Thursday, April 11, 2013

தியானம் செய்யும் முறையை ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறு விளக்குகிறார்:

தியானம் செய்யும் முறையை ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறு விளக்குகிறார்: கீதை சொல்லும் தியான முறை “சுத்தமான இடத்தில் உறுதியான ஆசனம் ஒன்றை அமைத்துக் கொள்ள வேண்டும். அது அதிக உயரமில்லாமலும், அதிக தாழ்வில்லாமலும் இருக்க வேண்டும். அந்த ஆசனத்தின் மீது துணி, மான் தோல், தர்ப்பை பரப்பி அதன் மேல் அமர்ந்து கொண்டு மனத்தை ஒருமைப்படுத்தி, உள்ளத்தையும்,புலன்களையும் கட்டுப்படுத்தி மனத்தைச் சுத்தம் செய்வதற்காக யோகத்தைப் பயில வேண்டும். உடம்பையும்,தலையையும், கழுத்தையும் சமமாக அசைவில்லாமல் வைத்துக் கொண்டு, உறுதியோடு, மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு, திசைகளை நோக்காமல், அமைதியான மனத்துடன், பயமற்றவனாக,பிரம்மச்சரிய விரதம் பூண்டவனாய், மனத்தை வசப்படுத்தி, என்னிடமே மனத்தைச் செலுத்தி,என்னையே குறிக்கோளாக யோகநிலையில் அமர வேண்டும்.” மனதைச் சுத்தம் செய்ய நம்மைத் தயார்ப்படுத்தும் தியான முறைக்கு முதலில் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். அகத்தூய்மைக்குப் புறத்தூய்மை ஒரு ஆரம்பம். மனத்திற்கு நாம் தரும் ஒரு அறிவிப்பு. செய்யப் போகிற தியானம் பவித்திரமானது, தெய்வீகமானது என்று சொல்லும் சூட்சுமமான செய்தி. மேலும் பூச்சிகள், எறும்புகள், புழுக்கள் போன்றவை இல்லாமல் இருக்கும் சுத்தமான இடம் வலியுறுத்தப் படுகிறது. அதே போல உறுதியான ஆசனம் உறுதியான மனநிலைக்கான ஆயத்தம். உறுதியில்லாத ஆசனம் அடிக்கடி மனதின் கவனத்தை சிதறடிக்க வல்லது என்பதால் உறுதியான ஆசனம் பற்றி ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். அதிக உயரம், அதிக தாழ்வு இரண்டும் தியானத்திற்கு அசௌகரியங்களை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் அவற்றையும் தவிர்க்கச் சொல்கிறார். துணி, மான் தோல், தர்ப்பை இந்த மூன்றும் சேர்ந்த இருக்கை எல்லா சீதோஷ்ண நிலைகளிலும் நீண்ட நேர தியானத்தில் அமர அந்தக் காலக் கட்டத்தில் சௌகரியமாகவும்,உதவியாகவும் இருந்திருக்கிறது என்பதால் ஸ்ரீகிருஷ்ணர் இப்படிச் சொல்லி இருக்கிறார். அதற்கென்று நாமும் அப்படி இருக்கையை தயார்ப்படுத்திக் கொள்ள இக்காலத்தில் அலைய வேண்டியதில்லை. நீண்ட நேர தியானத்திற்கு சௌகரியமான, அசௌகரியப்படுத்தாத இருக்கை என்று பொருள் கொள்தல் போதுமானது. அடுத்ததாக உடம்பை நேராக இருத்திக் கொண்டு அமர்வது மிக முக்கியம். பலர் இதைத் தவறாகப் புரிந்து கொண்டு விறைப்பாக உட்கார்ந்து கொள்ள முற்படுகிறார்கள். அது தவறு.விறைப்பாக நீண்ட நேரம் உட்கார்ந்து கொள்ள முடியாது. உடல் பழைய நிலைமைக்கு வர போராட ஆரம்பித்து விடும். உடல் தியானத்திற்கு அனுகூலமாக வேண்டுமே ஒழிய போர்க்கொடி உயர்த்தினால் தியானம் கைகூடாது. எனவே உடலை விறைப்பில்லாமல் இயல்பாக நேராக இருத்திக் கொள்ளப் பழகிக் கொள்வது முக்கியம். அதே போல ’மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு’ என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்லி இருப்பதையும் அப்படியே எடுத்துக் கொண்டு முயற்சித்தால் தலைவலி, தலைசுற்றல் போன்றவை வந்து விடக்கூடும். பகவத்கீதைக்கு சங்கரர் தரும் விளக்கத்தில் முழுக் கவனத்தையும் மூக்கின் நுனிக்கு வரச் சொல்கிறார். அதுவே சரியாகப் படுவதாக முயன்று பார்த்த அனுபவஸ்தர்களும் கருதுகிறார்கள். கண்களை எல்லா திசைகளிலும் அலைபாய விடக் கூடாது என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது ஏன் என்பதை விளக்க வேண்டியதில்லை. கண் போகின்ற இடத்திற்குப் பின்னால் மனமும் போய் விடுகிறது. கண்ட காட்சிகளின் தன்மையில் லயிக்கும் போது மனம் தியான நிலையை விட்டு வெகுதூரம் சென்று விடும். பொதுவாகவே பார்வையை ஓரிடத்தில் நிறுத்த முடியாதவர்களுக்கு கவனத்தையும் குவிக்க முடிவதில்லை என்பது அனுபவ அறிவு. எனவே மனதை அலைபாயாமல் இருக்க பார்வையையும் அலைபாயாமல் வைத்திருத்தல் மிக முக்கியம்.

No comments:

Post a Comment