Saturday, December 29, 2012

திருக்கல்யாணம்

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாது மோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை யிருந்ததே. (ஞானசம்பந்தர்)
எல்லா உயிரினங்களும் ஆனந்தமாகவே வாழ விரும்புகின்றன. ஆனந்தம் பலவகைப்படும். சில ஜீவராசிகளுக்கு நேத்ரானந்தம். கண்ணால் பார்ப்பதிலே ஆனந்தம். சில ஜீவ ராசிகளுக்கு ச்ரோத்ரானந்தம். காதுகளால் கேட்பதில் (நல்ல சங்கீதம், சொற்பொழிவு) ஆனந்தம். சில ஜீவராசிகளுக்கு ஜிஹ்வானந்தம். நாக்கினால் நல்ல ருசியான உணவு உட்கொள்வதில் ஆனந்தம். அதேபோல் திருமணமும் ஆனந்தம்தான்.
ஓர் அறிவு படைத்தது முதல் ஆறறிவு படைத்த மனிதன் வரை எல்லாரும் தேகசுக ஆனந்தத்தை விரும்பினாலும், அறிவு படைத்த மனிதன் அதனை வகைப்படுத்திக் கொண்டான். மூன்று வகையாக;
1. இப்படித்தான் வாழவேண்டும் (உத்தமம்)
2. இப்படியும் வாழலாம் (மத்யமம்)
3. எப்படியும் வாழலாம் (அதமம்)
இப்படித்தான் வாழ வேண்டும் என்ற முறையைக் கடைப்பிடிக்க விரும்பிய மனிதன் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டான். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கற்பு நெறியை ஏற்படுத்திக் கொண்டான். இருமனமும் (ஆண் பெண்) ஒன்று சேர்ந்து அனுபவிக்கும் ஆனந்தத்திற்கு திருமணம், கல்யாணம் என்று கூறிக்கொண்டான். பெரியவர்கள் இந்த திருமணத்தை எட்டுவகையாக வகுத்தார்கள்.
1. பிராம்மம்
ஸர்வாலங்கார பூஷிதையான கன்னிகையை பெரியவர்கள் ஆசியுடன் நல்ல வரனுக்கு விவாஹம் செய்துவைப்பது. இது பார்வதி, லக்ஷ்மி, மீனாக்ஷி கல்யாணத்திற்கு பொருத்தமாகும்.
2. தைவம்
பையனின் திறமையைக் கருதி எல்லாரும் மகிழ்ந்திட கன்னிகாதானம் செய்து கொடுப்பது. இது முருகன்-தேவஸேனா, இராமர்-சீதை கல்யாணம் போன்றது.
3. ஆருஷம்
ஒரே கோத்திரமில்லாமல் வெவ்வேறு கோத்திரம் உடையவர்களையும் மூன்று தலைமுறைகளை அறிந்து நடத்திவைப்பது. இதனையே கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு (எடு) என்ற பழமொழி வந்துள்ளன.
4. பிராஜாபத்யம்
தர்மநெறி தவறாத நல்ல பண்புடைய பையன், நல்ல பண்புடைய பெண் நல்ல பிரஜையை வேண்டி செய்து கொள்ளும் திருமணம்.
5. ஆஸுரம்
அனேக திரவியங்கள் பொருள்கள் (பவுன், பணம், வரதக்ஷிணை) கொண்டும், கொடுத்தும், செய்யுள் திருமணம்.
6. காந்தர்வம்
ஸ்திரீ புருஷர் ஒருவரை ஒருவர் விரும்பி தாமே திருமணம் செய்து கொண்டு பிறகு பெரியோருக்குத் தெரியப்படுத்துவது. இது க்ஷத்ரியர்களுக்குப் பொருந்தும்.
முருகன்-வள்ளி, துஷ்யந்தன்-சகுந்தலை, திருமணம் இதற்கு பொருந்தும்.
7. இராக்ஷஸம்
பெண்ணிற்கோ பெற்றோருக்கோ விருப்பமில்லாத போது, பலாத்காரமாகத் தூக்கிச்சென்று திருமணம் செய்வது, ராக்ஷஸ விவாஹமாகும். இது ருக்மணி-கிருஷ்ணன், ஸம்யுக்தை-பிருதிவிராஜன் திருமணத்திற்குப் பொருந்தும்.

8. பைசாசம்
பெண் தூங்கும் போது கழுத்தில் தாலி கட்டுவது. கற்பழித்து தாலிகட்டி மனைவியாக்கிக்கொள்வது, பைசாச விவாஹமாகும்.
