Sunday, January 10, 2016

வெற்றி தரும் பழக்க வழக்கங்கள் !

மாணவப் பருவம் மகிழ்ச்சியான பருவம் மட்டுமல்ல,
வாழ்வின் முக்கியமான பருவமும் அதுதான். மாணவப் பருவத்தில் சீராக படித்து
வரும் மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக மாறிவிடுகிறது. வேடிக்கையாக
பொழுதுபோக்கி, கற்காமல் காலம் கடத்தியவர்களின் எதிர்காலம் கருகிவிடுகிறது.
வேண்டாத பழக்க வழக்கங்களே வெற்றியைத் தடுக்கிறது. எதிர்காலத்தில் ஏற்றம்
பெற்றவர்களைக் கண்டு ஏங்கித் தவித்து வாழாமல், தாங்களும் ஏற்றமிகு வாழ்வு
வாழ மாணவர்கள் சில அடிப்படையான பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்வது
அவசியம். அவற்றை இங்கே அறிவோம்…சுறுசுறுப்பு…
சோம்பலால் சாதனை வருவது இல்லை. சுறுசுறுப்பால் சாதிக்க முடியாதது இல்லை.
மாணவர்களின் தோல்விக்கு அடிப்படை காரணங்களில் ஒன்று சோம்பேறித் தனம்.
பாடங்களை அன்றன்று படிக்காமல் சேர்த்து வைப்பது, ஆசிரியர்கள் பாடம்
நடத்தும்போது கவனிக்காமல் இருப்பது, முக்கியமானவற்றை குறித்து வைத்துக்
கொள்ளாமல் இருப்பது, பாட வேளையில் மற்ற சிந்தனையில் மூழ்கி இருப்பது என
அத்தனை பழக்கங்களுக்கும் அடிப்படையாக இருப்பது அசட்டையான
சோம்பேறித்தனம்தான். கடும் முயற்சி இல்லாமல் சோம்பலை ஒழித்துவிட முடியாது.
சோம்பலை ஒழிக்காமல் சுறுசுறுப்பை பெற்றுவிட முடியாது. ஜெயித்தே ஆக
வேண்டும், சாதித்தே தீர வேண்டும் என்ற ஆசையை மனதிற்குள் வளர்த்துக்
கொண்டால் நிச்சயம் சோம்பல் ஒழிந்து சுறுசுறுப்பு பிறக்கும். வெற்றிக்கான
வழிகளும் திறக்கும்.அதிகாலையை பயன்படுத்துவது…
அம்மா எழுப்பும்போது வரும் அதிகாலை தூக்கம் இனிமையாக தோன்றுகிறதா? அதைவிட
இனிமையானது அதிகாலையில் எழுந்து படிப்பது. இது அறிவையும் பெருக்கும்,
ஆரோக்கியத்தையும் வளர்க்கும். மேலே சொன்ன சோம்பல் பழக்கம்தான் அதிகாலை
எனும் அற்புத பொழுதை விழுங்கிவிடுகிறது.
பள்ளி முடிந்ததும் விளையாட்டு, டி.வி. என்று பொழுது போக்கிவிட்டு, அதிகமான
வீட்டுப்பாடம் இருக்கிறது என்று இரவில் நெடுநேரம் விழித்திருப்பதை பலர்
வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ‘நிறைய நேரம் படிக்கிறான்’ என
பெற்றோரையும் எண்ண வைக்கிறார்கள். ஆனால் அப்படி முயற்சிப்பவர்களுக்கு
கிடைக்கும் பலனைவிட அதிகாலையில் பயில்பவர்களுக்கு நல்ல பலன் கிடைப்பதாக
ஆய்வுகள் கூறுகின்றன. இரவில் வயிற்றுக்கு உண்டபின், தூக்கம் வரும் வேளையில்
பாடங்கள் இருக்கின்றன என்று காபி குடித்து தூக்கத்தை கெடுத்து விழித்து
வேலை செய்வதால் பயனில்லை. இரவு 9-10 மணிக்குள்ளாக எழுத்து வேலைகளை
முடிப்பதும், அதிகாலை எழுந்து படிப்பு வேலைகளை செய்வதும் நல்ல பலன்தரும். முழு கவனம் செலுத்துதல்…
