Saturday, December 29, 2012

(இந்திரனின்) வஜ்ராயுதம்

ஒரு நாள், தேவேந்திரனின் சபையில் பாட்டும், நடனமும் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தன.
ரம்பை, ஊர்வசி, மேனகை மூவரும் அவரவர் விகிதத்திற்கு எல்லாரையும் நடனத்தால் திக்கு முக்காடச் செய்து கொண்டிருந்தார்கள்.
அந்த சுகானுபவத்தில் இந்திரனும் திளைத்திருந்தான்.
அப்பொழுதென்று பார்த்து பிருகஸ்பதி இந்திரனின் சபைக்குள் நுழைந்தார்.
அவர் உள்ளே வந்ததை இந்திரன் முதற்கொண்டு யாருமே சரியாக கவனிக்கவில்லையே என்று வருந்தினார்.
தான் அவமானப் படுத்தப்பட்டதாகக் கருதிய பிருகஸ்பதி, கோபத்துடன் இந்திரனின் சபையை விட்டு வெளியேறினார்.
பிருகஸ்பதியின் கோபத்திற்கு ஆளாகி விட்டோமே என்று பயந்து போனான், இந்திரன். எவ்வளவு சமாதானம் செய்தும் அவரது கோபம் சிறிதும் தணியவில்லை.
இந்த ஒரு காரணம் போதாதா அசுரர்களுக்கு? இந்திரலோகமே பயத்தினால் ஸ்தம்பித்தது. இந்தத் தருணமே நல்ல சமயம் என்று உணர்ந்த அசுரர்கள், இந்திர லோகத்தைக் கைப்பற்றி, இந்திரனைப் பதவியிறக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
பிருகஸ்பதியின் கோபம் ஒருபக்கம், அசுரர்களின் அட்டூழியம் ஒருபக்கம் என்கிற நிலையில் பரிதவித்தான், இந்திரன்.
படைக்கும் கடவுளான பிரும்மாவைப் புகலடைந்தான். தன்னுடைய இந்திரப் பதவிக்கு எந்த ஒரு பங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று கூறி, நல்லதோர் உபாயத்தையும் வேண்டி நின்றான்.
“விஸ்வரூபனின் தந்தையான ‘த்வஷ்டா’ மகரிஷியின் உதவியை நாடினால் நல்ல பலன் உண்டாகும்” எனக் கூறிய பிரும்மாவின் வழிகாட்டுதலின் பேரில் ‘த்வஷ்டா’ மகரிஷியை அணுகினான் இந்திரன்.
ஆனால் மகரிஷியோ இந்திரனைத் திசை திருப்பிவிட்டார்.
“நன்கு தேர்ந்த ஞானியான என்னுடைய புத்திரன், ‘விஸ்வரூபன்’ இந்திரனுக்கு உதவுவான்” எனக் கூறித் தன்னை இக்கட்டிலிருந்து விலக்கிக் கொண்டார், மகரிஷி.
படிப்பதற்கு ஒரு தலையும், மற்றவர்களைக் கண்காணிக்க ஒரு தலையும், உண்பதற்காக ஒரு தலையும் ஆக மூன்று தலைகளை உடையவனாக இருந்தான், விஸ்வரூபன்.
அவனுடைய தாயார் ஓர் அசுரப் பெண்மணியாக இருந்ததால் எவ்வளவு பாண்டித்யம் இருந்தாலும் அவ்வப்பொழுது அவனுக்கு உதிரத்தில் கலந்திருந்த அசுர குணமும் தலை காட்டத்தான் செய்தது.
ஒரு சமயம் தேவர்களுக்கு என்று படைக்கப்பட்ட ஹவிஸை, விஸ்வரூபன், அசுரர்களுக்குக் கொடுத்து மகிழ்ந்தான்.
விஸ்வரூபனின் செயல் இந்திரனை மிகவும் கோபத்திற்கு உள்ளாக்கியது.

