Monday, May 13, 2013

பக்தனுக்காக பணியாள் ஆன பகவான்

பக்தியில் சிறந்தவர்களுக்கு, தாங்கள் எவ்வளவு நேரம் இறைவன் மீதான உள்ளார்ந்த பக்தியில் உருகிப்போனோம், அவனது உணர்வில் உறைந்து போனாம் என்பது தெரியாது. அப்படி ஒரு பக்தியை இறைவன் மீது கொண்டவர்தான் சேனா.உத்திரபிரதேசம் மாநிலத்தில் அவந்திபுரம் என்ற ஊரில் வசித்து வந்தார் சேனா.

இவர் அந்த பகுதியை ஆண்ட மன்னனின் அரண்மனை நாவிதராக பணியாற்றி வந்தார்.ஒரு நாள் காலையில் அரசன், உடனடியாக சேனாவை அழைத்து வரும்படி சேவகர்களை அனுப்பி வைத்தான். சேவகர்கள் வந்தபோது,சேனா பூஜை அறையில் இறைவனை நினைத்து மெய்மறந்த நிலையில் அமர்ந்திருந்தார்.

ஆகையால் சேனாவின் மனைவி, 'அவர் இப்போது வீட்டில் இல்லை' என்று கூறி சேவகர்களை திருப்பி அனுப்பி விட்டாள்.இப்படியே மூன்று தடவைக்கு மேல் நடந்து விட்டது.மன்னனுக்கு கோபம் வராத குறைதான். 'எங்கு போய் தொலைந்தான் இந்த சேனா' என்று கொதிக்க தொடங்கி விட்டான்.

'இதுதான் சமயம், இப்போது உள்ளே புகுந்து மன்னனிடம் சேனாவைப் பற்றி குறை கூறி வைத்தால், அவனது ஆட்டம் முடிந்தது' என்று எண்ணினான் சேனாவின் மீது பொறாமை கொண்ட உறவினன்.எண்ணத்தை நிறைவேற்ற உடனடியாக அரண்மனை நோக்கி புறப்பட்டான்.மன்னனை சந்தித்த அவன், 'அரசே! சேனா வீட்டில் இருந்து கொண்டே இல்லை என்று பொய் சொல்கிறான்.

அவன் தன்னை ஒரு பக்திமான் போல காட்டிக் கொள்கிறான். பூஜையில் இருந்து பாதியில் எழுந்தால் அதற்கு பங்கம் வந்து விடுமாம். அதனால் தான் இந்த பொய்யை கூறுகிறான். உங்களை விட அவன் என்ன பக்தியில் சிறந்தவனா? அவனுக்கு பகவானா படியளக்கிறார்?தாங்கள் அல்லவா படியளக்கிறீர்கள்' என்று திரியேத்தினான்.

மன்னன் கோபத்துடன் சேவகர்களை அழைத்து, 'நீங்கள் சேனாவின் வீட்டிற்கு சென்று, அவன் வீட்டிற்குள் இருந்தால் அவனை கட்டி கடலில் தூக்கி எறிந்து விட்டு வாருங்கள்' என்று உத்தரவிட்டான்.அந்த சமயம் பார்த்து சேனா அரண்மனைக்குள் நுழைந்தார். அவரைப் பார்த்ததும் மன்னன் கோபம் சட்டென தணிந்தது. ஏனெனில் சேனாவின் முகம் அவ்வளவு பொழிவாக இருந்தது.

எவருக்கும் அந்த முகத்தை பார்த்ததும் அன்பு ஊற்றெடுக்கும் என்ற வகையில் இருந்தது அவரது முகம்.வேலையை தொடங்கும்படி உத்தரவிட்டான் மன்னன். சேனாவும், மன்னனுக்கு சவரம் செய்தார். பின்னர் எண்ணெய் தேய்த்து விட்டார்.

