Monday, April 27, 2015

கச்சியப்பரின் கந்தபுராணம்

கச்சியப்பரின் கந்தபுராணம்
பிரசன்ன கம்பீரபாரதி தஞ்சை.வி.நாராயணசாமி
விநாயகர் காப்பு
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்
தொண்டைநாடு ஆன்றோர், சான்றோர் பலர் அவதரித்துச் சிறப்பித்த நன்னாடு. இப்புகழ் நாட்டின் திருமுகம் போன்றதே காஞ்சிபுரம். இதை நகரேஷுகாஞ்சி எனப் புகழ்வார் காளிதாஸர். இந்நகரம் முத்தித்தலங்கள் ஏழினுள் ஒன்று. பல அரசர்கள் அரசாட்சி செய்து வந்த தொன்னகரமாகிய நன்னகரமே இக்காஞ்சி. இந்நகரம் கணக்கிலடங்காப் பல வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களைக் கொண்டு விளங்கும் ஒரு புனித பூமியாகும். அதில் மிகுந்த புகழினைக் கொண்டு விளங்குவது ஏகாம்பரேஸ்வரர் கோவில்.
இத்தகைய தெய்வமணம் கமழும் இப்பதியின் வெளிப்பிராகாரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் விகடசக்கர விநாயகர் எழுந்தருளியுள்ளார். திகழ்+தசம்+கரம்=திகடச்சக்கரம் பத்து திருக்கரங்கள் மற்றும் செம்முகம் ஐந்துளான். செம்மை பொருந்திய அழகிய ஐந்து முகங்களையும், பத்து திருக்கரங்களையும் கொண்டவர் சிவபெருமான். விநாயகரும் பத்து திருக்கரங்களையும், ஐந்து திருமுகங்களையும் கொண்டவர் என விநாயகபுராணம் எடுத்துரைக்கிறது. கச்சியப்ப ஸ்வாமிகள் காஞ்சியில் விகடச் சக்கர விநாயகரை வழிபட்ட பின்னரே தான் கந்தபுராணத்தை இயற்றினார் என்பது வரலாறு.
விகடசக்கரன் பெயர்க்காரணம்
தக்கனின் யக்ஞத்தை அழித்த வீரபத்திரர் மீது திருமால் கோபங்கொண்டு தன் சக்ராயுதத்தை ஏவினார். வீரபத்திரர் அணிந்திருந்த வெண்டலை (தலையோடு-கபாலம்) சக்கரத்தைக் கவ்விக்கொண்டது. அதனை மீட்கக் கருதி, திருமாலின் சேனாதிபதியான விஷ்வக்சேனன் வீரபத்திரர் முன் விகடக் கூத்தாடினான். அதைக் கண்டு வெண்டலை நகைக்கவே, அதன் வாயிலிருந்து சக்ராயுதம் வெளிவந்து கீழே விழுந்தது. அதைக்கண்ட விநாயகர் விரைந்தோடி வந்து அதைத் தான் எடுத்து வைத்துக்கொண்டார்.
விஷ்வக்சேனன் விநாயகர் முன் மீண்டும் கூத்தாடி அவரை மகிழ்விக்கச் செய்து, சக்ராயுதத்தைப் பெற்று திருமாலிடம் தந்தார். விகடக் கூத்தாடி மகிழ்ந்து சக்ராயுதத்தைக் கொடுத்தருளியதால், அந்த விநாயகர் விகடச் சக்கர விநாயகர் எனப் பெயர் பெற்றார் என்பது வரலாறு.
இத்திவ்ய க்ஷேத்திரத்தில் ஆதிசைவகுலத்தில் காளத்தியப்ப சிவாசாரியார் என்பவர் குமரக் கோட்டத்து அர்ச்சகராயிருந்து, அப்பெருமானிடத்து அளவு கடந்த பக்தி கொண்டு தொண்டாற்றி வந்தார். இவர், நல்லொழுக்கம், கல்வி, சிவபக்தி, சிறந்த ஞானம், கலையறிவு ஆகிய அனைத்தையும் ஒருங்கே பெற்று சிறப்போடு விளங்கினார். ஆனால் இவருக்கு நெடுங்காலமாக புத்திரபாக்கியம் இல்லாமையால், அவர் அதை ஒரு பெருங்குறையாகவே எண்ணி குமரக் கோட்டப் பெருமானை ஆகம முறைப்படி வழிபாடு செய்து வந்தார். அவரது வலிமை பொருந்திய வழிபாட்டின் பயனாகவும், குமரக்கடவுளின் திருவருளாலும், கற்பினில் சிறந்த அவருடைய அருமைப் பத்தினியார் மணிவயிற்றில் சத்புத்திரன் திருவவதாரஞ் செய்தார். அவருக்கு கச்சியப்பர் என்று நாமகரணம் சூட்டி மகிழ்ந்தனர்.
