Monday, June 8, 2015

நிறைகுடம்

சைவத் தமிழ் மக்கள்; தங்கள் கலை, கலாச்சார, சமூக நிகழ்வுகளின் போதும், விசேஷ பண்டிகை கொண்டாட்டங்களின் போதும், சுபமங்கள சடங்குகள் நடைபெறும் போதும் நிறை குடம் வைத்து வரவேற்பதும், ஆராத்தி செய்வதும் ஆகம மரபு வழி வந்த வழக்கமாகும்.
சுப நாட்களில் வீட்டு வாசலில் நிறை குடம் வைப்பதன் மூலம் சகல செல்வங்களும் வீட்டில் நிரம்பப்பெற்று இருக்கும் எனவும் இதை மங்களத்தின் அறிகுறியாக இந்துக்கள் போற்றுகின்றார்கள். அத்துடன் நிறைகுடம் வைக்கும் இடத்தில் இலக்குமி வாசம் செய்வாள் (வருகை தருவாள்) என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.
நிறைகுடம் வைக்கத் தேவையான பொருட்கள்
1. நிறை குடம் (நீர் நிறைத்த குடம்)
2. சாணம் அல்லது மஞ்சளினால் செய்த பிள்ளையார் அல்லது பிள்ளையார் சிலை.
3. நெல் அல்லது பச்சரிசி
4. தலை வாழையிலை
5. முடித் தேங்காய் – 1
6. மாவிலை 5 அல்லது 7
7. குத்து விளக்கு 2
8. தேங்காய் எண்ணெய்
9. விளக்குத் திரி
10. விபூதி + கிண்ணம்
11. சந்தணம் + கிண்ணம்
12. குங்குமம் + கிண்ணம்
13. பன்னீர் + செம்பு
14. பலநிறப் பூக்கள்
15. வாழைப்பழம் – ஒரு சீப்பு
16. தேசிக்காய் – 1 உடைப்பதற்கு
17. வெற்றிலை 3
18. பாக்கு 3
19. சாம்பிராணி
நிறைகுடம் வைத்தல்
ஒரு மேசையைச் சுத்தம் செய்து, அதன்மீது சுத்தமான விரிப்பொன்றை விரிக்கவும். அதன்பின் அதன்மீது ஒரு தலைவாழை இலையை இலையின் நுனிப்பகுதி வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமாகவோ அமையுமாறு வைக்கவும். இம் முறை அவ்விடத்திற்கு பொருந்தாவிட்டால், பொதுவாக வரவேற்பு நிகழ்வாக இருந்தால் வருபவர்களுக்கு வலப்பக்கத்தில் இலையின் அகன்ற பகுதி இருக்கக் கூடியதாக வாழைஇலையை வைக்கவும்.
அதன் மேல் நெல் அல்லது அரிசி பரப்பி அதன்மேல் நீர் நிரப்பிய பித்தளை அல்லது சில்வரினால் ஆன கும்ப குடத்தை வைக்கவும். அதன் இரு பக்கங்களிலும் குத்துவிளக்கு ஒவ்வொன்று வைக்கவும். அதன் பின் ஐந்து மாவிலைகளை குடத்தின் வாயில் வைத்து சுத்தம் செய்து வைத்த முடித்தேங்காயை அதன் மேல் வைக்கவும், அமங்கல கிரியைகளுக்கு கும்பம் வைக்கும் போது மாத்திரம் மூன்று மாவிலைகள் வைப்பார்கள்.
ஒரு தட்டத்தில்(தட்டில்) வாழைப்பழச்சீப்பு ஒன்றும், வெற்றிலைபாக்கு (வெற்றிலை ஒற்றைவிழும் எண்ணில்), தேசிக்காய் ஒன்றும்(வைக்கலாம் அல்லது தவிர்க்கலாம்) கும்பத்தின் இடது பக்கத்தில் வைத்து அதனுள் மஞ்சளினால் செய்த பிள்ளையார் அல்லது சிறிய பிள்ளையார் சிலையையும் வைக்கவும்.
இன்னொரு தட்டத்தில் அல்லது தட்டில் சந்தனம், குங்குமம், பன்னீர்ச்செம்பு, விபூதி வைத்து வலப்பக்கத்தில் வைக்கவும். நிறைகுடத்திற்கு ஒரு மாலையும் போடலாம். அல்லது பூக்களினால் அலங்கரிக்கலாம். குத்து விளக்குகளிற்கும் பூக்கள் வைக்கலாம்
நிகழ்வு ஆரம்பமாவதற்கு முதல் இரண்டு குத்து விளக்குகளிலும் திரிகளில் ஒவ்வொன்றையோ அல்லது ஐந்தையுமோ கொழுத்தி விடவும். ஒரு தேங்காயை உடைத்து கும்பத்தின் இரு பக்கங்களிலும் வைக்கவும். அத்துடன் தூபம் ஏற்றுதல் வேண்டும். ஒன்று அல்லது மூன்று சாம்பிறாணிக் குச்சிகளைக் கொழுத்தி வாழைப் பழத்தில் குத்தி விடலாம்.
