Monday, May 13, 2013

மகாலட்சுமியை மான் வடிவிலும் போற்றுகின்றனர்

மகாலட்சுமியை மான் வடிவிலும் போற்றுகின்றனர். இதனால் மானுக்கு, "ஹரிணி'' என்ற பெயரும் உண்டு. ஹரியாகிய மகாவிஷ்ணுவின் மனைவி என்பதால், மகாலட்சுமிக்கு இப்பெயர் அமைந்தது. மான் செல்வத்தின் அடையாளமாகும். இதனால்தான், செல்வந்தர்களை "ஸ்ரீமான்'' என்று அழைக்கும் பழக்கம் ஏற்பட்டது.
ஒருசமயம் இலட்சுமி பிராட்டி, கண்ணுவ முனிவரின் சாபத்தால் மான் வடிவை அடைந்தாள். பல இடங்களில் திரிந்தபின், திருமால் யோகமூர்த்தியாக அமர்ந்திருந்த பர்ணசாலைக்கு வந்தாள். அவளைக்கண்ட திருமால், அன்புடன் பார்த்தார்.
அந்த மான் கருவுற்றது. கருவுற்ற அவள், வள்ளிக்கிழங்கு எடுத்த குழியில் குழந்தையை இட்டாள். வேடர்கள், அக்குழந்தையை எடுத்து வளர்த்தனர். வள்ளி என்னும் பெயரில் வளர்ந்த அந்தப்பெண் தவம் செய்து, முருகனை மணந்தாள்.
வசந்த மாதவர் பூஜை......
அட்சய திரிதியையன்று, பெருமாளை வசந்தமாதவர் என்ற திருநாமம் சொல்லி அழைத்து வணங்கலாம்.இது தவிர மகாலட்சுமியையும் வணங்கலாம். பல கோயில்களில் கருவறை வாசல் உச்சியில் கஜலட்சுமி உருவம் பொறிக்கப் பட்டிருப்பதைக் காணலாம். அந்த கஜலட்சுமிக்கு கருவறை வாசலை திறக்கும்போதும், அடைக்கும்போதும் மந்திரப்பூர்வமாக பூஜை செய்யப்படுகிறது.
சிவாலயங்களில் நடைபெறும் கும்பாபிஷேகம் மற்றும் பிரம்மோற்சவத்திற்கு முன்னதாக தனபூஜை என்னும் பெயரில் லட்சுமி பூஜை நடத்தப்படுகிறது. சிவாலயங்களில் கும்பாபிஷேகம் நடத்தும்போது யாகசாலையின் நான்கு புறமும் உள்ள நான்கு வாசல்களின் மேலும் மகாலட்சுமி, தோரண சக்தியாக வீற்றிருப்பாள்.
அட்சய திரிதியை பாடல்.........
மகாலட்சுமிக்கு "இராஜ்யஸ்ரீ'' என்ற பெயரும் உண்டு. இப்பெயரே இராஜஸ்ரீ என பிற்காலத்தில் திரிந்தது. ராஜ்யங்களுக்கு எல்லாம் அதிபதி லட்சுமி என்பதால் இவளுக்கு இப்பெயர் அமைந்தது. அட்சய திரிதியை அன்று காலையில், திருவிளக்கு முன்பு கீழ்க்கண்ட பாடலை 16 முறை பாடி லட்சுமியை பூஜித்தால் அளப்பரிய செல்வ வளம் கிடைக்கும்.
பொன்னும் மணியும் புவி ஆள் செங்கோலும் மென்பூந்துகிலும் மின்னும் மகுடம் முதலாய பூணும் வியன் அழகும் மன்னும் வல்வீரமும் வாகையும் ஆதிய வாழ்வு அனைத்தும் நன்னுதற் செந்திரு மங்கைதன் நாட்டங்கள் நல்குபவே.

No comments:

Post a Comment