Friday, May 24, 2013

சிதம்பர சக்கரம்:

சிதம்பர ரகசியம்:
சிதம்பர ரகசியமானது சிதம்பரத்தில் மிக முக்கியமான சிதம்பர சக்கரமாக விளங்க்குகின்றது. நடராஜர் திருநடனம் புரிகின்ற சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ள சுவரில் ஒரு சிறு வாயில் உள்ளது. இவ் வாயில் திரை போட்டு மறைக்கப்பெற்றிருக்கும். இத் திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். இதனை திருவம்பலச் சக்கரம், அன்னாகர்ஷண சக்கரம் என்றும் கூறலாம்.

சுதர்சன சக்கரத்தில் செல்வம் கொழிக்கும் தலமாக திருப்பதி விளங்குவது போல் அன்னாகர்ஷண சக்கரத்தால் அன்னத்தில் செழிக்கிறது சிதம்பரம். அந்தக் காலத்தில் அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்று போற்றப்பெற்ற தலமாக விழங்கியது.
நான்கு வேதங்களின் விழுப்பொருளை, அண்ட சராசரங்களின் முழுமுதற்பொருளை குறிப்பது தான் "அருவ நிலை". இங்கே நம் ஊனக் கண்ணுக்குப் புலப்படும் நிலையில் தங்க வில்வ மாலைகள் சார்த்தப்பட்டிருக்கும். சர்வம் சிவமயமாகத் திகழும் இறைவனை, அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவனின் அருளை, கருவறைச் சன்னதியின் திரையை விலக்கியதும், தங்க வில்வ மாலையை தரிசிப்பதால் பெற்றுக் கொள்ளலாம்.
உலகப் பற்று, அறியாமை ஆகியவற்றுடன் வாழ்கிறவன், அவற்றிலிருந்து விலகி மெய்ப்பொருளை உணரும் நிலையைப் பெறுவதற்கு மூடிய திரையினுள்ளே இருக்கிற சிவப்பரம்பொருள் அருள்பாலிப்பதாக ஐதீகம்!
இதனை ஆழ்ந்த பக்தியால் உணரமுடியுமே தவிர, எவருக்கும் உணர்த்த முடியாது. இங்கே தினமும் இரவு 7.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த பூஜையில் கலந்து கொண்டால் உடலுக்கும், மனதுக்கும் புது சக்தியையும், ஆன்மாவிற்கு முக்தியும் கிடைப்பதாக ஐதீகம்.
சிதம்பரத்தில் இந்த அருவ நிலைதான் மூலஸ்தானம். அதுதான் ரகசிய ஸ்தானமும். திரையை விலக்கியதும், நம் அறியாமை என்கிற இருளை விலக்கி அருள்பாலிகின்றார் இறைவன். அப்போது அஞ்ஞானத்தில் இருக்கிற எமக்கு மெய்ஞ்ஞானத்தை உணர்த்துகிறார்.
மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும். அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும் வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகின்றது.
இந்தப் பூமியானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம்,ரசம், நாற்றம் என்ற ஐந்து குணங்களையும்; நீரானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் என்ற நான்கு குணங்களையும்; தீயானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம் என்ற மூன்று குணங்களையும்; வளியென்று சொல்லப்படும் காற்றானது சப்தம், ஸ்பரிசம் எனப்படும் இரு குணங்களையும்; அண்டவெளியெனப்படும் ஆகாசம் ஆனது சப்தங்களால் மட்டுமே நிறைந்த ஒரே குணம் உடையதாகவும் காணப்படுகின்றன.
இந்த அண்டவெளியின் சப்தம் இந்த ஆடலரசனின் ஆட்டத்தால் மட்டுமே நிறைந்து காணப்படுகின்றது. ஆகவே பஞ்சபூதங்களில் ஆகாயம் எனப்படும் ஆகாயமாகச் சிதம்பரம் க்ஷேத்திரத்தில் நடராஜர் ஆடலரசனாய்க காணப்படுகின்றார்.
இந்த ஆடலரசனின் ஆட்டத்தைக் காண வந்த விஷ்ணுவும் அங்கே நிரந்தரமாய்க் கோயில் கொண்டு தினம், தினம் ஆடலரசனின் ஆட்டத்தைக் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருக்கின்றார்.
திருவெண்காடு தலமே ஆதிசிதம்பரம் என்றும்; சிதம்பரம் சிற்சபையில் காணும் நடராஜப் பெருமானின் திருமேனி ராஜராஜன் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அதன் பின்னரே தமிழ்நாட்டில் அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் திருமேனி அமைக்கப்பட்டு வழிபாட்டில் சிறப்புடன் விளங்குவதாகவும் கூறுவாரும் கூறுவர்.
இந்தக் கோவிலின் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், பஞ்சபூதஸ்தலங்களுள் காளஹஸ்தி, காஞ்சிபுரம் மற்றும் சிதம்பரம் ஆகிய மூன்று ஆலயங்களும் ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன. மற்ற இரண்டு தலங்களான திருவண்ணாமலையும், திருவானைக்காவலும் இந்த நேர்கோட்டில் இருந்து சற்றே விலகியுள்ளன.

No comments:

Post a Comment