Saturday, December 29, 2012

விட்டுக் கொடுத்து வாழ்வதைப் பழகிக் கொள்ள வேண்டும்-விட்டுக் கொடுத்த ஆழ்வார்கள்

விட்டுக் கொடுப்பவன் கெட்டுப்போகமாட்டான்
கெட்டுப்போகிறவன் விட்டுக்கொடுக்க மாட்டான்
என்பது பழமொழி. இந்த உலகத்தில் நாம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும் போது வாழ்க்கை இனிமையாகும். இல்லாவிட்டால் சண்டை, சச்சரவு, மனத்தாங்கல், பகை, தோல்வி என்று அடுக்கடுக்கான துன்பங்களைச் சமாளிக்க வேண்டி வந்துவிடும்.
ஆனால் இந்த விட்டுக்கொடுக்கும் பண்பு தற்காலத்தில் வெகுவாகக் குறைந்து வருகிறது. “உன் தயவு எனக்குத் தேவையில்லை, ஆகவே எதற்காக நான் விட்டுக்கொடுக்க வேண்டும்” என்ற அகங்காரம் மனிதர்களிடம் நாளுக்குநாள் அதிகமாகிவருகிறது.
கிருஷ்ணன் தூது
பகவான் கிருஷ்ணர் பாண்டவர்களுக்குத் தூது சென்றார்
“பாண்டவர்கள் நீசொன்னபடியே வனவாசமும், அஞ்ஞாத வாசமும் முடித்துவிட்டனர். இப்போது அவர்களுடைய இராஜ்யத்தை திருப்பிக்கொடுத்துவிடு” என்றார்.
“அது தான் சரி. அப்படியே செய்ய வேண்டும். சூதாட்டத்தின் போது அப்படித்தான் சொன்னாய்” என்று மகான்கள் பலரும் துரியோதனனுக்கு நினைவுபடுத்தினார்கள்.
ஆனால் அவனோ “பாண்டவர்களுக்கு இராஜ்யத்தை திருப்பித் தரமாட்டேன்” என்றான்.
“அப்படியானால் அவர்களுக்குஐந்து ஊர்களையாவது கொடு” என்றார் பகவான்.
“கொடுக்கமாட்டேன்” என்று மறுத்தான் துரியோதனன்.
“ஆளுக்கு ஒன்று என்று ஐந்து வீடுகளையாவது தா” என்று கேட்டார் பகவான்.
“மாட்டேன், ஓர் ஊசிமுனை அளவுள்ள மண்ணைக்கூட அவர்களுக்காக விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று கொக்கரித்தான் துரியோதனன்.
முடிவு, பாரதப்போர். அவனும் அவன் குடும்பமும் அழிந்து போனார்கள். அதனால் தான் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்று எச்சரிக்கை செய்கிறது இந்துமதம்.

முதலாழ்வார்கள் ஏற்றிய விளக்கு
விட்டுக் கொடுக்காதவர்கள் அழிந்து போவதைச் சொன்ன இந்துமதம், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தவர்கள் ஆண்டவனையே அருகில் கண்டார்கள் என்பதையும் தெரிவிக்கிறது.
முதலாழ்வார்களில் ஒருவரான பொய்கையாழ்வார் ஒருநாள் திருக்கோவிலூருக்குச் சென்றார். அப்போது ஒரு வைணவரின் வீட்டிற்குச் சென்றார். இறைவனை தரிசிக்கும் நோக்கத்தில் அவர் வந்திருந்தார். அந்த வைணவர் அவரை உபசரித்து தன் வீட்டு இடைகழியில் அவரைத் தங்கவைத்தார்.
பகல் முடிந்து இரவு வந்தது. புயலும் மழையும் ஆரம்பித்தது. அப்போது பொய்கையார் படுத்திருந்த வீட்டின் கதவை ஒருவர் தட்டினார். கதவைத் திறந்து பார்த்தபோது பூதத்தாழ்வார் அங்கே வந்திருந்தார்.
“இந்த வீட்டில் தங்குவதற்கு இடம் கிடைக்குமா?” என்று கேட்டார்.
“இங்கு ஒருவர் கிடக்கலாம், இருவர் இருக்கலாம்” என்று விடை கொடுத்த பொய்கையார் அவரை உள்ளே வரவேற்று இடம் கொடுத்தார். ஒருவர் படுத்திருந்த இடத்தில் இப்போது இரண்டுபேர் அமர்ந்து கொண்டனர்.
மழையும் காற்றும் வலுத்தது, அப்போது மூன்றாவதாக பேயாழ்வார் அங்கே வந்து “தங்குவதற்கு இடம் இருக்குமா?” என்று கேட்டார்.
உடனே பொய்கையார், “இங்கே உள்ள இடத்தில் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம் மூவர் நிற்கலாம். ஆகவே உள்ளே வாருங்கள்” என்று வரவேற்றார்.
பிறகு அந்த ஆழ்வார்கள் மூன்றுபேரும் அந்த இடைகழியிலேயே நின்று கொண்டு பகவானின் பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தனர்.
தன் அடியார்கள் மூவரும் ஒருங்கே இணைந்து தன்னைப் பற்றி பேசி ஆனந்தப்படுவதைப் பார்த்த பகவான் தானும் அவர்களுக்கு நடுவே நின்று அதை அனுபவிக்க ஆசை கொண்டான்.
ஆகவே அங்கே வந்து மூன்று பேருக்கும் இடையில் நின்று கொண்டு அந்த இடைகழியில் இடநெருக்கடியே உண்டாக்கினான். பக்தியின் உச்சியில் நின்ற மூன்று ஆழ்வார்களும் தங்களுக்கு இடநெருக்கடியை ஏற்படுத்துவது யார் என்பதை அறிய முயன்றனர்.
“வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்யகதிரோன் விளக்காக - செய்ய
கடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே”
என்று முதல் பாசுரத்தைப் பாடினார் பொய்கையார் - “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு ஞானத் தமிழ்ப் புரிந்த நான்”
இதற்கு அடுத்தபடியாக என்ற பாசுரத்தைப் பாடி பூதத்தாழ்வார் ஞானச்சுடர் விளக்கை ஏற்றினார்.
இவர்கள் இருவரும் ஏற்றிய ஞானச்சுடரின் வெளிச்சத்தில் தங்களுடன் நெருக்கிக் கொண்டு நிற்கின்ற இறைவனை பேயாழ்வார்,
“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன், புரிசங்கங் கைகண்டேன்
என்னாழி வண்ணன்பால் இங்கு “என்று தான் நேரில் பார்த்துப் பாடினார். இப்படித்தான் வைணவத்தின் ஒப்பற்ற இலக்கியமாக, தமிழ்மறையாக விளங்கும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் தோன்றியது.
இதிலிருந்து என்ன தெரிகிறது? அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுப்பவர்களை ஆண்டவனே நேசிக்கிறான், அவன் அவர்களுடன் வந்து இருக்கவும், கலந்துகொள்ளவும் ஆசைப்படுகிறான் என்பது தானே?
ஆழ்வார்கள் மிகச் சிறிய இடத்தை விட்டுக் கொடுத்து பகவான் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டனர். மேலும் வைணவ உலகில் மிகப்பெரிய இடத்தை தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டனர். எனவே முன்னேற விரும்புவோரும், வாழ்க்கையில் மற்றவர்களால் புகழப்பட விரும்புவோரும் விட்டுக் கொடுத்து வாழ்வதைப் பழகிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது இந்துமதம்.

No comments:

Post a Comment