Saturday, December 29, 2012

ஸ்ரீமத் பகவத்கீதை

பாரத நாட்டின் இலக்கியத்தில் சிறந்த இடத்தைப் பெற்ற ஸ்ரீமத் பகவத்கீதை பாரதக் கலாசாரத்தின் உயிர்ச் சக்தியாக விளங்குகிறது. பகவத் கீதையில் அனைத்து உபநிஷத்துக்களின் சாரம் அடங்கியுள்ளது, மட்டுமில்லாமல் பாரதக் கலாசாரத்தின் சிறந்த வடிவமும் பரிசுத்தமான கண்ணாடியைப் போல் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனரின் உரையாடலின் மூலமாக அனைத்து மனிதர்களின் நன்மைக்காக, நல்லவர்களால் மிக்க ஆதரவுடன் சேவிக்கக்கூடிய பகவத்கீதை நல்வழியைக் காட்டுகிறது. இப்பேர்ப்பட்ட கீதை ஸம்ஸ்க்ருதத்தின் மூல ஆதாரமாகியுள்ள பல ரஹஸ்யமான அர்த்தங்களையும் எடுத்துரைக்கின்றது.
நமது பாரதக் கலாசாரத்தின் சிறப்பு என்னவென்றால், அனைத்திற்கும் தர்மமே மூலாதாரமாக நிற்கிறது. தர்மம் இரண்டு வகைப்படும் - சாமான்ய (சாதாரண) தர்மம், விசேஷ (அசாதாரண) தர்மம். அஹிம்ஸை, உண்மை, திருடாமலிருப்பது, சுத்தமாக இருப்பது, புலனடக்கம், தயை, மன்னிப்பு ஆகியவை சாதாரண தர்மம் எனப்படும். ஏனெனில் இவை எந்தவொரு குறிப்பிட்ட ஜாதிக்காகவோ, சம்ப்ரதாயத்தினர்களுக்காகவோ கூறப்படவில்லை, மொத்த மனிதர்களுக்காகக் கூறப்பட்டுள்ளன. அசாதாரண தர்மங்கள் குறிப்பிட்ட ஜாதி, மற்றும் வகுப்பினர்களின் பொருட்டு அவர்களுக்காகவே விதிக்கப்பட்டுள்ளன. சாதாரண தர்மங்களை அனுஷ்டிக்காமல் அசாதாரண தர்மங்களை அனுஷ்டித்தாலும் கூட பலன் ஏற்படாது. இந்த இரண்டு வகையான தர்மங்களுக்கும் சாஸ்த்ரம் மட்டுமே பிரமாணம் என்று கீதையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது -
(தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதொ)
சாஸ்த்ரத்தில் கூறப்பட்டதை மீறினால் இப்பூவுலகிலும், பரலோகத்திலும் நஷ்டம் தான் ஏற்படும் என்பதையும் கீதா சாஸ்த்ரத்தில் கூறியுள்ளதைப் பார்க்கலாம் -
(ய: சாஸ்த்ரவிதிமுத்ஸ்ர்ஜ்ய வர்ததே காமகாரத: ந ஸ ஸித்திமவாப்னோதி ந ஸுகம் ந பராங்கதிம்)

