Tuesday, December 25, 2012

ருக்மாங்கதன் சரித்திரம்

விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம் என்று உமையவளிடம் பரமசிவனே கூறுகிறார். பல்வேறு புராணங்கள் ஏகாதசி விரதத்தின் பெருமையையும், அதனால் அளப்பரிய நலனைப் பெறலாம் என்றும் அழுத்தம் திருத்தமாக சொல்கின்றன. பாற்கடலில் இருந்து அமிர்தம் வெளிப்பட்ட நாள் ஏகாதசி. அந்த அமிர்தத்தைப் போன்று விஷ்ணுவின் அருளை நமக்கு வர்ஷிக்கக்கூடிய விரதம் ஏகாதசி விரதம்.

இந்த விரதத்தை எவரெல்லாம் மேற்கொள்கிறார்களோ, அவர்களுக்கு எல்லா வகையிலும் மேன்மை உண்டாகும். அவர்களுக்கு மரண பயமோ நரக வாசமோ இல்லை. இதை உறுதிப்படுத்துகிறது ருக்மாங்கதன் சரித்திரம். ருக்மாங்கதன், விதர்ப்ப நாட்டின் மன்னன். அவன் மனைவி சந்தியாவளி. நாட்டை வளம் குன்றாமல், மக்கள் மனம் வாடாமல் பாதுகாத்து வந்தான் ருக்மாங்கதன்.

நெறி தவறாத அவனுடைய மைந்தன் தர்மாங்கதன். அவன் அமைத்திருந்த நந்தவனத்தின் அமைதியையும் அழகையும் பார்த்த முனிவர், அங்கே தவமிருக்க தலைப்பட்டார். திடீரென்று அந்த நந்தவனத்தில் மலர்கள் குறைய ஆரம்பித்தன. மலர்கள் குறைய காரணம், அதற்கான பருவம் முடிந்து போனதால் அல்ல. வேறு எவரோ அதைப் பறிக்கிறார்கள் என்று பட்டது மன்னனுக்கு.

`அவர்களை கண்டுபிடித்து அழைத்து வா' என்று காவலருக்கு ஆணையிட்டான் ருக்மாங்கதன். மன்னனின் ஆணையை எப்படி மீறுவது? காவலர்கள் பார்த்தனர். வேறு எவரும் தென்படவும் இல்லை. மலர் குறைவதும் நிற்கவில்ëலை. எனவே முனிவர்தான் காரணம் என்றெண்ணி அவரை கொண்டுபோய் மன்னன் முன் நிறுத்தினர்.

ருக்மாங்கதன் அதிர்ந்து போனான். தவச்சீலர் ஒருவரை திருடனாகக் கருதிய காவலர்களின் மடமை கண்டு வெகுண்டான். ஓடிவந்து முனிவரை பணிந்தான். மகரிஷி, என்னை மன்னியுங்கள். நந்தவனத்தில் யாரோ தினமும் மலரை கொய்கிறார்கள். அவர்களை அழைத்து வரச்சொன்னேன். இவர்கள் அறியாமையால் தங்களை அழைத்து வந்துவிட்டார்கள்' என்று சொல்லி கலங்கினான்.

அவனுடைய சொற்களால் மனம் நிறைந்த முனிவர் சொன்னார், "ருக்மாங்கதா! கொம்மட்டி விதைகளை தோட்டத்தில் ஆங்காங்கே தூவு. விரைவில் மலரைப் பறிப்பது யார் என்று புரியும்'' என்று புன்னகைத்தார். முனிவர் சொன்னபடியே செய்தான் மன்னன். விதைகள் முளைவிட்டன. கொடியாகிப் படர்ந்தன.

மரங்களிலும், செடிகளிலும் பரவித் துளிர்த்தன. ஒருநாள் காலை... ஒரு பெண் அங்கே நின்று கொண்டிருந்தாள். காவலன் மூலம் விவரம் அறிந்த மன்னன் அங்கு விரைந்தான். மன்னரை கண்ட அவள் பேச ஆரம்பித்தாள். மன்னா! நான் தேவலோகத்தை சேர்ந்தவள். விஷ்ணு பூஜைக்காக தினமும் மலர்களை நானும், என் தோழிகளும்தான் பறித்துச் சென்றோம். இன்று என் காலில் இந்த கொடி சுற்றியது.

