Sunday, May 29, 2011

முழுமையான கவனம் வேண்டும்.

ரொம்ப ரொம்ப கவனம்
 

   ஒரு செயலைச் செய்கிறோம் என்றால், அதில் முழுமையான கவனம் வேண்டும். "ஒன்றைச் செய்து கொண்டிருக்கும் போதே, வெளியில் என்ன வெல்லாம் கெட்டது நடக்கிறது, அதைக் கொஞ்சம் வேடிக்கை பார்ப்போமே!' என்ற எண்ணம் தலைதூக்குவது இயல்பு. இது கூடாது என்கிறது ஆன்மிகம்.துறவி ஒருவர் காட்டு வழியே சென்று கொண்டிருந்தார். வழியில், ஒரு மனிதரின் கால் வெட்டப்பட்டு கிடந்தது. அதில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. யாரோ ஒருவரின் காலை மிருகங்கள் பதம் பார்த்து விட்டதோ என அவர் சிந்தித்த வேளையில், காலை இழந்த மற்றொரு துறவி சற்று தூரத்தில் <உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார். ""ஐயோ! உங்கள் காலை மிருகம் ஏதேனும் கவ்வி விட்டதா?'' என்று பரிதாபத்துடன் விசாரித்தார் முதல் துறவி.""ஆம்!'' என்றவரிடம், ""சிங்கமா, புலியா?'' என்று கேட்டார் முதல்துறவி.""இரண்டும் இல்லை, மனம் என்னும் விலங்கு,'' என்ற காலிழந்த துறவியைக் கேள்விக்குறியுடன் நோக்கினார் முதல் துறவி.""ஆம் துறவியே! நான் இங்கே தவத்தில் ஈடுபட்டிருந்தேன். கடும் தவம்...நேற்று, தற்செயலாகக் கண் திறந்த போது, என் எதிரே ஒரு பெண் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள். அவள் அப்சரஸ் போலக் காணப்பட்டாள். செடிகளின் மறைவில் நின்ற அவளை எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆசை காரணமாக, நான் அவளை எட்டி எட்டி பார்த்தேன். திடீரென என் மனசாட்சி  பேசியது.""தபஸ்வியான உனக்கு இப்படி ஒரு ஆசை வரலாமா? போ! உன் காலை வெட்டிக் கொள், கால் இருப்பதால் தானே அருகில் போய் அவளைப் பார்க்கும் ஆசை வந்தது,'' என்றது. உடனே என் காலை வெட்டி எறிந்து விட்டேன்,'' என்றார். இந்தக் கதையில் வருவது போல, பணி செய்பவர்கள், மாணவர்கள் ஆகியோர் உயர்ந்த லட்சியத்தை நோக்கி நடைபோடும் போது, வெளிக்கவர்ச்சிகள் இழுக்கத்தான் செய்யும். மனதைக் கட்டுப்படுத்தி, அதிலிருந்து மீண்டால் தான் லட்சியஇலக்கை எட்ட முடியும்.

தாமரை இலை தண்ணீர் !


காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தான் ஒரு மன்னன். அவன் கண்ணில் அழகான மான் ஒன்று பட்டது. துள்ளிச் செல்லும் புள்ளிமானைத் துரத்திச் சென்றான். மன்னனின் பரிவாரங்கள் மன்னனைப் பின்தொடர முடியாமல் போனதால், பாதி வழியிலேயே நின்று விட்டனர். யாரும் இல்லாமல் தனியாளாக மானைப் பின்தொடர்ந்தான்.
 மான் அவன் கண்களில் இருந்து தப்பித்தது. கண் மண் தெரியாமல் ஓடிய மன்னன், கிணற்றில் விழுந்தான். நல்லவேளையாக பாதிக்கிணற்றில் வளர்ந்த மரத்தின் வேரைப்பற்றிக் கொண்டு தொங்கினான். மறுநாள் பொழுது புலர்ந்தது. வழிப்போக்கராக வந்த சந்நியாசி ஒருவர், பாழுங்கிணற்றில் இருந்து எழுந்த முனகல் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தார்.  மன்னனைக் கண்டு இரக்கம் கொண்டார். கயிறு ஒன்றினை மன்னனிடம் கொடுத்து அவனை மேலே ஏற்றிவிட முயற்சித்தார்.  ""பயப்படாதே! கயிற்றினை இறுகப்பிடித்துக் கொள். மேலே வந்துவிடலாம்!'' என்றார் .
 வேரை விட்டு விட்டு கயிறைப் பற்றிக் கொள்ள வேண்டியது தானே! ஆனால், மன்னன் யோசனை செய்து கொண்டிருந்தான். ஒருவேளை இந்த கயிறு இற்றுப்போயிருந்தால் உள்ளே விழுந்து விடுவோமே என்று! இதைத்தான் நாமும் இன்று செய்து கொண்டிருக்கிறோம். நாம் இவ்வுலகில் "சம்சாரம்'    (உலகவாழ்வு) என்னும் வேரைப் பற்றிக் கொண்டு நிற்கிறோம். மகான்கள், ஞானிகள் உலக வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நம்மை ஆன்மிகம் என்னும் கயிறைப் பற்றிக் கொண்டு மேலே வரச் சொன்னால், அதன் அருமையை உணராமல் யோசித்துக் கொண்டு நிற்கிறோம்.  சொந்த பந்தங்கள், குடும்பம், நண்பர்களிடம் அன்பு காட்ட வேண்டியது தான்! அதற்காக அதிலேயே லயித்துப் போகாதீர்கள்! பணமும் ஓரளவுக்கு தான்! அதை சம்பாதிப்பதிலேயே காலத்தை ஓட்டி என்ன பலன் காணப்போகிறோம்! எதுவுமே நம்முடன் வரப்போவதில்லை. நாம் செய்யும் நற்செயல்களைத் தவிர! எனவே உறவும் வேண்டும், அதற்காக ஒட்டவும் செய்யக்கூடாது. தாமரை இலை தண்ணீர் போல வாழப்பழகித் தரும் ஆன்மிகத்தை இனியேனும் பற்றிக்கொள்வோமே!

உடல் அமைப்பில் சிதம்பரம் சன்னதி


மனிதனின் உருவ அமைப்பிற்கும், சிதம்பரத்திலுள்ள நடராஜர் சன்னதிக்கும் ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தில் "நமசிவாய' மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து600 தங்க ஓடுகள் உள்ளன. மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கை இது. இங்கு அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்பின் எண்ணிக்கையை ஒத்திருக்கிறது.  கோயிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கிறது. ஐந்தெழுத்து மந்திரமான "சிவாயநம' என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தில் ஐந்து படிகள் உள்ளன.  64 கலைகளின் அடிப்படையில் 64 சாத்துமரங்கள் இருக்கின்றன, 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், பஞ்சபூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன

சிதம்பரத்தை "சித்+அம்பரம்' என்று பிரிப்பர். சித்-அறிவு. அம்பரம்-வெட்டவெளி. "மனிதா! உன்னிடம் ஒன்றுமே இல்லை' என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள்.நடராஜர் சன்னதியின் வலது பக்கத்தில் ஒரு சிறு வாசல் உள்ளது. இதனுள் தங்கத்தினால் ஆன வில்வ மாலை தொங்க விடப்பட்டுள்ளது.  பூஜையின் போது இந்த திரை விலக்கப்பட்டு ஆரத்தி காட்டப்படுகிறது. "அங்கே என்ன இருக்கிறது?' என்று குனிந்து பார்த்தால், ஆகாயம் தான் தெரியும். இறைவன் ஆகாயம் போல் பரந்து விரிந்தவன். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. இறைவனும் முதலும் முடிவும் இல்லாதவன் என்பதை இது காட்டுகிறது. சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்ரத்தையும், சிவனுக்குரிய சிவசக்ரத்தையும் இணைத்து பிரதிஷ்டை செய்துள்ளதாகவும் தகவல் உண்டு.  இந்த சக்ரத்தில் நடராஜப்பெருமான் ஐக்கியமாகி, தன் ஆனந்த நடனத்தினால் உலகை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

நெய் அபிஷேக மகிமை

நெய் அபிஷேக மகிமை
 
  
மனித இதயத்தை தசைநார்கள் சூழ்ந்துள்ளதைப் போல, நார்களால் சூழப்பட்ட தேங்காயைப் பக்தன் தேர்ந்தெடுக்கிறான். அவனது இதயத்தில் உள்ள களங்கமான எண்ணங்களை தேங்காயில் உள்ள நீருக்கு ஒப்பிடலாம். தேங்காயில் துவாரமிட்டு அதை வெளியேற்றி, நவநீதம் என்னும் சுத்தமான எண்ணங்களை பசு நெய்யாக உள்ளே ஊற்றுகிறான். தேங்காயின் துளையை அடைத்து ஐயப்பனின் திருவடியை மனதில் நினைத்து தலையில் வைக்கிறான். பக்தியுடன் சரணம் கூறி சுமந்து செல்கிறான். நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்கிறான். அதாவது, தனது உள்ளத்தில் உள்ள ஆழ்ந்த பக்தியை ஐயப்பனுக்கு காணிக்கையாக்குகிறான். இதன் காரணமாக ஜென்ம சாபல்யம் பெற்ற ஆனந்தம் அடைகிறான்.

