Saturday, June 6, 2015

ஞான கரையினிலே ...........

ஞான கரையினிலே ...........
கந்தசாமி சாலையில் நடந்து கொண்டிருந்தான். அவனுக்கு பின்னால் அவனது நிழல் தொடர்ந்தது. அந்த நிழலை அவனுக்குப் பிடிக்கவில்லை. எப்படியாவது நிழலை விட்டு விலக வேண்டுமென நினைத்து, வேகமாக ஓடினான். நிழலோ அவனை வெகு வேகமாய் பின் தொடர்ந்தது. சரி..எதிர்த்திசையில் ஓடலாமென ஓட ஆரம்பித்தான். அப்போது, அவனது நிழல் அவன் முன்னால் சென்றது.
"இதென்னடா வம்பாப்போச்சு' என எண்ணியவன் மாறி மாறி ஓட அதே நிகழ்வு தொடர்ந்தது. இதை விட்டு விலக வேண்டுமானால், ஒரே ஒரு வழி தான் தெரிந்தது. ஆகாயத்தைப் பார்த்து படுத்து, அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது நிழல் கண்ணில் படவில்லை. சந்தோஷப்பட்டான்.
மனித வாழ்வும் இப்படித்தான். "நான்' "எனது' என்ற ஆணவ நிழல்கள் மனிதனைப் பின்தொடர்கின்றன. அவற்றை விட்டு விட மனிதன் என்ன தான் எண்ணினாலும், அது விடுவதில்லை. ஒருவன் நன்றாகப் படிக்கிறான். படிப்பது நற்செயல் தான். ஆனால், "நான் தான் படிப்பாளி' என்ற ஆணவம் பிறர் மனதைப் புண்படுத்தும் வகையில் பேசச் சொல்கிறது. ஒருவன் பணத்தால் உயர்ந்தவன். தானதர்மமும் செய்கிறான். ஆனால், "நான் தான் கொடை வள்ளல், என்னால் தான் இத்தனை உயிர்களும் சாப்பிடுகின்றன' என்று எண்ணினால், அது ஆணவம்.
கந்தசாமி தரையில் படுத்து, நிழலை விட்டு விடுபட்டது போல, நாமும் இறைவனைச் சரணடைந்து, "என் செயல்களின் பலனெல்லாம் உனக்கே' என ஒப்படைத்து விட்டால், இறைவனுக்குரிய தகுதியை எளிமையாக அடையலாம்.

No comments:

Post a Comment