Saturday, May 7, 2011

வளைகாப்பு

வளைகாப்பு
காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்ட இன்பம் தரும் இல்லற வாழ்வில் இருவரும் எய்தும் பேரின்பம் குலம் தழைக்க ஒரு பிள்ளையைப் பெறுவதுவே. அதிலும் மனைவி கருவுற்று அவளுக்கு வளைகாப்பு நடைபெறுகையில் இவ்வின்பம் பெரும் எதிர்பார்ப்புடன் கலந்து ஒருவித உணர்ச்சிப் பெருக்கினை உண்டாக்க வல்லது.
தனியொரு மனிதன் எனும் சாதாரண நிலையிலிருந்து தந்தை எனும் பெரும் பதவியைப் பெறும் பெருமிதம் கணவன் முகத்தில் காணும் நன்னாளிது. இந்த வளைகாப்பு விழாவைக் கொண்டாட மனைவியின் உடன் பிறந்த சகோதரி இருந்துவிட்டால் இந்த இன்பம் பன்மடங்காகப் பெருகி அனைவரையும் உற்சாகப் படுத்தத் தவறுவதில்லை.

மலர்கள் சூட்டி, மஞ்சள் கூட்டி, வளையல் பூட்டி, திலகம் தீட்டி கர்ப்பிணிப் பெண்ணைப் போற்றி மகிழ்ந்து பாராட்டும் இந்நாளை மகிழ்வுடன் கொண்டாடாத மனிதர் யாரும் இல்லை. அன்று அவளுக்குப் பூட்டி மகிழும் வண்ண வண்ன வளையல்களின் சிறப்பையும் விழாவில் கணவன் மனைவி இருவரின் மன நிலையையும் அழகு தமிழில் விளக்கும் ஒரு அற்புதமான பாடல்:

அக்காளுக்கு வளைகாப்பு
Song: ம்ங்கையர் முகத்திலே - mangaiyar mugathile
Movie: Kalyana parisu - திரைப்படம்: கல்யாணப் பரிசு
Singers: Jikki பாடியவர்: ஜிக்கி
Lyrics: P. Kalyana sundaram இயற்றியவர்: பி. கலியாண சுந்தரம்
Music: A.M. Raja இசை: ஏ.எம். ராஜா
Year: 1957


ம்ங்கையர் முகத்திலே கொஞ்சி விளையாடும்
மஞ்சள் நிற வளையல் இது வாழ்வு தரும் வளையல்
மங்கலப் பெண்குலம் பொட்டு வைத்தே மகிழும்
குங்கும நிறத்தோடு குலுங்கும் திரு வளையல்
வற்றாத மாநில வளந்தனை விளக்கிடும்
வற்றாத மாநில வளந்தனை விளக்கிடும்
மங்காத பச்சை நிறம் வழங்கும் எழில் வளையல் - தும்பை
மலர் போன்று இரு மனமும் மாசின்றி வாழ்கவென
வாயார வாழ்த்திடும் வெண்சங்கு வளையல்
வாயார வாழ்த்திடும் வெண்சங்கு வளையல்

அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
அக்கம் பக்கம் கலகலப்பு யாரைப் பார்த்தாலும் சுறுசுறுப்பு
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே

முத்துப் போலே பவழக் கொத்துப் போல இன்னும்
மூணு மாசம் போனா மகன் பொறப்பான்
முத்துப் போலே பவழக் கொத்துப் போல இன்னும்
மூணு மாசம் போனா மகன் பொறப்பான்
பட்டுப்போலத் தங்கத் தட்டுப் போலே கரும்புக்
கட்டுப் போலக் கிடந்து கண்னைப் பறிறப்பான்

அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே

ஒண்ணும் தெரியாத சின்னப் பிள்ளை போலே
ஒக்காந்திருக்காரு மாப்பிள்ளை அத்தான் ஆமா
ஒக்காந்திருக்காரு மாப்பிள்ளை அத்தான் - அவர்
கண்ணே முழிக்கிறாரு சும்மா கனைக்கிறாரு
என்னான்னு கேளுங்கடி சங்கதியத் தான் - அடி
என்னான்னு கேளுங்கடி சங்கதியத் தான் - அடி
எனக்குந்தெரியாது ஒனக்குந்தெரியாது
ஏதேதோ பேசுறாங்க ரெண்டு பேரும் - அதை
வெளக்க முடியாது வெவரம் புரியாது
வேணாண்டி நமக்கது ரொம்ப தூரம் - அடி
ஆமாண்டி நமக்கது ரொம்ப தூரம்

அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே

தாலாட்டுப் பாடி இவர் தாயாகி மகனுக்குப்
பாலூட்ட நெருங்குது நாளு
தாலாட்டுப் பாடி இவர் தாயாகி மகனுக்குப்
பாலூட்ட நெருங்குது நாளு - அவன்
காலாட்டிக் கையாட்டித் துள்ளுறதைப் பாத்துப்புட்டா
கீழே விட மாட்டாரு ஆளு - அவனைக்
கீழே விட மாட்டாரு ஆளு

அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
அக்கம் பக்கம் கலகலப்பு யாரைப் பார்த்தாலும் சுறுசுறுப்பு
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே

வளைகாப்பு, குளித்த மாதக் கணக்கிலிருந்து, ஐந்தாம் அல்லது ஏழாம் மாசம் செய்யப்படும். சாதாரணமாகப் பிறந்தகத்தில் செய்வது வழக்கம்.
சீமந்தத்துடன் சேர்ந்து செய்தால் ஆறாம் அல்லது எட்டாம் மாசம் என்பது கணக்கு.

வளர்பிறை பஞ்சமியன்று, நக்ஷத்ரம், நாள் நன்கு அமைந்தால் மிகவும் உகந்தது. அல்லது வளர் பிறையில் நல்ல நாளாகத் தேர்ந்தெடுக்கலாம்.

காலையில், மங்கள ஸ்னானம் செய்யவேண்டும். 9 கெஜம், உடுத்தி வளை அடுக்குவது வழக்கம்.

சில குடும்பங்களில் வளைகாப்புக்கு வாங்கின புடவை உடுத்திக் கொள்ளுவதும் உண்டு.

முன்பெல்லாம், மசக்கைக்கு கறுப்பு நிறப் புடவை வாங்குவார்கள். தற்போது, வளைகாப்புக்கு, வாங்குகிறார்கள். இதெல்லாம், அவரவர் இஷ்டத்தையும், சௌகரியத்தையும் பொறுத்தது.

கோலம் போட்ட மணை அருகில், விளக்கு ஏற்றி வைத்து, தட்டில், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பழம், சர்க்கரை, கல்கண்டு எடுத்து வைக்கவும்.

மணையில் கிழக்கு நோக்கி உட்கார வைக்கவும்.

நாத்தனார் பக்கத்தில் இருந்தால், அவர் மாலை போடலாம்.

சில குடும்பங்களில், வளைச்சட்டியை வளை அடுக்கச் சொல்லுவார்கள். அன்று அவர் தாய் மாமனுக்கு சமானம்.
இல்லாவிட்டால், ஒரு கைக்கு அம்மாவும், மற்றொரு கைக்கு மாமியாரும் அடுக்குவது சில வீடுகளில் வழக்கம்.

இருவரும் அந்த நேரம் இல்லாவிட்டால், வயதில் பெரியார்கள் யார் வேண்டுமானாலும் அடுக்கலாம்.

முதலில், குல தெய்வத்திற்கும், கோவிலில் அம்மனுக்கு சாத்துவதற்கும், சிவப்பு, பச்சை நிற வளைகள் 5, 5 எடுத்து சுவாமி சன்னிதியில் வைக்கவும். சில குடும்பங்களில், கன்னிப் பெணகள் தவறிப்போயிருந்தால், அவர்களை உத்தேசித்து எடுத்து வைப்பதும் உண்டு.