இது அசுத்தமானது. அதனால் என்னால் தேவலோகம் செல்ல முடியவில்லை. என்னுடன் வந்தவர்கள் சென்று விட்டார்கள். கவலை ததும்ப சொன்னாள் அவள். அதைக் கேட்ட ருக்மாங்கதன் தடுமாறினான். விஷ்ணு பூஜைக்காகத்தான் இந்த நந்தவனத்தின் மலர்கள் பறிக்கப்பட்டன என்பதே ஆனந்தமானது.

அந்த பணியில் ஈடுபட்ட பெண்ணை மீண்டும் தேவலோகம் செல்ல முடியாமல் செய்தது தன்னுடைய மூடத்தனம். பாவம் என்று கலங்கினான். தாயே! இந்த தவறுக்கு பிராயச்சித்தமே இல்லையாப என்ன செய்தால் தாங்கள் மீண்டும் தேவலோகம் செல்ல முடியும்ப அதை சொல்லுங்கள்' என்று வேண்டினான்.

அதைக்கேட்ட அந்த பெண் சற்று யோசித்தபின் சொன்னாள், ஏகாதசி விரதத்தின் பலனை எவரேனும் தானமாக தந்தால், நான் மீண்டும் தேவலோகம் செல்ல முடியும்' என்றாள். ருக்மாங்கதனே கேள்விப்படாத விஷயம். வேறு யாருக்குத் தெரிந்திருக்கும்ப அவனுடைய குழப்பத்துக்கும் அவளே பதில் சொன்னாள்.

உன் அரண்மனையில் சமையல் செய்யும் பெண் ஒருத்தி, ஏகாதசி விரதம் இருந்திருக்கிறாள். அவள் அந்த விரத பலனை கொடுத்தால் போதும் என்றாள். ருக்மாங்கதன் ஆச்சரியமாக கேட்டான், `அவளுக்கு எப்படித் தெரியும்?' என்றான். இல்லை மன்னா, அவளுக்கும் தெரியாது, ஒருநாள் சமையல் சரியில்லை என்று சொல்லி காவலில் வைத்தாள் உன் மனைவி. அன்று மதியம்தான் அவள் சாப்பிட்டிருந்தாள்.

மறுநாளும் அவளுக்கு உணவு தரப்படவில்லை. அவள் சிறைப்பட்ட நாள் தசமி. உணவு தரப்படாத நாள் ஏகாதசி. மறுநாள் விடுதலை பெற்றவள் உணவருந்தியது துவாதசி அன்று. அதனால் அவளை அறியாமலேயே ஏகாதசி விரத பலன் அவளுக்கு கிடைத்தது' என்றாள். தேவலோகப் பெண் சொன்ன விளக்கம் மன்னனை வியக்க வைத்தது.

அந்த பெண் யாரென்று அறிந்து, அவளது தானத்தால், தேவலோகப் பெண்ணை மீண்டும் தேவலோகம் செல்ல வைத்தான். அதோடு ஏகாதசி விரதம் அவனுள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. நாட்டில் உள்ள அனைவரும் ஏகாதசி விரதம் மேற்கொள்ள வேண்டும் என ஆணையிட்டான்.

அந்த ஆணை, தங்கள் அனைவரின் நன்மைக்காக என்பதை புரிந்து கொண்டதால் மக்கள் மனம்வந்து அதை பின்பற்றினார்கள். எட்டுவயது சிறுவன் முதல் எண்பது வயதுடைய முதியோர் வரை அனைவரும் ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தார்கள். நாடெங்கும் ஏகாதசி விரதம் பெரும் மாற்றத்தையே ஏற்படுத்தி விட்டது.

மக்களிடையே அன்பும், பூமியில் செழுமையும் மிகுந்து, எண்ணங்களில் தூய்மையும், செயல்களில் நேர்மையும் துலங்கியது. பேராசை, தீயொழுக்கம், களவு, புறம் சொல்லல், சூது உள்ளிட்ட பாதகங்கள் எல்லாம் தேசத்தில் ஒழிந்து போயிற்று. அதனால் ருக்மாங்கதன் பெரிதும் சந்தோஷமானான். தங்கள் நன்மையில் மகிழும் மன்னனை கண்டு மக்களும் ஆனந்தப்பட்டனர்.

No comments:

Post a Comment