இந்தத் திருமணங்களில் முதல் நான்கும், பிராம்மம், தைவம், ஆருஷம், பிரஜாபத்யம். இந்த நான்கும் உத்தமமானதென்றும், அடுத்து ஆஸுரம், காந்தர்வம் இரண்டும் மத்திமமென்றும், கடைசி ராக்ஷஸம், பைசாசம் இரண்டும் அதமமென்றும் கருதப்படுவதால், முதல் நான்கு திருமண முறைகளை நடத்திவைத்து மணமக்களான தம்பதிகளை எல்லா நலங்களுடனும் பல்லாண்டு வாழ்வாங்கு வாழ்ந்து வர ஆசி வழங்குவோமாக!
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட
மன்று ளாரடி யாரவர் வான்புகழ்
நின்ற தெங்கும் நிலவி உலகெலாம். - சேக்கிழார்
1. பாணிக்ரஹணம் (கைப்பிடித்தல்)
மனிதன் வாழ்க்கைக்கு நல்ல ஒரு துணை வேண்டி ஒரு பெண்ணைத் துணைகொள்கிறான். “பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகையிருந்ததே” என்பார் திருஞானசம்பந்தர். நல்ல குணவதியாகவுள்ள ஒரு பெண்ணைத் துணைக்கொள்ள பெரியவர்கள் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.
திருமணம் என்ற தமிழ்ச்சொல்லிற்கு வடமொழியில் “பாணிக்ரஹணம்” என்று கூறுவார்கள். பாணிக்ரஹணம் என்பது மணமகளின் வலக் கையை மணமகன் தன் வலக் கையால் பிடிப்பது என்றும், எப்படி பிடிக்க வேண்டும்? என்றும் தர்மசாஸ்திரம் விரிவாகக் கூறுகிறது. கையில் உள்ள ஐந்து விரல்களில் கட்டைவிரல் (அங்குஷ்டம்) ஆண்விரலாகவும், மற்றுமுள்ள நான்கு விரல்களும் தர்ஜநீ, மத்யமா, அநாமிகா, கனிஷ்டிகா என்று நான்கு விரல்களையும் பெண் விரலாகவும் கூறுகிறது. ஐந்து விரல்களையும் மணமகள் ஒருங்கே சேர்த்துப்பிடிக்க பாணிக்ரஹணம் ஆகும். ஒரு வீட்டில் அந்தக் குடும்பம் சிதம்பரமா? மதுரையா? என்று கேட்பது வழக்கத்தில் உள்ளது. சிதம்பரம் என்றால் ஆணாதிக்கம் என்றும், மதுரை என்றால் பெண் ஆதிக்கம் என்றும் பொருள் கூறுவார்கள். ஆனால் எப்படி இருக்கவேணுமென்றால் திருச்செங்கோடாக இருப்பது உத்தமம். ஆணும் பெண்ணும் சம உரிமையில் வாழ்ந்து வருவது மிகச் சிறப்புடையதாகும்.
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிறைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன்நம்பி மதுசூதனன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழிநான்.
என்பாள் ஆண்டாள். மணமகளின் கையில் உள்ள ஐந்து விரல்களையும் ஒருங்கே சேர்த்து மணமகள் பிடிக்க பாணிக்ரஹணம் என்று ஆகும். அதனால் அவர்கள் கணவன் மனைவி ஆகிறார்கள். வைதீக திருமணத்தில் பாணிக்ரஹணந்தான் முக்கியம். மாங்கல்யம் அணிவிப்பது அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது.
***

2. மாங்கல்ய தாரணம் (தாலி கட்டுதல்)
கல்யாணம் என்பது பெண்களுக்குத்தான் சிறப்பைத் தரும். பார்வதி கல்யாணம், லக்ஷ்மி கல்யாணம், கௌரீகல்யாணம், சீதா கல்யாணம், வள்ளி கல்யாணம், ருக்மிணி கல்யாணம், என்று பெண்கள் பெயரில் இணைந்து விளங்கிவருவது கல்யாணமாகும். அதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் மாங்கல்யம் (தாலி) அணிவதாகும். மாங்கல்யத்தை மஞ்சள் கயிற்றில்தான் கோத்து அணிய வேண்டும் என்பதை, மாங்கல்யதாரண மந்திரம் “மாங்கல்யம் தந்துநானேநா” “தந்து-நூல்” என்று கூறுகிறது. அதன் பயனை “காமேசபத்தமாங்கல்யஸுத்ரசோபிதகந்தரா” என்று பிரும்மாண்ட புராணத்தில் உள்ள லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது. இதன் பொருள் காமேச - கடைசிவரை அன்பு அகலாத, பத்த - கட்டப்பட்ட, மாங்கல்யஸூத்ரசோபிதகந்தரா - மாங்கல்யக் கயிற்றினால் சோபிக்கின்ற கழுத்தை உடையவளாக ஸ்ரீ தேவியை வருணிக்கிறது. ஆகையால் நாமும் மஞ்சள் நூலில் கோத்த மாங்கல்யத்தை அணிவதால் அன்பு அகலாத மனைவியாயும் கணவனாயும், வாழ்ந்துவர வழிவகுக்கும். திருமணத்தில் மாங்கல்யம் அணியும் நேரத்தில் மணமகள் செய்ய வேண்டிய பிரார்த்தனை மந்திரமாவது;
(மங்களே மங்களா தாரே மாங்கல்யே மங்களப் ப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே ஸதா)
என்று கூறிப் பிரார்த்தனை செய்தால் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்துவரச் செய்யும்.
