Wednesday, June 3, 2015

பிராமணன்...பார்ப்பனன் ....ஒரு விளக்கம் ....


பிராமணன்...பார்ப்பனன் ....ஒரு விளக்கம் ....
“அறுதொழிலோர்” என்று வள்ளுவரும்,திருமூலரும்,அந்தணர் பற்றிக் குறிப்பிட்டனர். வட மொழி நூல்கள், அந்தணர் பற்றிக் கூறும்போது, “ஷட் கர்ம நிரதர்” என்று அழைக்கின்றன.
வடமொழி நூல்களில் வருவனவாக, அந்தணர்கள் செய்யும் தொழில்கள் என்ன ? தமிழ் நூல்களில் உள்ளது போன்று உள்ளதா ?
அந்தணர்களின் தொழில்கள் வட மொழிநூல்களில் பின்வருமாறு :
அத்யயனம் : வேதம் பயில்வது
அத்யாபனம் : வேதம் பயிற்றுவிப்பது
யஜனம் : சுயமாக வேள்வி செய்வது
யாஜனம் : மற்றவருக்கு வேள்வி செய்விப்பது
தானம் : தானம் கொடுப்பது
பிரதிக்ரஹம்: தான் தானம் பெறுவது.
இந்த ஆறு தவிர வேறு என்ன ஆறு ?
வேதத்திற்கு ஆறு அங்கங்கள் உள்ளன. அந்த ஆறு அங்கங்களுமே “சடங்கம்” என்று வடமொழி கூறுகிறது. தற்போது நாம் சடங்கு என்று தமிழில் வழங்கிவரும், சொல்லின் வேர் "ஷடங்கம்" என்ற ஆறு பாகங்கள் என்னும் பொருளில் வழங்கும் சொல்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார்,
“அமரவோர் அங்கம் ஆறும் வேதமோர் நான்கு ஓதி..” என்று கூறுகிறார்.
புறநானூறு ,
“நன்றாய்ந்த நீள் நிமிர்சடை முது புதல்வன்வாய் போகாது
ஒன்று புரிந்த ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒரு முதுநூல் ”
சிவன் ஆறு அங்கங்கள் கொண்ட வேதத்தை எப்போதும் ஓதிக்கொண்டுள்ளான் என்னும் பொருளில் வருகிறது.
இறைவனே ஓதும் வேதத்தை யார் பயிலலாம்,என்ற கேள்வி வருவது இயற்கையே. வேதம் முதலான நூல்கள், ஒரு குலத்தார் மட்டுமே பயிலலாம் என்று, ஆதியில் இருந்தது என்று பகுத்தறிவாளர் கூறுவாரே ? அப்படி உள்ளதா என்றால் இல்லை. வேதத்தை மாணவன் பயிலலாம் என்று இருக்கிறது.மாணவன் யார் ? உபநயனம் ஆனவன் மாணவன். ஆக, பூணூல் தரிப்பு விழா முடித்த ஒரு குலத்துச் சிறுவன் மட்டுமே மாணவனாகலாமா?
அதுவும் இல்லை. அனைவரும் ஆகலாம். ஆதாரம் ?
ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகம் :
“ஜன்மநா ஜாயதே சூத்ர: சம்ச்காரேர் தவிஜ உச்யதே
வித்யயா யாதி விப்ரத்வம் த்ரிபி: ச்ரோத்ரிய உய்ச்யதே”
அதாவது, பிறப்பினால் அனனவரும் சூத்திரன் என்ற பிரிவைச் சேர்ந்தவனே. அனனவரும் நாலாம் வர்ணத்தவர்களே. உபநயனம் என்ற சடங்கினால் ஒருவன் இருபிறப்பாளன் ஆகிறான். (த்விஜ என்பது இரு பிறப்பு என்று பொருள் படும் ). பின்னர் கல்வியினால் விப்ரன் என்ற நிலை அடைகிறான். அதன் பின்னர் இந்த மூன்றும் சேர்ந்து அவனை “ச்ரோத்ரியன்” என்று உயர்ந்த நிலை அடைய உதவுகிறது என்பது இதன் பொருள். மகாபாரதத்தில் யாதவனான கண்ணன் அந்தணனான குசேலனுடன் சேர்ந்து ஒரே குருகுலத்தில் பயின்றதை நினைவில் கொள்ளவும்.
