தார்.
புதுச்சேரிக்கு அருகிலுள்ள 'உழவர் கரை'யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி 'அகத்தீஸ்வரம்' என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.
சித்தராய்விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது.அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி
பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம்.
அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல
நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள்பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.
அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி
கூறியுள்ளார்.
*மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:*
*
1. அகத்தியர் வெண்பா
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5. அகத்தியர் வைத்தியம் 1500
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9. அகத்தியர் வைத்தியம் 4600
10. அகத்தியர் செந்தூரம் 300
11. அகத்தியர் மணி 4000
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13. அகத்தியர் பஸ்மம் 200
14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
15. அகத்தியர் பக்ஷணி
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17. சிவசாலம்
18. சக்தி சாலம்
19. சண்முக சாலம்
20. ஆறெழுத்தந்தாதி
21. காம வியாபகம்
22. விதி நூண் மூவகை காண்டம்
23. அகத்தியர் பூசாவிதி
24. அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூலகளை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்
25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
26 அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம்.

அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.


அகத்தியர்,

- தமிழின் ஆதிகவி;
- அகத்தியம் எனும் இலக்கண நூலின் ஆசிரியர்;
- முதல் தமிழ்ச் சங்கத்தின் புலவர்;
- தொல்காப்பியரின் ஆசிரியர்.

புத்தமதக் கடவுள் அவலோகிவர் எனும் போதிசத்துவரிடம் தமிழ் கற்றவர் என்று
வீரசோழியமும், சிவனிடமும், முருகனிடமும் தமிழ் கற்றவர் என்று கந்தபுராணமும், அகத்தியருடைய ஆசிரியர்களைப் பற்றிய செய்திகளைத் தருகின்றன. இராமன் தொழுத அகத்தியரை இராமாயணம் குறிப்பிடுகிறது. பாரதம் கூறும் கண்ணபிரானைச் சந்தித்து பதினெண்குடி வேளிரையும் துவாரகையிலிருந்து தமிழ் நாட்டிற்கு அகத்தியர் அழைத்து வந்ததாக நச்சினார்கினியர் குறிப்பிடுகிறார். சமணர்களால் போற்றப்படுபவர்களின் பட்டியலிலும் அகத்தியர் இருக்கிறார். ஜாவா, சுமத்திரா தீவுகளுக்குச் சென்று சைவ சமயத்தைப் போதித்த சிவகுருவாகவும் அகத்தியர் இருக்கிறார்.

- சிலப்பதிகாரம்,
- மணிமேகலை,
- பரிபாடல்களிலும் அகத்தியரைப் பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன.

வேள்விக்குடி சின்னமனூர்ச் செப்பேட்டில் பாண்டியன் புரோகிதர் அகத்தியர் என்று குறிப்புள்ளது.

சேக்கிழாரின் பெரியபுராணத்தை ஒட்டி அகத்தியர் "பக்த விலாசம்" எனும் நூலை
வடமொழியில் அகத்தியர் எழுதியதாகவும் கூறப்படுகிறது.