***
3. க்ருஹப்ரவேசம் (மணமக்கள் வலக் காலை முதலில் வைத்து நுழைவது)
திருமணமான மணமக்கள் தம் வீட்டிற்குள் வாசற்படியைத் தாண்டி அடியெடுத்து வைக்கும்போது, பெரியவர்கள், “முதலில் வலக் காலை எடுத்து வைத்து வாருங்கள்” என்று கூறுவார்கள். தற்காலத்தில் இளைஞர்கள் ஏன் வலக் காலை முதலில் வைத்து வரவேணும்? இடக்காலை ஏன் முதலில் வைக்கக்கூடாது? என்று கேட்கிறார்கள்.
நமது சரீரத்தை இருகூறாக்கி, நடுவில் ஒரு நூலையிட்டால் இருபாகத்திலும் எல்லா உறுப்புகளும் இரண்டு இரண்டாக இருக்கும். வலப்பாகம் சற்று வன்மையாகவும் இடப்பாகம் சற்று மென்மையாகவுமிருக்கும். ஆயுர்வேத வைத்திய சாஸ்திரப் பிரகாரம் வலப் பாகம் சூரிய (கலை) அம்சமும் இடப் பாகம் சந்திர (கலை) அம்சமும் உள்ளது என்று கூறுகிறது. சூரியன் எந்நாளும் பிரகாசமாகவுள்ளது, சந்திரன் பதினைந்து தினம் வளர்ந்தும் பதினைந்து தினம் தேய்ந்தும் ஒருநாள் முழுமையாக இல்லாமலும் இருக்கும். முதன்முதலில் வாசற்படியைத் தாண்டி மணமக்கள் எடுத்துவைக்கும் முதல் அடியும் விசேஷமானது. அப்போது வலக் காலைத்தான் வைக்கவேண்டும். சூரியனுடைய அம்சமான வலப் பாதத்தை எடுத்து வைத்தால் என்றும் பிரகாசமாக இருக்கும். இதனையே சிவாகமம், “ஸவ்யபாதபுரஸ்ஸரம்அந்த: பிரவேச்ய” என்றும், “மணமகளே மருமகளே வா! வா! உன் வலக் காலை எடுத்து வைத்து வா! வா!” என்று தமிழ்ப்பாடலும் கூறுகிறது. மேலும். “வாழவைக்க வலக் காலும், அழிக்க இடக் காலும்” என்பது பழமொழியாகும். ஆஞ்சநேயர் இலங்கைக்குச் சென்றபோது முதலில் இடது காலை வைத்தார் என்றும், அதனால் இலங்கை அழிவைக் கண்டது என்றும் கம்பராமாயணம் கூறுகிறது. ஆகவே நாம் திருமணத்தில் மட்டுமல்லாது, எப்போதுமே வலக் காலையே வாசற்படியைத் தாண்டும் போது வைத்துப் பழகினால் என்றும் குறைவு இல்லாத நிறைவான வாழ்க்கையை அடையலாம்.
***
4. நாஸாபரணம் (மூக்குத்தி)
மனிதன் இப்புவியில் பிறக்கும்போது முற்பிறவியில் செய்துள்ள நல்வினை தீவினையின் பயனாகவே இப்பிறவி அமைகிறது. நல்வினை மிகுதியாகச் செய்தவர்கள் நல்ல ஸௌக்யமான வாழ்வையும், தீவினை மிகுதியாகச் செய்துள்ளவர்கள் துன்பம் மிகுந்த வாழ்வையும் அனுபவிக்கிறார்கள். பெற்றோர் தமக்குப் பிறந்த குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என அறிந்துகொள்ள உதவுவது ஜாதகமாகும். அதுதான் சென்ற பிறவியின் பிராக்ரஸ் ரிப்போர்ட் ஆகும்.
வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும் பெண்கள் நலமாக இருக்க, ஜோதிட நூல்கள் பெண்கள் எந்தெந்த நக்ஷத்திரத்தில் பிறந்தால் என்ன பயன்? என்று கூறுகிறது. தீதுறு நட்சத்திரத்தில் பிறந்திருந்தால், அவர்கள் வாழ்க்கை துன்பமயமாகவல்லவா இருக்கும்? இதனைச் சிந்தித்த பெரியவர்கள் பெண்கள் பிறந்த வீட்டில் எவ்வளவு நலமாக இருந்தாலும் புகுந்த வீடான தன் கணவன் வீட்டில் வாழ்நாள் பூராவும் நலமாக வாழ்ந்தால்தான் அவள் வாழ்க்கை சிறப்புறும், என்று தீதுறு நட்சத்திரங்களின் சக்தியைக் குறைக்க வழிகண்டார்கள். அதுதான் பெண்கள் மூக்குத்தியை அணியச் செய்தது. “தாரா-நக்ஷத்திரங்களின், காந்தி-சக்தியை, திரஸ்காரி-குறைக்க, மறைக்க, நாஸாபரண-மூக்குத்தி, பாஸுர-அணிய வேண்டும், என்று லலிதா ஸஹஸ்ரநாமமும் கூறுகிறது. பெண்கள் ஆரோக்யமாக வாழ்ந்திட மூக்கு காதுகளில் துளையிட வேண்டுமென்று ஆயுர்வேத நூல் கூறுகிறது. துளையிட்ட இடத்தில் தங்கம், நவரத்னங்களை வைப்பதால், மாதந்தோறும் மற்றும் மகப்பேறு காலத்திலும் இழந்த சக்தியை ஈடுசெய்யும் என்று வைத்திய நூல் கூறுகிறது. ஆகையால் பெண்கள் மூக்குத்தி அணிவது மிக அவசியமாகிறது.
பாற்கடலைக் கடைந்தபோது அதில் கிடைத்த பொருள்களுடன் மஹாலட்சுமியும் அவளுக்கு முன் ஜேஷ்டா தேவியும் (மூதேவி) தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. முன்தோன்றியதால் ஜேஷ்டாதேவியை “அக்கா” என்றும் லக்ஷ்மியை “தங்கை”யென்றும் கூறுவர். மூதேவி சென்ற இடம் சீரழிந்தும் லக்ஷ்மி சென்ற இடம் சீரும் சிறப்பாக இருப்பதையும் உணர்ந்த மூதேவி, இறைவனிடம் “என்னை யாரும் விரும்புவதில்லை. என்னை மதிக்கக் கூடிய இடத்தில் இருக்க அருள வேண்டும்” எனக் கேட்டாள். வேண்ட முழுதும் தருபவனான இறைவன், “எந்த இடத்தில் இருக்க விரும்புகிறாய்?” என்று கேட்டபோது, மிக முக்யமாக எல்லாராலும் மதிக்கப்படக்கூடிய பசுவின் முகத்திலேயும், பெண்களின் மூக்கிலேயும், ஆண்களின் பிருஷ்டபாகத்திலேயும் (இடுப்பு) இருக்க வேண்டினாள். அப்படியே வரந்தந்துள்ளதை அறிந்த, அந்த மூவரும் இறைவனிடம் “வணக்கத்திற்கு உரியவர்களாக விளங்கி வரும் எங்களிடம் மூதேவி இருந்தால் யார் எங்களை மதித்து வணங்குவார்கள்?” என்று கேட்டதற்கு, இறைவன் “மூதேவி உங்களிடம் வராமல் இருப்பதறகு வழி சொல்கிறேன். ஆண்கள் ஆஸனமில்லாமல் செய்யும் எந்தக் காரியமும் மூதேவிக்கு உரியதாக ஆகும். ஆஸனத்தில் அமர்ந்து செய்யும் போது மூதேவி அங்கு வரமாட்டாள். பசுவிற்கு முகத்தில் மூதேவி இருப்பதால் பின்புறம் லக்ஷ்மி வாசம் செய்வதால் பின்புறம் பூஜை வழிபாடு செய்து, எந்த மிருகத்திற்கு இல்லாத அளவு உன்னுடைய சரீரமே எல்லா தெய்வங்களும் உறைகின்ற இடமாகவும், உன் சரீரத்தில் உண்டாகும் பால், தயிர், நெய், கோமயம் (சாணம்), கோஜலம் யாவும் இறைவழிபாட்டிற்கும் மனிதனுடைய ஆரோக்யத்திற்கும் உபயோகப்படும். பெண்களுக்கு மூக்கில் மூதேவி வாசம் இல்லாமல் இருப்பதற்கு லக்ஷ்மியின் அம்சமான நவரத்னங்களும் தங்கத்தாலான மூக்குத்தியும் அணிவதால் மூதேவி வரமாட்டாள். லக்ஷ்மி நித்யவாசம் செய்து வருவதுடன் சுமங்கலி பூஜை செய்து வழிபடுவார்கள் என்று ஆசி வழங்கினார். ஆகையால் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டியது அவசியமாகிறது.
