Sunday, April 26, 2015

ஸத்குருவின் லக்ஷணங்கள்

ஸத்குருவின் லக்ஷணங்கள்
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள்
ஸநாதந தர்மம் பரந்து விரிந்தது, அமரத்துவம் வாய்ந்தது. தன்னைச் சரணடைந்தோரைக் காப்பாற்றிக் கரைசேர்க்கும் ஆற்றல் படைத்தது. ஸநாதந தர்மத்தின் கருவூலங்களாகிய வேதங்கள் மனிதன் அறவழியில் வாழவும், தன்னுடைய பிறவியின் மேன்மையை அறிந்து கொள்ளவும், பிறவிப் பயனாகிய மோக்ஷத்தை அடையவும் வழிகாட்டுகின்றன.
வேதம் முதலான சாஸ்த்ரங்கள் தனித்து இயங்குவதில்லை. சாஸ்த்ரஜ்ஞ: அபி ஸ்வாதந்த்ரியேண ப்ரஹ்ம அந்வேஷணம் ந குர்யாத் - ஒருவன் எவ்வளவுதான் படித்திருந்தாலும், பண்டிதனாக இருந்தாலும் சாஸ்த்ரங்களை தானாகவே அணுகக் கூடாது என்பது ஆதிசங்கரர் வாக்கு.
உடலில் நோய் ஏற்பட்டால், நாமாகவே சிகிச்சை செய்து கொள்வதில்லை. மருத்துவரிடம் சென்று நோய்க்கான காரணத்தையும், நோயைத் தீர்ப்பதற்கான வழியையும் பெறுகிறோம். ப்ரபஞ்சத்தின் இருமைகளில் மாறிமாறி சிக்கிப் பரிதவிக்கும் மனிதன், தன்னுடைய துன்பத்தைத் தீர்த்துக் கொள்ள, துன்பங்களிலிருந்து விடுபட்ட ஒருவரை நாடிச் செல்கிறான். அனைத்துவிதமான துன்பங்களுக்கும் காரணம் நம்மைப் பற்றிய அறியாமையே என்பது சாஸ்திரங்களின் முடிவான கருத்து.
அறியாமை இருளகற்றி, அகத்தில் அருள் ஒளியாகிய ஞானத்தை சுடர்விட்டு ப்ரகாசிக்கச் செய்பவர் குருநாதர்.
குசப்தஸ்த்வந்தகார: ஸ்யாத்ருசப்தஸ்தந்நிரோதக: |
அந்தகாரநிரோதித்வாத் குருரித்யபிதீயதே ||
கு என்றால் அறியாமை என்றும், ரு என்றால் அதனை நீக்குபவர் என்றும் பொருள். அறியாமையை நீக்குபவர் அருட்குருநாதர்.
இப்படிப்பட்ட குருநாதருடைய லக்ஷணங்களைப் பற்றி சாஸ்த்ரங்களில் நேரடியாகவும், குறிப்பால் உணர்ந்து கொள்ளுமாறு மறைமுகமாகவும் கூறப்பட்டுள்ளன.
ஆதிசங்கரர் கோ குரு:? என்று கேள்வி எழுப்பி, பதிலளிக்கிறார்.
அதிகததத்த்வ: சிஷ்யஹிதாயோத்யத: ஸததம்:
இவை இரண்டுமே குருவின் லக்ஷணங்களில் மிக முக்கியமானவை.
அதிகதத்த்வ:
குருநாதர் சாஸ்த்ரங்களையும், ஸம்ப்ரதாயங்களையும் நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். மரபு வழுவாது சாஸ்த்ரங்களைக் கற்றறிந்தவராக இருக்க வேண்டும். ஸம்ப்ரதாயவிதி முறைப்படி ஸம்ப்ரதாயத்தை அறிந்து, அதன் வழிவந்தவராக இருக்கவேண்டும்.
இறைவனுடைய அவதாரமாகவே நாம் போற்றி வழிபடும் ஆதிசங்கரர் நர்மதை நதிக்கரையில் அவருடைய குருவான கோவிந்த பகவத்பாதரை நாடியது. (ஸம்ப்ரதாய பரிபாலந புத்த்யா) இந்த ஸம்ப்ரதாயத்தைக் காப்பாற்றுவதற்காகவே ஆகும்.
