நவராத்திரி பூஜைகளில் மிக மிக முக்கியமானது சுவாசினி பூஜையாகும். சுவாசினி
என்பவள் யார் தெரியுமா? 50 வயதுக்கு மேற்பட்ட ஆசாபாசங்களை துறந்த பெண்களைத்தான்
சுவாசினி என்பார்கள். குறிப்பாக மாதத்தீட்டு இல்லாதவர்கள்தான் சுவாசினி ஆவார்கள்.
இத்தகைய பெண்களை வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களை அம்மனாக பாவித்து பூஜை செய்து
சிறப்பு செய்வதுதான் சுவாசினி பூஜை எனப்படும்.
சுவாசினி பெண்களை வீட்டுக்கு அழைப்பதிலும் ஐதீகங்கள் உள்ளன. முதலில் சுவாசினி
பெண்கள் மூத்த வயதுடையவர்களாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பிறகு அவர்களை
குறிப்பிட்ட நாளில் வீட்டுக்கு அழைக்க வேண்டும். வாசலில் இருந்து வீட்டுக்குள் பூஜை
அறை வரை பட்டுப்புடவை விரித்து போட்டு அதன் மேல் ஆற்று மணல்களை பரப்ப செய்து
சுவாசினியை அதன் மீது நடந்து வரச்செய்ய வேண்டும்.
பிறகு கோலம் போட்ட மனை மீது சுவாசினி பெண்ணை அமர செய்ய வேண்டும். அவர்களை
அம்பிகையாக பாவித்து அர்ச்சனை செய்து நாமவளிகளை சொல்ல வேண்டும். சுவாசினி மனம்
குளிரும் வகையில் பூஜைகள் அமைய வேண்டும். அனைத்து வகை பூஜைகளும் முடிந்த பிறகு
புடவை, ரவிக்கை மற்றும் தாம்பூலம் ஆகியவற்றை சுவாசினிகளுக்கு தானம் கொடுக்க
வேண்டும்.
அப்போது இந்த பூஜையை மேற்கொள்ளும் தம்பதிகள் சுவாசினிகளிடம் ஆசீர்வாதம்
பெற்றுக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் முடிந்த பிறகு சுவாசினிகளுக்கு
அன்னமிடவேண்டும். இந்த சுவாசினி பூஜையை நவராத்திரி 9 நாட்களில் செவ்வாய் அல்லது
வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம். வசதி வாய்ப்பு இருப்பவர்கள் சுவாசினி பூஜையை மிக
பெரிய அளவில் செய்வது நல்லது.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிரம்மாண்டமாக இந்த பூஜையை
செய்யாவிட்டாலும், சுவாசினிகளுக்கு புடவை, ரவிக்கை மட்டும் வாங்கி கொடுத்து
பூஜிக்கலாம். அதற்கும் வசதி இல்லாதவர்கள் சுவாசினிகளுக்கு உணவு கொடுத்தால் கூட
போதும். என்றாலும் சுவாசினிகள் நம் வீட்டுக்கு வரும்போது சீப்பு, கண்ணாடி, பூ,
சந்தனம் மற்றும் உங்களால் முடிந்த தட்சணைகளை கொடுக்க வேண்டியது அவசியம்.
நவராத்திரிக்கு மட்டுமின்றி திருமணம், சீமந்தம், 60-ம் கல்யாணம், சதாபிஷேகம்
உள்ளிட்ட சுபகாரியங்கள் நடக்கும்போதெல்லாம் சுவாசினி பூஜை செய்வது நல்ல பலன்களை
தரும். குடும்பத்தில் அமைதியை நிலைபெறச்செய்யும். நவராத்திரி நாட்களில் சுவாசினி
பூஜை செய்பவர்களுக்கு செல்ல செழிப்பு உண்டாகும்.
சுவாசினிகளுக்கு அணிவிக்கப்படும் மாலையை திருமணமாகாத பெண்கள் வாங்கி அணிந்து
கொண்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். அரசர்கள் காலத்தில் சுவாசினி
பூஜைகள் மிக விமர்சையாக நடந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. எனவே சுவாசினி பூஜையை
மறக்காமல் செய்யுங்கள். சுவாசினியை அர்ச்சனை செய்து வழிபட்டால் லலிதா பரமேஸ்வரிக்கு
மகிழ்ச்சி ஏற்படும் என்று சுவாசினி அர்ச்சனை பிரிதாய நமக என்ற நாமவளி சொல்கிறது
No comments:
Post a Comment