***
5. தாடங்கம் (தோடு)
திருமணமான பெண்கள் மாங்கல்ய தாரணத்தின் போது கணவன் கூறிய மந்திரம். “மாங்கல்யம் தந்துநாநேன மமஜீவனஹேதுநா” - என்னுடைய ஜீவனுக்கு ஹேதுவாக இந்த மாங்கல்யத்தை அணிவிக்கிறேன் என்று கூறியதைக் கருத்தில் கொண்டு, தோடு முதலான ஆபரணங்களை தன் கணவனின் நலத்திற்காகவே அணிந்து வருகிறாள். தோடு அணிவதால் கணவனை எந்த ஆபத்திலிருந்தும் காத்திட முடியும் என்பதை வேதம் “சிவாருத்ரஸ்யபேஷஜீ தயாநோம்ருடஜீவஸே” என்கிறது. ஆலகால விஷத்தை உண்ட சிவன் ஜீவித்திருக்கிறார் என்றால், சிவா - தேவி, ருத்ரஸய - சிவ பெருமானுக்கு, பேஷஜீ - மருந்தாக இருக்கிறாள், தயாநோமிருடஜீவஸே - அதனால் சிவன் ஜீவித்திருக்கிறார், என்று யஜுர் வேதம் கூறுகிறது. “தாடங்கயுகளீபூத தபநோடுப மண்டலா” என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். சூரியன் சந்திரன் ஆகிய இருவரை இரு காதுகளில் தாடங்கங்களாக (தோடுகளாக) அணிந்திருக்கிறாள்.
(ஸூர்ய சந்த்ரௌ ஸ்தநௌ தேவ்யா: தாவேவ நயதே ஸ்மிருதௌ
உபௌ தாடங்கயுகளம் இத்யேஷா வைதிக ஸ்ம்ருதி:)
சுமங்கலிகளுக்கு தாடங்கம் விசேஷமான ஆபரணம். அம்பாளுடைய தாடங்கத்தின் மகிமையைப் பற்றி ஆதிசங்கரர் தம் ஸௌந்தர்யலஹரியில் “அம்மா! உன் கணவன் ஆலகால விஷத்தைச் சாப்பிட்டாலும் அந்த விஷமானது நீ அணிந்திருக்கும் தாடங்கத்திற்குக் கீழ் இறங்காமல் கண்டத்தில் (தொண்டையில்) நின்றதற்கு தாடங்கத்தின் (தோட்டின்) மஹிமைதான்” என்கிறார். இதை
(ஸுதாமப்யாஸ்வாத்ய ப்ரதிபய ஜராமிருத்யு ஹரிணீம்
விபத்யந்தே விச்வே விதிசத-மகாத்யாதிவிசத:
கராளம் யத்க்ஷ்வேலம் கபலித வத: காலகலநா
ந சம்போ: தன்மூலம் தவ ஜனனி தாடங்கமஹிமா)
என்று சௌந்தர்யலஹரியில் கூறுகிறார்.
அம்பாளின் அரும் பெரும் பக்தரான அபிராமிபட்டர் திருக்கடையூரில் அபிராமியையே தியானித்திருந்த நேரத்தில் தை அமாவாசை கடலாடிவிட்டு திருக்கடவூரில் அபிராமியை தரிசிக்க வந்த அரசன் பட்டரிடம் “இன்று என்ன திதி?” என்று கேட்க, அம்பாளின் சிந்தனையிலேயே இருந்த பட்டர் “பௌர்ணமி” என்று கூற, அரசன் “இன்று சந்திரதரிசனம் செய்யலாமா?” என்று கேட்க, “செய்யலாமே!” என்று கூற, அரசன் சென்றபிறகு, அங்குள்ளவர்கள் பட்டரிடம் “இப்பொழுது வந்து தங்களிடம் பேசியவர் அரசன். இன்றோ அமாவாசை. அதை பௌர்ணமி என்றும், தரிசிக்கலாமே யென்றும், கூறி விட்டீர்களே! இன்று ஆகாயத்தில் சந்திரன் வராவிட்டால் உங்கள் கழுத்திற்கு கத்தி வந்துவிடுமே! என்று எச்சரித்தார்கள். அம்பாளிடம் “ஏன்? என்னை இப்படி பேசவைத்து ஆபத்தை உருவாக்கிவிட்டாயே?” என்று மனம் கசிந்து அபிராமி அம்பாள் பேரில் அந்தாதி பாடினார். அந்தாதியென்பது முதல் பாட்டின் கடைசி அடியை அடுத்த பாட்டின் முதல் அடியாக அமைத்துப் பாடுவது. நூறு பாடல்களைக் கொண்டது அந்தாதி. எழுபத்தியெட்டாவது பாடலைப் பாடும்போது தேவி தன் இடக் காதில் அணிந்திருந்த தோட்டை (தாடங்கம்) ஆகாயத்தில் வீச வானத்தில் ஜகஜ்ஜோதியாக சந்திரன் தோன்றினான் என்பது வரலாறு. அந்தப் பாடல்,
செப்பும் கனக கலசமும் போலும் திருமுலை மேல்
அப்பும் களப அபிராமவல்லி! அணிதரளக்
கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என்துணை விழிக்கே.
