Thursday, April 4, 2013

தீபாவளியில் தீப தரிசனம்

தீபாவளியில் தீப தரிசனம் அதர்மமாகிய நரகாசுரன் அழிக்கப்பட்டு தர்மம் ஜெயித்த திருநாளே தீபாவளி என்பது நமக்குத் தெரியும். தீபாவளிகா, சுக்ராத்ரி, தீபோத்ஸவம் எனப் புராணங்கள் பலவாறு போற்றுகின்றன இந்தப் பண்டிகையை. நரகாசுரனை அழிக்கச் சென்ற பகவான் கிரி துர்க்கம், ஜல துர்க்கம், அக்னி துர்க்கம், வாயு துர்க்கம் ஆகிய அவனது நான்கு கோட்டைகளைக் கடந்து உட்புகுந்ததாகச் சொல்கின்றன புராணங்கள். இவை ஐம்பூதங்களைக் குறிக்கும் (இங்கு மண், நீர், தீ, வாயு ஆகியன முறையே குறிப்பிடப்படுவதால், ஆகாயமும் தானாக இதில் உட்பட்டுவிடும்.) நமது உடம்பும் ஐம்பூதங்களால் ஆனது. அதனுள் இறைவனுக்கு இடம் கொடுத்தால், அவர் நம்முள் இருக்கும் மடைமையை பிடுங்கிக்கொள்வார். இதுவே தீபாவளித் திருநாளின் உட்பொருள். இதையே ரமணர் இன்னும் அழகாகச் சொல்வார். 'தீய எண்ணங்களே நரகன். அந்த எண்ணங்களை அடக்கி தானாக ஆவதுதான், அதாவது ஆத்ம ஜோதியாகத் திகழ்வதே தீபாவளி’ என்கிறார் அவர். காஞ்சி மகா பெரியவரோ, 'பகவத் கீதையின் தம்பி எனப் போற்றுகிறார் தீபாவளியை. இந்த நன்னாளில் தீபங்கள் ஏற்றி வைத்து பேரொளியாய் - வளர்ஜோதியாய் இறையை வழிபடல் வேண்டும். தீபம் ஆவளி= தீபாவளி. அதாவது தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபடுதல் என்று பொருள். ராவணனை வென்ற ஜயராமன், சீதாராமனாக அயோத்தி திரும்புகிறான். அப்போது நகரெங்கும் தீபம் ஏற்றிவைத்துக் கொண்டாடினார்களாம் அயோத்தி மக்கள். அவர்கள் அரண்மனையில் நுழையும் போது கௌசல்யா தேவி, 'வருக சீதா... நீ இல்லாது போனதால் இருள் நிறைந்துபோனது இந்த அரண்மனை. நீதான் விளக்கேற்றி ஒளியூட்ட வேண்டும்’ என்றாராம். சீதாதேவியும் அரண்மனையில் விளக்கேற்றி எல்லோரையும் அகமகிழ வைத்தாளாம். அந்த நாள் ஒரு தீபாவளி! தீபாவளியில் தீபத்தின் முக்கியத்துவம் குறித்து இன்னொரு புராணச் சம்பவம் சொல்வார்கள். நரகனை அழிக்க பகவான் சென்றதும், பாணாசுரன் முதலான தீயவர்கள் திருமகளை கவர்ந்து செல்ல திட்டமிட்டனராம். இதையறிந்த அலைமகள், அவர்களுக்குப் புலப்படாத வண்ணம் அருகில் இருந்த தீபச் சுடரில் ஐக்கியமாகி விட்டாளாம். இது நிகழ்ந்ததும் தீபாவளித் திருநாளில்தான். எனவே இந்த நன்னாளில் தீபமேற்றி வழிபட, நமது வீடுகளில் திருமகள் வாசம் செய்வாள்

No comments:

Post a Comment