Saturday, August 16, 2014

யார் சிறந்த பிரம்மசாரி!

யார் சிறந்த பிரம்மசாரி!


ஒருமுறை பிரம்மலோகத்தில், நாரதர் உரையாடிக் கொண்டிருந்தபோது, மூவுலகிலும் நைஷ்டிக பிரம்மசாரி யார் என்ற கேள்வி எழுந்தது. சந்தேகமென்ன, நீதான் நாரதா என்று பிரம்மா சொல்வார் என, நாரதர் நினைத்தார். ஆனால், பிரம்மாவின் பதில் நாரதருக்கு அதிர்ச்சியைத் தந்தது. பூவுலகில் மானிடனாக அவதரித்து, கோகுலத்திலும் பிருந்தாவனத்திலும் லீலைகள் பல புரிந்து கொண்டிருக்கும் ஸ்ரீகிருஷ்ணன்தான் நைஷ்டிக பிரம்மசாரி! என்றார் பிரம்மா. சதா சர்வ காலமும் கோபியருடன் ஆடிப்பாடி ராசலீலைகள் புரியும் ஸ்ரீகிருஷ்ணனா நைஷ்டிக பிரம்மசாரி! என்று நினைத்தபடி உரக்கச் சிரித்தார் நாரதர். சந்தேகம் எனில், தினமும் உணவேதும் அருந்தாமல், நித்திய உபாசனை புரியும் தபஸ்வியான துர்வாசரைக் கேட்டுப் பார், இதற்கான காரணங்கள் தெரியும் என்றார் பிரம்மா. நாரதருக்கு மேலும் சிரிப்பு வந்தது. பசியே பொறுக்க முடியாதவர் துர்வாசர். ஒருநாளைக்கு பல வேளை சாப்பிடுபவர். அளவுக்கு மீறிய போஜனத்தால், கோபதாபங்கள் கொண்டு சாபமிடுபவர். அவரைப் போய்த் தாங்கள் நித்தியமும் விரதமிருக்கும் உபவாசி என்று கூறுகிறீர்களே! இது, முதலில் கூறியதைவிட வேடிக்கையாக இருக்கிறதே என்றார் நாரதர். நாரதா, சதா சர்வகாலமும் நாராயண நாமத்தைச் சொல்லிக் கொண்டு, திருமணம் செய்து கொள்ளாமல், தபஸ்வியாக இருக்கும் உன் போன்றவர்கள்தான், நைஷ்டிக பிரம்மசாரிகள் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்.

உணவும் நீரும் துறந்து, புற்று வளரும் வரை தவத்திலிருக்கும் முனிவர்கள் மட்டுமே உபவாசிகள் என்றும் நீ நினைக்கிறாய். அது தவறு. உண்மை எதுவென்று நீயே நேரில் சென்று தெரிந்து கொள். நித்திய உபவாசி யார்? என்ற கேள்வியை ஸ்ரீகிருஷ்ணரிடமே கேள். யார் என்பதைக் காரண காரியங்களுடன் அழகுற விளக்குவார் அவர். அதேபோல், நித்திய பிரம்மசாரி குறித்த கேள்வியை, துர்வாசரிடம் கேள். கிருஷ்ணர்தான் நித்திய பிரம்மசாரி என்பதை எத்தனை ஆதாரத்துடன் தெளிவுற விளக்குகிறார் என நீயே தெரிந்து கொள்வாய். நீ தெரிந்து கொண்ட உண்மைகளை, உன் மூலம் உலகத்தவர் தெரிந்து கொள்வார்கள் என்றார் பிரம்மா. வழக்கமாக நாரதர் தான் கலக நாடகத்தை ஆரம்பிப்பார். இன்று அவர் தந்தை பிரம்ம தேவர், நாரதரிடமே கலக நாடகத்தை தொடங்கியிருந்தார். தெளிவு பெறப் புறப்பட்ட நாரதர், முதலில் பிருந்தாவனம் வந்தார். ருக்மிணி முதலான அஷ்ட சகிகளை கண்ணன் திருமணம் செய்து கொள்வதற்கு முந்தைய நாட்கள் அவை! கோகுலத்தில் செல்லப்பிள்ளையாக, கோபியர் அனைவரின் பந்துவாக, நண்பனாக கண்ணன் குழலூதி, ஆநிரை மேய்த்து, ஆடிப்பாடி, அகமகிழ்ந்து வாழ்ந்த இளமைப் பருவ நாட்கள் அவை. கோகுலத்து கோபியருடன் ராஸ லீலைகள் புரிந்து மகிழ்ந்த இன்ப நாட்கள் அவை. கிருஷ்ணரைச் சந்தித்து, தனியாகப் பேச வேண்டும் என்று பிருந்தாவனம் வந்த நாரதருக்கு ஒரே குழப்பம்.