ஆகையால், பெண்கள் காதில் தோடு அணிவதால் தன் கணவனுக்கு எந்த ஆபத்தும் வராமல் காத்திட உதவுகிறது. அடியார்கள் குறைகளைக் கேட்டு அருள் பாலிப்பது “தோடுடைய செவி” என்று திருஞான சம்பந்தர் முதல் பாடலிலே கூறுகிறார்.
பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது பாடகந்தண்டை கொலுசும்
பச்சைவைடூர்ய மிச்சையா யிழைத்திட்ட பாதச்சிலம்பி னொளியும்
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும் மோகன மாலையழகும்
முழுதும் வைடூர்யம் புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலியழகும்
சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலும் செங்கையிற் பொற்கங்கணம்
ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலாமொளியுற்ற சிறுகாது கொப்பினழகும்
அத்திவரதன் தங்கை சக்திசிவரூபத்தை யடியனாற் சொல்லத் திறமோ!
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சியுமையே.
***
6. உச்சித் திலகம் (நெற்றிப்பொட்டு)
திருமணமான பெண், தலை உச்சி வகிட்டில் குங்குமம் இட்டுக்கொள்ள வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். பெண்களுக்கு திருமணமாகிற வரை பிறந்த வீடும், பிறகு புகுந்த வீடுந்தான் வாழ்நாள் முழுவதும் சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால் சிலருக்கு புகுந்த வீடு நன்றாக அமைவதில்லை. காரணம் அவர்கள் தலைவிதியென்று கூறுவார்கள். தலைவிதி என கஷ்டப்படத்தான் வேணுமா? என்று சிந்தித்து அதற்கு ஒரு வழி கண்டார்கள். தலைவிதி என்பது பிரம்மா தலையில் எழுதிய எழுத்து என்று கூறுவார்கள். அதை நல்லதாக மாற்ற சரணாகதியே வழியென்றும், கண்டார்கள். சரணாகதியென்பது விழுந்து நமஸ்கரித்து வணங்குவதாகும். ஆண்கள் அஷ்டாங்கம் (எட்டு உறுப்புகள்) பூமியில் படும்படியாக வணங்கவேண்டும். பெண்கள் பஞ்சாங்கம் (ஐந்து உறுப்புகள்) பூமியில் படுமாறு வணங்கவேண்டும். உச்சந்தலை, இரண்டு கைகள் இரண்டு முழங்கால் பூமியில் படுமாறு வணங்கவேண்டும். பெண்கள் ஸ்தனங்கள் (மார்பு) பூமியில் படக்கூடாது. பெண்கள் தன் குறைகளை, தாயிடந்தான் கூறுவார்கள். எல்லாக் குறைகளையும் கஷ்டங்களையும் நிவர்த்திப்பவள் ஜகன்மாதாவான தேவியே. அவள் திருவடிகளில் -
(அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம
தஸ்மாத் காருண்ய பாவேன ரக்ஷரக்ஷ மஹேஸ்வரீ)
என்று கூறி அம்பாள் திருவடிகளை வணங்கினால் அவள் திருவடிகளில் பலர் அர்ச்சித்திருந்த குங்குமம் இவள் உச்சந்தலை வகிட்டில் ஒட்டிக்கொள்ளும். அதனால் அம்பாள் திருவடியும் குங்குமமும் தலையில் பட்டதால் தலையெழுத்து அழிந்துவிடும் என்பதை அருணகிரிநாதர் “கால்பட்டழிந்தது, இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே” என்பார். இதனை லலிதா ஸஹஸ்ரநாமம் “ச்ருதிசீமந்தஸிந்தூரீ கிருதபாதாப்ஜதூளிகா” என்கிறது. அம்பாளுடைய பாதாப்ஜ தூளியான குங்குமம் ச்ருதி - சீமந்த தலைவகிட்டில் இட்டுக் கொள்வதால் தலையெழுத்து நல்லதாக அமையும். இதனையே அரசனிடம் அமாவாசையை பௌர்ணமியென்று கூறிய அபிராமிபட்டர் தன் தலையெழுத்து அரச தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்று எண்ணி, அபிராமியைக் குறித்து அந்தாதி பாட முதல் பாடலில் உச்சித்திலகம் தலையெழுத்தை மாற்றும் என்பார்களே! என் உள்ளத்தில் எப்போதும் உரைந்திருக்கும் தேவியே! “உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்” என்று பாட அமாவாசை பௌர்ணமியாகி, காட்சி தந்து, அவர் தலையெழுத்து மாறியது போல திருமணமான பெண்கள் தலைவகிட்டில் குங்குமமிட்டுக் கொள்வதால் தலையெழுத்து நல்லதாக அமைந்து நல்ல கணவனுடனும் நல்ல குழந்தைகளுடனும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