சாஸ்த்ரஸ்ய குருவாக்யஸ்ய ஸத்யபுத்த்யாவதாரணா |
ஸா ச்ரத்தா கதிதா ஸத்பி: யயா வஸ்தூபலப்யதே || (விவேக சூடாமணி)
சாஸ்த்ரத்திலும், ஸத்குருநாதருடைய வார்த்தைகளிலும், அவை உண்மையைத்தான் சொல்கின்றன என்ற ஆணித்தரமான நம்பிக்கையாகிய ச்ரத்தையானது சிஷ்யனுக்குரிய தகுதியாகக் கருதப்படுகிறது.
காலவெள்ளத்தில் நீந்தி நம் கைக்கு வந்திருக்கக்கூடிய ஞானப் பொக்கிஷங்களான வேத உபநிஷதங்கள் ஒரு தனிமனிதனின் புத்தியிலிருந்து தோன்றியவை அல்ல. ரிஷிகள் அவற்றைத் தாங்களாகவே எழுதவில்லை. வேதங்கள் அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டன. அவர்களை மந்த்ர கர்த்தா என்று நாம் கூறுவதில்லை. மந்த்ர த்ரஷ்டா என்றே கூறுகிறோம். ஒரு தனி மனிதன் கண்டுபிடித்த ஒரு தத்துவத்தை ஐம்பது ஆண்டுகளுக்குப்பின் வந்த ஒருவர் தவறு என்று நிரூபித்து விடக்கூடும். ஆனால் வேதங்கள் காலங்காலமாக இருந்து கொண்டிருக்கின்றன. ஆதிகுருவாகிய இறைவனிடமிருந்து, இன்று நம்முடைய குருநாதர் வரை ஞானமானது ப்ரவஹித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், ஸம்ப்ரதாயதைக் காப்பாற்றியதே ஆகும்.
ஸதாசிவ ஸமாரம்பாம் சங்கராசார்ய மத்யமாம் |
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் ||
சிவபெருமானுக்கும், ஆதிசங்கரருக்கும், நம்முடைய குருநாதருக்கும் இடையே, பெயர் தெரியாத, முகம் தெரியாத எத்தனையோ குருமார்கள் இருந்திருக்கிறார்கள். இந்த ஸம்ப்ரதாயத்தைக் காப்பாற்றிக் கொடுத்ததற்காக நாள்தோறும் அவர்களுக்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
சிஷ்யஹிதாயோத்யத: ஸததம்
எப்பொழுதும் சிஷ்யனுடைய நலனில் அக்கறை கொண்டு, அவனுடைய முன்னேற்றத்திற்காகப் பாடுபடுபவர் ஸத்குருநாதர். பெருங்கருணையோடு சிஷ்யனுக்கு சாஸ்த்ரத்தின் கருத்துகளை உபதேசிப்பவர். சாஸ்த்ரங்களை நன்கு கற்றுணர்ந்து சிறந்த பாண்டித்யம் உள்ளவராக இருந்தாலும், கற்பிக்க ஆர்வமில்லாதவர் குருவாக மாட்டார்.
முண்டக உபநிஷத் ச்ரோத்ரியம் ப்ரஹ்மநிஷ்டம் (1:2:12) குருநாதர் சாஸ்த்ரங்களை நன்கு கற்றறிந்தவராகவும், பரம்பொருள் தத்துவத்திலேயே நிலைத்திருப்பவராகவும் இருப்பார் என்று குருவின் லக்ஷணங்களைக் கூறுகிறது.
விவேக சூடாமணியில் ஆதிசங்கரர் குருவின் லக்ஷணங்களைப் பின்வருமாறு கூறுகிறார்:
ச்ரோத்ரியோsவ்ருஜிநோsகாமஹதோ யோ ப்ரஹ்மவித்தம: |
ப்ரஹ்மண்யுபரத: சாந்தோ நிரிந்தந இவாநல: |
அஹேதுக தயாஸிந்துர் பந்துராநமதாம் ஸதாம் ||
வேதத்தை நன்கு கற்றுணர்ந்தவரும், பாபமற்றவரும், ஆசைகளால் அலைக்கழிக்கப் படாதவரும், பரம்பொருள் தத்துவத்தை அறிந்தவர்களில் சிறந்தவரும், பரம்பொருள் தத்துவத்தில் நிலைத்திருப்பவரும், விறகில்லாத நெருப்புப்போல அமைதியுள்ளவரும், காரணமேதுமின்றி கருணைக்கடலாக விளங்குபவரும், தன்னை வணங்கக்கூடிய நல்லவர்களுக்கு உறவினராக விளங்குபவரும் எவரோ அவரே சிறந்த குருநாதர்.
