Thursday, May 12, 2011

மகான்களும் அன்னப்பறவையும்

மகான்களும் அன்னப்பறவையும்

மனிதன், தெய்வத்தை வழிபட வேண்டும். அந்த தெய்வத்தை, நமக்கு அறிமுகம் செய்பவர் ஆசார்யன்; அதாவது, குரு.
மகான்களின் குணம் என்னவென்றால், எல்லாரும் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணுவது தான். தர்மம் தழைக்க வேண்டும்; அதர்மம் அழிய வேண்டும். நல்லவன் வாழ வேண்டும்; தீயவன் திருந்த வேண்டும் என்று நினைப்பர். தீயவன் திருந்தினால், அவனும் நல்லவனாகி விடலாம். சாதாரண மனிதனுக்கும், மகான்களுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்.
மகான்களின் பெருமைகளைப் பற்றி சொல்லும் போது, இவர்களை ஹம்சபட்சி அன்னப்பறவை) களுடன் ஒப்பிட்டனர். இவர்களை பரமஹம்சர்கள் என்றனர். சன்னியாசிகளை அன்னப்பறவையின் தன்மை கொண்டவர்கள் என்று கூறினர்.
அன்னத்தின் உடல் வெண்மை; இவர்களும் வெள்ளை மனம் படைத்தவர்கள். அன்னம், இமயத்தின் உச்சியில் உலவும்; இவர்களும் உயர்ந்தோர் உள்ளத்தில் உலாவுவர். அன்னம் மோகத்தை வெறுக்கும்; இவர்களும் சிற்றின்பத்தை வெறுப்பர். இரண்டு சிறகுகளுடன் வானத்தில் அன்னம் பறக்கும்; தரையிலும் நடை பயிலும். அது போல் இவர்களும், ஞானம், கர்மம் என்ற இரண்டு சிறப்புகளால் இறைவனுடனும், நம்முடனும் உறவு கொண்டாடுவர். அன்னத்தின் உடலில் நீர் ஒட்டாது; இவர்களிடம் உலக மாயப்பாசி ஒட்டாது. அன்னம் தாமரை இலையை புசிக்கும்; இவர்களும் சாத்வீக உணவையே ஒரு வேளை உண்பர். அன்னம், “க்வ… க்வ…’ என்று கத்தும். “க்வ’ என்றால், “எங்கே?’ என்று பொருள். மகான்களும், நல்ல சீடர்களை “எங்கே, எங்கே?’ என்று தேடுவர். அன்னம் வீட்டில் தங்காது; இவர்களும் தங்கள் குடும்பத்தினருடன் தங்க மாட்டார்கள். அன்னப்பறவைகளின் அலகும், கால்களும் சிவந்திருக்கும். உபதேசம் செய்து, செய்து இவர்களின் திருவாயும், அடியார்களின் இருப்பிடம் தேடிச் சென்று, சென்று இவர்களின் திருப்பாதங்களும் சிவந்திருக்கும். அன்னம், நீரையும், பாலையும் பிரித்து, பாலையே பருகும். இவர்களும் சாஸ்திரங்களின் சாரமான விஷயங்களையே கிரகித்துக் கொள்வர். இப்படி ஒரு உயர்ந்த உவமான, உவமேயம் சொல்லப்பட்டுள்ளது.
மக்கள் ஷேமமாக இருக்க வேண்டும், உலகம் ஷேமமாக இருக்க வேண்டும் என்பது தான் இவர்களது ஆசை. அதற்காகவே தவம், தியானம் எல்லாம் செய்கின்றனர். இப்படிப்பட்ட மகான்களை நாம் தேடிப் போய் ஆத்ம ஞானம் பெற வேண்டும்.
ஒரு மகான், எங்கே இருந்தாலும், அவரைத் தேடிச் சென்று, அவரது அருள் பெற வேண்டும்; அவரிடம் உபதேசம் பெற வேண்டும். மனித ஜென்மா கடைந்தேற இதுவே சிறந்த மார்க்கம். தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை மகான்கள். தேடி வந்தவர்களை புறக்கணிப்பதுமில்லை; அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்கள் உய்யும் மார்க்கத்தைச் சொல்லி அருள் செய்வர்.
“உனக்கு ஷேமம் ஏற்படும்…’ என்று மகான்கள் சொல்லி விட்டால், அது அப்படியே நடக்கும். இவர்களது வாக்கை பகவான் காப்பாற்றுகிறார்; பொய்யாகாது. நம்பிக்கையோடு சென்று நலம் பெற வேண்டும்!

No comments:

Post a Comment