வேறு சான்றுகள் ? காயத்ரி மந்திரத்தின் மூல ரிஷியான விஸ்வாமித்திரர் அந்தணர் அல்லர். மகாபாரதத்தை எழுதியவரும் வேத வியாசர் என்று அந்தணர்களின் தலைவராகப் போற்றப்படும் முனிவரின் தாய் ஒரு மீனவப் பெண். ஆக பிறப்புக்கும் பார்ப்பனனாவதற்கும் தொடர்பில்லை.
தவிஜ என்பது இருபிறப்பாளன் என்று பார்த்தோம். இருமுறை பிறப்பது என்பது என்ன?
உபநயனம் என்ற சடங்கு ( பூணூல் அணிவித்தல்) நடக்கும் முன்னர் ஒரு சிறுவன் வாழும் நிலை ஒரு பிறவி. உபநயனம் முடிந்து அவன் கல்வி கற்கத் துவங்கும் நிலை இன்னொரு பிறவி. உபநயனம் முடிந்தவன் இருபிறப்பாளன்.
இதற்குச் சரியான தமிழ் வார்த்தை உள்ளதா ?
பார்ப்பனன் என்பதே அந்தத் தொடர். ‘பார்ப்பு’ என்பது பறவை என்று பொருள் படும், ‘அனன்’ என்பது அதைப் போன்றவன் என்று ஆகும். பறவையைப் போன்றவன் பார்ப்பனன். ஏனென்றால் பறவைக்கு அது முட்டைக்குள் இருக்கும் போது ஒரு உயிர். முட்டையின் ஓட்டை உடைத்து வெளி வந்தபோது இன்னொரு உயிர். அதுபோல் அஞ்ஞானம் என்ற இருள் அடர்ந்த நிலையில் முட்டைக்குள் உள்ள பறவை போல் இருக்கிறான். உபநயனம் என்று சடங்கு முடிந்து அவன் குருவினிடம் சேர்ப்பிக்கப்படும்போது இன்னொரு உயிர் பெற்று ஞானப் பாதை நோக்கிச் செல்கிறான் என்ற ஒரு ஆழ்ந்த பொருள் பொதிந்த சொல் ‘பார்ப்பனன்’ என்பது.
பூணூல் அணிவித்தவுடன் ஒருவன் த்விஜனாகிவிடுகிறானா ?
இல்லை. பூணூல் அணிவித்த பின் குருவினிடம் ஒப்படைக்கப்படுகிறான். தனக்கு உரிய கடமைகளைச் செய்வதாலும் விரதங்களைக் கடைப்பிடிப்பதாலும் அவன் ஞானத் தேடலில் முன்னேறுகிறான். அதன்பின்னர் குரு அவனுக்குக் கல்வி புகட்டுகிறார்.
பூணூல் அணிவிப்பதை ‘உப-நயனம்’ என்று வட மொழி கூறுகிறது. அதன் பொருள் ‘அருகில் அழைத்துச் செல்லுதல்’ என்பது. குருவின் அருகில் அழைத்துச் செல்லுதல். பின்னர் கல்வி. அதன்பின்னர் அவனது கடமைகளை நிறைவேற்றுதல். பின்னர் உலக வாழ்விலிருந்து வெளியேற வேண்டி மறுபடியும் குருவினிடம் அடைக்கலம். அப்போது குரு இறைவனின் அருகில் அழைத்துச் செல்வார். அது சன்யாசம் – துறவு பூணுதல். அப்போது முதல் உப நயனத்தின்போது அணிவித்த பூணூலும் விலகும்.
உபநயனம் ஆன த்விஜனின் கடமைகளும் விரதங்களும் என்ன ?
கடுமையான பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்ளல், காலையிலும் மாலையிலும் காயத்ரி என்னும் மகா மந்திரத்தை மௌனமாக ஓதுதல், தீ வழிபாடு செய்தல், மலர், சந்தானம் முதலிய வாசனைகளை நுகராமல் இருத்தல், தினமும் காலையில் பிச்சை எடுத்து அதனை உணவாகக் கொளல், வயிறு நிரம்ப உண்ணாதிருத்தல், எப்பொழுதும் உண்மையே பேசுதல், ஒருபோதும் உண்மை தவிர வேறு எதுவும் பேசாதிருத்தல், வயலில் உழவர்கள் ‘தேவை இல்லை’ என்று கீழே கொட்டிய நெல்லைக் கொணர்ந்து உணவு உட்கொளல் முதலிய கடுமையான விரதங்கள் மேற்கொளல் வேண்டும். இவற்றால் அவனது குரு மனத்திருப்தி அடைந்தால் அவர் பாடம் நடத்துவார்.