காலம் கரைந்து செல்ல, குழந்தை வயது ஐந்தை அடைந்ததும், தந்தை அவருக்கு வித்தியாரம்பம் செய்யத் தொடங்கினார். ஸம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் கற்கத் தொடங்கினார் கச்சியப்பர். தன் தந்தையையொத்த அனைத்து நற்குணங்களும் அவரோடு கூடவே வளர்ந்து அணிசெய்தன. பின் அவரின் ஏழாம் பிராயத்தில் உபநயனம் செய்வித்து வேதாத்தியாயனம் செய்பவராயும், பின் வேத வேதாந்தங்களையும், தமிழில் இலக்கண இலக்கியங்களையும் முழுமையாகப் பயின்று வல்லவராக விளங்கினார்.
மேலும் காலம் உருண்டோட விரத நியமனத்தைக் கடைப்பிடிக்கலானார். தமிழ் வேதமாகிய தேவாரம், திருவாசகத்தைச் சிறப்புறப் பயின்று ஓதுவாமூர்த்தியாகவும் விளங்கினார். பின்னர், பல விசேஷ தீட்சைகளைப் பெற்று சைவாகமங்களில் கிரியைகளை போதிக்கும் பகுதிகளை நன்கு கற்றறிந்தார். சைவநிலை நான்கிலொன்றான நிர்வாணதீட்சையும், ஆசாரியாபிஷேகமும், ஆசாரிய பிஷேக ஸ்நானத்தோடு கூடிய சைவ உபதேசமும் பெற்று, சைவாகமத்தின் சாஸ்திரநூல், ஞானநூல், தரும நூல், என்னும் ஞான காண்டங்களையும், உபநிஷத், தேவார, திருவாசகம் ஆகியவற்றின் உட்பொருள்களையும் ஆராய்ந்தறிந்து நன்கு தெளிந்து கொண்டார். பின் குமரக் கோட்டத்துக் குமரக்கடவுளை அன்றாடம் சுத்திகள் செய்து, பிறப்பு நீங்கும்பொருட்டு, எண்வகை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தார்.
கனவில் அருள் பெறுதல்
இவ்வாறிருக்கையில் முழுமுதற் கடவுளான முருகப்பெருமான், கச்சியப்ப ஸ்வாமிகளின் கனவில் தோன்றி, “மெய்யன்பு கொண்ட பக்தனே! ஸ்காந்த புராணத்தாறு சங்கிதைகளுள், சங்கர சங்கிதையின் முதற் காண்டமாகிய, சிவ ரகசிய காண்டத்திலுள்ள நம் வரலாற்றை கந்தபுராணம் என்ற பெயரில் பெரும் காப்பியமாக செய்யுள் வடிவில் பாடக் கடவாயாக,” என்று கட்டளையைப் பிறப்பித்து, “திகடசக்கரச் செம்முகம் ஐந்துளான்” என்ற முதல் அடியையும் எடுத்துக் கொடுத்து, பின் இறைவன் மறைந்தருளினார்.
திடீரென தூக்கம் கலைந்தெழுந்த கச்சியப்பர் நெஞ்சுருக, உரோமம் சிலிர்ப்ப, உரை தடுமாற ஆனந்தக் கடலில் ஆழ்ந்தார். “பெருமானே! ஒன்றுக்குமே உதவாத நாயினுங் கடையனாகிய அடியேனை ஒரு பொருட்டாக மதித்து வந்தருளிச் செய்த உம் பெரும் கருணைத் திறனை என்னென்று சொல்வேன்?” ஆனந்தக்களிப்பில் ஆழ்ந்து ஆடினார்.
