Saturday, May 18, 2013

வசியம் என்பது,,,,,,,,,,,,,,, தேஜஸ் என்பது,,,,,,,,,,,,,,,,,,,,

வசியம் என்றாலே அது ஒரு மாயக்கலை என்கிறார் போல ஒரு எண்ணம்தான் எல்லோரிடமும் இன்று உள்ளது. உண்மையில் “வசியம்” என்பது மனித சக்திக்கு உட்பட்ட ஒரு ஆற்றல்.

வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொரிடமும் அவர்களது வெற்றிக்கு பின்னால் ஒரு சக்தியாக இருந்திருப்பது வசியமாகத்தான் இருக்க முடியும்.

அரசியல் வாதிகள் தங்கள் பேச்சின் வசீகரத்தால் தான் வெற்றி பெற முடியும். நடிகர்கள் தங்கள் நடிப்பின் வசீகரத்தால் தான் புகழ் பெற முடியும்.

தெருவில் குச்சி மிட்டாய் விற்பவர்கள் கூட வசீகரித்தால் தான் விற்பனை செய்கின்றனர்.

அஷ்டமா சித்துக்களில் ஆறாவதாக விளங்கும் சித்து “வசித்வம்” என்னும் வசிய சக்தியாகும். வசிய சக்தி இரண்டு விதமானது. சில மூலிகைப் பொருட்களால் மந்திர தந்திரமாக செய்யப்படுவது ஒரு வகை சக்தி.

மனதை ஒருமுகப்படுத்தி எண்ணங்களைக் கொண்டு இந்த உலகத்தவரை வசப்படுத்துவது இன்னொரு வகை சக்தியாகும்.

முதல் வகையான மந்திர தந்திரமான சக்தியைப் பெற, அதர்வண வேதம் சில வழிமுறைகளைக் காட்டுகிறது. பீதாம்பர ஜாலம், மற்றும் மகேந்திர ஜாலம் என்னும் முறைகளெல்லாம் இதோடு சேர்ந்ததுதான்.

இது கிட்டத்தட்ட பாம்பு, தேள், சிங்கம், புலி போன்ற கொடிய உயிரினங்களை பிடித்து அவைகளை அடக்கி ஆளுவதைப் போன்ற ஒரு கடின வழி முறையாகும்.

ஆனால், இரண்டாவது முறையான மனதை ஒரு முகப்படுத்தி எண்ணங்களைக் கொண்டு உலகத்தவரை வசப்படுத்துவதே சிறந்த வழி முறையாகும்.

ஒரு ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால் இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரிடமும் ஒருவித வசீகர சக்தி இயல்பாகவே இருக்கிறது.

மயில் தனது அழகிய தோகையால் எல்லோரையும் வசீகரிக்கிறது. பாம்பு கூட தனது அழகிய படத்தால் பார்ப்பவர்களை அப்படியே கட்டிப் போடுகிறது. மனிதர்கள் வரையில் சிலரது அழகு நம்மை வசீகரிக்கும். சிலரோ இனிய சொற்களால் நம்மை அப்படியே சொக்க வைத்து கட்டிப் போடுவார்கள். இதெல்லாம் இயல்பாகவே பிறவியிலேயே அமைந்த வசீகர அம்சங்கள் ஆகும்.

இதை வளர்த்துக்கொண்டு உச்சத்திற்கு செல்லவும் வழிகள் உள்ளன.

ஒருவரின் தனித்திறன் என்பது பட்டை தீட்டப் படும் பொழுது வசியசக்தியாக மாறுகிறது. பட்டை தீட்டி கொள்வது எப்படி என்பதில் தான் சூட்சுமம் இருக்கிறது.

“வசீகரம்” என்பது அழகு சார்ந்த ஒன்று. அழகோ ஆளுக்கு ஆள் மாறுபடும். ஒருவருக்கு மிக அழகாக தெரியும் ஒரு விஷயம், இன்னொருவருக்கு சுமாராகத்தான் தெரியும்.