வயிறு நிறைய உண்ணாதிருப்பது பற்றி வள்ளலார் ,”பசித்திரு, தனித்திரு, விழித்திரு..” என்று கூறியதை ஒப்பிட்டுப்பார்க்க முடியும்.
இப்படிப்பட்ட நியமங்களுடன் வாழ்பவன் த்விஜன் அல்லது பார்ப்பனன்.
ஆக, பார்ப்பனன் என்பது பிறவியாலோ பூணூல் தரிப்பதாலோ வருவதன்று. அது ஒரு பதவி. அதை அடைய மேற்சொன்ன விரதங்கள் தேவை என்று ஸ்ரீமத் பாகவதத்தில் நாரதர் தருமருக்கு உபதேசம் செய்கிறார்.
இவ்வாறு கடின விரதங்களை மேற்கொண்ட ஒருவன் வேதம் பயிலத் தகுதியானவனாகிறான் ; வேதம் படிக்கவேண்டிய தகுதிகளை வளர்த்துக்கொள்கிறான் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.
இதில் நாம் கவனிக்க வேண்டியது : அந்தணனாக ஒருவன் ஆவதற்குப் பல படிகளை அவன் கடந்தாக வேண்டியுள்ளது. ஒரு நுழைவுத்தேர்வு போல் அப்பதவிக்கு உரிய தகுதிகள் மேலும் மேலும் கடினமானவையாகவே உள்ளன. இவ்வளவு தூரம் கடின உழைப்புக்குப்பின் தான் ஒருவன் வேதம் பயில முடியும் என்று வைத்துள்ளதால் வேதத்தின் உயர்ந்த நிலை தெரிகிறது.
மஹா பாரதம் –உத்தியோக பர்வம் – விதுர நீதி வேத அறிவை விற்கும் அந்தணனையும் பிரம்மச்சரியத்தை மீறும் மாணவனையும் ரொம்பவும் கண்டிக்கிறது. “திருடன், கொடுமையானவன், குடிகாரன்,கருக்கலைப்பு ஏற்படுத்துபவன்,பிரம்மச்சரியத்தை மீறும் மாணவன்,தன்னுடைய வேத அறிவை விற்பவன் – இவர்கள் மிகவும் நெருங்கியவர்களாக இருந்தாலும் தண்ணீர் பெறவும் அருகதை அற்றவர்கள்”, என்கிறது விதுரநீதி.
சங்க இலக்கியம் முதல் வள்ளுவர் காலம் கடந்து தற்காலம் வரை வழங்கி வந்துள்ள சொல் பார்ப்பனன் என்பது..
குறுந்தொகையில் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் என்பவரது பாடல் :
“பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பு முறுக்கி னன்னார் களைந்து
படிவ உண்டிப் பார்ப்பன மகனே எழுதாக் கற்பின் இன்சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ மயலோ இதுவே”
சிவந்த பூக்களை உடைய புரச மரத்தின் பட்டையை உரித்துத் தண்டோடும் கமண்டலத்தொடும் விரத உணவு உண்ணும் பார்ப்பன மகனே, உன்னுடைய வேதத்தில் பிரிந்தவர்களைச் சேர்த்துவைக்கும் மருந்தும் உள்ளதா என்ன? என்னும் பொருளில் அமைந்துள்ளது.
இதில் நாம் கவனிக்க வேண்டியது இரண்டு.
ஒன்று “பார்ப்பன மகனே” என்று ஒரு படித்தவனை அழைப்பது.
இரண்டு “எழுதாக் கற்பு ” என்னும் தொடர். அக்காலத்தில் வேதங்கள் எழுதி வைத்துப்படிப்பதில்லை. வாய் வழியாகவே ஒரு குரு தன் மாணவனுக்கு உபதேசிப்பது என்பது வழக்கம். அதனாலேயே அதனை வடமொழியில் “ஸ்ருதி” என்று அழைப்பர். அது தமிழில் எழுதாக் கிளவி என்று அழைக்கப்படுகிறது. மேலும் வேதம் சம்ஸ்க்ருத மொழியில் உருவாக வில்லை. வேதத்தின் மொழி ‘ஸநதஸ்’ எனப்படும் ஒரு ஒலி அமைப்பு. பிற்காலத்தில் அது சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்டது.
அந்தணர்கள் தீ வேள்வி செய்தனர் என்பதை, “தீயினைக் கும்பிடும் பார்ப்பார்..” என்று பாரதியாரும் கூறுகிறார்.
தமிழ் நாட்டில் வேதம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா ? வேதம் ஓதுவது பற்றி சாதாரண மக்கள் என்ன நினைத்தார்கள் ? பழைய கால நிலை என்ன?