பின் கச்சியப்பர் நீராடி தன் நித்திய காரியங்களையெல்லாம் முடித்துக்கொண்டு, வழக்கம்போல் குமரக்கோட்டப் பெருமானுக்குச் செய்ய வேண்டிய பூசைகளையெல்லாம் முறையாகச் செய்து முடித்துக்கொண்டு புராணம்பாட ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சென்றார்.
கோவிலினுள் ஸ்தல விருக்ஷம்
நம் இந்துக் கோவில்களில் ஸ்தல விருக்ஷம் என்பது தொன்றுதொட்டு இருந்து வருவதாகும். இது யாவரும் அறிந்ததே. கோவில் கர்ப்பகிரகத்துக்கு அளிக்கப்படும் புனிதத் தன்மை இந்த ஸ்தலவிருக்ஷத்திற்கும் வழங்கப்படும்.
ஏகாம்பரநாதர் கோவிலினுள் உள்ள ஸ்தல விருக்ஷம் ஒரு மாமரமாகும். இது மூவாயிரம் ஆண்டுகள் தொன்மை (பழைமை) வாய்ந்தது. இன்றும் அது செழிப்புடன் விளங்குகிறது. இம்மாமரம் ஒரு வித்தியாசமான வகையைச் சார்ந்தது. இதன் மாங்கனிகள் நான்கு வகைச் சுவையினைக் கொண்டவை என்றும், அவற்றை, ரிக், யஜுர், ஸாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்கள் எனவும் குறிப்பிட்டுக் கூறுவதும் வழக்கம். சோமாஸ்கந்த மூர்த்தியின் திருஉருவம் இம்மரத்தின் கீழ் வீற்றிருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். காஞ்சிபுரத்துக்கு வந்த இராணி எலிசபெத் அம்மையார் அவர்கள், இம்மரத்தின் மகிமையைப் பற்றிக் கேள்விப்பட்டு பெரும் வியப்படைந்தார்களாம். இங்குதான் கச்சியப்ப சிவாசாரியார் ஸ்வாமிகள் கந்தபுராணத்தைப் பாடி “காஞ்சிமாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி” என்ற காப்புச் செய்யுளை எழுதினார். ஒவ்வொரு நாளும் நூறு செய்யுளாக எழுதி, எழுதப்பட்ட ஏட்டையும், எழுத்தாணியையும், இராக்கால பூசை முடிந்ததும், குமரக் கோட்டப்பெருமான் திருவடிக் கீழ்வைத்து விட்டு, பின் திருக்கதவைத் தாளிட்டு விட்டுத் தன் இல்லத்துக்குச் செல்வார்.
மறுநாள் விடியற்காலையில் எழுந்து தன் நித்திய காரியங்களை வழக்கம்போல் முடித்துக் கொண்டு, கோவிலுக்குவந்து, கதவைத் திறந்து, இறைவனின் திருவடிக்கீழ் வைத்துள்ள ஏட்டை எடுத்து புரட்டிப் பார்ப்பார். அதில் சில ஏடுகளில், சில இடங்களில், திருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிசயித்து அதைச் சிரமேல் வைத்து, கந்தப்பெருமானின் கருணையை நினைத்துக் களிப்படைந்து கண்ணீர் மல்குவார். அவருடைய கரமலரால் திருத்தம் செய்யப்பட்டருளிய அற்புத செந்தமிழ்க் காவியமே உலகப் பிரசித்தி பெற்று விளங்கும் கந்தபுராணமாகும்.
இவ்வாறு முருகப் பெருமானின் திருவருளால் கந்த புராணத்தைப் பாடி முடித்ததும், அதனை, குமரக்கோட்டத்திலேயே அரங்கேற்றம் செய்ய முடிவும் செய்து ஒரு நன்னாளையும் தேர்ந்தெடுத்த கச்சியப்பர், அரங்கேற்றத்திற்கு யாவரையும் வருமாறு அழைப்பு விடுத்தார்.
புராணம் அரங்கேற்றம்.
அதனால் குமரக்கோட்டத் திருக்கோவில், திருவீதிகள், காஞ்சி மாநகர் முழுதும் விழாக்கோலம் பூண்டு, யாவரையும் கவரும் வண்ணம் காட்சியளித்தன.