துளசிமணி மாலை

துளசிமணி மாலை
 
   தெய்வ வழிபாட்டுக்குரிய பல  தாவரங்களில் ஒன்று "துளசி'. ஸ்ரீ மஹா விஷ்ணுவின் பாதங்களில் சேவை செய்யும் பதிவிரதையான தேவிக்கும் "துளசி' என்று பெயர். துளசிக்கு "விஷ்ணுப்பிரியா' என்ற பெயரும் உள்ளது. துளசியை சுத்தமில்லாமல், குளிக்காமல் தொடக்கூடாது. சுத்தமான துளசிச் செடியில் உள்ள கட்டையிலிருந்து செய்யப்பட்ட துளசி மணிகளைத்தான் மாலையாக மணிகண்டன் அணிந்து துளசி மணிமார்பனாக அமர்ந்துள்ளார். பவித்ரமான பக்தியுடன் இருக்கவே துளசி மாலை அணிந்து சபரிமலை செல்லும் பழக்கம் ஏற்பட்டது. ஐயப்பன் விஷ்ணுவின் அம்சம் ஆவார். அவரது தாயே மோகினியாக மாறிய விஷ்ணு தான். தாயைப் போல பிள்ளை என்பார்கள். அதுபோல், விஷ்ணுவுக்குப் பிரியமான துளசி, ஐயப்பனுக்கும் பிரியமாயிற்று. 

சின்முத்திரை தத்துவம்

சின்முத்திரை தத்துவம்
 

சபரிமலையில் ஆனந்த சொரூபன் ஐயப்பன் "யோக பாதாசனத்தில்' வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவர் காண்பிக்கும் மூன்று விரல்களையும் சத், சித், ஆனந்தம் அதாவது சச்சிதானந்தம் என்பர். ""நானே சத்தியமும் ஆனந்தமும் ஆவேன். தெய்வீக ஆனந்தத்தில் தினமும் லயித்திருக்றேன். என்னை தரிசிக்க வருபவர்களுக்கு அவருடைய சகல துன்பங்களிலிருந்தும் மோட்சம் தரும் ஆத்ம ஞானத்தையும், மூன்று காலங்களிலும் சுகம், ஐஸ்வர்யம், சாந்தி இவை அனைத்தையும் வழங்கி அருள்கிறேன்,'' என்கிறார். இன்னொரு தத்துவமும் உண்டு. மனிதன் ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை கைவிட்டால் என்னை அடையலாம் என்றும் அவர் இந்தக் குறிப்பால் உணர்த்துகிறார்.

கெட்டவர்களை கண்டால் ஒதுங்கு !

யானை ஆற்றில் குளித்துவிட்டு, மறுகரைக்கு செல்லத் தயாரானது. மறுகரையில் பன்றி ஒன்று சேற்றில் விளையாடிக் கொண்டிருந்தது. சுத்தமாக இருக்கும் யானையைக் கண்ட பன்றிக்கு பொறாமை உண்டானது. யானையைச் சீண்டிப் பார்க்க முடிவெடுத்தது.ஆற்றின் குறுக்கே இருக்கும் பாலம் மிகவும் குறுகியது. அதன் வழியாக யானையின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தது. யானை பாலத்திற்குள் நுழைந்து நடுப்பகுதிக்கு வந்து விட்டது. பன்றி உடனே யானையை நோக்கி ஓடியது. ஒடுக்கமான பாலம் என்பதால், எப்படியும் தன் உடம்பில் இருக்கும் சேற்றினை யானை மீது தற்செயலாக மோதுவது போல பூசிவிடலாம் என கணக்குப் போட்டது. சுதாரித்துக் கொண்ட யானையோ, சுவர் ஓரமாக நன்றாக ஒதுங்கி நின்று பன்றிக்கு வழிவிட்டது.  பன்றி ஏமாந்து போனது. இனியும் வம்புக்குப் போனால் ஆபத்தாகி விடுமென பயந்து அப்படியே சென்று விட்டது. மறுகரையில் நின்ற தன் நண்பனான மற்றொரு பன்றியிடம் ""நண்பா! பார்த்தாயா! பயந்தாங்கொள்ளி யானை! கோயில் பிரசாதம் சாப்பிட்டு கொழுத்து இருப்பது தான் மிச்சம்! சிறியவனான என்னைக் கூட பார்த்து பயந்துட்டு போறதைப் பாரு!'' என்று சொல்லி சிரித்தது. அதைக் கேட்ட நண்பன், ""ஏ முட்டாள்! அப்படி எண்ணாதே! யானை ஆற்றில் குளித்து விட்டுப் போகிறது. நீயோ சேற்றில் குளித்துவிட்டு அழுக்கோடு திரிகிறாய். ஒருவேளை யானையின் காலில் நீ சிக்கியிருந்தால் ஒரே மிதியில் உன்உயிர் போய் விடும். ஆனாலும், அந்த யானை உன்னை மிதித்து தன் காலைச் சேறாக்கிக் கொள்ள விரும்பவில்லை. அதனால் ஒதுங்கிப் போனது என்பதைப் புரிந்து கொள்,'' என்றது. உலகில் நல்லவர்களும், கெட்டவர்களும் இருக்கிறார்கள். கெட்டவர்களைப் பார்த்தால் நல்லவர்கள் அவர்களுடன் மோத முயலாமல், ஒதுங்கிப் போவதே நல்லது. பன்றி மேல் மோதினால் மோதிய வருக்கே நஷ்டம்! எனவே, கெட்டவர்களைக் கண்டால் ஒதுங்கிப் போய்விடுங்கள்.