எல்லோரும் ஒப்புக்கொண்டு மயங்குகிற அழகை “தேஜஸ்” என்பார்கள்.

தேஜஸ் என்பது பிறக்கும்போதே நம்முடன் பிறந்து வருகிற ஒன்று கிடையாது. அழகு சாதனங்களாலும் அதை அடைய முடியாது.

தேஜஸ் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்திருக்கும் ஒரு காந்த ஓளி ஆகும். இது வெளிப்பட மனமானது அலைபாயாமல் இருக்க வேண்டும். மனதை எண்ணங்களே இல்லாமல் அடக்கி கட்டுப்படுத்தத்தான் யோகம், த்யானம் முதலியவைகளை பழகுகிறோம்.

மனதை தளும்பிக் கொண்டேயிருக்கும் ஒரு நீர்நிலையோடு ஒப்பிடலாம். அப்படி ஒரு நீர் நிலையில் தெளிவாக எதையும் பார்க்க முடியாது. ஒரு சிறு அசைவுமில்லாதபடி நீர்பரப்பு இருக்கும் போது அதில் நாம் எட்டிப் பார்த்தால் நம் முகம் கண்ணாடியில் பார்க்கிற மாதிரி மிகத் தெளிவாகத் தெரியும்.

நம் மனதும் இதுபோல் எந்த எண்ணங்களும் இன்றி அலைபாயாத்தன்மையுடன் இருக்கும் போது, மனதை ஆட்டிப் படைத்த சக்தி கட்டுப்படுத்தப் பட்ட நிலையில் உடம்பின் புறத்தில் பீறிட்டுச் செல்ல முயலும். அப்போது நமது தோலின் நிறம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அது பொன்னைப் போல் ஒளிரும். குறிப்பாக முகமும், கண்களும் ஒருவித ஓளி வந்து ஒட்டிக் கொண்டு மின்னுகிற மாதிரி மின்னும். இதைத்தான் தேஜஸ் என்கிறோம்.

இதற்கு முகத்தில் விபூதி, திருமண், குங்குமம் முதலியவை தரிக்கும் பழககங்களும் துணை செய்யும். நமது நெற்றியில் புருவ மையத்தில்தான் ஆக்கினை என்னும் சுடர் இருக்கிறது. இந்த சுடர் தீச்சுடர் போன்றதன்று. இது ஒருவித மிதமான வெப்பம். இதனால் அந்த பாகத்தில் ஒருவித கொழுப்பு கரைந்து திரவமாய் பரவியிருக்கும். இது ஞான திரிஷ்டிக்கு எதிரானது. பளிச்சென்ற கண்ணாடியில் எண்ணையைப் பூசினால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும். நாம் தரிக்கும் திலகங்கள் நீரில் குழைத்து பூசப்படுவதாலும், அவை உறிஞ்சும் தன்மை படைத்ததாலும் அந்த குணத்தால் புருவ ஆகினைக் கொழுப்பு என்னும் துர்நீர் உறிஞ்சப்பட்டு ஆவியாகிவிடும். இது ஒருநாள், ஒருமுறை திலகம் இட்டுக் கொள்வதால் நிகழ்வதில்லை. வழக்கமான செயல்பாடாய் இருக்க வேண்டும்.

மஞ்சள் குங்குமத்துடன் திகழும் பல சுமங்கலிப் பெண்கள் முகம் பளிச்சென்று இருக்க இதுவே காரணம். இப்படி த்யானம், திலகம் இரண்டிலும் தவறாமல் இருப்பவர்கள் முகத்தில் புத்தொளி புரளும். அதுதான் “தேஜஸ்”.

“தேஜஸ்” வசியத்தின் முதல் படி.

வசியத்தை மாயாவித்தையாக கருதுபவர்கள் தான் அதிகம். அதற்கு காரணமும் இருக்கிறது. சில உபாசகர்களும், மாந்த்ரீகர்களும், விபூதி, மை முதலியவற்றால் எதிரியை வசியப்படுத்தும் வித்தை தெரிந்தவர்களாகவும், வேண்டாதவர்களை அடக்குவதற்காக அந்த வித்தையை பயன்படுத்துகின்ற்வர்களாகவும் இருக்கின்றனர்.