கச்சியப்பர், பெருமானின் மூலஸ்தானத்தில் பீடம் அமைத்து அதன்மீது பட்டுவஸ்திரத்தை விரித்து, மலர்களால் அலங்கரிக்கச் செய்து தான் எழுதிய அந்நூலை அதன் மீது வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டார்.
வந்திருப்போர் அனைவரையும் வரவேற்று “திகடசக்கரச் செம்முகம் ஐந்துளான்” என்ற முதற் செய்யுளை எடுத்து ஒரு முறை வாசித்து “திகழ் தசக்கரம் செம்முகம் ஐந்துளான்” என எடுத்துரைத்து, பத்து திருக்கைகளும் அழகிய ஐந்து முகங்களையும் கொண்ட சிவபெருமான் என எடுத்துக் கூறிப் பொருளுரைத்தார்.
உடன் அவைக்கு வந்திருந்த தமிழ்ப் புலவர்களில் ஒருவர் எழுந்து “பெரியீர்! திகழ்+தசம்=திகடசம் எனச் சேர்ந்து இணைவதற்கு தொல்காப்பியம் போன்ற நூல் எதிலும் விதி இருப்பதாகத் தெரியவில்லையே!” என்றார்.
கச்சியப்பர் புலவரைப் பார்த்து “புலவரே! தாங்கள் கூறுவது ஏற்கக் கூடியதாயினும், இம்முதலடி என் வாக்கிலிருந்து வந்த மொழியன்று. இறைவன் முருகனின் திருவாக்கிலிருந்து வந்தருளிய அற்புத முதலடியாகும் இது.” என்றார் அதைக் கேட்டதும் அப்புலவர் “முருகப்பெருமான் எடுத்துக் கொடுத்த இவ்வடி, முதலடி என்று நீங்கள் கூறுவதை நாங்கள் எவ்வாறு நம்புவது? எது எப்படியாயினும், உண்மை யாதென அறியப்படாது இந்நூலை நாங்கள் எவ்விதத்தில் ஏற்க முடியும்? அல்லது இதற்குச் சரிசமமாக யாதேனும் ஓர் இலக்கண நூலின் விதிமுறை இருந்து அதைக்காட்டிச் சரிசெய்வீர்களேயாயின், நாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்போம். இல்லையெனில் அரங்கேற்றம் செய்ய அனுமதியோம்.” என ஆணித்தரமாக அறிவித்தார். உடன் கச்சியப்பர் ஏதும் கூற முடியாது, சற்று சிந்தித்து, “அப்படியாயின் தங்களின் இவ்விரண்டினுக்குள் ஒன்றை நாளை சரி செய்வோம்.” எனக் கூறி சபையைக் கலைத்தார்.
சிவாசாரியாரின் மனத்தில் எண்ணங்கள் பல எழ, கவலையோடு திருவமுது செய்யாது குழப்படைந்தவராய், வழக்கம்போல் தன் இராக்காலப் பூசையை முடித்துக்கொண்டு அச்சந்நிதியின் அருகிலேயே முருகனை நினைத்தவாறு கண்ணீர்த்துளி சிந்தியவாறு, தரையின் மீது சயனித்து அப்படியே உறங்கலானார். அப்போது முருகப்பெருமான் அவர் கனவில் தோன்றி, “அப்பனே! கச்சியப்பா! இனி உன் கவலையை நீக்குவாய். சோழநாட்டில் வீரசோழியம் (பொன்பற்றியூர் புத்த மித்திரனின் இலக்கண நூலாகும். இது வீரசோழனால் செய்யப்பட்டது.) என்றதொரு நூல் உள்ளது. திகழ் தசம் திகடசம் எனப் புணர்வதற்கு (பொருந்துதல்) அந்நூலினுள், சந்திப்படலத்தில் பதினெட்டாம் செய்யுளில் உள்ளது. சோழதேசத்துப் புலவன் ஒருவன் நாளை நீர் கூட்டும் சபையில் அந்நூலைக் கொண்டுவந்து, தக்க ஆதாரத்தோடு எடுத்து விளக்குவான்” எனத் திருவாய் மலர்ந்தருளி மறைந்தார்.