புறஞ்சொல்லல் ஆகாது பாப்பா

காமாட்சிக்கு தன் வீட்டில் நடக்கும் விஷயங்களை விட பிறர் வீட்டு விஷயங்களைப் பற்றி விவாதிப்பதில் தான் ஆசை அதிகம். பக்கத்து வீட்டு பெண்களை அழைத்து, ""அடியே! பக்கத்து வீட்டு பங்கஜத்தைப் பார்த்தாயா! அவள் தன் புருஷனை மதிப்பதே இல்லை. நேற்று கூட அவரை எதிர்த்துப் பேச, அந்த மனிதர் கூனிக்குறுகிப் போனார். நான் வேறு அதைப் பார்த்து தொலைத்து விட்டேன்! அந்த மனிதர் என் முகத்தைப் பார்க்கவே வெட்கப்பட்டு, ஆபீசுக்கே பின்வாசல் வழியாக ஓடுகிறார்,'' என்று சொல்லி சிரித்தாள். மற்றவர்களும் அவளோடு இணைந்து சிரித்தனர்.
ஒருநாள், காமாட்சியின் மகள் அம்புஜம் ஜன்னலோரமாக நின்றாள். அப்போது, ஒரு இளைஞன் விசிலடித்தபடியே அந்தப் பக்கமாக சைக்கிளில் வந்தான். அவன் அம்புஜத்தைப் பார்த்து ஏதோ சொன்னான். இதை பங்கஜம் பார்த்து விட்டாள். தன்னைப் பற்றி பிற பெண்களிடம் போட்டுக்கொடுத்த காமாட்சியைப் பழிவாங்க சந்தர்ப்பமாயிற்று. அம்புஜத்துக்கும், அந்த இளைஞனுக்கும் காதல் என்று கதை கட்டி விட்டாள். ஊரில் அது வேகமாகப் பரவி விட்டது.
அன்று பார்த்து அவளைப் பெண் பார்க்க வெளியூர் ஆட்கள் வருவதாக இருந்தது. அவர்கள் ஊர் எல்லைக்குள் நுழையும் போதே, ஊரார் சிலர் தாங்கள் கேள்விப்பட்டதைச் சொல்ல அவர்கள் அப்படியே திரும்பி விட்டனர்.  அம்புஜத்தின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. உண்மையில், அவளுக்கும் அந்த இளைஞனுக்கும் காதல் இல்லை. காமாட்சியின் வீட்டு மாடியில் இருக்கும் பெண்ணுக்கும் அவனுக்கும் தான் காதல். அவன் மாடியில் நிற்பவளைப் பார்த்து ஏதோ சொல்ல, பங்கஜம் இதைத் தவறாகச்  சித்தரித்து விட்டாள். காமாட்சிக்கு அப்போது தான் <உரைத்தது. பக்கத்து வீட்டு கணவன், மனைவி சண்டையை ஊராரிடம் பெரிதுபடுத்தப் போய், தன் மகள் வாழ்வு பாழானதே என வருந்தினாள். பிறரைப் பற்றி புறணி பேசுவதை இனியேனும் குறைத்துக்  கொள்வீர்களா!

திரிபுரசுந்தரி என்றால் என்ன?


"திரிபுரம்' என்றால் "மூன்று உலகங்கள்'. தேவலோகம், பூலோகம், பாதாளலோகம் என்பவை அவை. "சுந்தரி' என்றால் "அழகி'. மூன்று உலகங்களிலும் சிறப்பான அழகியாக உள்ள பார்வதிதேவி என்பதே இதன் பொருள். அவளை ராஜராஜேஸ்வரி என்றும் அழைப்பர். இதற்கு "உலகம் முழுவதையும் ஆட்சி செய்யும் அதிகாரம் உள்ளவள்' என்று பொருள். அவளை "விசாலாட்சி' என்றும், "உலகாம்பிகை' என்றும் அழைப்பர். இதனால் தான். "பரந்து விரிந்த உலகை சொந்தமாகக் கொண்டவள்' என்று இதற்குப் பொருள்
பார்த்தாலும் பலன் உண்டு!
 
    ஐயப்பனுக்கு நடக்கும் பூஜைகளில் படிபூஜைக்கு சிறப்பிடம் உண்டு. இதற்கு நிலவிளக்கு, கற்பூரம், பத்தி, பூமாலை, பட்டுவஸ்திரம், தேங்காய், தந்திரி, மேல்சாந்தி, உதவியாளர் களுக்கு புது வஸ்திரங்கள் தர வேண்டும். நினைத்தது நினைத்தபடி நிறைவேற இப்பூஜையைப் செய்கின்றனர். அதிகச் செலவாகும் இப்பூஜையைப் பார்த்தவர்களுக்கும் நற்பலன் உண்டாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பூஜை நடந்து வந்தது. தற்போது மண்டல பூஜை, மகரவிளக்கு காலம் தவிர, நடைதிறக்கப்படும் மாத பூஜை நாட்களில் நடத்தப்படுகிறது.

ஐயப்பனுக்கு எளிய உணவு

சபரிமலை தர்மசாஸ்தாவான ஐயப்பன் கோயில் நடை திறக்கும் நாட்களில் அவருக்கு செய்யப்படும் பூஜை, எளிய உணவு வகைகளைத் தெரிந்து கொள்வோமா! காலை 4மணிக்கு நடைதிறக்கப்பட்டதும், பிரதான புரோகிதரான தந்திரி முதலில் அபிஷேகம் செய்வார். பின்னர் கணபதிஹோமம் நடக்கும். கணபதி, நாகராஜாவுக்கு பாயாசம் படைக்கப்படும். பிரசன்னபூஜை முடிந்தபின் தீபாராதனை நடக்கும். மதியம் 12மணிவரை சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். பின்னர் கோயில் சுத்தம் செய்யப்படும். 25 கலசங்களைக் கொண்டு தந்திரி மத்தியான பூஜை செய்வார். அரவணை பாயாசம் படைக்கப்பட்டு நடை சாத்தப்படும். மாலை 4மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு புஷ்பாபிஷேகம், தீபாராதனை நடக்கும். இரவு 10மணிக்கு நெய் அப்பமும், பானகமும் ஐயப்ப சுவாமிக்கு படைக்கப்படும். மீண்டும் கோயில் சுத்தம் செய்யப்பட்டு நடை சாத்தப்படும். இந்த சமயத்தில் ஐயப்பசுவாமி உறங்கச் செல்வதாக ஐதீகம். அப்போது உலகப்புகழ்பெற்ற பாடலான "ஹரிவராசனம்' பாடுவர்.

உலகின் முதல் வழிபாடு

உலகின் முதல் வழிபாடு
    காலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு கீழ்வானில் உதயமாகும் இளஞ்சூரியனை வழிபாடு செய்வது நம் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் ஒன்று. இதனை "சூரிய நமஸ்காரம்' என்று சிறப்பாக குறிப்பிடுவர். இயற்கை வழிபாட்டில் சூரியவழிபாடே முதல் வழிபாடாகும். காட்டில் அலைந்து திரிந்த மனிதன் இருளைக் கண்டு பயந்தான். இரவில் ஒவ்வொரு கணப்பொழுதும் யுகமாய் கழிந்தது. பொழுது புலர்ந்த வேளையில் செங்கதிரோன் வானில் உதயமாகி ஜொலித்தது. ஒளியைக் கண்ட மனிதன் மகிழ்ச்சிப்பெருக்கில் வணங்கி நின்றான். இதுவே சூரியவழிபாட்டின் தொடக்கமாகும்.


ஆரோக்கியம் தரும் ஆதித்தன்
 
   "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது பழமொழி. உலகில் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் உடல் ஆரோக்கியம் இல்லாவிட்டால் செல்வத்தால் பயனில்லை. சுவரை வைத்துத் தானே சித்திரம் என்றும்கூட சொல்வதுண்டு. அதனால் மனிதவாழ்விற்கு மன, உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியம். இதற்குரிய தெய்வமாக சூரியன் இருக்கிறார். இவருக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் செந்தாமரை மலரிட்டு வணங்கினால் ஆரோக்கியம் உண்டாகும். "கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யாதே' என்பது சூரியனின் பெருமையை எதிர்மறையாகக் கூறுவதாகும். இப்பழமொழி "கண் பெற்ற பயனே சூரியனைக் கண்டு மகிழ்வதற்கு' என்று குறிப்பிடுகிறது.

அனுமனுக்கு உபதேசித்த மந்திரம்

சொல்லின் செல்வன் என்று அனுமனுக்கு சிறப்பு பெயர் உண்டு. ஆனால், அந்த அனுமனுக்கு பாடம் நடத்திய பெருமை சூரியனைச் சேரும். ஒருமுறை அனுமன் சூரியனைப் பழம் என்று நினைத்து வானமண்டலத்திற்கு தாவினார். சூரியனின் இயக்கம் தடைபட்டு நின்றது. இதனால் உலகமே ஒருகணம் அசையாமல் நின்று போனது. விஷயத்தை அறிந்த இந்திரன், ஓடோடிவந்து அனுமனின் முகத்தில் தன் வஜ்ராயுதத்தால் ஓங்கியடித்தான். மயங்கிய குழந்தை அனுமனைத் தாங்கிப்பிடித்தார் வாயுபகவான். (வாயுவின் மகனே அனுமன்). கோபமான வாயுவை இந்திரனும், சூரியனும் சமாதானப்படுத்தினர். தன் தவறுக்கு பரிகாரமாக சூரியன்அனுமனுக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்ததுடன், இலக்கணங்களையும் கற்றுத் தந்தார். அன்று முதல் அனுமன் "சர்வவியாகரண பண்டிதன்' என்னும் சிறப்புப் பெயர் பெற்றார். "வியாகரணம்' என்றால் "இலக்கணம்'.

