Sunday, May 15, 2011

இறை நாமத்தை எழுதுவதால் ஏற்படும் பலன்

இறை நாமத்தை எழுதுவதால் ஏற்படும் பலன்
Post
வேதங்களே பகவந் நாமத்தின் பெருமையைக் கூறுகின்றன. "கோ தர்ம ஸர்வ தர்மானாம்....' என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு ஆணித்தரமான பதிலாக "எல்லா தர்மங்களையும்விட மேலானது இறைவனது திருநாமத்தை ஓதுவதே' என்று மகாபாரதம் அடித்துப் பேசுகிறது. அனைத்துப் புனித நூல்களும் இறை நாமத்தின் பெருமைகளைக் கூச்சலிட்டுச் சொல்கின்றன. "இறைவனது திருநாமங்களை ஓதும்போது அந்தப் பரமாத்மாவை தியானிக்க வேண்டுமென்பதுகூட அவசியமில்லை' என்று "ஸ்ரீ பகவந்நாம ரúஸôதயம்' என்ற கிரந்தம் அறுதியிட்டுத் தெரிவிக்கின்றது. இறைவனையே நினைக்காமல் ராம நாமத்தை எழுதியிருந்தால்கூட அந்தப் புண்ணியம் எழுதியவரை சத்தியமாகக் காப்பாற்றும். இது ஒரு புறமிருக்க இறை நாமத்தை எழுதுவதாலும், எல்லா நேரங்களிலும் (மல ஜலம் கழிக்கும்போது கூட) சொல்லிக் கொண்டே இருப்பதாலும் தியானம் என்ன, அஷ்டாங்க யோகமும் ஸமாதி நிலையுமே தானே வாய்க்கும். இதை ஸ்ரீராம கிருஷ்ண பரம ஹம்ஸர் போன்ற பல மஹான்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இறைவனின் திருநாமத்தின் மகிமையை விளக்கும் வாக்கியங்கள் புனித நூல்களில் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன! அள்ளி மாளாது! "அந்த வாக்கியங்கள் அனைத்துமே இறைவனது பெயரை மனதினால் சிந்தித்து, வாக்கினால் சொல்வதற்காக மட்டுமே' என்று எவராலும் கூறிவிட முடியாது. இதோ! அசைக்க முடியாத பிரமாணம்! "லேகயந்திஹச நரா: தேஷாம் வாஸ: த்ரிவிஷ்டதே' என்கிறது ஆதி காவியமான ஸ்ரீமத் ராமாயணம். இதைவிட "நாமம் எழுதுவது பெரும் புண்ணியம்' என்று நிரூபிக்க வேறு சான்று ஏதேனும் வேண்டுமா? "மனிதர்கள் ராமாயணத்தை எழுதுவதால் (பிரதி எடுப்பதால்) சொர்க்கமே கிடைக்கும்' என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள். இது, யுத்த காண்டத்தின் கடைசியில் சொல்லப்படுவதால், "ராமாயணத்தின் தாத்பரியமே அதை எழுதுவதுதான்' என்றாகிறது. "விஷ்ணு ஸஹஸ்ர நாமத்துக்கு இணையானது ராம நாமம்' என்று பரமேஸ்வரனே சொல்லியிருப்பதன் அடிப்படையில், "ராம நாமம்' எழுதுவதும், ராமாயணத்தை முழுவதுமாக எழுதுவதும் ஒன்றே! "ராம நாமமே ராமாயணத்தின் சாரம்' என்று தனியே வேறு விளக்க வேண்டுமா? எனவே "லேகனம்' என்ற எழுதுதல் பற்றி வால்மீகி முனிவரே கூறிய பிறகு மற்றவர்களின் கருத்துகளை அலட்சியப்படுத்துவதே முறையானது.

இங்கே இன்னொன்றையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அந்தக் காலத்தில் ஏடுகளில்தான் எழுதுவார்கள். அது சற்று கடினமான காரியம். இப்போது இருப்பதைப்போல் பேப்பர், பேனா கிடையாது. அந்தக் காலத்திலேயே, ஏட்டில் எழுதச் சொன்னார் வால்மீகி முனிவர். இன்று எழுதுவது எளிதான விஷயமாயிற்றே! எனவே அனைவரும் இறை நாமத்தை எழுதிக் குவித்து, வினைப் பயன்களை எளிதில் பொசுக்கித் தள்ளுவதே எளிதான உபாயம். எழுதுவது சரியா என்ற கேள்விக்கு இடமேயில்லை.

ஸ்ரீகாஞ்சி மாமுனிவர், ஏராளமான மக்களை ராம நாமம் எழுதத் தூண்டியவர் என்பதை உலகே அறியும். அப்படி எழுதுபவர்களை ஊக்கப்படுத்த தங்க - வெள்ளிக் காசுகளையும் பிரசாதமாக அளிப்பார். இங்கே பரிசென்பது காசல்ல; முக்திக்கான மிக எளிய வழி! அனைவராலும் கடைபிடிக்கக்கூடிய, அவசியம் கடைபிடிக்க வேண்டிய யுக தர்மம். இருப்பினும் மக்களை உற்சாகப்படுத்த "பொன்-வெள்ளி' காசு திட்டத்தைச் செயல்படுத்தினார் காஞ்சி மாமுனிவர். வால்மீகியும், "ராமாயணம் எழுதுவதால் சொர்க்கம் கிடைக்கும்' என்று சொன்னது இந்த வெள்ளிக் காசு மாதிரிதான். உண்மையில் ராம நாமத்தை எழுதிக் குவிப்பதனால் சொர்க்கத்தைவிட மேலான முக்தியே கிடைக்கும்.



_________________

No comments:

Post a Comment