***
7. மிஞ்சி (மெட்டி)
பெண்களுக்கு திருமணத்திற்கு முன் கிடைப்பவை மூன்று 1. மஞ்சள், 2. நெற்றியில் குங்குமம், 3. தலையில் புஷ்பம். திருமணத்திற்குப் பிறகு கிடைப்பவை மூன்று. 1. தலைவகிட்டில் உச்சித் திலகம் 2. கழுத்தில் கணவனால் அணியப்பெற்ற மாங்கல்யம் 3. கால் விரல்களில் அணியும் மிஞ்சி (மெட்டி, உருட்டு) ஆகும். மிஞ்சி திருமணத்தில் கணவன் மணமகளின் வலக் கால் கட்டை விரலைப் பிடித்து ஏழு அடி எடுத்து வைத்து (ஸப்தபதி) அம்மி மீது வைத்து மிஞ்சி (மெட்டி) அணிவிப்பது, வைதீக முறையில் நடத்தும் திருமணத்தில் முக்கிய கிரியையாக கருதப்படுகிறது. மிஞ்சி அணிவிப்பதன் கருத்து புத்ராத்சதகுணப்புத்ரி: ஆண்களை விட பெண்களுக்கு அன்பு, அழகு, அறிவு, ஆற்றல், ஆசை, காமம், உழைப்பு எல்லாமே அதிகமாக உள்ளது. அன்பு வளர்க்கும். ஆசை அழிக்கும். “ஆசையறாய் பாசம் விடாய்” என்கிறது சிவஞான சித்தியார்.
அவாவில்லார்க் கில்லாகும் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேலும் வரும்.
ஆசையற்றார்க்குத் துன்பமில்லை, ஆசையுள்ளவர்க்கு மேன்மேலும் துன்பம் வரும், என்பார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.
சீதா பிராட்டி தன் கணவனை அங்கு உலாவிய மானைப் பிடித்துத் தருமாறு மிகுந்த ஆசையுடன் விரும்பிக் கேட்டபோது, அது மாயமான் வேண்டாமென்று கூறியும், மிக வற்புறுத்திக் கேட்டதால் பல துன்பங்கள் அடைந்த வரலாற்றை இராமாயணம் கூறுகிறது.
திருமணமாகும் வரை மிக்க கட்டுப்பாடுடன் இருப்பது தமிழ்நாட்டுப் பண்பாகக் கருதப்பட்டு வருகிறது. திருமணத்திற்குப் பிறகு ஆசை அளவு கடந்துவிடக்கூடாதே! என்று அதைக் கட்டுப்படுத்தத்தான், முன்பு பத்துவிரல்களிலும் மிஞ்சி (மெட்டி) அணியப்பட்டு, தற்காலம் சிலர் ஒரு விரலிலும் சிலர் இரண்டு விரல்களிலும் அணிந்து வருவதைக் காணமுடிகிறது. கால் விரல்களில் மிஞ்சி (மெட்டி)யை அணிவதால் மனத்தில் எழும் ஆசையைக் கட்டுப்படுத்த முடியுமா? என்ற ஐயம் ஏற்படும். தலையில் எண்ணெயை வைத்து தேய்த்து சற்று நேரம் கழித்து கால்விரல்களை ஜலத்தில் மேலே காட்டினால் எண்ணெய் விரலிலிருந்து வெளிவருவதைக் காணலாம்.
அதுபோல் ஆன்மிக அருளாளரிடம் ஆசிபெற வணங்க, அவர் திருவடிகளின் முன்பாக தலையை வைத்து வணங்கும்போது, அவர்களின் இரு திருவடிகளின் பத்து விரல்களிலிருந்து அவரின் அருளாசி கிடைக்கும் என்றும். அவர் இரு கைகளினால் ஆசி வழங்கும்போது அது பூர்ணமாகக் கிடைக்கும் வாய்ப்பும் உண்டாகிறது. அந்த ஆசியானது கை விரல்களில் தங்க மோதிரங்களுடனும், கால் விரல்களிலிருந்து மிஞ்சியுடனும் கலந்து வந்து நன்மை பயக்கும். இந்து மதத்தில் இடுப்பிற்குக் கீழே தங்கம் அணியக்கூடாது என்பதால் மிஞ்சி வெள்ளியால் அணியப்படுகிறது.
