Saturday, December 29, 2012

நால்வகை இலக்கியங்கள்

நம்முடைய பண்பாட்டை வெளிப்படுத்துவது தான் இலக்கியம். இலக்கியங்களை, கீழ்க்காணுமாறு வகைப்படுத்தியிருக்கிறார்கள் நம் பெரியவர்கள்.
1. வேதங்கள் 2. ஸ்மிருதிகள் 3. காவியங்கள் 4. புராணங்கள்
மேலும் இலக்கியங்களை, அவற்றை வெளிப்படுத்தும் முறையின் அடிப்படையில் 4விதமான சம்ஹிதைகளாகச் சொல்லியிருக்கிறார்கள். சம்ஹிதை என்றால் பிரிவு என்று பொருள்படும்.
1. பிரபு சம்ஹிதை
2. ஸுஹ்ருத் சம்ஹிதை
3. காந்தா சம்ஹிதை
4. சிசு சம்ஹிதை
வேதங்கள் - பிரபு சம்ஹிதை
வேதம் என்பது ‘பிரபு சம்ஹிதை’ என்ற பிரிவின் கீழ் வரும் ஒரு வகை இலக்கியம் ஆகும்.
வேதம் என்பது மனிதனை ‘இதைச் செய்! இதைச் செய்யாதே!’என்று வரையறுத்துச் சொல்கிறது. ஆனால் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வது எல்லாராலும் முடியாது. அப்படி ஏற்றுக் கொண்டவர்கள் வாழ்க்கை சுபிக்ஷமாக இருக்கிறது என்று சொல்வதை விட வாழ்க்கை ஓட்டம் சுலபமாக இருக்கிறது என்று சொல்லலாம்.
வேதம் ஏன் அப்படிச் சொல்கிறது என்று ஆராய்ந்து கொண்டிருந்தால் மனிதன் தன் வாழ்க்கையைச் செம்மையாக நடத்த முடியாது.
உதாரணத்துக்கு, மேலதிகாரி தன் அலுவலக உதவியாளரை அழைத்து, சில முக்கியமான டாக்குமெண்ட்களைக் கொடுத்து 100 காப்பிகள் செராக்ஸ் எடுத்து வரச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உடனே, மேலதிகாரி சொல்வதைப் போல 100 காப்பிகள் செராக்ஸ் எடுத்து வர வேண்டியது தான் அந்த உதவியாளரின் வேலை. அப்படிச் செய்யாமல், “ஏன் 100 காப்பிகள் எடுக்க வேண்டும்? 50 காப்பிகள் போதாதா? வேண்டுமென்றால் பிறகு எடுத்துக் கொள்ளலாமே சார்!” என்று கேள்விகளைக்கேட்டு, ஆலோசனைகளையும் மேலதிகாரிக்கு வழங்கிக் கொண்டிருந்தால், நேரமும் வீணாகிறது. வேலையும் நடப்பதில்லை.

‘மேலதிகாரி ஏதோ ஒரு காரணத்துக்காகவும், தேவைக்காகவும் தானே 100 காப்பிகள் செராக்ஸ் எடுத்து வரச் சொல்கிறார்? அவருக்குத் தெரியாதா 50 காப்பிகள் மட்டும் செராக்ஸ் எடுக்க? நாம் ஏன் அனாவசியமாக அவர் சொல்வதில் மூக்கை நுழைக்க வேண்டும்? என்ற கோணத்தில் யோசித்து மேலதிகாரி சொல்வதை அவரது உதவியாளர் கண்ணை மூடிக் கொண்டு செயல்படுத்த வேண்டும். அது தான் அவரது வேலையும் கூட.
அலுவலக மேலதிகாரி மட்டுமென்று, ஏதேனும் ஒரு குழு அல்லது அமைப்பின் தலைவன்/தலைவி சொல்வதை அவருக்குக் கீழ் உள்ளவர்கள் கேள்வி கேட்காமல் செயல்படுத்தினால்தான் எந்த ஒரு செயலும் முழுமையாக நடைபெறும். அதை விட்டு, ஆள் ஆளுக்குக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால், அந்தக் குழு அல்லது அமைப்பு ஒழுங்காக நடைபெறுமா?
இப்படி ஒரு தலைவனின் ஆணையைப் போன்று அதட்டிச் சொல்வது வேதம். ஆகவே, வேதத்தை, தலைவன் சொல்லும் கட்டளையைப் போல உருவகப்படுத்தி ‘பிரபு சம்ஹிதை’ என்று சொல்வார்கள்.