இப்போது உலகத்தில் பலவிதமான தர்மங்கள், சம்பிரதாயங்கள் நடைமுறையில் உள்ளன. அவையனைத்திலும் மனிதர்களால் பின்பற்றக்கூடிய கருத்துகளும் உள்ளன. அவற்றில் அடங்கியுள்ள கருத்துகள் சிலவற்றில் சிறிது குறைவாகவோ அல்லது சிறிது அதிகமாகவோ இருக்கலாம். ஆனால் நாம் சூக்க்ஷம பார்வையால் பாரதீய சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள தர்மங்களைப் பற்றி சிந்தித்தால், அந்த அனைத்துக் கருத்துகளும் பாரதீய சாஸ்திர பார்வையில் சாதாரண தர்மங்களுள்ளே அடங்கிவிடும். அனைத்து நாடுகளிலும் சுகத்தின், அமைதியின், நிறைவின், சமூகசகோதர மனப்பான்மையின் வளர்ச்சிக்காக அஹிம்சை, உண்மை முதலிய சாமான்ய தர்மங்கள் அடிப்படைத் தேவைகளாக உள்ளன. இந்த தர்மங்களைக் காப்பாற்றுவதற்கான உற்சாகம் நம்மிடத்தில் இல்லை. சுகம் - நிறைவுகளில் விருப்பமில்லை என்பது கலிகாலத்தின் லீலையாகும். இந்நாளில் அடிப்படையான இந்த தர்மத்திற்குக் குறை ஏற்பட்டுள்ளது, இதனால் மனிதசமுதாயம் எங்கும் கஷ்டத்தில் மூழ்கியுள்ளதைக் காணலாம். இன்று காம, க்ரோத, லோபங்களின் சாம்ராஜ்யம் மனித சமாஜத்தில் பலவிதமான பொருளாதாரச் சேர்க்கைகளுக்குக் காரணமாக உள்ளது. பாரதக் கலாசாரத்தில் அவற்றுக்கு இடமில்லை. பகவத்கீதையில் கூறுவதாவது -
(த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசனமாத்மன:
காம: க்ரோத: ததா லோப: தஸ்மாத் ஏதத்ரயம் த்ய«ஐத்)
தெய்வசம்பத்தையும் அசுரசம்பத்தையும் விரிவாகக் கூறுவதன் மூலம் கீதாசாஸ்திரம் மேற்கூறிய விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறது. சாத்வீகம் முதலிய குணபேதங்களால் மூன்று விதமான ஸ்ரத்தைகளைப் பற்றியும், புலனடக்க உபாயங்கள் பற்றியும் கூறியிருப்பது நன்மைக்காகத்தான் என்பதில் சந்தேகமில்லை.
எல்லாம் அறிந்த பரமேஸ்வரன் தான் நாம் செய்த கர்மங்களுக்குப் பலனளிப்பவன். அவனோ! பக்ஷபாதமில்லாமல், கர்மங்களை அனுசரித்து ப்ரஜைகளை சிருஷ்டி செய்கிறான். அப்போது பிராணிகளில் உச்ச, நீச எண்ணங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இவற்றின் அனைத்து செயல்பாடுகளும் சாஸ்திர ப்ரமாணங்களை மீறி சமமாக இருக்க இயலாது. கருணை சகோதரத்துவம் ஆகிய குணங்கள் எங்கும் சமமாக இருக்கவேண்டியவை. பகவத்கீதையில் கூறுவதாவது:
(ஆத்மொபம்யேந ஸர்வத்ர ஸமம் பச்யதி சோர்ஜுன
ஸுகம் வா யதி வா து:கம் ஸ யோகீ பரமோ மத:)
இவ்வாறு அந்தந்த வர்ணங்களுக்குச் சொல்லப்பட்ட விசேஷ தர்மங்களும் கூடி அந்தந்த தர்மங்களுக்குத் தகுதி பெற்ற மக்களின் நன்மைக்காகப் பயன்படுகின்றன. இது இவ்வாறு கூறப்பட்டுள்ளது -
விசேஷ தர்மங்களைக் குறித்தே இந்த கீதாவாக்யம் சொல்லப்பட்டுள்ளது.
(ஸ்வதர்மே நிதம் ஸ்ரேய: பரதர்மோ பயாவஹ:)
ஆக பாரதக் கலாசாரத்தை நிலை நிறுத்துவதில் கீதாசாஸ்திரத்தின் பங்களிப்பு மிக உயரியதாகும்.
சம்ஸ்கிருதத்தின் எழுச்சிக்கும் பகவத்கீதையின் பங்களிப்பு மிக உன்னதமானது. அனைத்து மொழிகளின் வளர்ச்சியானது அந்தந்த இலக்கியத்தின் பயன்பாட்டினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மொழியில் உள்ள நூல்களின் கருத்துகளைப் பிரசாரம் செய்வதால் அந்தந்த மொழிகளின் எழுச்சியானது வளர்ச்சியடையும். இவ்வாறு இருந்தபோதிலும் சரளமான சம்ஸ்கிருத மொழியில் அமைந்துள்ள இந்த கீதா சாஸ்திரம் “சிந்தாமணியைப் போல்” சகல விதமான நன்மைகளையும் அடையக் காரணமாகி, பிரசாரத்தை அடைந்து, சம்ஸ்கிருதத்தின் எழுச்சிக்கும் உறுதுணையாக உள்ளது.

No comments:

Post a Comment