மறுநாள் சபை கூடியதும், புலவர்கள் ஆங்காங்கே ஒருவருக்கொருவர் கூடி உரையாடிக் கொண்டிருந்தனர். பின் இறையருளுடன் சபை தொடங்கப்பட்டது. அது சமயம் முருகப்பெருமான் ஒரு புலவர் வேடம் தாங்கியவாறு, கையில் இலக்கணச் சுவடிக் கட்டொன்றை ஏந்தியவாறு அங்கே தோன்றினார். வந்த அவரை அனைவரும் நோக்க, அதில் ஒரு புலவர் அவரைப்பார்த்து “நீவிர் யாவர்?” என (அதாவது, இச்சபையில் இருக்கும் புலவர்களை விட வந்த புலவர் மேம்பட்டவரோ என்ற தோரணையில் கேட்பது போல) அவரிடம் வினா எழுப்பினார். தன்னடக்கத்தோடு வந்த அப்புலவர், “யாம் சோழநாட்டிலிருந்து இங்கு வந்துள்ளோம். என் கையிலுள்ள இச்சுவடியானது “வீர சோழியம்” என்ற ஆதார இலக்கிய நூலாகும்” எனக்கூறி அதை அவர்களிடம் நீட்டினார். சந்திப்படலத்தின் பதினெட்டாம் செய்யுளை எடுத்து அவர்களிடம் காட்டினார். பின் அவர்களின் சந்தேகத்தை ஓட்டினார். இருப்பினும் ஆட்சேபணையை எழுப்பி வாதிட்ட அப்புலவர் தனக்கு சந்தேகம் தீர அவர் அருகில் வந்து அந்தச் சுவடியை வாங்கி, செய்யுளை நன்காராய்ந்தும், படித்தும் பார்த்தார். அதில் திகழ்தசம் திகடசம் என்னும் புணர்ச்சி விதிக்கு சந்தி சூத்திரத்தின் உண்மைப் பொருள் இணைந்திருப்பதைக் கண்டு அதிசயித்து அகமகிழ்ந்து வாயடைத்திருந்தார். உடன் மற்ற புலவர்களும் அதை வாங்கிப் படித்துப் பார்த்து ஏதும் கூற இயலாத அவர்களும் தங்களுக்குள்ளாகவே, வியந்து போய் பேசாமலிருந்தனர்.
இறுதியாக அனைத்துப் புலவர்களையும் பார்த்து, “புலவர்களே! இனி உங்களுக்கு ஆட்சேபணைகள் எதுவுமில்லையே என வந்த புலவர் (இறைவன்) கேட்க, யாவரும் பதில் எதுவும் கூறாது தலைதாழ்த்தி நின்றனர். பின் அச்சுவடியை கச்சியப்பர் வசம் தந்தருளி, பின்மறைந்தார். தம்மைக் காத்தருளிய முருகப்பெருமானின் பெரும் கருணையை நினைத்து வியந்து, ஆனந்தித்து கண்ணீரைப் பொழிந்து பேரின்பம் படைத்தவராய் விளங்கினார் கச்சியப்பர். அதனைக் கண்ட புலவர்கள் யாவரும்ர ‘முருகப்பெருமானே புலவராக நேரில் வந்து எழுந்தருளியதை’ யாவரும் அறிந்ததும் அவரைத் தரிசிக்கும் பேறு பெற்றோம் என ஆச்சரியமடைந்து ஆனந்தக் களிப்பில் ஆழ்ந்தனர். குமரக் கடவுள் கச்சியப்பருக்கு அருள் பாலித்த விதத்தையும், அவர்மீது இறைவன் கொண்ட அன்பினையும் எண்ணி எதுவும் பேச இயலாத புலவர்கள் கச்சியப்பரை அணுகி, அடியில்லா விருக்ஷம் போல அவருடைய திவ்ய பாதத்தில் வீழ்ந்து வணங்கித் துதி செய்தனர். மறுப்பைத் தெரிவித்து தடை சொன்ன அப்பெரும்புலவர் கச்சியப்பரின் காலில் வீழ்ந்து “புழுவடைந்த நாயினுங்கேடனாகிய அடியேன் சுவாமிகளின் மதிப்பறியாது தங்களுக்கு சங்கடங்களைக் கொடுத்துவிட்டேன். இச்சிறியோன் செய்த பெரும் குற்றத்தை மன்னித்தருள வேண்டும்.” என அவர் பாதம் பணிந்தார். “புலவர் பெருமானே! தாங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து தடையெழுப்பியதனால் தானே முருகப்பெருமானை யாவரும் நேரில் கண்டு களிக்கக் கூடிய பெரும் வாய்ப்பினைப் பெற்றோம். தங்களுக்கு யான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்பதை அறியமுடியாதவனாகி இருக்கிறேனே” என புலவரைப் புகழ்ந்துரைத்தார் கச்சியப்பர்.