ஸ்மிருதிகள் - ஸுஹ்ருத் சம்ஹிதை
ஸ்மிருதிகள் என்பது ‘ஸுஹ்ருத் சம்ஹிதை’ என்ற பிரிவின் கீழ் வரும் இலக்கியம் ஆகும். நீதிநூல்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
ஸ்மிருதிகள் என்பது நண்பர்களின் அறிவுரையைப் போன்றது. அந்தந்த நேரத்துக்கேற்ப அறிவுரை வழங்கி, துன்பத்தில் கை கொடுத்து வழிகாட்டுகின்ற நண்பர்களின் உதவியைப் போன்று ஸ்மிருதிகளும் காலத்துக்கேற்ப மாறும் தன்மை கொண்டது.
உதாரணத்துக்கு, நடுரோட்டில் எச்சில் துப்பினால் அமெரிக்காவில் கொடுக்கப்படும் தண்டனை ஒரு மாதிரியாக இருக்கும். துபாயில் வேறு மாதிரியாக இருக்கும். இங்கு நம் நாட்டில் அதற்கு தண்டனையே இல்லை. ஆக, ‘எச்சில் துப்புவது’ என்பது ஒரு செயல். அதற்கான தண்டனை உலகில் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இடத்துக்கு இடம், நாட்டுக்கு நாடு, காலத்துக்குக் காலம் வேறுபடுகிறது.
 
“குனிந்த தலையோடு இருப்பதே அடக்கமான பெண்ணுக்கு அழகு...” என்று போதித்த ஸ்மிருதிகள், பாரதி காலத்துக்குப் பிறகு “நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும்...” என்று மாறிப் போனது.
அதுபோல, ஸ்மிருதிகள் என்பது மனிதர்களுக்கு நீதிகளையும், வாழ்க்கை நெறிமுறைகளையும், தர்மத்தையும் போதிக்கும் தன்மை கொண்டது. அந்த போதனைகள் எல்லாக் காலத்துக்கும் பொதுவாக இருக்காது. காலத்துக்குக் காலம் அவை மாறுபடும்.
காவியங்கள் - காந்தா சம்ஹிதை
காவியங்கள் என்பது ‘காந்தா சம்ஹிதை’ என்ற இலக்கியப் பிரிவின் கீழ் வரக் கூடியதாகும். ‘காந்தா’ என்றால் மனைவி என்று பொருள்படும்.
ஒரு மனைவியின் பேச்சிலும், அதில் உள்ள உட்பொருளிலும், அதன் தாக்கமாக அமையும் செயலிலும் எப்படி ஓர் இன்பமும், சந்தோஷமும் உண்டாகிறதோ அது போல இருப்பதே காவியங்கள்.
உதாரணத்துக்கு, கணவனிடம் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட மொபைல் போன் வாங்கித் தர வேண்டுகின்ற ஒரு மனைவியின் கோரிக்கை எப்படி இருக்கும் என்பதையே எடுத்துக் கொள்ளலாம். சாதாரணமாக ஒரு மனைவி தன் கணவனிடம் தனக்கு ‘இது வேண்டும், அது வேண்டும்’ என்று நேரடியாகக் கேட்க மாட்டாள்.
“என்னுடைய பிரண்ட் புதிதாக ஒரு மொபைல் வாங்கியிருக்கிறாள். நிறிஸிஷி எல்லாம் போட்டு, மொபைலிலேயே இமெயில் பார்க்கலாம், அனுப்பலாம். ‘ரொம்ப அழகா இருக்கு’ என்று அவளிடம் சொன்னேன். அதற்கு அவள் ‘இது மாதிரி ஜி.பி.ஆர்.எஸ் மற்றும் புளூடூத் வசதிகள் உள்ள மொபைல், என்னை விட பிஸினஸ் செய்யும் உனக்கும், உன் கணவருக்கும் தான் அதிகம் பயன்படும்’ என்று சொன்னாள்” என்று தனக்கு அது போன்ற மொபைல் வேண்டும் என்பதை, குறிப்பாகத் தன் கணவனிடம் சொல்லுவாள்.
அந்தக் குறிப்பை உணர்ந்து கணவனும் மனைவிக்கு சஸ்பென்ஸாக அதைவிட உயர்வான மொபைல் போனை வாங்கிப் பரிசளிப்பான். இது தான் உண்மையாக, நேர்மையுடன் நேசிக்கும் கணவன் மனைவிக்குள் நடக்கின்ற விஷயமாகும்.
மேலும், ஊதாரித்தனமாகச் செலவழிக்கும் கணவனைத் திருத்த முயலும் ஒரு மனைவியின் கண்டிப்பைப் பார்ப்போமா? “நம் குழந்தையை பெரிய டாக்டர் ஆக்க வேண்டும்... சொந்தமாக கிளினிக் வைத்துத் தர வேண்டும்.... அதற்கெல்லாம் நிறையச் செலவாகும்... நம் கையில் காசு இருந்தால் தானே அதெல்லாம் முடியும்? யாரிடம் போய்க் கையேந்துவது? இப்படியே வரும் பணத்தை எல்லாம் செலவழித்துக் கொண்டே இருந்தால், நம் குழந்தையும் உங்களைப் போலவே சாதாரண கம்பெனியில் மாதாந்தர சம்பளத்தில் வேலை செய்ய வேண்டியது தான்...”
