Wednesday, January 13, 2016

எது சிறந்த பக்தி?

எது சிறந்த பக்தி?

துரியோதனனுடன் சூதாடித் தோற்றார் தருமர். பாண்டவர்களின் ராஜ்யத்தைக் கைப்பற்ற, அவர்களைக் கொன்றொழிக்க பல முயற்சிகள் செய்து வந்தான் துரியோதனன்.

ஆனாலும் பாண்டவர்கள் தர்ம வழியில் நடப்பவர்கள் என்பதால் எல்லாச் சூழ்ச்சியிலும் தப்பி, பத்து வருட வனவாசத்தை ஏற்று, காட்டில் வாழச் சென்றார்கள்.

காட்டில் வாழ்ந்து வந்த குந்திதேவி, பாஞ்சாலி, பஞ்சபாண்டவர்கள் அனைவரும் தினமும் பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் பீமனோ, தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுவான். இதனால் அவன் பிரார்த்தனையில் பங்குபற்றுவதில்லை.

ஒருநாள் "நீ யானைபோல் பலசாலிதான், ஆனாலும் பிரார்த்தனையில் ஈடுபடும் எண்ணமே இல்லாமல் இருக்கிறாயே. உனக்கு ஏன் பக்தி இல்லாமல் போயிற்று!" என்று கடிந்தார் தருமர்.

இதன்பிறகாவது நேரத்திற்கு எழுந்து பிரார்தனையில் கலந்து கொள்வான் என்று எண்ணினார் தருமர். ஆனாலும் வழக்கம்போல தாமதமாகவே பீமன் படுக்கையிலிருந்து எழுவான்.

ஒரு நாள் கிருஷ்ணரை விருந்துக்கு அழைக்க எண்ணி, "நகுலனை, கிருஷ்ணரிடம் அனுப்பி வைத்தார். நகுலன் திரும்பி வந்து "நாளைக்கு கிருஷ்ணருக்கு வேறு வேலை இருக்கிறதாம். வேறு ஒருநாள் தான் அவரால் வரமுடியுமாம்" என்று கூறினான்.

"நீங்களெல்லாம் கூப்பிட்டால் கிருஷ்ணன் வரமாட்டார். நான் போய் அழைத்து வருகிறேன் பாருங்கள்" என்று கூறியவாறு அருச்சுனன் நம்பிக்கையுடன் எழுந்து சென்றான்.

அங்கு சென்ற அருச்சுனனும், நாளை விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தான். "என்ன செய்வது, நாளைக்கு எனக்கு வேறு வேலை இருக்கிறதே" என்றார் கிருஷ்ணர்.

மனம் இடிந்தவனாக,அருச்சுனன் திரும்பினான். அருச்சுனன் போய் அழைத்தும், கிருஷ்ணர் வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டாரே.. என்று எல்லொரும் கவலையாக இருந்தனர்.

வழக்கம் போல, தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுந்த வந்த பீமன், "ஏன் எல்லோரும் என்னவோ போல இருக்கிறீர்கள்?" என்று வினவினான்.

அப்பொழுது தருமர், "ஒன்றுமில்லை, கிருஷ்ணரை இன்று விருந்துக்கு அழைத்திருந்தோம், அவருக்கு வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டார்" என்றார்.

"இவ்வளவுதானா.., நான் போய் கிருஷ்ணரை அழைத்து வருகிறேன்" என்றான் பீமன்.

"நான் போய் அழைத்து வரமுடியாத கிருஷ்ணர்.., நீ கூப்பிட்டு வந்துவிடுவானா.." என்று அருச்சுனன் கிண்டல் செய்தான். பீமன் தனது கதையை (தண்டாயுதம்) தூக்கிக் கொண்டு புறப்பட்டான்.

போகும்போது "பாஞ்சாலி... நீ விருந்து தயார் செய். கிருஷ்ணனுக்கு வெள்ளித் தட்டில் சாப்பாடு எடுத்து வை" என்று கூறிவிட்டுச் சென்றான்.

சிறிது தூரம் போனபின், தன் கதையை வானத்தை நோக்கி வீசி எறிந்தான்! "கிருஷ்ணா! நீ விருந்துக்கு வருகிறாயா இல்லையா? வராவிட்டால் நான் வீசிய கதை என் தலைமேல் விழுந்து, நான் என் உயிரை விடுவேன்." என்று உரக்கக் கத்தினான்.

உடனடியாக கிருஷ்ணர் தோன்றி, பீமனின் தலைக்கு மேலாக விழுந்து கொண்டிருந்த கதையை சட்டென்று பிடித்துக்கொண்டார்! பீமனின் அன்பு அழைப்பினை ஏற்று, அவனோடு விருந்திற்கு வந்தார். பீமனோடு கிருஷ்ணர் வருவதைக் கண்டதும், கேலி செய்தவர் தலை குனிந்தனர்.

பீமனின் பக்திதான் சிறந்தது என்று நிரூபணம் ஆயிற்று. அவன் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை என்பதை உணர்ந்தான் அருச்சனன்.

தினமும் பிரார்த்தனையில் கலந்து கொள்ளாத போதிலும், அவன் பக்தியே தூயதாகவும் தன்னலம் அற்றதாகவும் இருந்தது.

No comments:

Post a Comment