Monday, May 13, 2013

அட்சய திருதியை எப்படி பிரார்த்திப்பது?

அட்சய திருதியை நாளில் கோவில்களுக்குச் சென்று வழிபட வேண்டும். செல்வம் இல்லாத வாழ்க்கை சிறப்பாக அமையாது. லட்சுமியே செல்வத்திற்கு அதிபதி. அவளிடம் "தாயே நீ தரும் செல்வத்தில் ஒரு பகுதியை நிச்சயம் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துவேன். ஏழை எளியவர்களுக்குத் தானம் செய்வேன். நோயாளிகளுக்கு உதவுவேன்'' என வேண்டிக் கொள்ளுங்கள். மனதார தானம் செய்யுங்கள்.
பவானியில் புனித நீராடல்......
அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.
அட்சய திருதியை பெருமாள்.........
நவ திருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகில் உள்ளது. பெருமாள் குபேரனுக்கு மரக்கால் என்ற அளவை பாத்திரம் கொண்டு செல்வத்தை அளந்து கொடுத்தார். அந்த மரக்காலை தன் தலைக்கு அடியில் வைத்தபடி படுத்திருப்பார். இவருக்கு `வைத்தமாநிதி' என்றும் செல்வம் அளித்த பெருமாள் என்றும் சொல்வார்கள். அட்சய திருதியை நாளில் இவரைத் தரிசித்தால் வாழ்வில் வளம் சேரும்.
வறுமை நீங்கும்.......
மகாலட்சுமி, மாகாவிஷ்ணுவின் மார்பில் இடம் பிடித்த தினம் வளர்பிறை திருதியை தினத்தில் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. மேலும், குசேலர் வீட்டிற்கு வந்ததாக கதை. இந்தச் சம்பவம் நடந்த தினம் அட்சய திருதியை தினத்தன்று தான் என்று கூறப்படுகிறது. ஆகவே அன்று குசேலர் சரித்திரத்தை படித்தால் குடும்பத்தில் வறுமை நீங்கும் என்பது ஐதீகம்.
பசுவுக்கு பழம் கொடுங்கள்.......
அட்சய திரிதியை நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து விட்டு பசு மாட்டுக்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டும். பசு மாட்டில் தான் அனைத்து தேவர்களும் இருப்பதாக ஐதீகம். அத்துடன் ஏழை எளியவர்களுக்கு தானதர்மம் அன்னதானம் செய்வது மூலமும் பெருமாளின் கருணையால் குடும்பத்தில் உள்ள வறுமை, கஷ்டம் விலகும்.
உணவுப்பொருள் வாங்குங்கள்......
அட்சய திரிதியை தினத்தன்று உணவுப் பொருட்கள் வாங்குவது மிகவும் சிறந்தது. பாண்டவர்கள் காட்டில் இருந்த சமயம், அன்ன பஞ்சம் தீர்க்க, கண்ணன் அட்சய பாத்திரம் அளித்த தினமும் திரிதியை தினம்தான். குபேரன் சிவனருளால் சகல ஐஸ்வர்யத்தை அடைந்த தினமும் இதுதான்.
தானமும் பலன்களும்..........
அட்சய திருதியை அன்று ஏழைகளுக்கு ஆடை தானம், அன்னதானம் செய்யலாம். கோடை காலமாக இருப்பதால் நீர்மோர், பானகம் முதலிய கொடக்கலாம். ஏழை, வசதியற்ற மாணவ-மாணவிகளுக்கு `கல்வி' உதவி செய்தால் நல்லது. இவ்வாறு செய்வதால், குடும்பத்தில் பிணி நீங்கி, உடல் ஆரோக்கியம் சிறக்கும். மனக் கஷ்டம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மேலும், குடும்பத்தில் திருமணம், குழந்தை பாக்கியம் உண்டாகும்
என்னென்ன செய்யலாம்.........
அட்சய திரிதியை அன்று, குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், புத்தகம் வெளியிடுதல், புண்ணிய தலங்களுக்கு செல்லுதல், வீடு, மனை, கிணறு சீர்திருத்தம் செய்தல், இடம் மாறிய அதிகாரிகள் பொறுப்பேற்றல், குழந்தைகளுக்கு பெயர் சூட்டுதல், புதிய ஒப்பந்தங்கள் செய்தல், நெல், மஞ்சள், கரும்பு பயிரிடுதல் ஆகியவற்றை செய்யலாம். துர்கா, கவுரி, லட்சுமி சிவபூஜை நடத்தலாம்.

No comments:

Post a Comment