இதுபோல, தனக்குத் தேவையானதையும் சொல்ல விரும்புவதையும் இங்கிதமாக, அழகாக குறிப்பால் உணர்த்தும் மனைவியின் செயல்பாட்டில் உள்ள இனிமையான தன்மை, காவியங்களில் இருப்பதால் தான் அதனை ‘காந்தா சம்ஹிதை’ என்று சொல்வார்கள்.
புராணங்கள் - சிசு சம்ஹிதை
புராணங்கள் என்பது ‘சிசு சம்ஹிதை’ என்ற பிரிவின் கீழ் வரும் இலக்கியமாகும்.
குழந்தைகளுக்குக் கதை சொல்வதைப் போலச் சொல்வது புராணம் ஆகும். குழந்தைகள் கதை கேட்பதை உற்று நோக்கினால் ஓர் உண்மை புரியும். எந்த விஷயத்தையும் கதை போலச் சொல்லும்போது அதைக் குழந்தைகள் ஆவலாகக் கேட்பார்கள். கதையின் முன்,பின் தொடர்ச்சியைக் கண்டு கொள்ள மாட்டார்கள். அப்போது சொல்லப்படும் கதையின் சுவையில் மட்டுமே அவர்கள் கவனம் இருக்கும்.
அது போல வேதத்தில் உள்ள கருத்துகளை எல்லாம் புராணங்கள் கதைகளாகச் சித்திரித்துச் சொல்கின்றன. கதையாக இருந்தாலும் கருத்தைச் சொல்வது தான் புராணம்.
பிரபு சம்ஹிதை
ஸுஹ்ருத் சம்ஹிதை
காந்தா சம்ஹிதை
சிசு சம்ஹிதை
வேதம், ஸ்மிருதி, காவியம், புராணங்கள் ஆகிய எல்லாமே சொல்ல வரும் கருத்துகள் அடிப்படையில் ஒன்று தான்.
வேதத்தில் சொல்லப்படும் கருத்துகளை ஸ்மிருதி, காவியம், புராணம் போன்றவை தம்முடைய பாணியில் வெளிப்படுத்துகின்றன. வேதம் மனிதனுக்குக் கட்டளை போலச் சொல்லும் நீதிகளை எல்லாம், ஸ்மிருதி ‘இதை இப்படி செய்ய வேண்டும்’ என்று நண்பனைப் போல் சொல்கிறது, காவியம் மனைவியின் குறிப்புணர்த்தலைப் போன்று நயமாகச் சொல்கிறது, புராணங்கள் குழந்தைகளுக்குச் சொல்லும் கதை போல் சொல்கிறது.
கட்டளைக்கு அடிபணியாதவர்கள் நண்பன், மனைவி, கதை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுக்குக் கண்டிப்பாக அடிபணிவார்கள்.
ஆம். ‘ஆடுகின்ற மாட்டை ஆடிக் கற. பாடுகின்ற மாட்டைப் பாடிக் கற!’ என்று நம்மூரில் ஒரு பழமொழி சொல்வார்களே, அதுபோல மனிதனுக்கு தர்மத்தை எப்படி போதித்தால் என்ன? யார் போதித்தால் என்ன? மனிதன் புரிந்து கொண்டால் சரி.
புராணங்கள்
பொதுவாக நம் நாட்டில் புராணம் என்றால் பழைமை என்று சொல்வார்கள். ஆனால், வடமொழியில் புராணத்துக்கு வேறோர் அர்த்தம் சொல்கிறார்கள்.
புரா என்றால் பழைமை. நவ என்றால் புதுமை. புரா என்ற பழைமையும், நவ என்ற புதுமையும் சேர்ந்து புராணம் ஆயின.
புரா -பழைமை நவ-புதுமை
பழங்காலத்தில் நடந்த கதைகளாக இருந்தாலும், அதிலிருந்து இன்றும் நாம் அறிய வேண்டிய, பின்பற்றத் தேவையான கருத்துகளை எடுத்துச் சொல்வதால் புராணங்கள் பயனுள்ளதாகவும், புதுமையானதாகவும் உள்ளன. பழைமையும், புதுமையும் கலந்த ஓர் அழகுப் பெட்டகமாகத் திகழ்கின்றன புராணக் கதைகள்.