இன்றைய மாணவர்களின் கைகளில் செல்போன்களும், செல்போன் வழி இணைய பழக்கமும்
தவிர்க்க முடியாத பழக்கமாக தொற்றிக் கொண்டுள்ளது. இணையத்தில் கல்வி
சம்பந்தமாகத்தான் பார்க்கிறேன் என்று கூறிக் கொண்டு, சமூக வலைத்தளங்களில்
உரையாடியபடியே படிப்பது பலரது வாடிக்கையாக உள்ளது. வேண்டாத தளங்களில்
பொழுதுகளை வீணடிப்பவர்களும் உண்டு. இப்படி ஏதேதோ கூறிக்கொண்டும், செய்து
கொண்டும் படிப்பை கெடுத்துக் கொள்வது எதிர்காலத்தை பாழாக்கிவிடும்.
படிக்கும் வேளையில் இது போன்ற செயல்களை தவிர்த்து முழு கவனம் செலுத்தும்
பழக்கத்தை கொண்டு வந்தால் வெற்றி நிச்சயம்.
விழிப்புடன் இருப்பது…
பள்ளிக்கு ஏன் வந்திருக்கிறோம், நம் வேலை என்ன, கல்வியால் என்ன பயன்,
எதிர்காலத்தில் என்ன கற்க வேண்டும், எந்த துறைக்குச் செல்ல வேண்டும்,
வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும், நமக்கு என்ன இடையூறுகள்
உள்ளன, நமக்கு என்ன தேவை இருக்கிறது என்பது போன்ற விஷயங்களில் தெளிவாகவும்,
விழிப்பாகவும் இருக்கும் மாணவர்கள் குறிக்கோளை தவற விடுவதில்லை.
விழிப்பின்றி பாடவேளையை புறக்கணிப்பது, வீட்டுப் பாடங்களை குறை வைப்பது,
வேடிக்கையாக பொழுதுபோக்குவது என அசட்டையாக இருப்பதால் கெடுவது உங்கள்
எதிர்காலம்தான் என்பதை யோசித்தால் நிச்சயம் நீங்களும் அதிலிருந்து
விடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.சரிவில் இருந்து மீள்வது…
வெற்றியில் எல்லோருக்கும் விருப்பம் இருக்கும். பலரும் அதற்கு முயற்சி
செய்யலாம். ஆனால் சிலருக்குத்தான் வெற்றி கிடைக்கிறது. வெகுசிலர்தான்
சிகரம் தொடுகிறார்கள். உங்கள் முயற்சியின்போது சில வேளையில் தேர்ச்சி
அடையாவிட்டாலோ அல்லது எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காவிட்டாலோ மனம்
தளர்ந்துவிடக் கூடாது. மதிப்பெண் குறைந்ததற்கான காரணம் என்ன? தவறு
நம்முடையதா? பயிற்சியை அதிகரிக்க வேண்டுமா? உதவிகள் தேவைப்படுகிறதா? என்பதை
சிந்தித்து சரிவையும் சரி செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால் ஜெயம்
நிச்சயம்.கொறிப்பதை நிறுத்துவது…
இடைவேளை பொழுதுகளில் எல்லாம் தின்பண்டங்கள் சாப்பிடும் பழக்கம் மாணவர்கள்
பெரும்பாலானவர்களுக்கு மழலைப் பருவத்தில் இருந்தே தொற்றிக் கொள்கிறது.
அதுவே பிற்காலத்தில் உங்களை நொறுக்குத்தீனி பிரியர்களாக மாற்றிவிடுகிறது.
அடிக்கடி காபி பருகுவது, பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை தொடர்ந்து
சுவைத்து வருவது உங்களை கல்வியில் கவனம் செலுத்த விடாமல் மந்தமான நிலையை
உருவாக்கக்கூடியது. அத்துடன் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும். இந்தப்
பழக்கத்தை மாற்றிக் கொண்டால் கல்வியில் ஆர்வம் பெருகும்

No comments:

Post a Comment