ஒரு மனிதன் தாய் தந்தையிடமிருந்து பெற்ற அன்பில் சிறிது தோஷம் அல்லது குறைபாடு இருந்தாலும், குருநாதர் நிபந்தனைகளற்ற அன்பைப் பொழிந்து அவனது உள்ளத்தைப் பக்குவப்படுத்தி விடுகிறார். அவனுடைய உள்ளத்தைப் பண்படுத்தி, ஞான விதைகளைத் தூவுகிறார்.
தந்தைதா யாவானும் சார்கதியிங் காவானும்
அந்தமிலா இன்பம்நமக் காவானும் - எந்தமுயிர்
தானாகு வானும் சரணாகு வானும்அருட்
கோனாகு வானும் குரு.
தன்னைச் சரணடைந்த சீடனுக்கு குருநாதரே தாயும், தந்தையும், உற்ற நண்பனும், தெய்வமும் ஆகிறார். குருநாதர் ஞானபிதா, சிஷ்யன் ஞானபுத்ரன்.
தாயின் இதயமே குழந்தையின் பள்ளிக்கூடம் என்றொரு பழமொழி உண்டு. குருவின் இதயமே சீடனின் பள்ளிக்கூடம் என்று அதனை மாற்றிக் கூறலாம். குருநாதர் தாமும் சிஷ்யனாக இருந்து, நற்குணங்களைச் சம்பாதித்து, சித்தசுத்தி அடைந்து, ஞானத்தை அடைந்து அதில் நிலைத்திருப்பவர், குருநாதர் குணமென்னும் குன்றேறி நிற்பவர்.
குருவானவர் வெறும் சொற்பொழிவாளர் அல்லர். அவர் வாழ்ந்து காட்டுபவர். ஆசார்யர், தேசிகர் என்ற சொற்களும் குருநாதரையே குறிக்கும்.
ஆசிநோதி ச சாஸஸ்த்ரார்த்தம் ஆசாரே ஸ்தாபயத்யபி |
ஸ்வயமப்யாசரேத்யஸ்து ஸ ஆசார்ய இதி ஸ்ம்ருத: ||
சாஸ்த்ரத்தின் உட்பொருளை நன்கு அறிந்தவரும், பிறரை அவ்வழியில் நிலைநிறுத்துபவரும், தாமும் அதன்படி வாழ்பவருமே ஆசார்யர் எனப்படுகிறார்.
திசதி இதி தேசிக: |
வாழ்வில் உய்வதற்கு வழிகாட்டுவதால் குருநாதர் தேசிகர் எனப்படுகிறார்.
பொறுமை
குருநாதர் சிஷ்யனுக்குத் தெளிவாகப் புரியும் வரை, அது எவ்வளவு காலமாக இருந்தாலும் சரி, பொறுமையாகக் கற்றுக் கொடுக்கிறார். சிஷ்யனுடைய ஐயங்களை முறையாகத் தீர்த்து வைக்கிறார்.
பதினெட்டு அத்யாயங்களில் கீதையை உபதேசித்த பிறகு, ஜகத்குருவான ஸ்ரீக்ருஷ்ணர், அர்ஜுனனைப் பார்த்து,
கச்சிதேத்ச்ருதம் பார்த்த த்வயைகாக்ரேண சேதஸா |
கச்சிதஜ்ஞாநஸம்மோஹ: ப்ரநஷ்டஸ்தே தநந்ஜய ||
(ஸ்ரீமத்பகவத்கீதை 18:72)
ஓ அர்ஜுனா! உன்னால் இந்த உபதேசம் ஒருமுகப்பட்ட மனத்துடன் கேட்கப்பட்டதா? உன்னுடைய அக்ஞானமும், அதனால் உண்டான மயக்கமும் தீர்ந்ததா? என்று பரிவோடு கேட்கிறார்.
