Sunday, May 8, 2011

உபநயனம்

உபநயனம்
வேதத்தை கற்பதற்கு வேத விதிப்படி செய்கிர சம்ஸ்காரம் இது।

உபநயனம் ன்னா கிட்டே கொண்டு போகிறது ன்னு பொருள்। எந்த கர்மாவால வேத வித்தைக்காக மாணவன் குருகிட்டே அழைத்துக்கொள்ள படுவானோ அதுக்கு உபநயனம் ன்னு பெயர். அந்தண க்ஷத்திரிய வைச்யர்களுக்கு தாயால முதல் பிறப்பும் உபநயனத்தால இரண்டாவது பிறப்பும் ஏற்படுகின்றன. இதனால இவர்களுக்கு த்விஜர் (இரு பிறப்பாளர்) என்று பெயர்.

இந்த கர்மா ஆண் பிள்ளைகளுக்குத்தான். பெண்களுக்கு இதற்கு பதிலா திருமணம் ன்னு சொல்லிட்டாங்க.

உண்மையில இதை செய்து வைக்க வேண்டியவர் வேதம் சொல்லித்தரப்போற குரு.

இப்ப இது பெரும்பாலும் வெத்து சடங்கா போயிட்டதால பையனோட அப்பாவே செய்கிறார். செய்து வைக்க அப்பா இல்லைனா அப்பப்பா; அவர் இல்லைனா செய்து வைக்க தகுதி உள்ளவங்க இந்த வரிசைல : அண்ணா, தாயாதி, அதே கோத்திரத்தை சேர்ந்தவங்க இப்படின்னு பட்டியலே இருக்கு. சன்யாசிகள் செய்து வைக்கக்கூடாது. மனைவி இல்லாதவர் செய்து வைக்கிறதும் அதமம்.

கொஞ்சம் கூட ஞானம் இல்லாதவர் செய்து வைக்கிறதும் உபநயனத்தால கொஞ்சம் கூட ஞானத்தை நாடாததும் இருட்டிலிருந்து இருட்டுக்கு போகிறது போலவாம். ஏழு வயதில் அந்தண சிறுவனுக்கும் அவன் நல்ல புத்தி கூர்மை இருந்தா ஐந்து வயசிலேயும் உபநயனம் செய்விக்கலாம். சக்தியை அனுசரித்து பதினாறு வயது வரை தள்ளிப்போடலாம்.

மாணவன் யாரிடமிருந்து தர்மத்தையும் அனுஷ்டானங்களையும் கத்துக்கொள்கிறானோ அவரே ஆசாரியர். உடம்பை மட்டும்தான் அப்பா அம்மா தராங்க. வாழ்கைக்கு தேவையான ஞானத்தை தரவர் ஆச்சாரியர்தான். அதனால அவருக்கு எப்பவுமே தீங்கு நினைக்கறதோ அபசாரம் செய்கிறதோ கூடாது.

உபநயன காலத்தில் குருவானவர் மாணவனை ஒரு கல்லின் மேல் காலை ஊன்றி நிற்கச்சொல்லி ஆசீர்வதிக்கிறார். “ இந்த கல்லைப்போல வலிமை கொண்ட உடலும் உறுதி கொண்ட நெஞ்சமும் உடையவனாக நீ இருக்க வேண்டும். உன் விரதங்களுக்கு ஊறு செய்பவர்களை எதிர்த்துப்போராடி நீ விரட்டி அடிக்க வேண்டும். சந்தியாவந்தனத்தையும் மற்ற கடமைகளையும் தவறாமல் செய்வாயாக. அறியாமையில் இருந்து விழித்து எழு. உறங்காதே.!"