இடதுகைக்கு ஒற்றைப் படையும், வலது கைக்கு இரட்டைப் படையும் அடுக்க வேண்டும், (14, 15 - 21, 22)

முதலில் வேப்பிலைக் காப்பு போட வேண்டும். பொன் கப்பு, வெள்ளி காப்பு போடவேண்டும்.

கடைசியில், கொலுசு வளையோ அரக்கு வளையோ சற்றே சிறிய அளவில் போட்டால், வளைகள் ஓடாமல் இருக்கும்.

மணையில் இருந்து எழுந்ததும் சபைக்கு ஒரு நமஸ்காரம் பொதுவாகப் பண்ண வேண்டும்.

அந்த மணையில், கல்யாணம் ஆகி, கர்ப்பமாகாமல் இருக்கும் ஒரு பெண்ணுக்கு, மறு மணை என்று சொல்லி, வளை அடுக்குவது சம்பிரதாயம்.

அதற்குப் பின் ஏற்றி இறக்குவது வழக்கம்.

ஒரு (அளக்கும்) படியில் நிரம்ப நெல் போட்டு, அதில் ஒரு சிறிய விளக்கை ஏற்ற வேண்டும்.

பெண்ணின், உச்சந்தலை, 2 தோள் பட்டைகள், 2 உள்ளங்கைகள், 2 பாதங்கள், வயிற்றில், இடுப்பில், ஒவ்வொரு வெள்ளி நாணயம் வைக்க வேண்டும். ஒவ்வொருவராக 5 சுமங்கலிகள், பென்ணுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, காலில் நலங்கு வைத்து, தலியில் பூ வைத்துப், படியால், மேலிருந்து பாதம் வரை ஏற்றி இறக்க வேண்டும்.
மூன்று முறை வலமாகவும் பின் இடமாகவும், சுற்றி கீழே வைக்கவும். பிறகு பென்ணை நமஸ்காரம் பண்ணச் சொல்லி, குனிந்ததும், இடுப்பில், பூவும் அக்ஷதையும் கலந்து தெளிக்கவேண்டும். இதற்கு அச்சுதம் தெளிப்பது என்று பெயர்.

பின்னர் ஆரத்தி எடுக்க வேண்டும்.

வந்தவர்கள் எல்லோர்க்கும் வளை கொடுப்பது வழக்கம்.

5 வித பக்ஷணங்கள் செய்ய வேண்டும்.

ஒரு ஜோடி பருப்பு தேங்காய், வறுபயறு (பொரிகொள்ளு அல்லது வரவரிசி), திரட்டு பால் தவிர ஒரு உப்பு பக்ஷணமும், ஒரு ஸ்வீட்டும் செய்யலாம்.

வந்தவர்களுக்கு வெற்றிலை பாக்குடன் சிறிது வறுபயறு கொடுப்பது வழக்கம்.

சாப்பட்டிற்குச், சித்திரான்ன வகைகள் செய்ய வேண்டும். வளைகாப்புப் பெண் சாப்பிட உட்கார்ந்ததும், அந்தப் பெண்ணின் மடியில், ஒரு மிகச் சிறிய ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் உட்கார்த்தி, ஒரு அப்பளத்தில், சிறிது சாத வகைகளை வைத்துக் கொடுப்பதும் உண்டு .

மாலையில், மணையில் வைத்துப் பாடுவது அவரவர் ஸௌகரியத்தைப் பொறுத்தது.

மாமியாரோ, மற்ற புக்ககத்து உறவினர்களோ வந்தால், பணமோ, ரவிக்கைத் துணியோ கொடுப்பது வழக்கம்.
அவரவர் வசதியைப் பொறுத்து செய்யலாம்.

No comments:

Post a Comment