அப்போது குனிந்திருந்த மன்னனுக்கு எண்ணெய் கிண்ணத்தில் சேனாவின் உருவம் தெரிந்தது. அந்த உருவத்தை பார்த்ததும் திக்பிரமை பிடித்தது போல் கல்லாய் உறைந்து போனான் மன்னன்.எண்ணெய் கிண்ணத்தில் சங்கு, சக்கர, கிரீடம் தாங்கி நாராயணனின் தோற்றம் தெரிந்தது தான் மன்னனின் நிலைக்கு காரணம்.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தோம் என்பது மன்னனுக்கு புலப்படவில்லை. அவர் தெளிவுற்று எழுந்து, 'உமது கரம் பட்டதும் நான் என்னை மறந்தேன். நான் குளித்து விட்டு வரும் வரை இங்கேயே இருங்கள்'என்று கூறிவிட்டு மன்னன் புறப்பட்டான். அப்போது கைநிறைய பொற்காசுகளை அள்ளி சேனாவிடம் கொடுத்து விட்டு சென்றான்.

மன்னன் அங்கிருந்து அகன்றதும், சேனா தன் வீட்டிற்கு சென்று விட்டார்.நீராடி விட்டு வந்த மன்னன் வந்து பார்த்த போது சேனாவை காணவில்லை. ‘தான் வரும் வரை இருக்க கூறியும் சென்று விட்டாரே’என்று நினைத்த மன்னன், தன் பணியாளர்களை அழைத்து, 'உடனடியாக சேனாவின் வீட்டிற்கு சென்று அவரை அழைத்து வாருங்கள்.

அவர் வரும் வரை நான் உணவு உண்ண மாட்டேன்' என்று கூறிவிட்டான்.அமைச்சர் மற்றும் பணியாளர்களுக்கோ ஆச்சரியம். 'அவன் ஒரு நாவிதன். பணி முடிந்ததும் சென்று விட்டான். அவனுக்காக மன்னர் ஏன் துடிக்கிறார்? இதில் அவர், இவர் என்று சேனாவிற்கு மரியாதை வேறு' என்று பலரும் பலவிதமாக பேசிக்கொண்டனர்.

இதற்கிடையில் பூஜையை அப்போதுதான் முடித்திருந்த சேனாவை,அவரது வீட்டிற்கு சென்ற பணியாளர்கள் அரண்மனைக்கு அழைத்து வந்தனர்.சேனாவை பார்த்ததும் மன்னன், 'சுவாமி! இது நாள் வரை தங்களை நாவிதராக எண்ணி வேலை வாங்கியதற்காக என்னை மன்னியுங்கள்.

காலையில் கண்ட அற்புத காட்சியை மறுபடி எனக்கு காட்டியருள வேண்டும்' என்று கூறியதுடன், பணியாளர்களிடம் ஒரு கிண்ணத் தில் சுத்தமான எண்ணெய் எடுத்து வரும்படி உத்தரவிட்டான்.ஏவலர்களும் உடனடியாக கொண்டு வந்து வைத்தனர்.சேனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. 'நாம் இப்போது தான் பூஜை முடிந்து வருகிறோம்.

ஆனால் காலையில் மன்னர் நம்மை பார்த்ததாகவும், அவருக்கு ஏதோ காட்சி தெரிந்ததாகவும் கூறுகி றாரே' என்று வாய் புலம்பி தவித்தாலும், அவரது மனம் தெளிவு பெற்று விட்டது.மன்னனிடம் தண்டனை பெற்று விடக் கூடாது என்பதற்காக என்னை போல் வந்தாயா? ஆனால் ஆண்டவனை பணியாள் ஆக்கிய பாவியாகிவிட்டேனே!.

இறைவா! உனக்கு கோடி பேர் சேவை செய்ய காத்திருக்கும்போது,எனக்காக சேவை செய்ய வந்தாயா?' என்று வாய்விட்டு கதறினார்.அப்போது அவர் கையில் வைத்திருந்த சவரப்பெட்டி தவறி விழுந்ததில் மன்னன், சேனாவாக வந்த இறைவனுக்கு கொடுத்த பொற்காசுகள் சிதறி ஓடின

No comments:

Post a Comment