உபநயன காலத்தில் அளிக்கப்படுகிற காயத்ரீ மந்திரம் எல்லா மந்திரங்களிலும் சிறந்ததாக சொல்கிறங்க. அதனாலேயே இதுக்கு பிரம்மோபதேசம் ன்னு பேர். பிரபஞ்ச சாரத்துல சங்கரர் சொல்றார்: இகத்திலேயும் பரத்திலேயும் நல்வாழ்கையை நாடும் த்விஜர்களால் இந்த மந்திரம் ஜபித்தற்கு உரியது

காயத்ரி ஜபத்தால் மனது ஒருமை படுவதுடன் ஜபம் செய்பவர் புத்தி, மேதா விலாஸம் ஆகியன மிகச்சிறந்த விருத்தியை அடைகிறது. ஞான ஒளியை தருவது இது. காயத்ரி ஜபமும் மற்ற நல்ல கர்மங்களும் மேலும் நல்ல ஞாபக சக்தியையும், நீண்ட ஆயுளையும், வலிமையையும் தருகின்றன.

காமம் உள்புகுந்தபின் மந்திரம் நிலைக்காது. அதனால்தான் காம விகார உணர்வுகள் உள்ளே போகும் முன்னே காயத்ரீ உபதேசமும் ஜபமும் ஆரம்பித்துவிட வேண்டும் என்கிறார்கள். அதனால்தான் சிறு வயதிலேயே இதை செய்து கொள்ள சொல்கிறார்கள். எண்ணை பூசிக்கொண்ட கை பலாச்சுளைகளை பிரிப்பது போல மந்திரம் நிலைத்த பின் மனதை காமம் அதிகம் பாதிக்காது.

பத்து வயதில் க்ஷத்திரியனும் 11 இல் வைச்யனும் உபநயனம் செய்ய காலம். மற்ற மதத்தவர் கூட இதே வயதில் இது போன்ற கர்மா செய்கின்றனர். பார்சிகள் குழந்தையின் 6 வயது 3 மாதங்களில் நவ்ஜோத் என்று செய்கிறார்கள்.
மனிதனுக்கு இதற்கு முன்னால் செய்யப்பட்ட கர்மாக்கள் அனைத்துமே இதற்கு தகுதியை உண்டாக்கத்தான்.

உடல் சுத்திக்காக முதலில் வபனம் (முடி திருத்தம்); நீண்ட ஆயுளுக்காவும், தன் பிள்ளைபோல மாணவனை காப்பாற்றவும் அக்னியை வேண்டுகிறார்கள். முன் சொன்னபடி கருங்கல் மீது ஏறி மந்திரங்கள் சொல்லி ஆசீர்வாதம் செய்த பின் ஆடை, மேகலை, மான்தோல், தண்டம் முதலியன பல தேவதைகளின் அருளை வேண்டிக்கொண்டு மாணவனுக்கு தரப்படும்.

வாமன அவதாரத்தின் போது அவருக்கு நடந்த உபநயனம் விரிவாக பாகவதத்தில் எட்டாம் ஸ்கந்தம் 18 வது அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. சூரியன் அவருக்கு நேரில் காயத்திரியை உபதேசம் செய்தான். உபவீதத்தை ப்ரஹஸ்பதியும்; மேகலையை கச்யப ப்ரஜாபதியும்; நீண்ட ஆயுள், யஷஸ் தரும் மான்தோலை பூமிதேவையும்; நல்ல புத்தி, வேதத்தை காத்தல் இவை பொருட்டு பலாச தண்டத்தை ஸோமனும்; இந்திரிய நிக்ரஹத்தை தர கௌபீனத்தை அதிதியும்; குடையை தேவலோகமும்; தீர்த்த பாத்திரத்தை ப்ரம்மாவும்; சுத்தம் தரும் குச புற்களை ஸப்த ரிஷிகளும்; ஜப மாலையை ஸரஸ்வதியும் பிட்சை எடுக்கும் பாத்திரத்தை குபேரனும்; உலகுக்கே தாயாரான உமாதேவி பிக்ஷையும் அளித்ததாக சொல்லி இருக்கிறது.