பொதுவில் வசியம் என்பதே மனமும் அதன் உணர்வுகளும் சார்ந்த ஒன்று. இது பஞ்ச பூதத்தில் ஆகாய அம்சமாகும். மனித உடலில் ஆகாய அம்சமாகும். மனித உடலில் ஆகாய அம்சமாக உள்ளதை குரங்கு போல ஆடி வைக்க கற்றுக்கொண்டுவிட்டால் வசியக்கலை வசப்பட்டு விட்டது என்று பொருள்.

ஆசை மிக உள்ள மனிதர்களை சுலபமாக வசியப்படுத்தி விடலாம். ஆசை என்பது ஒருவித உலகப்பற்று. இதனால் புலன்களுக்கு இன்பம் ஏற்படுகிறது. உதாரணமாக ஒருவன் ஒரு பெண்ணை விரும்புகிறான் என்றால் அவள் உடம்பை விரும்புகிறான் என்றே பொருள். அவளும் அவனுக்குப் பிடித்த அழகில் நின்று அவன் மனதை பாடாய் படுத்துகிறாள்.

அதாவது கண்கள் ஒரு அழகைக்கண்டு கருத்தில் மயங்கி அதன் காரணாமாய் பித்தாய் மாறிவிடுவதே ஆசை. இப்படி ஆசை உடையவர்களின் உள்ளம், உடம்பு இரண்டும் பலவீனமான நிலையில் இருக்கும். இதை இப்படியும் கூறலாம், உள்ளம் உடல் இரண்டுமே பஞ்ச பூதக் கலவைதானே? அந்த கலவை வலுவில்லாதபடி இருக்கும்.

யாரெல்லாம் பேராசை உடையவர்களோ அவர்கள் மிக பலவீனமானவர்கள் என்பதே உண்மை. அதனால் தான் சித்தர்களும் “ஆசையை” அறுக்க சொன்னார்கள். நம் பலவீனத்தை விலக்கி நம்மை கடை தேற வைக்க அவர்கள் செய்த முயற்சி.

இப்படி பலவீனமானவர்கள் காலில்லாதவன் விழுந்து விடாதபடி நிற்க எதையாவது பற்றிக் கொள்ள துடிக்கிற மாதிரி தாங்கள் ஆசைப்படும் விஷயத்தை அடைய மனதளவில் அதையே பற்றிக் கொண்டு துடிப்பார்கள். இந்த நிலையில் உடம்பிலும் ரசாயன ரீதியாய் பல மாற்றங்கள் நிகழும். உடம்பில் பலவிதமான சுரப்பிகள் உள்ளன. அவை உணர்வுகளின் தன்மை அழுத்தத்திற்கு ஏற்ப சுரக்கக் கூடியவை.

அவை சுரக்கத் தவறினால் பெரிய அளவில் மனதில் எண்ண அலைகள் ஏற்படாது. சில மன நோயாளிகளை குணப்படுத்த உடம்பை கட்டிப் போடுவது ஒரு வகை. ஷாக் ட்ரீட்மென்ட் கொடுப்பது, ஊசி போட்டு துவண்ட நிலையில் கிடத்துவது போன்றவை கண்டிருக்கலாம். இதிலிருந்து உடம்பும் மனமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருப்பது புலனாகும்.

அவ்வகையில் உடம்பு என்பது பஞ்ச பூதக்கலவை. அந்த கலவை வெளியில், அதாவது ஆகாயத்திலும் தொடர்பினை உடையது. நம் வீடு தொலை பேசியைக் கொண்டு உலகில் யாரோடும் ஆகாய மார்கமாக பேச முடிவது போல இந்த உடம்பும் ஆகாய மார்கமாக பிரபஞ்ச வெளியில் பலவித தொடர்புகளை கொண்டிருக்கிறது.