ஆராத்தி எடுத்தல்:
மங்கள காரியங்களிற்கு ஆராத்தி எடுக்கும் போது சுமங்கலிப் பெண்கள் இருவர் கும்பத்திற்கு முன்னால் நின்று ஆராத்திக்குரியவரை கும்பத்தை பார்த்துக் கொண்டு நிற்கச் செய்து ஆராத்திக்கு உரியவரின் கீழ்ப் பக்கத்தில் ஆராத்தித் தட்டை வலது, இடது பக்கமாக மூன்று முறை ஆட்டி அதன்பின் ஆராத்திக் குரியவரின் வலது பக்கமாக மேலே உயர்த்தி இடது பக்கத்தால் கீழே இறக்கி மீண்டும் கீழே மூன்று முறை ஆட்டி திரும்பவும் இவ்வாறு மூன்று முறை செய்யவும்.
மூன்றாவது சுற்று இறுதியில் ஆராத்தித் தட்டை நடுவே கொண்டு வந்து திரி ஆராத்தியாயின் அவற்றை தட்டில்லுள்ள மஞ்சள்-குஞ்கும கலவையில் அமிழ்த்தி நூர்த்தபின் திரிக் கரியுடன் சேர்ந்த மஞ்சளை-குங்குமத்தை ஆராத்திக் குரியவரின் நெற்றியில் திலகமாக இட்டு திஷ்டி கழிக்க வேண்டும். இதனை ஆராத்தி எடுத்த சுமங்கலிப் பெண்கள் இருவரும் செய்தல் வேண்டும்.
அமங்கல கிரியைகளுக்கு மாத்திரம் உரியவருக்கு இடது பக்கமாக உயர்த்தி ஆராத்தி செய்வார்கள்.
மாவிலை கட்டுதல்:
மங்கள் வைபவங்களுக்கு பந்தலில் மாவிலை கட்டும்போது மாவிலையின் முன்பக்கத்திற்கு நூலை/கயிற்றை வைத்து முன்பக்கமாக மாவிலையை மடித்தல் வேண்டும்.
அமங்கல கிரியைகளின் போது மாத்திரம் மாவிலை பின்பக்கமாக மடிக்கப்படுகின்றது.
பூரண கும்பம்
உலகமும் அதிலுள்ள தாவர சங்கமப் பொருள்களும் சகல ஆத்மாக்களும் நீரிலிருந்தே உண்டாகின்றன. மறுபடியும் பிரளய காலத்தில் தண்ணீரிலேயே லயமாகி விடுவதாக வேதம் கூறுகின்றது. ஆகையால் ஆதிகர்த்தாவாகிய இறைவன் நீரின்மூலம் உருவ வழிபாட்டுக்குக் கொண்டுவருவதே பூரண கும்பத்தின் அர்த்தம்.
இப் பூரண கும்பத்தை மனித உடலாக பாவித்து அதில் இறைவனை தியான, ஜப, பிரார்தனையின்மூலம் யாக சாலையில் வைத்து யாகமும் பூஜைகளும் செய்யப்படுகின்றன. சக்தி வாய்ந்த ஸ்ரீ ஜாக்ஷரங்கள் கொண்ட மந்திரங்களில் கும்பநீர் சுத்தி செய்யப்பட்டு அதில் தெய்வ ஆவாகனம் செய்யப்படுகின்றது. இந்த நீர் கெடாதிருக்க, கராம்பு, ஜாதிக்காய், பச்சைக் கற்பூரம் , குங்குமப்பூ முதலிய திரையங்கள் சேர்க்கப்பட்டுகின்றன. அஷ்டலக்ஷ்மிகளின் கடாட்ஷம் நிறைந்திருக்க மாவிலைவைக்கப்படுகின்றது. தேங்காய், மஞ்சள், குங்குமம், பூ தர்ப்பை, கூச்சம், ஸ்வர்ணம், அக்ஷதை ஆகிய எட்டு மங்கள்ப் பொருள்களால் கும்பம் அலங்கரிக்கப்படுகின்றது.
கும்ப தத்துவம்
மங்கள காரியங்களுக்காக வைக்கப்படும் நிறைகுடத்தில் 5 மாவிலைகள் இடம் பெறுகின்றன. இவ் ஐந்து மாவிலைகளும் ஐம்புலன்களையும் நினைவு படுத்துவதாக அமைகின்றன. குடமும் நீரும் நமது உடலை நினைவு படுத்துவதாகும். நிறைகுடமாகிய பூரண கும்பத்தை ஒரு முழுமதியாக ஒப்பிட்டார் கம்பர். எப்படியிருப்பினும் மனித உடல் ஐம்புலன், சிரசு, இவறை அடக்கும் கருவியாக பூரணகும்பம் இடம்பெறுகின்றது. பூரண கும்பம் இல்லாத சடங்குகளே இல்லை என்றே கூறலாம்

No comments:

Post a Comment