அகத்தியம் என்பதோடு "சிற்றகத்தியம்", "பேரகத்தியம்" என்று இரு நூல்கள்
இருந்தனவாம். சிறுகாக்கைப் பாடினியார், பெருங்காக்கைப் பாடினியார் போல
சிற்றகத்தியார், பேரகத்தியார் என்று குறுமுனிக்குள்ளும் பல அண்டங்கள். சிவபெருமான் திருமணத்தில் வடக்கே இமயம் தாழ, தெற்கு உயர்ந்ததாகவும் வடக்கு, தெற்கை சமநிலைப்படுத்த அனுப்பி வைக்ககப்பட்டவர் அகத்தியர் என்றும் புராணக் கதைகள் உள்ளன. தென்திசை நோக்கி வந்த அகத்தியர் கங்கையிலிருந்து கொண்டுவந்த நீர் காவிரிதானாம். "அகத்தியர் தேவாரத் திரட்டு" என்று ஒரு நூல், தேவாரப் பாடல்கள் சிலவற்றின் தொகுப்பாக உள்ளது. அகத்தியர் தொகுத்தாரா? அவர் அகத்தியம் தந்த அகத்தியராக இருக்க முடியாது. அகத்தியர் பெயரை வைத்துக்கொண்ட சிவனடியார் ஒருவர் தேவாரப் பாடல்களில் சிலவற்றைத் தொகுத்துப் போட்டிருக்கலாம். தேவாரம்
பாடிய மூவர் பெயரும் இல்லாமல் தொகுத்துத் தந்தவர் தனது பெயரில் தேவாரத்
திரட்டு என்று நூலாக்கியிருக்கிறார். தேவாரம் என்றாலே மூவரும் நினைவிற்கு
வருவார்கள் என்பதால் தொகுத்தவர் தனது பெயரில் நூலைத் தந்திருக்கலாம்.
திருமுறைக் கலைஞர், திருச்சி வித்வான் திரு பட்டுச்சாமி ஓதுவார் அவர்கள் எழுதிய குறிப்புரையுடன் திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடம் பன்னிரு திருமுறைப் பதிப்பு நிதி வெளியீடாக 1956-ல் இந்நூல் வந்துள்ளது. தேவாரம் ஒரு இலட்சத்து மூவாயிரம் திருப்பதிகங்களை உடையதாம். இப்போது கிடைப்பவை 797 தான். மற்றவை மறைந்து போயின. எஞ்சியவை திருவாரூர் அரசன் அபய குலசேகரன் வேண்டுகோளின்படி நம்பியாண்டார் நம்பி ஏழு திருமுறைகளாகத் தொகுத்தவை என்றும் மூவர் பாடிய பதிகங்கள் முழுவதையும் மனப்பாடம் செய்த பலனை எளிதில் பெரும் பொருட்டு அகத்தியரால் 25 பதிகங்கள் மட்டும் திரட்டியளிக்கப்பட்டதாகவும் முன்னுரை கூறுகிறது. இதுமட்டுமன்றி ஆழ்வார்களின் பாடல்களைத் தொகுத்த நாதமுனிகளும்,
அகத்தியர் ஆணைபெற்றே நாலாயிரப் பிரபந்தப் பாடல்களைத் தொகுத்ததாக வைணவர்கள் கூறுவார்கள் என்று மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிடுகிறார். இப்போதும் அகத்தியர் இருக்கிறார் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். ஆண்டுதோறும் வெய்யில் கடுமையாக இருக்கும் ஏப்ரல், மே மாதங்களில் அகத்தியரைப் பார்க்க பொதிகைமலை போகிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் பாவநாசத்திற்கு மேல் உள்ளது அகத்தியர் அருவி. அதற்கும் மேல்

- கல்யாணதீர்த்தம்,
- பாணதீர்த்தம்,

பழங்குடி மக்கள் இப்போதும் வாழும் இஞ்சிக்குழி, தண்பொருநை நதிமூலம்-பொதிகைத் தென்றல் புறப்படும் பூங்குளம், அதற்கும்மேல் அகத்தியர் மொட்டை எனும் பொதிகைமலை உச்சி.

மூன்று நான்குநாள் பயணத் தேவைகளோடு மலையேறி அகத்தியரைப் பார்க்கப்
போகிறார்கள். பொதிகை மலை, தமிழுக்கும் மருத்துவத்துக்கும் பிறப்பிடம் என்றும் நம்புகின்றார்கள். சித்த மருத்துவத்திலும் அகத்தியருக்கு இடமிருக்கிறது. பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் அகத்தியர் இருக்கிறார். இவ்வாறு அகத்தியர்

- இலக்கியம்,
- இலக்கணம்,
- பக்தி,
- மருத்துவம்,
- சமயம்

என்று பன்முக ஆற்றல் கொண்டவராக மட்டுமின்றி

- தமிழ்-வடமொழி;
- சைவம்-வைணவம்;
- சமணம்-புத்தம்;
- இராமாயணம்-மகாபாரதம்;
- வடக்கு-தெற்கு;
- இமயம்-குமரி,
- கங்கை-காவிரி,
- வடநாட்டார்-தமிழ்நாட்டார்

ஆகியவற்றிற்கிடையேயான நல்லிணக்கத்திற்கான குறியீடாகவும் திகழ்கிறார்.

No comments:

Post a Comment