உபாயம் என்று யாரிடம் கேட்க வந்தானோ அவனே உபத்திரவத்தைக் கொடுத்தது இந்திரனை நிலை குளையச் செய்தது.
விஸ்வரூபனின் மூன்று தலைகளையும் கொய்தான்.
மகரிஷியின் ஆத்திரம் எல்லைக்கடங்காமல் கொதித்தது. எப்படியும் இந்திரனை ஒழித்துக்கட்டியே ஆகவேண்டும் என்று முடிவு செய்து கொண்டார்.
மகாவிஷ்ணுவைக் குறித்துத் தவம் இருக்கலானார். இந்திரனைக் கொல்வதற்குத் தகுதியான ஒரு பிள்ளையைத் தனக்கு வரமாக அருளவேண்டும் என்று பிரார்த்திக்கலானார்.
அங்குதான் விதி விளையாடி விட்டது. ‘இந்திரனைக் கொல்ல’ என்பதற்குப் பதிலாக ‘இந்திரனால் கொல்லப்பட’ என்கிற அர்த்தம் பொதிந்த சம்ஸ்கிருத மந்திரத்தைக் கூறிவிட்டார்.
அவரின் வேண்டுதலுக்குச் செவி சாய்த்த பகவான், அவர் கேட்டபடி, ஒரு புத்திரனை அவருக்கு அளித்தார்.
‘விருத்தாசுரன்’ என்னும் பெயர் கொண்ட அப்புத்திரனுக்கு அசுர குணமே மேலோங்கியிருந்தது.
விருத்தாசுரன், இந்திரலோகத்தையே ஆட்டுவிக்கத் தொடங்கினான். அசுரர்களைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்ட அசுரன், தேவர்களை மிகவும் இம்சிக்கத் தொடங்கினான்.
வேறு உபாயம் எதுவும் தெரியாமல், இந்திரன், விஷ்ணுவிடம் அடைக்கலம் அடைந்தான்.
‘நம்பினோர் கெடுவதில்லை’ அல்லவா?
மஹாவிஷ்ணு, தேவர்களின் பவித்திரமான ஆயுதங்களை ஓர் இடத்தில் மறைவாக வைக்கும் படி யோசனை கூறியதோடல்லாமல், அப்படி மறைத்து வைக்க ‘ததீசி’ முனிவரின் ஆசிரமம் மட்டும் தான் சரியான இடம் என்றும் முடிவெடுத்தார்.
ததீசி முனிவர் பல காலங்களாக நியம நிஷ்டைகளுடன் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டிருந்தாராகையால் அவரின் தவ வலிமை அசாத்தியமாக இருந்தது.
தேவர்கள், தங்களின் ஆயுதங்களை முனிவரிடத்தில் கொடுத்து வைத்தார்கள். அவர், அந்த ஆயுதங்களையெல்லாம் கரைத்து திரவ வடிவில் குடித்து விட்டார். அதனால் ஆயுதங்கள் யாருடைய கண்ணிற்கும் படாமல் முனிவரின் உடலில் சேர்ந்து விட்டன.
விருத்தாசுரனின் அக்கிரமம் நாளுக்கு நாள் அதிகமாகத் தொடங்கியது. அதனால் எப்படியும் அசுரர்களைத் தாக்கியே ஆக வேண்டும் என்கிற நிலைக்கு இந்திரன் தள்ளப்பட்டான்.
இந்திரன், ததீசி முனிவரிடம் வந்து, தேவர்கள் கொடுத்த (மறைத்து வைத்த) ஆயுதங்களைத் திருப்பிக் கேட்டபொழுது, முனிவர், தான் அவற்றைக் குடித்துவிட்ட தகவலைக் கூறினார்.
விருத்தாசுரன் பெற்றிருந்த வரம்என்ன தெரியுமா? ‘ஈரம் அல்லது உலர்ந்த ஆயுதத்தாலோ, உலோகம் அல்லது மர ஆயுதத்தாலோ, தேவர்கள் எல்லாரும் அறிந்த ஓர் ஆயுதத்தாலோ தனக்கு இறப்பு ஏற்படக் கூடாது’ என்பதுதான்.