இந்த தேவதைகளின் அருளினால் வாமனர் பிரகாசித்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் ஹோமங்கள் செய்வதில் பயனாகும் மந்திரங்கள் மாணவனின் நீண்ட ஆயுள், செல்வம், ஐச்வர்யம், மேதாவிலாசம், புகழ் இவற்றை வேண்டி அக்னியை பிரார்த்திப்பதாக உள்ளது. பின் ஸமித்துக்களை மாணவன் ஹோமம் செய்கிறான். இந்த ஸமிதாதானம் ப்ரம்மசாரியால் தினமும் செய்யப்பட வேண்டியது.

முப்புரி நூலை எப்போதும் தரித்து இருக்க வேண்டும். அந்தணர் அல்லாத பலர் இதை சில விசேஷங்களுக்கு மட்டும் போட்டுக்கொண்டு (திருமணம், அந்திம காரியம்) மற்ற நேரங்களில் அணிவது இல்லாமல் போய் விட்டது. பூணூல் மூன்று இழைகள் கொண்டதாக செய்து அதை கட்டைவிரல் அல்லாத மற்ற 4 விரல்களில் 96 முறை சுற்றி துணித்து; இந்த நூலை நனைத்து மீண்டும் மூன்றாக முறுக்கி (இப்போது 9 இழை ஆகிவிட்டது) மூன்றாக சுற்றி முடி போட வேண்டும். இது பிரம்ம கிரந்தி. இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் உள்ளனர். பூணூலின் நீளம் தொப்புள் வரை இருக்க வேண்டும்.

இந்த பூணூல் என்கிற பிரம்ம சூத்திரம்தான் ஒருவன் தபஸை காப்பாற்றுகிறது. இந்த பூணூல் இல்லாது செய்யும் கர்மாக்கள் பலன் சரியாக தருவதில்லை. தேவ காரியங்கள் செய்யும் போது இடது தோளில் இருந்து வலமாகவும், பித்ரு கார்யங்களில் வலது தோளில் இருந்து இடமாகவும் அணிய வேண்டும். மற்ற நேரங்களில் சாதாரணமாக மாலை போல் அணிய வேண்டும் என்றாலும் பலரும் இதை பின் பற்றுவதில்லை.
முஞ்சம் புல் என்கிற புல்லை முப்புரியாக முறுக்கி அதை இடுப்பில் 3 முறை சுற்றி நாபிக்கு நேராக முடியிட வேண்டும். அதர்வண வேதத்தில் இதற்கு மூத்திர கோளாறுகளை தடுக்கும் சக்தி இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது.

மான் தோல்: இதை முழுதாக தோளில் போட்டுக்கொள்ள வேண்டும். இந்த காலத்தில் எங்கே! மான்களும் அரிதாகி விட்டன. பயன்படுத்தினால் சட்டமும் பாயும்! போட்டுக்கொள்ளலாமே தவிர அதில் படுக்கவோ, உட்காரவோ கூடாது. ஆயுர்வேதத்தில் இதற்கு க்ஷய ரோகத்தை நீக்கும் குணம் சொல்லப்படுகிறது.

தண்டம்: தன் நெற்றி உயரம் அளவுள்ள பலாச (முறுக்கன், புரசு- பூவரசு அல்ல) தண்டத்தை கையில் வைத்துக்கொள்ள வேண்டும். தேவர்கள் காயத்ரீயின் பொருளை விசாரம் செய்த போது இந்த மரம் அதை கவனமாக கேட்டுக்கொண்டு இருந்ததாம். அதனால் காயத்ரீயின் 3 பாதங்களையும் அறிந்து கொண்டு மும்மூன்று இலைகள் உள்ள காம்புகளாக தளிர் விட்டதாம். இதன் தண்டத்தை கைக்கொண்டவன் பொய் வார்த்தைகளை கேட்க மாட்டான்; ஞாபக சக்தி பெருகும் என சொல்லப்படுகிறது.