எந்த வீட்டில் கிருஷ்ணன் இருப்பான் என்று யோசித்துக் கொண்டே வந்த நாரதருக்கு, எந்த வீட்டில் இருப்பது உண்மையான கிருஷ்ணன் என்பதே தெரியாதபடி, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கிருஷ்ணனாக, ஒவ்வொரு கோபிக்கும் ஒரு தோழனாக கிருஷ்ணன் வியாபித்திருந்தான். திகைப்பும் களைப்பும் மேலிட ஒரு மரத்தடிக்கு வந்த நாரதர், விடியும் வரை அங்கேயே காத்திருந்தார். தான் வந்திருப்பது கிருஷ்ணனுக்குத் தெரியாமலா போகப் போகிறது? அவராக வரட்டும் என்று நினைத்தபோது, அங்கே கண்ணன் பிரத்யட்சமாக நின்றான். ஆனால், கிருஷ்ணனின் முகத்தில் கொஞ்சம் வேதனை தென்பட்டது. ஸ்வாமி, தங்களைக் காணவே வந்தேன். தாங்கள் வழக்கம்போல மகிழ்ச்சியாக இல்லாமல் ஏதோ நோய்வாய்ப்பட்டது போல, களைத்து வேதனையுடன் காணப்படுகிறீர்களே, காரணம் என்ன? என்று கேட்டார் நாரதர். இன்று துர்வாச மகரிஷி அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டுவிட்டார். அதனால் எனக்கு வயிற்று வலி என்றான் ஸ்ரீகிருஷ்ணன். நாரதருக்கு குழப்பம் மேலும் அதிகமானது. துர்வாசர் அதிகம் சாப்பிட்டால் கிருஷ்ணனுக்கு வயிற்று வலி வருவானேன்? நாரதரின் குழப்பத்தைப் புரிந்துகொண்டு, பரந்தாமன் பதில் தந்தான். நாரதா, துர்வாசர் எது சாப்பிட்டாலும் தனக்கெனச் சாப்பிடமாட்டார். சாப்பிடும் முன்பும், சாப்பிட்ட பின்பும் அவர் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் என்று மந்திரம் ஜபித்து, தண்ணீர் அருந்திவிடுவார். அவர் நித்தியமான உபவாசி. அவர் சாப்பிடுகிற அன்னமெல்லாம் என்னையே வந்தடைகின்றன. அவற்றை நானே சாப்பிடுகிறேன். அவர் சுவாசிக்கும் காற்றைக் கூட கிருஷ்ணார்ப்பணமாகவே சுவாசிக்கிறார்.

துர்வாசர் வைராக்கியமான பூரண தபஸ்வி. அவர் கோபதாபங்களுக்கு அவர் பொறுப்பேற்பதில்லை. அனைத்தையும் எனக்கே கிருஷ்ணார்ப்பணம் செய்து விடுகிறார். தனக்கென வாழாது கிருஷ்ணனுக்கே தன்னை அர்ப்பணம் செய்து வாழும் தபஸ்வி அவர் என்றார் ஸ்ரீகிருஷ்ணர். எதையும் கிருஷ்ணார்ப்பணம் செய்யும்போது, அது எத்தனை உயர்வாகி விடுகிறது என்பதை நாரதர் புரிந்து கொண்டார். அவருக்கு உண்மை துலங்கியது. ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி விடை பெற்றார். தனது ஒரு கேள்விக்கு பதில் கிடைத்த மகிழ்ச்சியில், எதையும் கிருஷ்ணார்ப்பணம் செய்யும் துர்வாசரிடம், கண்ணனைப் பற்றிய தன் அடுத்த கேள்விக்கான பதிலைப் பெறப் புறப்பட்டார். துர்வாச மகரிஷி நாரதரை வரவேற்று, வந்த விஷயம் என்ன என்று கேட்டார். பிரம்ம லோகத்தில் நடந்த சர்ச்சையை விளக்கி, மூவுலகிலும் நைஷ்டிக பிரம்மசாரி யார் என்பதை தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டார் நாரதர். சந்தேகமின்றி நைஷ்டிக பிரம்மசாரி அந்த ஸ்ரீகிருஷ்ணனேதான் என்றார் துர்வாசர். அதற்கு விளக்கம் கேட்டார் நாரதர். நாரதா, பெண்களே இல்லாத இடத்தில் இருந்து கொண்டு, அல்லது பெண்கள் தன்னை அணுகுவதைத் தவிர்த்துக் கொண்டு, வாழ்பவன் நைஷ்டிக பிரம்மசாரி அல்ல. பெண்கள் மத்தியிலே வாழ்ந்துகொண்டு அவர்களிடம் எந்தவித ஈடுபாடும் கொள்ளாமல் இருக்கிறவனே உண்மையில் வைராக்கிய பிரம்மசாரி. பதினாயிரம் கோபியருடன் ஆடிப்பாடி ராஸலீலை புரியும் ஸ்ரீகண்ணன், அவர்கள் ஒருவரிடமும் ஈடுபாடு கொள்ளாமல், பற்றற்ற நிலையில் பரப்பிரம்மமாகவே இருக்கிறான்.