வசிய மை, மந்திரித்த விபூதி முதலானவை அந்த தொடர்புகளில் ஒருவித கூடுதலான கிளர்ச்சியை ஏற்படுத்தக் கூடியவை. அதன் காரணமாக வசியத்துக்குரியவர் தூண்டப்பட்டு செயல் படுவார். அவரது மன நிலையை, புறத்தில் உள்ள அலை வரிசைகளால் வெளியே இருந்து நிர்வகிக்கலாம்.

வசியம் இயற்கை வசியம், செயற்கை வசியம் என்று இரு பிரிவுபடும். ஒருவரின் ஈர்க்கும் சக்தி எதுவோ, அதைக் கண்டு கல்வி மற்றும் சிந்தனைச் சிறப்பால் பலப்படுத்துவது மற்றொன்றாகும்.

செயற்கையான வசிய முறைகள் பற்றி மந்திர தந்திர நூல்களில் பல செய்திகள் காணக் கிடைக்கின்றன. இந்த புத்தகங்களைப் படித்து இதிலுள்ள படி செயல்படப் பார்த்து தங்களை இழந்துவிட்டவர்கள் அநேகம்.

ஒருவரது புத்தகம் படித்து மந்திர தந்திரம் கற்றார்களா என்றால் இல்லை என்பதே பதிலாகும். மந்திர தந்திரம் கற்க நமது ஜாதகத்தில் அனுமதி இருக்க வேண்டும்.

மந்திர தந்திரங்களைக் கற்பது பெரிதல்ல. அதை கற்பது மிக ஸ்ரமமானது. நல்ல காரியங்களுக்கு மட்டுமே அதை பயன்படுத்துவது அதைவிட ஸ்ரமமானது.

சாதக விதிப்பாடு காரணமாக இவைகளை கற்றுக் கொண்டு விட்டவர்கள் சில காலத்திற்கே நேர்மையாக இருக்க முடியும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் மாறிவிடும் நிலைதான் இன்று உள்ளது.

மந்திர தந்திரங்களை அறிந்து செயல்படுத்துவதும் சாதாரண விஷயமில்லை. அது புலி வேட்டைக்கு ஒப்பான ஒன்று.

அந்த நாளில் தாங்கள் பேச்சைக் கேட்டு தாங்கள் காலடியிலேயே பலரும் கிடக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சிலர் ஜாலத்திரட்டு வித்தைகளில் ஈடுபட்டார்கள். இதற்காக அவர்கள் ஊமத்தை, பொன்னாங்கண்ணி, செவ்வரளி, கஞ்சா, செங்குவளை, பொன்னாவரை, புனுகு, பாதரசம், கோரோசனை, புல்லாமணக்கு, செந்நாயுருவி போன்ற தாவர உலோக வகயாரக்களை திரட்டி எடுத்து வந்து இவைகளை தனித்தனியே பிழிந்து சாறு எடுத்து பின் ஒன்றாக சேர்த்து ஒரு கல்வத்தில் இட்டு (மூலிகைப்பானை) மத்து கொண்டு மை போல் அரைத்து வழித்து பின் அதை பகவதி உபாசன பூசையில் வைத்து, பத்தாயிரத்து எட்டு முறை பகவதி பிராண மந்திரத்தை இடைவிடாது ஜெபித்து, அப்படி ஜெபித்த கையோடு அந்த மையைத் தீண்டும் பொழுது அதில் தீண்டுபவரின் உடல் மின்சார ஜெப சக்தியும் சேர்ந்திட, அந்த மையானது வேலை காட்டத் தொடங்கும்.

இந்த மையை வைத்துருப்பவர்கள் எவரைச் சந்தித்தாலும் அவர்கள் இவர்களிடம் வசியமாவார்கள். இந்த மை உள்ளவர்களைத் தேடி பல மாதர்களும் தானாக வந்து சேருவார்கள். இவர்கள் சொன்னால் அவர்கள் மாடி உச்சியிலிருந்து கீழ் விழுந்து தற்கொலை கூட செய்து கொள்வார்கள்.

