Sunday, July 29, 2012

காலத்தை பொன் எனவும், கடமையைக் கண் எனவும் போற்ற வேண்டும்?

<உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் நேரம் பொன்னானது என்பதை உணர வேண்டும். இதோ, காந்திஜியின் வாழ்வில் நடந்த சம்பவம். ஒரு பேராசிரியர் காந்திஜியை சந்திக்க ஆஸ்ரமத்துக்கு வந்தார். அங்கே ஒரு முதியவர் பெருக்கிக் கொண்டிருந்தார். ""நான் மகாத்மாஜியைப் பார்க்க வேண்டும். நான் வந்திருப்பதாகச் சொல்,'' என தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டார். ""ஐயா! காந்தி நேரப்படி நடப்பவர். தாங்கள் காத்திருங்கள். 11 மணிக்கு நிச்சயம் உங்களைச் சந்திப்பார்''. பேராசிரியருக்கு கோபம் வந்து விட்டது. ஒரு வேலைக்காரன் இப்படி பேசுகிறானே! மேலும், பேராசிரியரான நானே காந்திஜியை "மகாத்மா' என்கிறேன். இவன் காந்தி என மரியாதைக் குறைவாக அவரைக் குறிப்பிடுகிறானே! கோபத்துடன் அவர், ""ஏய்! நான் வந்திருப்பதை அவரிடம் சொல்லப்போகிறாயா இல்லையா? வீணாகக் காக்க வைக்காதே.'' அப்போதும், அந்த முதியவர் பெருக்கியபடியே, ""ஐயா! சற்று அமருங்கள். காந்தி நேரம் தவறாதவர். 11மணிக்கு நிச்சயம் சந்திப்பார்,'' எனவும் பேராசிரியர் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். நல்லவேளையாக அந்த நேரம் பார்த்து கடிகாரம் 11 மணியைக் காட்டியது. பெருக்கிக் கொண்டிருந்த முதியவர், அவரை நோக்கி வந்தார். ""ஐயா! சொல்லுங்கள், நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?'' ""நான் சொன்னது உன் காதில் விழவில்லையா? காந்திஜியை சந்திக்க வேண்டும்,''. ""நான் தான் அந்த காந்தி. உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள்,'' என்றார். பேராசிரியர் அதிர்ந்து விட்டார். மகாத்மாவிடம் மன்னிப்பு கேட்டார். நேரம் தவறாமல் கடமையாற்றியவர் காந்திஜி. அதனால் தான் விலை ஒப்பிட முடியாத சுதந்திரக்கனியை நம்மிடம் பறித்துக் கொடுத்தார். இனியேனும் காலத்தை பொன் எனவும், கடமையைக் கண் எனவும் போற்றி வெற்றிக்கனிகளைப் பறிப்போமா!

No comments:

Post a Comment