Tuesday, June 2, 2015

பைரவர் வரலாறு

பைரவர் வரலாறு
நம் பாபத்தை நீக்கி, பயத்தினை நீக்குபவர் பைரவர்.படைத்தல், காத்தல், அழித்தல் (அதாவது ஒடுக்குதல்) ஆகிய தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அளிக்கப்பட்டது.
உடுக்கை படைத்தல் தொழிலையும், கையில் உள்ள கபாலம் படைத்தல் தொழிலையும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.
ஆனந்த பைரவராக உலகைப் படைப்பவர், கால பைரவராக உலகை காக்கின்றார். அதன் பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். இவருக்குத் தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எந்தவிதமான பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.
பைரவரை ஏன் வழிபட வேண்டும்?
துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகி போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது. கடவுள் வழிபாடு செய்து விட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார். நவக்கிரகங்களின் வக்கிரத்தால் பலர் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தை அடைகிறார்கள்.
இந்த துன்பங்களிலிருந்து மீள என்ன வழி என்று கேட்டால் பைரவர் பூஜை செய்யுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பைரவர் பூஜை செய்வதனால் கடுமையான தோஷங்களும் நீங்கும் என்று பைரவர் வழிபாட்டில் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.
நமது ஜாதகத்தில் எந்த கிரகத்தால் தோஷம் உள்ளதோ அதற்குரிய பைரவரை வழிபட்டு நலம் பெறுதல் வேண்டும். நவக்கிரங்களின் தொல்லைகளிலிருந்து மீள ஒன்பது விதமான பைரவ வழிபாடுகள் பரிகாரங்களாக ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளன.
பைரவரின் சிறப்பு வடிவங்கள் -
பைரவர் நீலநிற மேனியராய் சிலம்பொலிக்கும் திருவடிகளை உடையவராய், பாம்புகள் பொருந்திய திருஅரையும், தலை மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், மழு, பாசம், உடுக்கை இவைகள் ஏந்திய திருக்கரங்களையும் சிவபெருமான் போன்றே மூன்று கண்களையும், இரண்டு கோரைப்பற்களை உடையவராய், செஞ்சடை உடையவராய், கோபச் சிரிப்பும், உக்கிர வடிவமும் உடையவராய் காட்சியளிப்பார் என்று பைரவரின் தோற்றத்தை புராணங்கள் கூறுகின்றன.
ஸ்ரீபைரவர் காவல் தெய்வமாகையால் காவல் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். இந்த நாயானது பைரவருக்கு பின்புறம் குறுக்காகவும், அவருக்கு இடப்புறம் நேராகவும் நிற்கின்றது.
நகரத்தார் கோவில்களில் காணப்படும் பைரவர் வடிவத்தில் பெரும்பாலும் இரு நாய் வாகனங்களே காணப்படுகின்றன. அஷ்ட பைரவ வடிவங்களில் இந்த நாய் வாகனம் வேறு வாகனங்களாகக் காட்சியளிக்கிறது.
ஸ்ரீ சொர்ண பைரவர் -
செல்வத்திற்கே அதிபதியான குபேரர் மற்றும் இலக்குமி போன்றவர்களுக்கே பொன் கொடுக்கும் தலைமைக் கடவுள் ஸ்ரீ சொர்ண பைரவர். ஒவ்வொரு இல்லத்தின் பூஜை அறையிலும் ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும் ஒவ்வொரு வியாபரத் தலங்களின் கல்லாப்பெட்டி அருகிலும், ஆபரணக் கடைகளிலும் இந்த சொர்ண பைரவரின் திருவுருவப் படத்தை வைத்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீ சொர்ண பைரவரின் படம் அல்லது பொற்காசு அல்லது டாலர் போன்றவற்றை வடக்குத் திசை நோக்கி வைத்து வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும். இப்படத்திற்கு நல்ல மணமுள்ள வண்ண மலர்களை மாலையாக அணிவித்து தாம்பூலம், பழம், தேங்காயுடன் மூன்று வேளையும் பூஜை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
ஸ்ரீ சொர்ண பைரவருக்கு அவல் பாயாசம் விருப்பமான நைவேத்தியமாகக் கூறப்படுகிறது. மிகவும் எளிமையான இந்த நைவேத்தியத்திற்கு மனமிரங்கி தன்னை வழிபடும் அன்பர்களின் இல்லங்களில் செல்வ மழையைப் பொழியச் செய்வார்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சொர்ண பைரவர் படத்தினை கார், மோட்டார் சைக்கிள், வீட்டு வாசற்படி, வரவேற்பறை போன்ற பலரின் நடமாட்டம் உள்ள இடங்களில் வைக்கக்கூடாது. புனிதமான பூஜை அறையில் அல்லது பூஜை செய்யப்படும் இடத்தில் மட்டுமே வைத்து வணங்க வேண்டும்.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தப் படத்தில் அணிவிக்கப்படும் பூமாலை அல்லது பூக்களை வாடி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாடிய பூக்களையோ பிளாஸ்டிக் காகிதப் பூக்களையோ எந்தக் காரணத்தைக் கொண்டும் அணிவிக்கக் கூடாது.
பிரம்மன் ஆணவத்தை அழித்த பைரவர் -
ஆரம்பத்தில் ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மன். உலக உயிர்களையெல்லாம் நாம் தானே படைக்கிறோம் என்ற ஆணவம் தலைக்கேறி சிவபெருமானையே கேலி
செய்தார். இதனையறிந்த சிவன் பிரம்மனின் ஆணவத்தை அடக்கி உலக மக்களுக்காக தன் அங்கமான சர்வசக்தி படைத்த பைரவரை உண்டாக்கினார்.
பிறகு சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவ மூர்த்தி பிரம்மனின் ஒருதலையைக் கிள்ளி எடுத்தார். இப்படி பிரம்மனின் ஆணவத்தை அழித்த இந்த செய்தி அகந்தை கொண்டவர்கள், தவறு செய்பவர்கள் யாராக இருப்பினும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதையும், தீய எண்ணத்துடன் பிறர் செய்யும் இடையூறுகளிலிருந்து நல்லவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்பதையும் உணர்த்தும் மிகப்பெரும் தத்துவமாகும்.

No comments:

Post a Comment