பின் ஆசாரியன் அனுமதி பெற்று பிட்சை எடுக்க வேண்டும். முதல் பிட்சை அன்னையிடமும் பின் பிட்சை மறுக்காத தன் பெரிய தாயார் அக்கா இவர்களிடமும் பெறலாம். இது தவிர அப்பா முதலானவர்களிடமும் வாங்கலாம். மூன்றோ தேவையானால் அதிகமான பேர்களிடம் பிட்சை பெறலாம். முடிந்த பிறகு ஆசாரியனிடம் அதை கொண்டு காட்டி அவர் அனுமதித்தபின் சாப்பிடலாம்.

உபநயன தினத்திலிருந்து 3 நாட்கள் உப்பு, உரப்பு இவற்றை விலக்க வேண்டும். 3 நாட்கள் அரிசியாகவும் பின் அன்னமாகவும் பிசை பெற வேண்டும். சந்தியா உபாசனையை தொடர்ந்து செய்ய வேண்டும்.

சுருக்கமாக கர்மா வழிமுறை பின்வருமாறு:

பூர்வ அங்கமாக உதகசாந்தி என்கிற வேத மந்திரங்களின் தொகுப்பை பாராயணம் செய்தல்; மந்திர ஜபம்; அங்குரார்ப்பணம்; ப்ரதிசரபந்தம்; அப்ப்யுதயம்; புண்யாஹம் என்கிற சுத்தி கர்மா.

விக்னேஸ்வரபூஜை;  புண்யாஹம்: முப்புரி நூல் தரித்தல்; (இதுவல்ல முக்கிய கர்மா); உப்பு காரம் இல்லாத நெய்யும் பாலும் சேர்த்த அன்னத்தால் குமார போஜனம் - பையனுடன் சில பிரம்மசாரிகளுக்கு உணவிடல்; சௌளத்தில் சொன்னபடி மீண்டும் திக் வபனம் (முடி திருத்தம்); குளியல்; கோமணம் கட்டுதல். பக்கதில் பையனை இருத்திக்கொண்டு ஆசாரியன் லௌகீக அக்னியை இட்டு ஹோமம். முன் சொல்லிய பலாச தண்டம் முதலானதை அளித்தல்; முன் சொன்னது போல அம்மியில் நிற்கவைத்து ஆசீர்வாதம்; ஆசார்யனுக்கும் மாணவனுக்கும் இடையில் ஒரு உரையாடல்; பின் மாணவன் கையை பிடித்துக்கொண்டு ஆசார்யன் ஹோமம் செய்வித்தல்; மீதி ஹோமத்தை ஆசார்யன் முடித்தல்;

ப்ரம்ஹோபதேசம் - இதுதான் இந்த கர்மாவில் முக்கிய பாகம்.
கூடியிருக்கும் பெரியோரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு நவக்ரஹங்களுக்கு திருப்தி செய்து ஆசார்யனின் பாதங்களை கழுவி பூசித்து "ஸாவித்ரீயை உபதேசம் செய்யுங்கள்" என வேண்டுதல். அவரும் உபதேசிப்பார். பட்டால் தங்களை மூடிக்கொண்டு அது நடக்கும். முடிந்து பலாச தண்டம் எடுத்துக்கொள்ளுதல்; மாணவனே குருவுக்கு தக்ஷிணை தருதல்; குரு மேற்கொண்டு பல மந்திர உபதேசங்கள், சூரிய வழி பாடு துவக்கம். பிறகு ப்ரம்மசர்யம் எப்படி  அனுஷ்டிக்க வேண்டும் என சில கட்டளைகள் இடுகிறார்.

நீ ப்ரம்மசர்யத்தை அனுஷ்டிப்பவனாக இருக்கிறாய்
அப்படியே செய்கிறேன்.
என்னால் அனுமதிக்கப்பட்டவனாக நீர் அருந்து
அப்படியே செய்கிறேன்.
கர்மாவை செய் (சமித்துக்கள் சேகரித்து கொண்டு வருவது, சமிதாதானம் செய்தல் போன்றவை)
அப்படியே செய்கிறேன்.
பகலில் தூங்காதே
அப்படியே இருக்கிறேன்.
தினந்தோறும் உணவுக்காக பிக்ஷை எடு
அப்படியே செய்கிறேன்.
எனக்கு கட்டு பட்டவனாக, என் உத்திரவு இல்லாமல் பிறருக்கு ஹோமம் செய்வித்தல், வேதம் சொல்லிக்கொடுத்தல் ஆகியவற்றை செய்யாதிரு.
இதற்குப்பின் பிக்ஷை எடுத்தல்.
நான்கு நாட்கள் அதே துணியை உடுத்தி இருக்க வேண்டும். 4 வது நாள் ஆசாரியன் வேறு துணியை கொடுத்து அதை வாங்கிக்கொள்வார்.