பரிபாடல் இவ்வாறு கூறுகிறது :
“நான் மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப ஏம வின்றுயில் எழுதல் அல்லதை வாழிய வஞ்சியும் கோழியும் பல்லக் கோழியின் எழாதெம் பேரூர் துயிலே”
“சேர நாட்டுமக்கள் வஞ்சி மாநகரில் கண்விழிக்கும்போதும் சோழர் தலைநகர் மக்கள் கோழி என்னும் ஊரில் கண் விழிக்கும்போதும் அவர்கள் கோழி கூவுவதைக் கேட்டே கண் விழிக்கிறார்கள். ஆனால் பாண்டியன் தலைநகர் மதுரையில் நாங்கள் அதிகாலியில் வேதம் ஓதும் ஒலியைக் கேட்டே கண்விழிக்கிறோம்”, என்று மதுரையின் பெருமை பேசுவதுபோல் அமைந்துள்ளது.
“வேதம் நிறைந்த தமிழ்நாடு” என்று பாரதியாரும் கூறுகிறார்.
இன்னும் சில விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவன.
இன்றைய நிலையில் பள்ளிகளை நாம் பாட சாலை என்று அழைக்கிறோம். ‘ பாடம் படிப்பதால் அது பாடசாலையானது. பண்டைய நாட்களில் வேதம் ஓதுவதை ‘பாட” என்று அழைத்தனர். எனவே வேதத்தை வார்த்தைகள் கோர்த்து “கனம்” என்கிற முறையில் பாடுபவர்களை ‘கனபாடிகள்’ என்று அழைக்கிறோம். தற்போது இந்தப் ‘பாடம்’ வேதம் அல்லாத மற்ற விஷயங்களுக்கும் வந்துவிட்டது.
வேதம் படிப்பது வரை சரி. யார் கற்றுத் தருவார்கள் ?
இன்று நாம் ஆசிரியர் என்று அழைக்கிறோம். முன்னாளில் “ஆச்சாரியர்” என்பது தற்போது ஆசிரியர் என்று வழங்குகிறது. இன்னொரு சொல் “வாத்தியார்” என்பது.
இது எப்படி வந்தது?
ஒரு தொடர் கதையையோ ஒரு நெடுந்தொடரின் ஒரு பாகத்தையோ நாம் “அத்யாயம்” என்று அழைக்கிறோம். அதுபோல் பல அத்யாயங்களைக் கற்பவரை “அத்யயனம் செய்கிறார்” என்று அழைப்பது மரபு. ( வேத அத்யயனம் செய்தவர் என்று அழைப்பது நாம் அறிந்ததே). அந்த அத்யாயத்தைப் போதிப்பவர் “அத்யாபகர்” அல்லது ‘அத்யாயர்’. அதுவே நாளடைவில் மருவி இன்று “வாத்யார்” என்று நாம் கூறுகிறோம்.
‘அத்யாபகர்’ என்பவர் உயர்ந்த ஆசிரியர். கல்விக்குக் காசு வாங்காதவர். ஆனால் காசு வாங்கிய ஆசிரியர்கள் இருந்தனர். அவர்கள் ‘உப-அத்யாபகர்’ என்று அழைக்கப்பட்டார்கள். நாளடைவில் ‘உபாத்யாயம்’ செய்வது என்பது பணம் வாங்கிக்கொண்டு வைதீக காரியங்கள் செய்வதைக் குறிப்பதாகியது. இன்றும் இந்தியாவின் வட மாநிலங்களில் ‘உபாத்யாயா’ என்ற பெயருடையவர்கள் திகழ்கிறார்கள். வெள்ளையர் ஆட்சியில் நல்ல பெரிய ஆசிரியர்கள் “மஹாமஹோபாத்யாய” என்று பட்டம் வழங்கிக் கௌரவித்தது நினைவில் கொள்ளலாம். ( மஹாமஹோபாத்யாய பண்டிதமணி கதிரேசன் செட்டியார் என்னும் தமிழறிஞர் நம் நினைவில் நிற்கிறார்).
அது தவிர இரண்டு வேதங்கள் கற்றறிந்தவர் ‘திவிவேதி’ என்றும் மூன்று வேதங்கள் கற்றவர் ‘த்ரிவேதி’ என்றும் நான்கு வேதம் கற்றவர் ‘சதுர்வேதி’ என்றும் அழைக்கப்பட்டனர். வடமாநிலங்களில் இன்றளவும் இவை புழங்கிவருகின்றன. வங்காளத்தில் சட்டர்ஜி, முகர்ஜி, சட்டோபாத்யாயா முதலிய பெயர்களும் இவை சார்ந்தவையே.