மைக்கு அவ்வளவு சக்தியா என்று எண்ணத்தோன்றும். அது பலவிதமான பஞ்ச பூதக் கலவையால் உருவான ஒன்று. மையாக மாறிய நிலையிலும் அதன் கதிர்வீச்சு செயல்பட்டபடி இருக்கும். அது எந்த மனிதர் மேல் எல்லாம் படுகிறதோ அவர்கள் அந்த கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு பொதுவில் எதிரிலுள்ள நபர் பற்றிய எதிர்மறையான எண்ணங்களை மறந்து போவார்கள். மாறாக ஒருவித சாம உணர்வை உருவாக்கிக் கொண்டு நேசிப்பார்கள்.

ஆனாலும், இன்று இந்த முறைகள் ஒழிந்து விட்டன. காரணம் … பல வசிய மூலிகைகளை நாம் இழந்துவிட்டோம். காடுகள் அழிக்கப்பட்டதில் அவைகளும் சேர்ந்து அழிந்துவிட்டன.

எனவே, மந்திர தந்திர முறைகளால் இனி வரும் காலங்களில் வசிய சக்திகளை அடைவது சற்று அசாத்தியமே.

வசியம் என்பதற்கு இன்னொரு பொருள் மயக்குவது. மயக்கம் என்றாலே தன்னிலை இழப்பது என்பதுதான்.

தன்னிலை இழப்பது என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு. அதுதான் பக்தி. எவன் ஒருவன் பக்தியால் இறைவனிடம் தன்னை இழக்கிறானோ, அவனே பேரருளுக்கு உற்றவன் ஆகிறான். ஆனால், இறைவனிடம் மயங்கி தன்னை இழப்பதற்கும், பௌதீக அழகுகளிலும், சாமர்த்தியங்களிலும் மயங்கி, தன்னை இழப்பதற்கும் மிக வித்யாசம் உள்ளது. இறைவனிடம் நாம் நம்மை இழந்தால் முக்தி கிட்டும்.

பௌதீக மயக்கங்களிடம் நாம் நம்மை இழந்தால் அதே முக்தி தூரப்போய்விடும். உலக வாழ்வில் பற்றுதல் ஏற்பட்டு அதனாலேயே ஆசை அதிகரித்து தவறுகள் செய்து, பின் அந்த வினைகளில் சிக்கிக் கொண்டு மீள முடியாதபடி அல்லாடத் தொடங்கி விடுவோம்.

இதனாலேயே வசிய சித்தி பெற்றவர்கள் அதை பௌதீக விஷயங்களுக்குப் பயன்படுத்தாமல் இறைவனை வசப்படுத்த அதை ஒரு சாதனமாகக் கொண்டார்கள்.

சில வசிய மந்திரங்கள் பற்பல தேவதைகளை நமக்கு அடிமையாக்கும். அந்த தேவதைகளிடமிருந்து நம் வினைத் துன்பங்களில் இருந்து விடுதலை கேட்க வேண்டும். மாறாக அவைகளிடம் இகபர சுகங்களை யாசிக்ககூடாது.

வினைத் துன்பங்கள் நீங்கிய நிலையில் வசீகரிப்பும் அதிகரித்து அதன் காரணமாக இறைவனை எண்ணிச் செய்யும் தவமானது, வெகு வேகமாக ஈடேறும். பல நூறு ஆண்டுகள் தவம் செய்து அடைய வேண்டிய பலனை, வசீகரிப்பு மிகுந்தவர்கள் சில ஆண்டிலேயே அடைந்திடலாம். அஷ்டமா சித்துவில் “வசிய சித்து” வின் உண்மையான பணி இதுவே. அதற்கு மாறாக இதை பயன்படுத்துகிறவர்கள் உலக வாழ்வில் உழன்று கொண்டே இருப்பார்கள். குட்டிக் குட்டி தேவதைகளிடம் சிக்கிக் கொண்டு விடுவார்கள். முதலில் அவர்களுக்கு கட்டுப்படும் அந்தத் தேவதைகள் பின்னர் அவர்களை விழுங்கிவிடும்.
 

No comments:

Post a Comment