அவனுடைய சாமர்த்தியமான வரத்தை அறிந்த முனிவர், இந்திரனிடம், தன்னுடைய வஜ்ரம் போன்ற முதுகெலும்பையே (பிரும்மாவின் அறிவுரைப்படி) ஆயுதமாகக் கொண்டு விருத்தாசுரனைத் தாக்கும்படி கேட்டுக் கொண்டார். ஒரு நல்ல செயலுக்காகத் தான் தன் உயிரை மாய்த்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் உறுதியாகச் சொன்னார்.
முனிவரின் வாக்குப்படி, அவரின் முதுகெலும்பையே வஜ்ராயுதமாக்கி விருத்தாசுரனை இந்திரன் கொன்றான்.
விருத்தாசுரனின் மறைவினால் அந்தர்வாஹினியானாள் சரஸ்வதி. அசாதாரணச் செய்கைகள் மேலும் அதிகமாயின.
விருத்தாசுரனின் மகனான ‘பிப்பலாதன்’ என்பவன், தன்னுடைய தந்தைக்கு ஏற்பட்ட கோர முடிவினால் தேவர்களின்மீது முக்கியமாக இந்திரனின் மேல் மிகவும் ஆத்திரப் பட்டான்.
தன்னுடைய துடையைக் கிழித்து அதிலிருந்து அக்னியை மூட்டினான். அவனுடைய அக்னிக் கொழுந்துகள் தேவலோகம் வரை சென்று எல்லாருக்கும் துன்பத்தை ஏற்படுத்தியது.
அக்னியின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் தேவாதி தேவர்கள் பிரும்மாவைச் சரண் அடைந்தார்கள்.
பிரும்மா வாக்தேவியான சரஸ்வதி தேவியை அழைத்தார்.
“தேவி! உன் ஒருத்தியால் மட்டும் தான் இந்த அக்னியின் உஷ்ணத்தை ஸ்வீகரிக்க முடியும். ஆகையால் நீ நதிரூபமாகச் சென்று உஷ்ணத்தைக் கிரகித்துக் கொண்டு, அக்னியை செயலிழக்கச் செய்ய வேண்டும். உன்னுடைய இந்தச் செயலால் தேவர்கள் மட்டுமல்லாமல் இந்திர லோகமும் காப்பாற்றப்படும்” என்றார்.
பிரும்மாவின் மொழிதலுக்கு மறுபேச்சு என்பதுதான் உண்டோ?
ஆனால் தேவி ஒரு நிபந்தனையை இட்டாள்.
“மானிடர்கள், தங்களின் பாபங்களைப் போக்கிக் கொள்ள புனித நதிகளில் நீராடும் வழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். நான் அக்னியின் தீக்கொழுந்துகளை ஏற்றுக் கொண்டபின், நதியில் நீராடுபவர்களின் பாபங்களையும் சுமப்பது என்பது மிகவும் கடினமான செயல். ஆகையால் நதி ரூபமாக நான் இருக்க வேண்டும் என்றால், என்றைக்குமே நான் பிறர் கண்களுக்குப் புலப்படாமல் அந்தர் வாகினியாக இருக்கும் படி எனக்கு தாங்கள் வரம் அளிக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டாள்.
இன்றும் பல இடங்களில் நதி ரூபமான சரஸ்வதி அந்தர் வாகினியாகவே இருக்கிறாள்.
“அம்பிதமே நதீதமே தேவிதமே சரஸ்வதி” என்று கூறுகிறது ரிக் வேதம்.
வேத காலத்தில், சரஸ்வதி தேவி நதி தேவதையாக வணங்கப்பட்டிருக்கிறாள் என்று அறிகிறோம்.
வாக்கிற்கும், எழுத்திற்கும் அதிதேவதையான சரஸ்வதியை வாயாரப்பாடி, மனமார மகிழ்ந்து வணங்குவோம்.

No comments:

Post a Comment