முன்னொரு காலத்தில் சங்கசூடன் என்னும் ஓர் அசுரன் இருந்தான். அவன் அருந்தவம்
பல புரிந்து வரங்கள் பல பெற்றிருந்தான். வர பலத்தால் அவன் பல கொடுமைகளைச் செய்து
வந்தான். குழந்தைகளை மிதித்தும், குணசீலர்களைக் கொடுமைப்படுத்தியும், யாகங்களைச்
சிதைத்தும், பெண்களின் கற்பைச் சூறையாடியும் களியாட்டம் போட்டு வந்தான்.
அவனது கொடுமைகளைத் தாங்க முடியாமல் மண்ணவரும் விண்ணவரும் பெரும் துயரம்
அடைந்தனர். சங்கசூடனை அழிக்க வழி தெரியாமல் திணறினார்கள். கடைசியாக அவர்கள்
மும்மூர்த்திகளிடம் சென்று தங்கள் குறைகளை முறையிட்டார்கள். அதனால் கோபமடைந்த
மும்மூர்த்திகளுக்கும் சங்கடசூடனுக்கும் யுத்தம் நடந்தது.
ஆனால் சங்கசூடனை யாராலும் வெல்ல முடியவில்லை. அதற்கு காரணம் அவன் கடுந்தவம்
புரிந்து அதன் பயனாய் பெற்றுத் தன் கழுத்தில் அணிந்திருந்த ஸ்ரீகிருஷ்ண கவசமாகும்.
அந்தக் கவசம் அவன் கழுத்தில் இருக்கும் வரை அவனை யாராலும் வெல்லவோ, அழிக்கவோ
முடியாதென்று மும்மூர்த்திகளும் உணர்ந்தனர்.
சங்கசூடனின் மனைவி துளசி. மகாபதி விரதை, கற்புக்கரசி, கணவன் சொல்லை மீறி
எந்தச் செயலும் செய்யாதவள். அழகு, அன்பு, கருணை அனைத்தும் நிறைந்தவள். அவளின்
கற்பின் திறன் கணவனுக்கு அரனாக விளங்கியது. துளசியின் கற்பின் மகிமையை உணர்ந்த
பரந்தாமன் கற்பினுக்கு அரனாக விளங்கும் துளசியை புகழ்ந்து ஸ்தோத்திரம் சொல்வதைத்
தவிர வேறு வழியே இல்லை என்று முடிவு செய்தார்.
பிறகு பத்து தோத்திரங்களால் பகவான் துளசியை புகழ்ந்துரைத்து துதித்தார்.
வைகுந்த வாசனே தன்னைத் துதித்ததை எண்ணி துளசி தன்னை மறந்தாள். நெஞ்சம் நிகழ்ந்தாள்,
மிகவும் மகிழ்ந்தாள். அன்பைப் பொழிந்தாள், அவரை வாயாரப் போற்றிப் பாடினாள்,
ஆடினாள், கற்புக்கனலாக நின்ற அவளை நாராயணர் ஆதரவாகப் பார்த்து வேண்டிய வரங்களைக்
கேள் என்றார்.
அதற்கு அவள் மீண்டும் பிறவா வரமும், பிறந்தால் நாராயணரை மறவா மனமும் வேண்டும்
என்றாள். பிறகு ஸ்ரீமகா விஷ்ணுவின் பாதார விந்தங்களில் பணிந்தாள், அவளது உயிர்
மகாவிஷ்ணுவின் பாதங்களில் ஒளி வடிவாகச் சென்றடைந்தது.
அவளது உடல் கண்டகி என்னும் நதியாக மாறியது. அவளது கேசம், துளசி செடியாக துளசி
வனமானது. ஸ்ரீமஹாவிஷ்ணு அந்த துளசியை மாலையாக்கி அணிந்து துவளத்தாமனாகக் காட்சி
அளிப்பவரானார். மனைவியைப் பிரிந்த சங்கசூடன் சக்தியற்ற வனானான். அவன் முற்பகலில்
செய்த கொடுமைகளே பிற்பகலில் அவன் அழிவிற்கு வழி வகுத்தன.
அவனை ஸ்ரீமஹாவிஷ்ணு எளிதில் வதம் செய்து எல்லோருக்கும் மங்களங்கள்
தந்தருளினார். ஸ்ரீதேவியின் ஓர் அங்கம் பூவுலகில் தங்கி தம் மக்களின் உடற்பிணி
உள்ளப்பிணி ஆகிய பிணிகளைப் போக்கி பேரின்ப வாழ்வளிக்க எடுத்த வடிவமே ஸ்ரீதுளசி.
சாதாரணமாக காண்பவர் களுக்குச் செடியின் உருவமாகவும், பிணிகளைத் தீர்க் கும்
மருந்துச் செடியாகவும் தெரிவாள்.
ஆனால் தெய்வீக நோக்குடன் காணும் போது உல கத்தை விளங்க வைக்கும் மகா லட்சுமி
யின் உருவ மாகக் காட்சி அளிக் கிறாள். ஸ்ரீதுளசி மாதா. ஸ்ரீமகா லட்சுமியே இந்த
துளசிச் செடியாய் மாறி ஸ்ரீமகா விஷ்ணுவிற்கு மிகவும் விருப்பமுள்ள மலராக
விளங்குகிறார். துளசி இல்லாத பூஜையை மகாவிஷ்ணு ஏற்றுக் கொள்வதில்லை.
"திருத்துழாய்'' என்ற பெயரில் பெருமாள் கோவில்களில் சிறந்த பூஜைப் பொருளாக
விளங்குவது இந்தத் துளசியே! துளசி உள்ள இடத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு எப்போதும் வாசம்
செய்கிறார். துளசியினால் விஷ்ணுவைப் பூஜித்தால் 1000 பால்குடங்கள் கொண்டு அபிஷேகம்
செய்த மனமகிழ்ச்சியை ஸ்ரீமகாவிஷ்ணு அடைகிறார்.
கடைசி காலத்தில் துளசிதீர்த்தம் உட்கொண்டால் பிறவி நீங்கி வைகுண்ட பதவி
கிடைக்கும். துளசியினால் ஸ்ரீமகாவிஷ்ணுவை மட்டுமின்றி ஸ்ரீமகாதேவனையும்
அர்ச்சிக்கலாம். ஏனெனில் அவர் ஸ்ரீசங்கர நாரயாணராக இருக்கிறார்.
இத்தகைய மகிமை வாய்ந்த ஸ்ரீதுளசியை நம் வீடுகளில் அழகிய மாடங்களில் வளர்த்து,
பக்தி சிரத்தையுடன் பூஜித்தால் வாழ்க்கையில் சர்வ மங்களங் களையும் பெறலாம். கன்னிப்
பெண்கள் பூஜித்தால் நல்ல கணவனைப் பெறுவார்கள்.
சுமங்கலிகள் பூஜித்தால் தீர்க்க சவுமாங்கல்யத்தையும், சகல சவுபாக்கியங்களையும்
பெறுவார்கள். இவ்வளவு பெருமை வாய்ந்த துளசி சரித்திரத்தை மனமுவந்து
படிப்பவருக்கும், படிப்பதை கேட்பவருக்கும், ஸ்ரீதுளசி மாதாவின் பெருங்கருணையும்
ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பரிபூர்ண அருளும் கிடைக்கும்.
No comments:
Post a Comment