சல்லடையிலும் தண்ணீர் நிரப்பலாம்

சல்லடையிலும் தண்ணீர் நிரப்பலாம்
 
    சல்லடையில் தண்ணீர் நிரப்ப முடியுமா என்றால்...""அதெப்படி! சல்லடை ஓட்டையாக இருக்கும். அதில் தண்ணீர் ஊற்ற ஊற்ற , ஓட்டை வழியாக வழிந்து விடுமே,'' என்று தான் சொல்வோம். ஆனால், மகான்களிடம் கேட்டால் சல்லடையில் தண்ணீர் நிரப்ப முடியும் என்பார்கள். எப்படி தெரியுமா? தண்ணீர் உள்ள பெரிய பாத்திரத்தில் சல்லடையை மூழ்க வைத்து பாருங்கள். சல்லடையில் தண்ணீர் நிரம்பி இருக்கும். அது போலத்தான் இறைபக்தியும்.
நமது மனம் சல்லடை மாதிரி. அதில், இறை பக்தியை நிரப்புவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. மனதிலுள்ள ஆசைகள், எண்ணச்சிதறல்கள் போன்ற துவாரங்களின் வழியே அது வழிந்து விடும். இறைவன் என்கிற பெரிய தண்ணீர் உள்ள பாத்திரத்தில் மனம் என்கிற சல்லடையை மூழ்க வைத்து விட்டால் மனதில் இறை பக்தி தானாக நிரம்பி விடும்

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?

சிலர் ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல் களுக்காக இதை எழுதுகின்றனர். உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும். "ராம' என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி "மரா' என்றே முதலில் உச்சரித்தார். "மரா' என்றாலும், "ராம' என்றாலும் "பாவங்களைப் போக்கடிப்பது' என்று பொருள். ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். "ரமா' என்று அவளுக்கு பெயருண்டு. "ரமா' என்றால் "லட்சுமி'. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். ராமன் என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். "ரா' என்றால் "இல்லை' "மன்' என்றால் "தலைவன்'. "இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை' என்பது இதன் பொருள்.

சுருக்கமாக எழுதுவோமே!

சுருக்கமாக எழுதப்பட்ட நூல்களுக்கு பெருமை அதிகம். சமஸ்கிருதத்தில் சுருக்கமாக அமைந்த நூல் பிரம சூத்திரம். தமிழில் திருக்குறள், சிவஞான போதம். ஐம்பது வார்த்தைகளைச் சொல்லி விளக்குவதைக் காட்டிலும், ஐந்தே வார்த்தைகளால் விளக்குபவனே அறிஞன் என்பதன் அடிப்படையில் இந்த நூல்கள் எழுதப்பட்டன. இவற்றின் பெருமை பற்றி வாரியாரிடம் கேட்ட போது என்ன சொன்னார் தெரியுமா? ""இரண்டு முத்துமாலைகள்... ஒவ்வொன்றிலும் ஆயிரம் முத்துக்கள் கோர்க்கப்பட்டிருந்தன. முத்துக்கள் அசைந்தால் ஒளிவிடும், அழகாக இருக்கும் என்று கருதி, ஒருவன் ஒவ்வொரு முத்தாக அசைத்துப் பார்த்தான். இன்னொருவன் முத்துக்களின் ஊடேயுள்ள நூலைப் பிடித்து அசைத்தான். எல்லா முத்துக்களும் அசைந்து ஒளியைச் சிந்தின. இந்த இருவரில் ஒவ்வொரு முத்தாக அசைத்துப் பார்த்தவனை விட, கயிறைப் பிடித்து அசைத்தவனே புத்திசாலி. இதுபோல, சுருக்கமாக எழுதப்பட்ட நூல்களே உயர்ந்தவை,'' என்றார்

அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை'

"அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை' என்ற வள்ளுவரின் வரிக்கு சிறுவிளக்கம் கேளுங்கள்.
மதுரையில் இருந்து ஒரு பணக்காரர் சென்னை கிளம்பினார். செல்லும் வழியில் பசி...ஒரு ஸ்டேஷனில் ரயில் நிற்க சாப்பிட்டார். சட்டைப் பைக்குள் கையை விட்டார். மணிபர்ஸைக் காணவில்லை. ஏடிஏம் கார்டு உட்பட ஏதும் இப்போது கையில் இல்லை. கடைக்காரனுக்கு இவர் பணக்காரரா ஏழையா என்பதெல்லாம் எப்படி தெரியும்? "என்னய்யா சாப்பிட்டு விட்டு நடிக்கிறீரா?' என்று கேவலமாக பேச ஆரம்பித்து விட்டான். ஆக, மதுரையிலுள்ள பணம் இப்போது இவருக்கு உதவவில்லை. இதுபோல் தான், பூலோகத்தில் அருள் என்னும் டெபாசிட்டை போட்டு வைத்தால் தான், அதற்குரிய வட்டி மேல் லோகத்தில் கிடைக்கும். அதற்கு தானம், நல்வார்த்தை பேசுதல், இயன்ற உதவி செய்தல் ஆகிய நற்செயல்களையெல்லாம் செய்திருக்க வேண்டும். கோயிலுக்கு மாதம் ஒருநாளாவது போய், சுவாமியை வணங்கியிருக்க வேண்டும். இறைநாமத்தை ஜெபித்திருக்க வேண்டும். செய்வோமா! இன்று முதலாவது!

திருமந்திரம்

பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக இடம்பெற்றுள்ள நூல் திருமந்திரம். இந்நூலை எழுதியவர் திருமூலர். இவர் நாயன்மார்களில் ஒருவராகவும், சித்தர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இதில் 3000 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ் இலக்கிய வரிசையில், சைவ சமயக்கருத்துக்களை விளக்கமாக எடுத்துக்கூறும் முதல் நூல் இதுவே. இந்நூலுக்கு திருமந்திரமாலை, தமிழ் மூவாயிரம் என்ற பெயர்களும் உண்டு. இதில் தந்திரங்கள் என்னும் ஒன்பது உட்பிரிவுகள் உள்ளன. ""ஐந்து கரத்தனை யானை முகத்தனை'' என்று தொடங்கும் பாடலே கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்துள்ளது. இதில் "சைவ சித்தாந்தம்' என்னும் தொடர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கூடு விட்டு கூடு பாயும் திறம் படைத்த திருமூலர் ஒரு பசுவின் துன்பத்தைப் போக்குவதற்காக மாடு மேய்க்கும் இடையனின் உடம்பில் புகுந்து கொண்டதாகவும், ஆண்டுக்கொரு பாடல் வீதம் 3000 ஆண்டுகள் வாழ்ந்து திருமந்திரத்தை எழுதியதாகவும் கூறுவர். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்', "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்', "அன்பே சிவம்' " என்னை நன்றாக இறைவன் படைத்தனன்' "நடமாடக்கோயில் நம்பர்க்கொன்று கொடுங்கள் (நடமாடும் கோயிலான மக்களுக்கு உதவுங்கள்)' ஆகிய புகழ்பெற்ற பாடலடிகள் திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ளன

பொன்னும் மண்ணும் ஒன்றே

அப்பர் (திருநாவுக்கரசர்) சுவாமிகளின் முக்தி தலம் நன்னிலம் அருகிலுள்ள திருப்புகலூர். இங்குள்ள இறைவன் அக்னீஸ்வரர். அம்பிகை குழலியம்மை என்று அழைக்கப்படுகிறார். இறைவனின் திருமேனி சற்றே சாய்ந்திருப்பதால் "கோணப்பிரான்' என்ற பெயரும் உண்டு. அக்னி தீர்த்தமும், அக்னி பகவானுக்கும் தனி சந்நிதியும் இங்குள்ளது. இறைவனுக்கு மலர்மாலை கட்டிக் கொடுக்கும் தொண்டினைச் செய்து சிவனருள் பெற்ற முருகநாயனாரின் ஊரும் இதுவே. அப்பர் இவ்வூருக்கு வந்து உழவாரப்பணி செய்து கொண்டிருந்தார். பிரகாரத்தை சுத்தம் செய்யும்போது, ஓரிடத்தில் பொன்னும் மணியும் கிடந்தது. துறவியான அவருக்கு அந்தப் பொன்னும் மண்ணும் ஒன்றாகவே தெரிந்தது. அதனால், அவற்றை ஒதுக்கித் தள்ளி குப்பையில் இட்டார். பணத்தை விட பரமனே உயர்ந்தவன் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

கோயில்களில்எதை பலியிட வேண்டும்?

எதை பலியிட வேண்டும்?
 
    உமையவளாகிய பராசக்தியை லோகமாதா என்று வழிபடுகிறோம். அவளே கோயில்களில் இறைவனோடு சேர்ந்து அம்மையப்பராய் அருள்பாலிக்கிறாள். இறைவனின் ஐந்து தொழில்களில் ஒன்றான அருளல் என்னும் அருட்சக்தியே அம்பிகையாக உருவெடுத்து அருள்புரிவதாக ஆகமங்கள் கூறுகின்றன. அதேநேரம், கருணையே உருவான அம்பிகை உக்கிர ரூபமாகி அசுரசக்திகளை அழிக்கும் போது "காளி' என்று பெயர் பெறுகிறாள். ஆடு, மாடு போன்ற உயிர்களை அவளுக்கு பலியிடுகிறார்கள். ஆனால், உண்மையில் காளி விரும்பும் பலி எவை தெரியுமா? "வாமாசாரம்' என்று சாஸ்திரத்தின் மூலம் பழங்காலத்தில் காளிக்கு பலியிடும் வழக்கம் இருந்ததை அறியமுடிகிறது. மனித மனதில் ஆறு வகையான பகைவர்கள் இருக்கிறார்கள். அப்பகைவர்களை வெல்லும் சக்தியை அருள்பவள் காளியே. காமம், கோபம், கருமித்தனம்(லோபம்), மோகம், ஆணவம்(மதம்), பொறாமை(மாச்சர்யம்) என்பவையே அந்த தீயகுணங்களின் குறியீடாகவே வெள்ளாடு, எருமை, பூனை, செம்மறியாடு, மனிதன், ஒட்டகம் ஆகியவற்றை அக்காலத்தில் பலியிட்டு வழிபட்டனர். ஆனால், காலப்போக்கில் இவ்வழக்கம் குறைந்து ஆடு, கோழி பலியிடப்படுகிறது. மற்ற மிருகங்கள் குறைந்த அளவில் பலியிடப்படுகின்றன. பலியிடுதலில் இருக்கும் உண்மையை உணராமல், வெறும் அடையாளத்தை மட்டும் பின்பற்றுவது முறையானதல்ல. கருணையே வடிவமான காளியிடம் நம்மிடம் இருக்கும் வேண்டாத தீயகுணங்களை பலியிட்டு மனத்தூய்மை பெறுவதே சிறப்பாகும்.

கடவுள் இல்லாத இடத்தை காட்டுங்கள்

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சை ஒரு அரண்மனையில் எழுந்தது. மன்னன் அவையோரிடம்,""கடவுள் இருக்குமிடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னால் என்னிடமுள்ள இந்த அரியவகை மாம்பழத்தைத் தருவேன்,'' என்று அறிவித்தான். அவையில் இருந்தவர்கள் சூரியமண்டலம், சந்திரமண்டலம், தேவலோகம், வைகுண்டம், கைலாயம் என்றெல்லாம் ஆய்வு செய்து பேசினார்கள். இதை அமைச்சரின் மகளான சிறுமி கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
""அரசே! கடவுள் இருக்குமிடத்தைக் காட்டினால் ஒரு பழம் தருவதாக அறிவித்தீர்கள். அவர் எல்லாப் பொருள்களிலும் இருக்கிறார். அவர் இல்லாத இடத்தை நீங்கள் காட்டுங்கள், நான் 12 மாம்பழங்களை உங்களுக்குத் தருகிறேன்,'' என்றாள். மன்னர் மட்டுமல்ல, அவையே அடங்கி விட்டது.

4 வேதங்கள்

வேதங்களை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்காகப் பிரித்துள்ளனர். "ரிக்' என்றால் "துதித்தல்'. முதல் வேதமான ரிக்வேதம் இந்திரன், வருணன் ஆகிய தேவர்களைத் துதித்துப் போற்றுகிறது. "யஜ்' என்றால் "வழிபடுதல்' . வேள்வி செய்து வழிபடும் முறையை யஜுர் வேதம் குறிப்பிடுகிறது. "ஸாம்' என்றால் "சந்தோஷப்படுத்துதல்' அல்லது "சமாதானப்படுத்துதல்'. இனிமையோடு பாடலாகப் படிக்கும் விதத்தில் இந்த வேதம் அமைந்துள்ளது. ரிக்வேதத்தில் உள்ள பெரும்பாலான துதிகள் சாமவேதத்தில் கானமாக (பாடல்) அமைந்துள்ளன. பிற்காலத்தில் சப்தஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான சங்கீதத்திற்கு மூலமாகத் திகழ்வது சாமகானம் தான். இந்த வேதத்தைச் சிறப்பிக்கும் வகையில் பலகுறிப்புகள் உள்ளன. பகவத்கீதையில் கிருஷ்ணர், ""வேதங்களில் நான் சாமவேதமாக இருக்கிறேன்,'' என்கிறார். லலிதா சகஸ்ர நாமம் அம்பிகையை "சாமகானப் பிரியா' என்று போற்றுகிறது. சியாமா சாஸ்திரிகள் மதுரை மீனாட்சியம்மனை "சாமகான வினோதினி' என்று சிறப்பிக்கிறார். சிவனுக்குரிய அஷ்டோத்திரம், "சாமகானப் பிரியாய நம:' என்று குறிப்பிடுகிறது. நான்காவது வேதம் அதர்வனமாகும். "அதர்வன்' என்பதற்கு "அக்னியையும், சோமனையும் வழிபடும் மதகுரு' என்று பொருள். அதர்வன மகரிஷி மூலம் இவ்வுலகிற்கு வந்த வேதம் என்பதால் இப்பெயர். ஆபத்து மற்றும் எதிரிகளிடம் இருந்து காக்கும் மந்திரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
கோபத்தை ஏன் படைத்தான்?
வேண்டாத குணம் என்று கோபத்தைச் சொல்கிறோம். "தீ போன்ற கோபம் நம்மிடம் மறைந்துபோகட்டும்' என்ற பொருளில், அவ்வை "ஆறுவது சினம்' என்று நமக்கு வழிகாட்டுகிறாள். ஆனால், அக்கோபத்தையும் துதிக்கிறது ரிக்வேதம். கோபத்தை தேவதையாக்கி இரு சூக்த மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் சூக்தத்தில், ""பலசாலிகள் எல்லாரையும் விட மிகுந்த பலசாலியான கோபமே! இங்கு வருவாயாக! நண்பனுக்காகத் தவத்தினால் எங்களுடைய எதிரிகளை விரட்டி விடுவாயாக. எல்லா எதிரிகளையும், அரக்கர்களையும் கொல்லும் கோபமே! எங்களுக்கு எல்லாச் செல்வங்களையும் கொண்டு வரவேண்டும்'' என்கிறது.
மற்றொரு சூக்தம், ""எல்லாவற்றையும் வெல்லும் கோபமே! தீயைப் போல ஜொலித்துக் கொண்டிருக்கும் உன்னை எங்களுடைய படைத்தலைவனாக இருக்கும்படி அழைக்கிறோம். எங்களுடைய எதிரிகளைக் கொன்று வீழ்த்த வேண்டும். அவர்களுடைய செல்வங்களை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுப்பாயாக. உன்னுடைய வலிமையால் எங்களின் எதிரிகளை விரட்ட வேண்டும்,'' என கோபத்தைப் துதிக்கிறது.
கடவுள் ஏன் கோபத்தை தந்திருக்கிறான் தெரியுமா? எந்த உணர்வும் நன்மைக்குப் பயன்படுமானால், அது அருளின் வடிவமே! அதனால் தான் கோப தேவதையிடம் நல்லவர்கள் வாழவும், தீயவர்கள் அழியவும் ரிக் வேதம் வேண்டுகிறது. பிறர் நன்மைக்காக கோபப்பட்டால் அதில் தவறில்லை

"ஒன்றும் தெரியவில்லையே' இப்படி ஒரு வருத்தம் எதற்கு!

