Tuesday, May 17, 2011

யாருக்கு பொருள் சேரும்?

யாருக்கு பொருள் சேரும்?



இவ்வுலகில் ஆசையில்லாதவன் எவனோ அவனுக்கு தான் பொருள் சேரும். பாற்கடலைக் கடைந்தவுடன் லட்சுமி தோன்றினாள். அவளது அழகில் தேவர்களும், அசுரர்களும் மயங்கினர். செல்வச் செழிப்புடன் வேறு அவள் பிறந்திருந்தாள். அந்நேரத்தில் சில தேவர்கள் தியானத்தில் இருந்தனர். அப்போது மற்ற தேவர்கள் மற்றும் அசுரர்களின் கூக்குரல் கேட்டு எழுந்தனர்.
"லட்சுமி, என்னைப் பார், நான் சூரியன், உலகத்திற்கே ஒளி கொடுப்பவன், என்னை மணந்து கொண்டால் என் தேரில் ஏறி, உலகையே பார்க்கலாம்," என்றான் சூரியன். இப்படியே ஒவ்வொரு தேவரும் தங்கள் சிறப்பை அவளிடம் எடுத்துரைத்தனர். எல்லாம் எதற்காக தெரியுமா? அவளிடம் இருக்கும் பணத்திற்காக. அவளது செல்வத்தை அடைவதற்காக. லட்சுமி அவர்களுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை.
செல்வத்துக்காக ஒருத்தியை மணப்பவர்கள், அவளிடமுள்ள செல்வம் தீர்ந்ததும் அவளை வெறுத்து விடுவர் என்பதை அந்த லோகமாதா அறியாதவாளா என்ன! அவள் தன்னைப் பின் தொடரும் கூட்டத்தை அலட்சியம் செய்தவளாக நடந்தாள். பாற்கடலின் ஒரு மூலையில் பரந்தாமன் யோக நித்திரையில் இருந்தான். முப்பத்து முக்கோடி தேவர்களும், பல கோடி அசுரர்களும் எழுப்பிய ஒலி அவரை அந்த நித்திரையிலிருந்து எழுப்பவில்லை.
"ஆஹா! உலகில் ஆசையில்லாத ஜீவன் இவர் தான். இவரையே மணப்போம்," எனக் கருதிய லட்சுமி அவரையே திருமணம் செய்து கொண்டாள். அவரது மார்பில் இடம் பிடித்தாள்.
இப்போது புரிகிறதா! பணம், பணம் என தேடியலைந்தால் கிடைக்காது.
நம் மனதைக் கட்டுப்படுத்தி ஆசைகளிலிருந்து விடுபட்டால், செல்வம் தானாக பெருகிவிடும்

No comments:

Post a Comment