உதாரணத்துக்கு இராமாயணக் கதை- புத்தகம், அனிமேஷன் சிடிக்கள், தொலைக்காட்சித் தொடர், திரைப்படம் என்று பல்வேறு வடிவில் வெளிவந்து விட்டாலும், அது அன்றும், இன்றும் என்றும் திகட்டாத செல்வமாக இருப்பது புராணங்களின் வெற்றிக்கு உதாரணமாக இருக்கிறதல்லவா?
சரித்திரத்துக்கும், புராணத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அரசர்களுடைய தோற்றத்தையும், வெற்றி தோல்விகளையும், சாதனைகளையும் எடுத்துரைப்பது சரித்திரங்கள் ஆகும். சரித்திரங்கள் சொல்வது வெறும் செய்திகளைத் தான். நம் மன்னர்கள் செய்த வீர தீரச் செயல்களைச் செய்தியாகத் தெரிந்து கொண்டு பெருமைப்பட மட்டுமே அவை உதவுகின்றன.
ஆனால், புராணங்களோ முன்னால் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, நல்வழியைப் போதிக்கின்றன.
“முன்னொரு காலத்தில் இந்த தர்மம் நடந்தது. ஆகவே, தர்மம் தலை காத்தது. நாமும் அப்படி தர்மத்தோடு செயல்பட்டால், நல்லதைப் பெறலாம். நல்லதே நடக்கும்” - இது போன்ற அறிவுரைகளை, புராணங்கள் கதைகள் மூலம் தெரிவிக்கின்றன.
கதைகளை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. குழந்தைகள் டி.வி மூலமாகவும், இளைஞர்களும், நடுத்தர வயதினர்களும் திரைப்படம் மூலமாகவும், முதியவர்கள் ஆன்மிகச் சொற்பொழிவுகள் மூலமாகவும் கதைகளை வெவ்வேறு ஊடகங்களின் வாயிலாகக் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். யாராலும் இதனை மறுக்க முடியாதல்லவா? ‘எனக்குக் கதையே பிடிக்காதுப்பா!’ என்று யாரையாவது சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். யாராலும் சொல்ல முடியாது. எனவே புராணங்களின் வீச்சு அதிகம்.
வேதம் சொல்லும் நீதிகளையும், சத்தியங்களையும், தர்மங்களையும் உள்ளது உள்ளபடி அப்படியே சொன்னால் மனிதன் கேட்க மாட்டான். அதையே கதைகளாக்கி, புராணமாக்கினால், மனிதனுக்கு எளிதில் புரிகிறது. காது கொடுத்துக் கேட்க முயலுகிறான்.
உதாரணத்துக்கு, நாம் சாப்பிடும் காப்ஸ்யூல்கள்(சிணீஜீsuறீமீ) வெளியில் பார்ப்பதற்கு, சிறிய டியூப் போன்று இருக்கும். அதனுள் இருக்கும் உயிர் காக்கும் மருந்து சாப்பிடவே முடியாத அளவு கசக்கும். கசக்கும் மருந்தைச் சாப்பிட்டால் தான் உயிர் பிழைக்க முடியும். எனவே கசக்கும் மருந்தை வண்ணக் குழாய்க்குள் அடக்கி மனிதனை விழுங்கச் செய்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆம். காப்ஸ்யூல்களில் இருக்கும் கசக்கும் மருந்தைப் போன்றது தான் வேதம் சொல்லும் தர்மங்களும், நீதிகளும். அவை மனிதனை சரியானபடி சென்றடைய உதவுவது தான் புராணங்கள். காப்ஸ்யூல்கள் எப்படி கசக்கும் மருந்தை மனிதனைச் சாப்பிட வைக்க உதவுகின்றனவோ, அது போல் தான் புராணங்கள், வேதங்களை மனிதர்களிடம் கொண்டு செல்ல உதவுகின்றன.
அதுவும் புராணங்களை, கதையாக வாயால் சொல்வதை விட, கால மாற்றத்துக்கேற்ப, வழவழ காகிதத்தில் வண்ணக்காட்சிகளோடு புத்தகமாக்கினாலோ, அனிமேஷன் மூலம் கார்ட்டூனாக்கி வெளிப்படுத்தினாலோ, சின்னத்திரையிலும், பெரிய திரையிலும் திரைப்படமாக்கினாலோ மட்டுமே விரல் சொடுக்கும் நேரத்தில் அவை மனிதர்களின் மனத்தில் நன்றாக ஊடுருவுகின்றன.
புராணங்கள் பார்ப்பதற்கு வெறும் கதைகள் போல இருந்தாலும், அவை சொல்லும் வாழ்க்கைத் தத்துவங்கள் மதிப்பிட முடியாதவையாகும்.

No comments:

Post a Comment