உலகத்தில் பலருக்கும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. இந்த மனப்பான்மை பல சமூக, குடும்ப பிரச்னைகளுக்கும் காரணமாக உள்ளது.
அதாவது, கிரிக்கெட் விளையாடி பெரும்புகழ் பெற்று விட்டவர்களைப் பார்த்து, நம்மால் முடியவில்லையே என்று ஒருசாரார் வருந்துகிறார்கள். நன்றாக மேடையில் பேசுபவர்களைப் பார்த்து ஒருசாரார், கடையில் போய் பேரம்பேசி பேச்சு சாமர்த்தியத்தால் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கும் ஒருசாரார், ஆங்கிலம் பேசுவோரைப் பார்த்து ஒரு பகுதியினர்...
இப்படி பல தினுசாக இந்த மனப்பான்மை ஏற்படுகிறது.
ரமணமகரிஷி திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்த போது, அவரைப் பார்க்க பல வேதவிற்பன்னர்கள் வருவார்கள். முக்தியடைவது பற்றி பல விஷயங்களை அலசுவார்கள். ரமணரும் அவர்களுடன் உரையாடுவார். அவருக்கு சேவை செய்யும் பக்தர் ஒருவர், இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பார்.
""ஐயோ! இந்த வேதவிற்பன்னர்களைப் போல நம்மாலும் ரமணருடன் பேச முடியவில்லையே, வேதத்தைப் படிக்காததால் முக்தி கிடைக்கும் வாய்ப்பு போய்விட்டதே,'' என வருந்துவார். அவரது ஏக்கத்தைப் புரிந்துகொண்டார் ரமணர்.
ஒருநாள், தனக்கு அவர் பணிவிடை செய்து கொண் டிருந்த போது, ""இன்று சவரம் செய்து கொண் டாயா?'' எனக் கேட்டார்.
அவர் ஏதும் புரியாமல், ""ஆமாம் சுவாமி,'' என்றார்.
""கண்ணாடியைப் பார்த்து தானே சவரம் செய்தாய்?'' என்று திரும்பவும் கேட்டார் ரமணர்.
பக்தர் கலவரத்துடன் ஏதும் புரியாமல்,""ஆமாம்,'' என்று பணிவுடன் தலையாட்டினார்.
""கண்ணாடியைப் பார்த்து நீ சவரம் செய்தாய். அதாவது, நீ சவரம் செய்யும்வரை அது உனக்கு தேவைப்படுகிறது. உன் முகத்தை அழகாக்கும் வரை அது <உதவுகிறது. ஆனால், அந்தக்கண்ணாடியில் உன் முகத்தைப் பார்க்கலாமே தவிர, கண்ணாடியே உனக்கு சவரம் செய்து விடுமா?'' என்றார்
ரமணரிடம், ""முடியாது சுவாமி,'' என்றார் பக்தர்.
""அதேபோல் தான் வேதங்களும், உபநிஷதங்களும், சாஸ்திரங்களும். நீ சிரமப்படாமல், காயப்படாமல், முக்தியடைய அவை உதவும். அவ்வளவு தான். அவற்றால் உனக்கு முக்தியை வாங்கித்தர முடியாது. தீவிர பக்தியும், இறைவழிபாடும் மட்டுமே உனக்கு முக்தியைத் தரும். உன்னை இறைவனடியில் சேர்க்கும். அதை மட்டும் நீ செய்தால் போதும்,'' என்றார்.
பார்த்தீர்களா! தெரியாததைப் பற்றி வருத்தப்படுவதை விட, தெரிந்ததைக் கொண்டு எந்தச்செயலையும் செய்யுங்கள். அதை சிரத்தையுடன் செய்தால் வெற்றி நிச்சயம்.

ஜோதிர்லிங்கம் என்றால் என்ன? சிவம் என்பதன் பொருள், ஸ்படிக லிங்க வழிபாடு ஜாக்கிரதையா இருங்க!

ராமேஸ்வரத்துக்கு போய் ஜோதிர்லிங்கத்தைப் பார்த்திருப்பீர்கள். அதன் தத்துவம் என்ன?
யோகிகள், தங்கள் சிரசிலுள்ள சகஸ்ரார கமலத்தில் (ஆயிரம் இதழ் தாமரை போன்றது) உள்ள சந்திரமண்டலத்தில், சிவனை ஜோதி வடிவாக தியானம் செய்வார்கள். அப்போது, சந்திரமண்டலத்தில் இருந்து அமிர்தம் கொட்டும். அவர்கள் பரமானந்த நிலையில் திளைப்பார்கள். இதன் காரணமாக, உலக வடிவான ஜோதிர்லிங்கம் குளிரும். அது குளிர்ந்தால் உலகமே குளிரும். அதாவது, மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு இது போன்ற யோகம் சாத்தியமல்ல. நாம் செய்யும் யோகா எல்லாம் உடல்நலத்துக்காக மட்டுமே. லிங்கம் குளிர்ச்சியாக இருக்க வேண்டுமே என்பதற்காகத்தான் வடக்கேயுள்ள ஜோதிர்லிங்கத் தலங்களில் பக்தர்களே அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.


சிவம் என்பதன் பொருள்
 
    சிவம்' என்ற சொல்லுக்கு "சுகம்' என்று பொருள். சிவராத்திரி விரதம் அனுஷ்டித்தால் குடும்பத்தில் நன்மை பெருகும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்க வேண்டும். சிவராத்திரி விரதம் இருப்பதற்கு பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. ஒருகாலத்தில் உலகம் அழிந்தபோது மீண்டும் உலகை சிருஷ்டிக்க உமாதேவி சிவனைபூஜித்து ஒரு இரவு முழுவதும் இருந்த விரதமே சிவராத்திரி விரதம். மற்றொரு கதையின்படி, சிவனின் கண்களை பார்வதிதேவி மூடியதாகவும், இதனால் உலகம் இருண்ட நேரத்தை சிவராத்திரியாக அனுஷ்டிப்பதாகவும் கூறுகிறார்கள்.

ஸ்படிக லிங்க வழிபாடு ஜாக்கிரதையா இருங்க!



பூஜையறையில், கண்ணாடிபோல் இருக்கும் ஸ்படிக லிங்கம் வைத்து வழிபடுவோர் ஏராளமாக இருக்கிறார்கள். இதை வழிபடும்போது,மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஸ்படிகலிங்க வழிபாட்டின் போது, உங்கள் மனதில் என்ன தோன்ற வேண்டும் தெரியுமா?
ஸ்படிகலிங்கத்திற்கு நிறம் கிடையாது. ஆனால், அதன் பின்னால் ஒரு செவ்வரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும். வில்வத்தை வைத்தால் பச்சையாக இருக்கும். அதாவது, எதை வைத்துள்ளோமோ, அந்த நிறத்தை அப்படியே உள்வாங்கி நம்மிடம் காட்டும். அதே போல், நாம் என்ன எண்ணத்துடன் அந்த லிங்கத்தை வணங்குகிறோமோ, அதற்குரிய பலனே நமக்கு கிடைக்கும். நம் எதிரிக்கு கூட கஷ்டம் வர வேண்டும் என அந்த லிங்கத்திடம் கேட்கக்கூடாது. அவ்வாறு கேட்டால், அது நம்மையே வந்தடையும். எனவே, ஸ்படிக லிங்க வழிபாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நமக்கு ஒரு கஷ்டம் என்றால், ""நீ பார்த்துக்கொள்'' என்று அந்த கஷ்டத்தையும் அவனிடமே சமர்ப்பித்து விடுங்கள். நடவடிக்கை எடுக்க வேண்டியது அவன் பொறுப்பு. ஸ்படிகலிங்கத்தின் முன்னால் நின்று வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்மையை மட்டும் கேளுங்கள். 

விரதம் இருப்பது எப்படி? சிவராத்திரி பூஜை வீட்டில் செய்வது எப்படி?

உங்கள் வீட்டில் சிவலிங்கம் அல்லது நடராஜர் சிலை இருந்தால் வீட்டிலேயே நான்கு ஜாமமும் பூஜை செய்யலாம். அன்று பகலில் சாப்பிடாமல், மாலையில் பழம், பால் மட்டும் அருந்தி பூஜையைத் துவக்க வேண்டும். மாலை 6.30. இரவு 9.30, நள்ளிரவு 12.30, அதிகாலை 3மணி ஆகிய நேரங்களில் வில்வ இலை மற்றும் மலர் தூவி தீபாராதனை காட்ட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து "சிவாயநம' "நமசிவாய' என மந்திரம் சொல்லலாம். சிவன் தொடர்பான பாடல்கள், கதைகளை பக்தியுடன் ஒருவர் சொல்ல, மற்றவர்கள் கேட்கலாம். "விழிக்கிறோம்' என்ற பெயரால் சினிமா, "டிவி' பார்க்கக்கூடாது.

மகாபாரதத்தில் சிவராத்திரி


மகாபாரதத்தில் சிவராத்திரி விரதம் பற்றி கூறப்படுகிறது. பீஷ்மர் அம்புபடுக்கையில் படுத்தபடி தர்மத்தைப்பற்றி எடுத்துக்கூறும்போது சித்ரபானு என்ற மன்னன் அவரிடம் மகா சிவராத்திரி விரதம் பற்றி கூறுகிறான்.
இந்த மன்னனுக்கு பூர்வ ஜென்ம வரலாறுகளை நினைவுகூறும் சக்தி உண்டு. அதன் அடிப்படையில் கடந்த பிறவி ஒன்றில் அவன் இவ்விரதத்தை அனுஷ்டித்ததாக சொல்கிறான். அந்தபிறவியில் அவன் "சுச்வரன்' என்ற பெயரில் வேடனாக இருந்தான். இந்த பெயருக்கு "இனியகுரல்' என்று பொருள். ஒருமுறை வேட்டைக்கு சென்றபோது ஒரு மரத்தில் ஏறி அமர்ந்திருந்தான். அது ஒரு வில்வ மரம். இரவு முழுக்க காத்திருந்தும் எந்த மிருகமும் அகப்படவில்லை. குடும்பத்தாரின் நினைவு அவனுக்கு வந்தது. பசியும் தாகமும்அவனைவாட்டி எடுத்தது. குடும்பத்தினரை நினைத்து கண்ணீர்விட்டான்.
பொழுதுபோகவில்லையே என்பதற்காக மரத்தில் இருந்த வில்வ இலைகளை பறித்து தரையில் போட்டுக் கொண்டிருந்தான். மறுநாள் ஒரு மான் சிக்கியது. அப்போது ஒருவன் வேடன் எதிரே வந்தான். அவன் அந்த மானை தனக்கு தரும்படி கேட்டான். பசியால் அவன் முகம் வாடி உள்ளது என்பதை அறிந்த வேடன், அவனுக்கும் தன்னிடம் இருந்த மான் இறைச்சியின் ஒரு பகுதியை கொடுத்தான். பிறகு வீட்டிற்கு சென்று சாப்பிட்டான்.
அந்த வேடனின் இறுதிக்காலம் வந்தது. அவன் இறந்ததும் சிவலோகத்திற்கு சென்றான். வேடன் ஆனாலும் காட்டில் மரத்தின் மீது அமர்ந்திருந்த நாள் சிவராத்திரி என்பதால், சிவபதம் கிடைத்துவிட்டது.
அன்று இரவில் வில்வ இலைகளை கீழே போடும்போது மரத்தின் அடியில் இருந்த லிங்கத்தை கவனிக்கவில்லை. இடுப்பில் கட்டியிருந்த குடுவையிலிருந்து மிச்சம் மீதி இருந்த தண்ணீர் லிங்கத்தின் மீது பட்டது.
அபிஷேமாகவும், அர்ச்சனையாகவும் ஏற்றுக்கொண்டார். விரதத்தின் முடிவில் தானமும் செய்துவிட்டான். இதன் காரணமாக அவனுக்கு சொர்க்கம் கிடைத்தது.


லிங்கோத்பவரின் அடியும் முடியும் புதைந்த ரகசியம்

சிவாலயங்களில் கோஷ்டத்தின் பின்புற சுவரில் லிங்கோத்பவரைக் காணலாம். இவரது பாதங்கள் பூமியில் புதைந்திருக்கும். தலை வானில் புதைந்திருக்கும். மேலே ஒரு அன்னமும், கீழே ஒரு பன்றியும் செதுக்கியிருப்பார்கள். அன்னம் பிரம்மாவாகவும், வராகம் (பன்றி) விஷ்ணுவாகவும் கருதப்படுகிறது. இவர்கள் சிவனின் அடிமுடியைக் காண போட்டியிட்டதாக ஒரு புராணக்கதை உண்டு.
உண்மையில் இதன் தத்துவம் என்ன தெரியுமா? சிவன் லிங்க வடிவமாக உள்ளார். லிங்கம் என்பது நீள் வட்ட வடிவமுடையது. சதுரம், செவ்வகம், முக்கோணம் எதுவாக இருந்தாலும் அதற்கு ஆரம்ப இடமும், முடியும் இடமும் உண்டு. ஆனால், வட்டத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. சிவனும் ஆதிஅந்தம் இல்லாதவர் என்பதை இந்த வடிவம் காட்டுகிறது. ஆனால், இந்த வடிவம் மனதில் நிற்காது என்பதற்காக ஒரு திட்டம் வகுக்கப்பட்டது.
ஊரில் இருக்கும் மகனிடமோ மகளிடமோ போனில் பேசினால் திருப்தி இருக்காது. நேரில் பார்த்தால் தான் மனம் திருப்தியடையும். அதுபோல, சிவனை நேரில் பார்த்த திருப்தி பெற, அவரது உருவத்தை நீள்வட்ட லிங்கத்துக்குள் நிறுத்தி, தலையும், திருவடியும் புதைந்திருப்பது போல் காட்டி, அவர் ஆதிஅந்தமில்லாதவர் என்ற தத்துவம் மாறாமல் உருவம் கொடுத்தனர்.

விரதம் இருப்பது எப்படி?
 


சிவராத்திரியன்று சிவாலயத்திற்கு வில்வ இலையுடன் செல்ல வேண்டும். இரவு கடைசி ஜாம பூஜை வரை அங்கே இருக்க வேண்டும். "சிவாய நம' என உச்சரிக்க வேண்டும். அன்று சாப்பிடக்கூடாது. நோயாளிகள் எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். முதல் ஜாம பூஜைக்கு பால், அடுத்த பூஜைக்கு தயிர், மூன்றாம் ஜாமத்திற்கு வெண்ணெய், நான்காவது ஜாமத்திற்கு தேன் ஆகியவற்றை அபிஷேகம் செய்வதற்காக கோயிலில் ஒப்படைக்க வேண்டும். மறுநாள் காலையில் அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானத்துக்கே பிறகே சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

