Wednesday, January 13, 2016

பூஜைக்கு எது அவசியம்.?

பூஜைக்கு எது அவசியம்.?

மகா பாரதத்தில் ஒரு கதை வரும்.
அர்ஜுனனுக்கு தான்தான் பெரிய சிவ பக்தன் என்ற கர்வம்.

ஒருநாள் அவன் கண்ணனுடன் கைலாயத்தை நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்தபோது சிவ கணங்கள் மலை மலையாய் பூக்களை அள்ளிக் கொண்டு ஒரு இடத்தில கொட்டிக்கொண்டிருந்ததை கண்டான்.

அதைக் கண்ட அர்ஜுனன் யார் இவ்வளவு மலர்களை சிவபெருமானுக்கு
அர்ச்சிக்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்டான்.

யாரோ பூலோகத்தில் பீமனாம் அவன் செய்யும் பூஜையில்தான் இவ்வளவு மலர்கள் குவிகின்றன ,

இன்னும் நிறைய குவிந்துள்ளதை அப்புறப்படுத்தவேண்டும் , உங்களிடம் பேசக்கூட நேரமில்லை நாங்கள் வருகிறோம். என்று அவன் பதிலுக்குக் கூட காத்திராமல் சென்றுவிட்டனர்.

அவனுக்கு தெரிந்து பீமன் என்றும் சிவ பூஜை செய்து பார்த்ததே கிடையாது.

வயிறு முட்டத் தின்றுவிட்டு உறங்குவதைத்தான் பார்த்திருக்கிறான். அர்ஜுனன்.

உடனே அவன் கண்ணனை இது எப்படி சாத்தியம் என்று கேட்டான்.

அது மிக எளிது.

பீமன் மனதினாலேயே இந்த அகிலத்தில் பூக்கும் அத்தனை மலர்களையும் சிவனுக்கு அர்ப்பணித்துவிடுகிறான்.

அவை முழுவதும் சிவனின் திருவடிகளில் போய் விழுந்துவிடுகின்றன என்றான்

அத்துடன் அர்ஜுனன் கர்வம் அகன்றது.

இறைவனை பூஜிக்கும்போது அர்ப்பணிப்புத்தான் முக்கியமே அன்றி.
கர்வம் கொள்ளுதல் கூடாது என்பதை உணர்ந்தான்..
 

No comments:

Post a Comment