வேதக் கல்விமுறை குறித்துத் தனியான ஒரு பதிவில் பார்க்கலாம்.
‘உபாத்யாயர்’ பற்றிப் பார்த்தோம். அவர் பொருள் பெற்றுக்கொண்டு பாடம் நடத்தினார் என்பது கண்டோம். எனவே அவர் முன்னோர் நினைவு ( திவசம் ) முதலான நாட்களில் அமரச்செய்து உணவு பறிமாறப்படும் பெருமை இழக்கிறார் என்கிறது மனுஸ்மிருதி. பணம் வாங்காமல் கல்வி வழங்குவதே சிறப்பு என்று அறிவுறுத்துகிறது.
உபாத்யாயர். அவருக்கு மேல் அத்யாபகர். அவருக்கும் மேல் ஆச்சார்யர்.
ஆச்சாரியாரின் குணம் என்ன?எப்படி இருக்க வேண்டும் ?
மூன்று குணங்களைக் கொண்டவராக இருக்க வேண்டும். பண்டைய சாஸ்திரங்களையும் நூல்களையும் நன்றாகக் கற்றுத் தேர்ந்திருக்கவேண்டும் (‘ஆசிநோனி ஹி சாஸ்த்ரார்த்தம்”). கற்றதை அப்படியே வெளியில் நடத்தும் அறிவாளியாக இருக்கவேண்டும் (“ஸ்வயம் ஆசரதே”). இவ்வாறு தான் கற்றவழி தானும் நடந்து மற்றவருக்கும் போதித்து அவர்களையும் அவ்வழியில் நடக்கச்செய்யவேண்டும் (“ஆசாரே ஸ்தாபயத்யபி”).
கல்வி அறிவு நிறைய இருந்தும் அனுஷ்டானம் இல்லாத பிராமணனை விட கல்வி அறிவு இல்லாத ஒரு பாமரனே சிறந்தவன் என்று விதுரநீதி கூறுகிறது.
இதையே வள்ளுவரும் “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்கிறார்.
இன்னொரு இடத்தில் வள்ளுவர், அந்தணன் வேதத்தை மறந்தாலும் பரவாயில்லை ஆனால் ஒழுக்கத்தை விட்டானெனில் முதலுக்கே மோசம் ஏற்படும் என்னும் பொருளில்,
“மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் ” என்கிறார்.
இதற்கும் மேல் மனு தர்ம சாஸ்திரம் கூறுவது நம் கவனத்தை ஈர்க்கிறது :
திருட்டின் தன்மை அறிந்து திருடுகிற நான்காம் வர்ணத்தவனுக்குஅந்த திருட்டுக்கு உண்டான தண்டனையைப் போல் 8 மடங்கு தண்டனை விதிக்க வேண்டும்.அதே குற்றத்தைச் செய்யும் பிராமணனுக்கு 64 மடங்கு அல்லது 100 மடங்கு அல்லது 128 மடங்கு வரையிலும் தண்டனை விதிக்கலாம்.ஏனென்றால் திருட்டினால் வரும் தோஷத்தை பிராமணன் அறிந்திருக்க வேண்டும் என்கிறது அது.
இவ்வளவு தூரம் தமிழிலும் வட மொழியிலும் அந்தணர் பற்றியும் பார்ப்பனர் பற்றியும் செய்திகள் உள்ளன. பிறப்பினால் ஒருவன் அந்தண நிலை அடைவதில்லை என்பதையும், பார்ப்பனன் என்பது இழிச்சொல் அல்ல என்பதையும் கண்டோம். ஆயினும், இவை வெளியில் வருவதில்லையே ? அது ஏன் ?
இவ்வளவு தூரம் அந்தணர்கள் பற்றி நாம் ஆராய வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழலாம். இவ்வளவு கட்டுப்பாடுகள் கொண்ட ஒரு கல்வி முறை மற்றும் வாழ்க்கை வழி முறை நாளடைவில் சிதைந்து போய் அதனால் சமூகத்தில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளை வைணவம் எப்படிக் கையாண்டது என்று அறிந்துகொள்ள இந்த நம் ஆராய்ச்சி பயன்படும் என்று கருதுகிறேன்.
நன்றி ஸ்ரீமான் தேவநாதன் ஸ்வாமி திருவடிகளில் ....

No comments:

Post a Comment