அவன் அன்பும் அருளும் அனைவருக்குமே சொந்தம். பிருந்தாவனத்துப் பசுக்களும், கோபிகையரும் அவன் கண்களுக்கு ஒன்றுதான். அவன் அன்புக்கும் அருளுக்கும் ஆண்-பெண் என்ற பேதமில்லை. அவனை மற்றவர்கள் பிள்ளையாய், தந்தையாய், தாயாய், நண்பனாய், காதலனாய், குருவாய், தெய்வமாய் பாவிப்பது அவரவர்கள் மகிழ்ச்சிக்காகவே! அவன் தண்ணீரில் உள்ள தாமரை இலை. அது தண்ணீரில் இருந்தாலும், தண்ணீர் அதில் ஒட்டுவதில்லை. அதுபோலவே, அவன் பற்றற்ற பரம்பொருள். பதினாயிரம் பெண்கள் நடுவே நெருக்கமாக வாழ்ந்து, அவர்கள் பாசத்துக்கும் நேசத்துக்கும் ஆளான போதும், மனதாலும் வாக்காலும், காயத்தாலும் (உடல்) இச்சையின்றி வாழும் அவனே நைஷ்டிக பிரம்மசாரி என்றார் துர்வாசர். நாரதா, உனக்கு இன்னுமொரு உண்மையையும் விளக்குகிறேன். திரேதாயுகத்தில்... பகவான் ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீராமனாக அவதரித்த போது, தந்தை சொல் காக்க வனவாசத்தை மேற்கொண்டான். வனவாசத்தில் ஆயிரக்கணக்கான மகரிஷிகளும் தபஸ்விகளும் தங்கி வாழ வேண்டும் என விரும்பினர். ஆனால் ஸ்ரீராமன், ஓர் இடத்திலும் தங்காமல், வனத்தில் திரிந்து கொண்டிருந்தான். அப்போது தபஸ்விகளும் முனிவர்களும் பகவானின் பிரேமைக்காகவும் அன்புக்காகவும், ஆலிங்கனத்துக்காகவும் ஏங்கித் தவித்தனர்.

அவர்களுடைய தவத்தையும், கோரிக்கையையும் நிறைவேற்றவே அடுத்த யுகத்தில், அவர்களை பிருந்தாவனத்தில் கோபிகளாக்கி, ஸ்ரீகிருஷ்ணன் தன் அன்பாலும் பிரேமையாலும் ஆட்கொண்டிருக்கிறான். அவனைப் பொறுத்தவரையில் கோபியர் எல்லாம் அவனுடைய பக்தர்கள். அவனுடைய பிரேமை பவித்திரமானது. அதில் காமத்துக்கு இடம் இல்லை. எனவே அவனே நைஷ்டிக பிரம்மசாரி என விளக்கம் அளித்தார் துர்வாசர். ஆண், பெண் என்ற சரீர பேதத்தை மறந்து பார்க்கும்போதுதான் ஸ்ரீகிருஷ்ணரை நாம் புரிந்து கொள்ள முடியும். அவன் ஜீவாத்மாக்களை உய்விக்க வந்த பரமாத்மா என்பதை நாரதர் புரிந்து கொண்டார். பின்னால் குரு÷க்ஷத்திரத்தில் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த கண்ணன், எல்லா ஜீவாத்மாக்களிலும் தான் நிறைந்திருப்பதையும், தனக்கு பேதங்கள் எதுவும் கிடையாது என்பதையும் எடுத்துக் கூறினான். அந்தத் தத்துவத்தை இந்தச் சம்பவத்தின் மூலம் நாரதர் உணர்ந்து கொண்டார். நாரதர் துர்வாசருக்கு நன்றி சொன்னார். அப்போதும் கிருஷ்ணார்ப்பணம் என்றார் துர்வாசர். இரண்டு கேள்விகளுக்கும் பதில் கிடைத்த மகிழ்ச்சியில் நாராயண நாமத்தை பாடிக் கொண்டே பிரம்மலோகம் சென்றார் நாரதர். தன் தந்தை பிரம்மதேவரை சந்தித்து, இந்த அரிய சந்தர்ப்பத்தை தனக்கு உருவாக்கிக் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment