Thursday, August 22, 2013

துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே!

*போதுமென்ற மனநிறைவுக்கு நிகரான செல்வம் வேறில்லை. பொறுமைக்குச் சமமான பண்பு வேறில்லை.
*வாழ்வில் துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும், அவை நிலைத்து நிற்பதில்லை. பாலத்தின் அடியில் ஓடும் நீரைப் போல, அவை உன்னை விட்டு ஓடி விடும்.
*துன்பம் நேர்ந்தால் கண்ணீர் மல்க கடவுளை வேண்டு. உன் மனவேதனையைப் போக்கி நிம்மதியை நிச்சயம் அவர் அளிப்பார்.
*உன் உள்ளத்தை கடவுளிடம் திறந்து காட்டி, கடவுளே! என்னை உன் பக்கம் இழுத்துக் கொள்! எனக்கு அமைதியைத் தந்தருள்வாய் என்று அன்றாடம் பிரார்த்தனை செய்.
*ஒரு மனிதனிடம் நம்பிக்கை இருக்குமானால், அந்த நம்பிக்கையே அவனது குறிக்கோளை எட்டச் செய்து விடும்.
*அன்பின்றி கடவுளை அறிய முடியாது. உண்மையான அன்பையே கடவுள் நம்மிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
*சாதிக்க முடியாதது என்று உலகில் எதுவுமில்லை. பக்தியின் மூலமாக எதையும் சாதிக்க முடியும்.
*ஆசை இருக்கும்வரை மனிதனைப் பிறவி தொடர்ந்து கொண்டிருக்கும். கற்கண்டு சாப்பிட வேண்டும் என்ற சிறிய ஆசை கூட பிறவிக்கு காரணமாகி விடும்.
*ஆசைப்படுவதாக இருந்தால் ஆசையற்ற தன்மைக்கு ஆசைப்படு. ஏனெனில் ஆசையே, துன்பத்திற்கான மூலகாரணம்.
*உலகில் இன்பம் என்பது வெறும் வார்த்தையளவில் தான் இருக்கிறதே ஒழிய, உயிர்கள் உண்மையான இன்பத்தை அனுபவிப்பதில்லை.
*சோம்பலால் அன்றாடப்பணிகள் கூட பாதிக்கும். அதனால், விடாமுயற்சியும், மனஉறுதியும் கொண்டிருப்பது மிக அவசியம்.
*பலவிதமான எண்ணங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாதே. ஏனெனில், ஒரு எண்ணத்தை செயல்படுத்துவதே இந்த காலத்தில் கடினமானதாகி விட்டது.
*யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும். நீ எதைச் சரியென்று நினைக்கிறாயோ அதில் துணிவுடன் ஈடுபடு. துணிந்த பின் துயரம் வந்தாலும் அதை உதறி விடு. இவ்விஷயத்தில் கடவுளை மட்டும் துணைக்கு அழைத்துக் கொள்.
*எல்லாம் இந்த மனதைப் பொறுத்தது தான். மனம் தூயதாக இருந்தால் காணும் அனைத்தும் தூய்மையானதாகிவிடும்.
*வேலையில் அக்கறையோடு ஈடுபடு. மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க இதுவே சிறந்த வழி.
*கடவுளின் திருநாமத்தை பக்தியோடு உச்சரித்தால் மனம், உடல் இரண்டுமே தூய்மை பெறுகிறது.
*பகலும் இரவும் சேரும் மாலைநேரம் வழிபாட்டிற்கு உகந்தது. அந்த நேரத்தை அன்றாட வழிபாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்.
*தியானத்தை முறையாகப் பயின்று வந்தால் மனம் ஒருமுகப்படும். பலமணி நேரப் பிரார்த்தனையை விட, இரண்டு நிமிட தியானம் சிறந்தது.
*நமக்கு மனிதப்பிறவி கிடைத்தது பெரும்பேறு. இதை நன்கு பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் கடவுள் மீது முழுமையாக பக்தி செலுத்து.
-சொல்கிறார் குருமாதா

No comments:

Post a Comment