***
8. ரங்கோலி (வாசலில் கோலம் போடுவதன் தத்துவம்)
“பள்ளிக் கணக்கும் புள்ளிக் கோலமும் வாழ்க்கைக்கு உதவி செய்யும்” என்பது ஆன்றோர் வாக்கு.
பெண்கள் பள்ளியில் படித்தால் குடும்ப நிர்வாகம் செய்ய உதவியாக இருக்கும்.
வாசலில் புள்ளிவைத்துக் கோலம் போடுவதை தாய் தன் மகளுக்குக் கற்றுத் தருவது வாழ்க்கைக்கு உதவி செய்யும். தாய் ஐந்து புள்ளிகள் வைத்தும் ஒரு கோலத்தை நிறைவு செய்யவும், ஐம்பது புள்ளிகள் வைத்தும் கோலத்தை நிறைவு செய்யவும் கற்றுத் தருவாள். பெண் வாழ்க்கையில் தன் கணவன் வருவாய் குறைவாக இருந்தாலும் நிறைவாக இருந்தாலும் மனமகிழ்வோடு குடும்பம் நடத்த உதவியாக இருக்கும் என்பதே இதன் கருத்தாகும்.
வீட்டு வாசலில் கோலம் சிறியதாகப் போட்டிருந்தால் உணவு வகைகள் சாதாரணமாகவும், கோலம் பெரிதாக இருந்தால் உணவு வகைகள் விசேஷமாக உள்ளன என்றும் அறிந்துகொள்ள உதவுவது கோலமேயாகும்.
***
9. ஜடை (தலைப் பின்னல் போடுவதன் தத்துவம்)
தலையில் உள்ள கூந்தலுக்கு “குழல்” “குழலி” என்று பெயர். “பூங்குழலி,” “வண்டமர் குழலி,” “கருந்தார் குழலி” என பெண்ணுக்கு சிறப்புப் பெயர்கள் உண்டு. கூந்தலை, பின்னலாக அமைப்பதில் பெரும் தத்துவம் அமைந்துள்ளது. தாய் மகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் வாழ்க்கைத் தத்துவங்களில் ஒன்று, தலைக் கூந்தல் பின்னலாகும். மூன்று கால் போட்டு பின்னுவார்கள். பெண்ணாகப் பிறந்தவர்களுக்கு பிறந்தவீடு, புகுந்தவீடு, என இரண்டு வீடு நல்லதாக அமைந்தால் அருள் வாழ்க்கை இன்பகரமாக அமையும். நடுக்கால் அந்த பெண். ஒருபக்கம் பிறந்தவீடு, மற்றொரு பக்கம் புகுந்த வீடு இரண்டிலும் மாறிமாறி இணைந்து வருவதுதான் பின்னல். இரண்டு வீட்டவர்களையும் தன் அன்பால் இணைத்து வைப்பது பின்னல். குடும்பம் சிதறிவிடாமல் இணைத்து வாழ்வது பெண்ணின் வாழ்க்கையில் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதே, பின்னலின் தத்துவமாகும்.
***
10. வளையல் அணிவதன் தத்துவம்
ஒரு பெண்ணிற்கு மூன்று காப்பு அணிவிக்கப்படுகிறது. 1. அவள் தாய் வயிற்றில் இருக்கும்போது வளை(யற்)காப்பு. 2. பிறந்த ஏழாம் நாளில் ஏழாங்காப்பு, 3. அவள் கர்ப்பமாக இருக்கும் பொழுது ஒரு வளையல் காப்பு ஆக மூன்று காப்பு “முக்காப்பு” என்பார்கள். சென்ற காலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றிலும் பாதுகாப்பு தரவேண்டி செய்வதுதான் காப்பணி விழாவாகும்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் துர்தேவதைகளால் இன்னல்கள் ஏற்படும் என்பதை, கந்தசஷ்டி கவசம் என்ற நூல் “பெண்களைத் தொடரும் பிரம்மராக்ஷதரும் பிள்ளையைத் தின்னும் புழக்கடை முனியும்” என்று கூறுகிறது. ஆகையால்தான் பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது எல்லாத் தெய்வங்களையும் வேண்டி அணியச் செய்வது வளைகாப்பு.
தமிழ் இலக்கியங்களில் பிள்ளைத்தமிழ் இலக்கியம் என்பது ஒன்று. அதில் முதற்பருவம் காப்புப் பருவமாகும். பாட்டுடைய தலைவனை, குழந்தையாக பாவித்துப் பாடுவது. பெண்கள் மாதவிடாய்க் காலத்திலும் கர்ப்பமாக இருக்கும் காலத்திலும், பாதுகாப்பு வேண்டி எப்பொழுதும் அணிந்து கொள்ள வேண்டியது வளையல் ஆகும்.

No comments:

Post a Comment