பணிந்து கேட்பவருக்கே உபதேசம்
தம்மிடம் கேட்காதவருக்கு குருநாதர் வேதாந்த தத்துவத்தை உபதேசம் செய்வதில்லை. வேதாந்தம் கேட்பதற்குத் தகுதியுள்ளவரும், குருநாதரிடத்திலும் சாஸ்த்ரத்தினிடத்திலும் ச்ரத்தை உள்ள சிஷ்யனுக்கே அவர் உபதேசம் செய்கிறார்.
சோதித்துப் பார்த்தல்
கடோபநிஷத்தில் யமதர்மராஜா நசிகேதனின் தகுதியைச் சோதித்துப் பார்த்து, அவனுடைய வைராக்யத்தைக் கண்டு மெச்சி அவனைப் புகழ்ந்து பேசுகிறார். புகழுக்கும் அவன் அடிமையாக இல்லை என்று தெரிந்தவுடன், ஆத்ம ஞானத்தை உபதேசமாகப் பொழிகிறார்.
உபதேச ஸாஹஸ்ரீ என்ற வேதாந்த க்ரந்தம் கூறும் ஆசார்ய லக்ஷணங்கள்
சிஷ்யனுக்கு எப்படிச் சொன்னால் விளங்கும் என்று ஊகிக்கும் திறமை, அவனுடைய விபரீத ஞானத்தைப் போக்கும் திறமை, சிஷ்யனுடைய கேள்விகளையும் ஆக்ஷேபங்களையும் புரிந்துகொள்ளும் சாமர்த்யம், புரிந்துகொண்டதை நினைவுகூர்தல், மனவடக்கம், புலனடக்கம், கருணை முதலியன உடையவராக இருப்பவர், அருள்புரிபவர், தன்னுடைய குருநாதரிடமிருந்து ஞானோபதேசம் பெற்றவராக இருப்பவர். இவ்வுலக போகங்களில் பற்றற்ற தன்மை உடையவர். எல்லாவிதமான கர்மங்களையும் விட்டவர், பரம்பொருள் தத்துவத்தை அறிந்தவர், பரம்பொருள் தத்துவத்திலேயே நிலைத்திருப்பவர், சிஷ்டாசாரத்தை மீறாதவர், வெளிவேஷம் இல்லாதவர், அடக்கம் நிறைந்தவர், பிறரை வஞ்சிக்கும் எண்ணம் இல்லாதவர், பொறாமை அற்றவர், பொய் பேசாத வாய்மையாளர், யான் எனது என்னும் செருக்கற்றவர், குற்றமற்றவர், பிறருக்கு (பிறவிக் கடலிலிருந்து கடைத்தேற) அருள்புரிவதிலேயே மிகுந்த நாட்டம் உடையவர், ஞானத்தை வழங்குவதில் விருப்பமுள்ளவர்.
குருநாதருக்கு ஸித்தமாக (அவரோடு இயல்பில் இரண்டறக் கலந்து) உள்ள நற்பண்புகள் யாவும் சிஷ்யனுக்கு ஸாதனைகளாகின்றன.
மூர்த்தி தலம்தீர்த்தம் முறையாகத் தொடங்கினர்க்கோர்
வார்த்தை சொல்ல சற்குருவும் வாய்க்கும் பராபரமே
என்பது தாயுமானவர் வாக்கு. மிகுந்த புண்யம் செய்தால்தான் ஸத்குருநாதரை அடைய முடியும்.
சிஷ்யனிடம் உள்ள செல்வத்தை அபகரிக்கக் கூடிய குருமார்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் சிஷ்யனுடைய உள்ளத்தில் இருக்கக் கூடிய தாபத்தை நீக்குகிற குருநாதரைக் காண்பது அரிது.
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்
என்று திருவள்ளுவர் கூறுவதுபோல, தவறு செய்யும்பொழுது கடுமையாக நடந்து கொண்டாவது சீடனைத் திருத்துதல் குருவின் லக்ஷணம்.
குருவின்றி ஞானமில்லை, ஞானமின்றி மோக்ஷமில்லை. ஸத்குரு நாதருடைய திருவடிகளில் உறுதியான ச்ரத்தையோடும், உண்மையான பக்தியோடும் பணிவோமாக. அடைய வேண்டிய பெருநிலையை அடைவோமாக!

No comments:

Post a Comment