தாரா அபிஷேகம்

தாரா அபிஷேகம்
  
சில சிவன் கோயில்களில் சிவலிங்கத்திற்கு மேலாக ஒரு பாத்திரம் கட்டி, அடியில் துளையிட்டு,பாத்திரத்தில் இளநீர், தண்ணீர், நெய், பன்னீர் ஆகியவற்றில்ஏதாவது ஒன்றை நிரப்பிவிடுவார்கள். அது சொட்டு சொட்டாக சிவன்மீது விழும். சிவபெருமான் நெற்றிக்கண்ணுடன் கூடியவர் என்பதால் உஷ்ணமாக இருப்பார். இதைத் தணிப்பதற்காக ஜலதாரை எனப்படும் தாரா அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரு செம்பின் கீழ் துளையிட்டு உள்ளே தண்ணீரை நிரப்பி விடுவர். அது சொட்டு சொட்டாக லிங்கத்தின் மீது விழும். இதுவே ஜலதாரை. இந்த பூஜையால் குழந்தை இல்லாதவர்களுக்கு சந்தான விருத்தி ஏற்படும். எல்லா நலனும் உண்டாகும். நோய்கள் நீங்கும். சர்க்கரை கலந்த பாலை தாராபிஷேகம் செய்தால் கெட்ட சக்திகள், கெட்ட நண்பர்கள் விலகுவர். கெட்ட குணங்கள் மறையும். பகைவர்கள் ஒதுங்கிப் போவார்கள். பயம் நீங்கும், தேன் அபிஷேகம்செய்தால் தோல் நோய் நீங்கும். கரும்புச்சாறு அபிஷேகம் செய்தால் மோட்சம் கிட்டும், சகல துயரமும்நீங்கும்

சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்

சிவபெருமானின் வடிவங்களில் ஐந்துமூர்த்தங்கள் மிகவும் சிறப்புடையவை. நமக்கு என்ன பலன் தேவையோ அதற்கேற்ற வடிவத்தில் சிவபெருமானை வழிபட்டு பலன் பெறலாம். சாந்தமே உருவான தட்சிணாமூர்த்தியாக வழிபடுபவர்கள் மனஅமைதியும் ஞானமும் கைவரப்பெறுவர். வசீகரமூர்த்தியாகத் திகழும் பிட்சாடனரை வணங்கினால் முகத்தில் வசீகரமும், மனதில் புத்துணர்வும் பிறக்கும். வக்ரமூர்த்தியாக விளங்கும் பைரவராக வழிபட்டால் எதிரிகளின் தொல்லை நீங்கும். தைரியம் உண்டாகும். ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜராகத் துதித்தால் மனமகிழ்ச்சியும் குதூகலமும் ஏற்படும். அம்மையப்பராக சிவபார்வதி வீற்றிருக்க முருகன் நடுவில் அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்தமூர்த்தியை. தரிசித்தால் வாழ்வில் நிம்மதியும், மனநிறைவும் ஏற்படும்.

மறக்கமுடியாத கோபம்


ராவணவதம் முடித்தபின், ராமன் அயோத்தி திரும்பினார். பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அதைக் காண தசரத சக்கரவர்த்தி சொர்க்கத்தில் இருந்து பூலோகம் வந்தார். பிள்ளையைக் கண்டதும் ஆனந்தக்கண்ணீர் கண்களில் பெருகியது. ""மகனே! அன்று கைகேயி வரம் என்ற பெயரால் என் நெஞ்சில் முள்ளைத் தைத்துவிட்டாள். அந்த முள் குத்திய வலி இன்றுவரை தொடர்கிறது. ஆனால், காந்தம் போன்ற உன் மேனியை கட்டியணைத்ததும் அந்த வலி நீங்கி விட்டது'' என்று பரவசத்துடன் சொன்னார்.
ராமரோ,""தந்தையே! உங்களால் ஒதுக்கப்பட்ட அன்னை கைகேயி என் தெய்வம். அந்த தெய்வத்தாயையும், என் தம்பி பரதனையும் மீண்டும் எனக்குத் தாருங்கள்,'' என்று ராமர் தந்தையிடம் வரம் கேட்டார். ஆனால், தசரதரோ ராமன் கேட்ட ஒரு வரத்தை மட்டுமே தந்தார். "" பரதன்மட்டும் உன் தம்பியாகட்டும். ஆனால், கைகேயி மீது கொண்ட கோபத்தை இப்போதும் மட்டுமல்ல, எப்போதும் என்னால் மறக்க முடியாது,'' என்று சொல்லி விண்ணுலகம் கிளம்பிச் சென்றார். பிள்ளை கேட்ட இரண்டாவது வரத்தை தசரதரால் தரமுடியவில்லை

கல்வி தரும் ஹயக்ரீவர்

கல்வி தரும் ஹயக்ரீவர்
 

மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க அருள்பவர் ஹயக்ரீவ மூர்த்தி. இவரை வழிபட்டால் கிரகிப்புத்திறனும், ஞாபகசக்தியும் அதிகரிக்கும். சரஸ்வதிதேவிக்கு வித்தைகளை உபதேசித்தவர் இவர். வேதங்களை திருடிச் சென்ற மதுகைடபர்களை அழித்து, பிரம்மாவிடம் அவற்றை ஒப்படைத்தவர். திருமால் தான் எடுத்த தசாவதாரங்களுக்கு முன்பே ஹயக்ரீவ அவதாரம் எடுத்ததாகச் சொல்வர். குதிரைமுகம் கொண்ட இவர் யோகநிலையில் தனித்தும், லட்சுமிதேவியோடு சேர்ந்தும் அருள்புரிகிறார். திருவோண நட்சத்திரத்தன்றும், புதன்கிழமையிலும் ஏலக்காய் மாலை சாத்தி வழிபடுவது பலன் தரும்

சாஸ்தாவின் அவதாரம்


மகிஷி என்னும் அரக்கி முனிவர்களின் யாகத்திற்கு இடையூறு செய்து செய்து வந்தாள். சிலரை விழுங்கினாள். அவளை சம்ஹாரம் செய்ய சிவபெருமானையும், விஷ்ணுவையும் முனிவர்கள் வேண்டினர். விஷ்ணு மோகினி அவதாரம் எடுக்க,சிவனோடு இணைந்துபெற்ற பிள்ளையே சாஸ்தா. காட் டில் வசித்ததால் இவர் இப்பெயர் பெற்றார்.
இப்போதும், இவரது கோயில்கள் ஆற்றங்கரை, காடுகள், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களிலேயே இருக்கும். இதனால், இங்கு செல்ல அச்சப்பட்ட மக்கள் கூட்டமாக சென்று வழிபட்டனர். "சாத்து' என்ற சொல்லுக்கு "கூட்டம்' என்று பொருள். இதனால், இவர் "சாத்தா, சாஸ்தா, சாஸ்தான், சாத்தான்' என்றெல்லாம் கிராமமக்களால் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறா

ஏழையாய் பிறக்க காரணம் என்ன?

ஏழையாய் பிறக்க காரணம் என்ன?
 

சிலர் பணக்காரர்களாகவும் பலர் வறுமையில் வாடுவதுமே உலகில் நாம் காணும் உண்மை. இந்த நிலை ஏன் ஏற்படுகிறது என்பதற்கு சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று பதில் சொல்கிறது.
அக்ஷர-த்வய-மப்யஸ்தம் நாஸ்தி நாஸ்தி யத் புரா!
ததவே தேஹி தேஹீதி விபரீத-முபஸ்திதம்!!
என்ற ஸ்லோகத்தில் "நாஸ்தி நாஸ்தி' என்றால் "இல்லை இல்லை' என்று பொருள். தேஹி தேஹி என்றால் "கொடு கொடு' என்று பொருள். யாரொருவன் முற்பிறவியில் இல்லை இல்லை என்று தன்னிடம் பிச்சை கேட்டவனை விரட்டினானோ, அவன் இப்பிறவியில் "கொடு கொடு' என்று பிச்சை கேட்பவனாக பிறக்கிறான். அதற்காக, கையை நீட்டும் சோம்பேறிக்கெல்லாம் பிச்சை போடக்கூடாது. உண்மையிலேயே முடியாதவர்களுக்கு, ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு, ஏழைக்குழந்தைகளின் படிப்புக்கு உதவுவதே நிஜமான பிச்சை. திருமால் கூட பிச்சையெடுக்கப் போகிறோமே என எண்ணி மகாபலி முன் உடலை குறுக்கிக்கொண்டு வந்தார். ஏனெனில், பிச்சை எடுப்பதைக் கேவலம் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. எனவே நிஜமான ஏழைகளுக்கு தானம் கொடுத்து அடுத்த பிறவியிலாவது பணத்தை வாரிக் குவிப்பவராகப் பிறக்க வழி செய்து கொள்ளலாம்.