பின்னர், சபையிலுள்ள யாவரும் கச்சியப்பரைத் தெய்வமெனப் போற்றி, வணங்கி “முருகனருள் பெற்ற முனிசிரேஷ்டரே! இனி தாங்கள் புராணத்தைச் சந்தோஷமாக அரங்கேற்றலாம்” என்றனர். மகிழ்ந்த கச்சியப்பர் ஒரு சுப நன்னாளில் கந்தபுராணத்தை எடுத்து விளக்க ஆரம்பித்தார். நாள் தோறும் சொற்பொழிவைக் கேட்க அடியார்களும், ஆதிசைவர்களும், பற்றும் பலரும் திரளாக வந்திருந்து சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்தனர். இவ்வாறாக ஓராண்டில் கந்தபுராண அரங்கேற்றச் சொற்பொழிவு மங்களகரமாக சிறப்பாக நடந்து நிறைவுபெற்றது.
தந்தச் சிவிகையில் கச்சியப்பர்
பின் அவரை கந்தபுராணத் திருமுறையோடு தந்தத்தால் செய்யப்பட்ட சிவிகை ஒன்றில் (பல்லக்கு) எழுந்தருளச் செய்ததும் மங்கள வாத்தியங்கள் முழங்க திருவீதிகளின் வழியாக வலம் வந்தபோது, நகரவாசிகளும் தங்கள் வீதிகள் தோறும் சுத்தம் செய்து தோரணங்களால் அலங்கரித்திருந்தனர். திருவீதிகள் வழியாகச் சிவிகையோடு ஊர்வலமாக வந்து, இறுதியாக யாவரும் குமரக்கோட்டத்தை வந்தடைந்தனர்.
சிவிகையிலிருந்து இறங்கிய கச்சியப்ப ஸ்வாமிகள் கந்தபுராணத் திருமுறை நூலை குமரக்கோட்ட முருகன் திருச்சந்நியின் முன்பாக வைத்து வழிபட்டார். யாவரும் முருகப்பெருமானுக்கு அரோகரா... அரோகரா... எனக் கோஷமிட்டனர். அமுதமயமான இந்தக் கந்தபுராணம் சொற்சுவை, பொருட்சுவை கொண்டதென அனைவராலும் போற்றப்பட்டு, பெருமைபடப் பேசினர். இவருடைய காலம் சாலிவாகன சகவருஷம் 700க்கு மேல்.
பக்தி நெறியோடு கந்தபுராணத்தைக் கேட்போர், படிப்போர் அனைவருக்கும், அவரவர்கள் விருப்பப்படியே யாவும் நன்மை நடந்தே தீரும். இது உண்மையாக உறுதியாகக் கூறப்படும் சத்தியமாகும்.
நூற்பயன்
இந்திர ராகிப் பார்மேல் இன்பமுற் றினிது மேவிச்
சிந்தையில் நினைத்தமுற்றிச் சிவகதி யதனில் சேர்வார்
அந்தமில் அவுணர் தங்கள் அடல்கெட முனிந்த தெவ்வேல்
கந்தவேள் புராணந் தன்னைக் காதலித் தோதுவோரே.
கச்சியப்பர் திருத்தொண்டு வாழ்க!
முருகப்பெருமான் திருவடியே சரணம்!

1 comment:

  1. மெய்யன்பரை ஆட்கொள்ளும் யம்மையன் பாதம் பணிந்து தொடர்கிறேன் கந்தபுராணம்.

    ReplyDelete