நான்காம் நாள் பலாச கர்மா ....
நான்காம் நாள் பலாச கர்மா

மாணவன் மூன்று நாட்கள் அரிசியே பிசை எடுக்க வேன்டும். 4 ஆம் நாள் முதல் அன்ன பிட்சை. இதுவரை ஆபஸ்தம்பர் கூறியபடி கர்மாவுடைய வரிசையை பாத்தோம். இனி சொல்கிறது மற்றவர் எழுதியபடி.

கர்மா எது, எப்போ, எப்படி செய்யணும்னு கொஞ்சம்தான் வேதத்திலோ சாஸ்திரத்திலோ இருக்கும். முழு விவரங்கள் பாக்க கிருஹ்ய ஸூத்திரங்களைதான் பாக்கணும். அவரவர் ஸூத்திரப்படி கர்மாக்களை செய்யணும்.
அப்படி பார்க்கும்போது பலாச கர்மா சிலருக்கு இருக்கும்; சிலருக்கு இருக்காது.

4 ஆம் நாள் ஆசார்யனுடன் கிழக்கு அல்லது வடக்கு திசை சென்று ஒரு புரச மரத்தின் அடியில் 3 மண் திட்டுகள் செய்ய வேண்டும். முறையே பிரணவம், ஷ்ரத்தா தேவி, மேதா தேவி ஆகிய தேவதைகளை ஆவாஹனம் செய்து மந்திரங்களால் போற்றி முன் எடுத்துக்கிட்ட பலாச தண்டத்தை அங்கேயே விட்டுவிட்டு வேறு தண்டம் எடுத்துக் கொண்டு ஆசாரியனுடன் திரும்பணும்.

உபதேசம் செய்யப்போறவர் விசேஷமாக அதிக ஜபம் செய்து உபதேசம் செய்தால் நல்ல பலன் இருக்கும். அதுக்கு தனியா சங்கல்பமே இருக்கு.
இல்லாட்டா இருட்டுலேந்து இருட்டுக்கு போகிற மாதிரி ஆகிடும். அதனால் உபதேசம் செய்ய நல்ல குலத்திலே பிறந்து நல்ல அனுஷ்டானம் உள்ளவரை பார்த்து தேர்ந்து எடுக்கணும்.
சுமங்கலி பிரார்த்தனை முன் கூட்டியே தவறாமல் செய்யணும். சமாராதனையும் அவரவர் குல வழக்கப்படி செய்யணும். (சாதாரணமா அந்தணர்களுக்கு உணவளிக்கிறதுதான் சமாராதனை.)

அங்குரார்ப்பணம் என்பது புண்யாஹம் செய்து 5 பாலிகை கிண்ணங்களில் நெல், உளுந்து, எள்ளு, பச்சை பயறு, கடுகு ஆகியவற்றை மந்திர பூர்வமாக இட்டு பூஜை செய்தல். ஓஷதி ஸூக்தமும் சொல்லுவர். 5-7 சுமங்கலிகளும் ஜலம் தெளிப்பர். பின் தினசரி காலையும் மாலையும் ஜலம் தெளித்து பூஜை செய்து 5 ஆம் நாள் தேவதைகளை அனுப்பி வைத்து, நதியிலோ குளத்திலோ கரைத்துவிடுவர்.
பிரதிசர பந்தம் என்பது ரக்ஷை கட்டிக்கொள்ளல்.

No comments:

Post a Comment