Friday, June 14, 2013

ஆழ்ந்த கவனம் என்பது ஒரே நாளில் வருவதல்ல

ஒரு துறவி, சீடனைத் தினமும் காட்டிற்குச் சென்று, அங்குள்ளவற்றை அறிந்து வரும்படி அறிவுறுத்தினார். முதலில், அவனுக்கு பயமாக இருந்தது. ஒருவாரத்தில் காட்டு வாழ்வு இயல்பாகிப் போனது.
பயம் தெளிந்ததும், அடர்ந்த காட்டுக்குள் நுழைய ஆர்வம் பிறந்தது. விலங்குகளைப் பார்த்தான். தனது அனுபவத்தை குருவிடம் அன்றாடம் சொல்வான். "காடு பற்றி இன்னும் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. தொடர்ந்து செல்' என்று உத்தரவிட்டார்.
ஒருநாள் சீடன் மரநிழலில் அமர்ந்தான். நீரோடை சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. சுற்றி நிகழ்வதை ஆழ்ந்து கவனித்தான். விலங்குகளின் சப்தம், பறவைகளின் ஒலி காதில் விழுந்தன. இன்னும் கவனித்தான். வண்டுகளின் ரீங்காரம் கேட்டது. பார்த்ததை குருவிடம் தெரிவித்தான்.
""நல்லது! இன்னும் கவனித்து வா!'' என்று தட்டிக் கொடுத்தார்.
ஒருநாள், காட்டில் இனிய அனுபவம் காத்திருந்தது. அன்று பூக்கள் விரியும் மெல்லிய ஓசை கேட்டு தன்னை மறந்தான்.
குருவிடம் ஓடி வந்தான்.
""என்ன! இதுவரை ஏற்படாத புதிய அனுபவம் கிடைத்ததோ!'' என்றார்.
மூச்சிறைத்த படி,""ஆம் குருவே!'' என்று நடந்ததைச் சொன்னான்.
""உனக்கு ஆழ்ந்த கவனம் வந்து விட்டது. நாளை முதல் வேறொரு பாடம்,'' என்றார் குரு.
ஆழ்ந்த கவனம் என்பது ஒரே நாளில் வருவதல்ல. நீண்ட பயிற்சி அதற்கு அவசியம்

No comments:

Post a Comment