நவராத்திரி பூஜை தொடங்கும் போது முதலில் நமது விருப்பப்படி விட்டிலுள்ள கொலு
பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும். சில வீடுகளில் அமாவாசை அன்று
மாலையே எடுத்து வைத்து விடுவார்கள். அடுத்ததாக ஒரு பித்தளை சொம்பில் நூல் சுற்றி,
மாவிலை தேங்காய் வைத்து கலசம் வைக்க வேண்டும்.
நீர் ஊற்றும் போது அது புனிதத்துவம் அடைவதற்காக நதிகளை நினைத்து கலசத்தில்
உள்ள நீரில் கங்கையும் யமுனை தானும் கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்துவும்
காவிரிதானும் எழுந்தருளி இறையருள் சேர்ப்பீர் என்று சொல்லிக் கொண்டே ஊற்ற வேண்டும்.
அடுத்ததாக ஒரு தலைவாழை இலையில் அரிசியைப் பரப்பி மனைப்பலகை மேல் வைத்து அதன்
மேல் கலசத்தை வைத்து தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்பிகை மேடையில் வைக்க
வேண்டும். கொலுப்படிகளுக்கு வடக்கு புறமாக அதாவது படிகளின் இடப்பாகம் வைத்தல்
முறையாகும்.
இப்படி அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்த பூஜை நிறைவு
பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல
வேண்டும்.
வான் உலகும் மண் உலகும் வாழமறை வாழுப்
பான் மைத்ரு செய்யததமிழ்ப் பார்மீசை விளங்க
ஞானமத ஐந்து கர நால்வா யானை முகனைப்
பரவி அஞ்சலி செய்கிற்பாம்
இறுதியாகச் சொல்லியபின் விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன்
எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும். அதற்குரிய
பொருட்களான மஞ்சள் பொடி, சந்தனம், உதிரிமலர், ஊதுவத்தி, பஞ்சுதிரி, கற்பூரம்,
வெல்லம், அரிசி, தயிர், தேன், குங்குமம், புஷ்பமாலை, வெற்றிலைப்பாக்கு, சாம்பிராணி,
நல்லெண்ணெய், அரிசி, வாழைப்பழம், தேங்காய், பூஜைக்குரிய மணி, தாம்பாளம், கற்பூர
தட்டு, பஞ்சபாத்ர உத்தரணி ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
விஜயதசமியை வன்னி நவராத்திரி, வனதுர்க்கா நவராத்திரி என்றும் அழைப்பர். மகா
நோன்பு என்று தேவி மாகாத்மியத்தில் குறிப்பிடப்படுவதும் இதையே தான். எருமை வடிவம்
கொண்ட மகிஷனோடு ஒன்பது இரவுகள் யுத்தம் செய்து கொற்றவையாக அவன் தலையை கொய்து
விஜயையாக அம்பிகை நின்ற நாள் விஜயதசமி.
முந்தைய நாள் அடுக்கி வைத்த புத்தகங்களை மீண்டும் பூஜித்து நைவேத்தியம்,
தீபாராதனை எல்லாம் ஆனபின் பக்தியோடு சிலவரிகளாவது படித்தால் கல்வி அபிவிருத்தி
அடையும் என்பது நம்பிக்கை.
அம்பு போடுவது ஏன்?
விஜயதசமி தினத்தன்று சிவன்கோவில்களில் பரிவேட்டை உற்சவம்னு ஒன்று
நடைபெறுகிறது. இறைவன் எழுந்தருளி வன்னிமரத்தில் அம்பு போடுவது வழக்கம். இதோட
கருத்து என்னன்னா, வன்னி மரம் மனித உடலாகக் கருதப்படுகிறது. இந்த மரத்தில் இறைவன்
அம்பு போடுவது நமக்கு ஞான உபதேசம் செய்வதைக் குறிக்கும்.
அம்புகள் தான் ஞானம்! இந்த பத்தாம் நாளில் சண்டி ஹோமத்தில் கலந்து கொள்வது
சிறப்பானது. மூன்று தேவிகளும் ஒன்றாக இணைந்த வடிவமே சண்டி. இவளை வழிபட்டால்
முப்பெரும் தேவியரையும் வழிபட்ட பலன்கள் கிடைக்கும்.
9 மடங்கு அதிக பூஜை.........
நவராத்திரி என்பது 9 இரவுகளைக் குறிக்கிறது. பொதுவாக பகல் பூஜை இறைவனுக்கும்,
இரவில் செய்யும் பூஜை இறைவிக்கும் உரியவை. ஆனால் நவராத்திரி சமயத்தில் மட்டும்
பகல், இரவு இரண்டுநேர பூஜையுமே இறைவிக்குத்தான். அது தவிர மற்ற நாள்களில்
பூஜிப்பதைக் காட்டிலும் தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாக பூஜிக்க
வேண்டும்.
எந்தெந்த கிழமைகளில் என்ன கொடுக்கலாம்?
கொலுவுக்கு வரும் சுமங்கலிகளுக்கு, கன்னிப்பெண்களுக்கு தாம்பூலம் தருவது சகல
பாக்கியங்களையும் கொடுக்கும். என்னென்ன தினங்களில் என்னென்ன சுண்டல் விசேஷம்
தெரியுமா?
ஞாயிறு: கோதுமை அப்பம்,
திங்கள்: புட்டு பட்டாணி சுண்டல்,
செவ்வாய்: துவரம்பருப்பு வடை (அல்லது) காராமணி சுண்டல்,
புதன்: பாசிப்பயறு சுண்டல்,
வியாழன்: கடலை சுண்டல் (அல்லது) இனிப்பு தின்பண்டம்,
வெள்ளி: மொச்சை சுண்டல்,
சனி: எள்ளுருண்டை (எள்பொடி செய்திருக்க வேண்டும்).
சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் கொடுக்க வேண்டும் எதுவும் செய்ய
முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம். நவதானிய சுண்டல் நவக்கிரக நாயகர்களை
திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களை தடுக்கும் என்பதால் இப்படி
முறைப்படுத்தி இருக்கின்றனர் ரிஷிகள்.
No comments:
Post a Comment